கிழக்குப் பள்ளிவாசல்.
முத்தவல்லி அறை.
அறையில் முத்தவல்லி பஸ்ஹான் நவாஸ் அமர்ந்திருந்தார். அவர் நகரின் முக்கிய வணிகர். மார்க்க விஷயங்களைத் துளி பிசகாமல் கடைப்பிடிக்கக் கூடியவர்.
இமாம் நூருல் அமீன் காதிரீ அறைக்குள் பிரவேசித்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி சாப்!”
இமாமுக்கு வயது 42. உயரம் 170செமீ. ஒலிபெருக்கி தேவைப்படாத கணீர் குரல். புன்னகை முகம். ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். அழகிய பல் வரிசை. தினமும் ஒரு தடவையாவது திருக்குர்ஆனை ஓதி விடுவார்.
‘வஅலைக்கும் ஸலாம் இமாம்!”
எதிரில் வந்து நின்றார் இமாம்.
“உக்காருங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…”
அமர்ந்தார்.
“இன்று ஷாபான் மாதம் 25ஆம் நாள்...”
“ஆமாம்!”
“பள்ளிவாசலின் உள்ளும் புறமும் சுத்தம் செய்தாகிவிட்டது இல்லையா?”
“சுத்தம் செய்து விட்டோம்!”
“பள்ளி இரவில் ஜகஜகவென ஜொலிக்க சீரியல் பல்ப் சரங்கள் தொங்க விடப் பட்டுள்ளன இல்லையா?”
“ஆமாம்!”
“நோன்புக்கஞ்சி காய்ச்ச தகுதியான ஆட்களை நியமித்தாகி விட்டது இல்லையா?”
“ஆமாம்!”
“எத்தனை நோன்புக்கஞ்சிக் கார்டுகள் விநியோகித்துள்ளோம்!”
“எண்ணூறு!”
“எத்தனை பேர் ஒருநாளைய நோன்புக்கஞ்சிச் செலவான 12000 ரூபாயை ஹதியா பண்ணியுள்ளனர்?”
“இதுவரை பதினெட்டு பேர்!”
“நோன்புக் கஞ்சி காய்ச்ச தேவையான அரிசி, வெங்காயம், தக்காளி, வெள்ளைப்பூடு எல்லாமே வாங்கி விட்டோம் அல்லவா?”
“வாங்கிவிட்டோம்!”
முத்தவல்லி சிரித்தார்.
“மொத்தத்தில் ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி விட்டோம் இல்லையா, இமாம்?”
“ஆமாம் முத்தவல்லி!”
“மனதளவிலும் உடலளவிலும் ரமலானுக்காக மீதி 11 மாதங்கள் ஏங்கி நிற்கிறோம்!”
“உண்மை!”
“தினமும் இரவு தொழுகையாளிகளை திராவீஹ் தொழ வைக்க ஆயத்தமாக இருக்கிறீர்களா?”
“இருக்கிறேன்!’
“எட்டு ரக்அத்தா இருபது ரக்அத்தா என்கிற சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை. இருபது ரக்அத்கள் பித்ரு தொழுகை மூன்று ரக்அத்கள். தினமும் நீங்கள் பயான் பண்ண வேண்டி வரும். பயானுக்கான தகவல் குறிப்புகளைச் சேகரித்து விட்டீர்களா?”
“விட்டேன்!”
“மாதிரிக்கு ஒரு தலைப்பு சொல்லுங்கள்!’
“முதல்நாள் ‘நோன்பைத் துவக்குவோம்’, இரண்வது நாள் ‘இறை வல்லமை’, மூன்றாவது நாள் ’முன்மாதிரிகள்’, நாலாவது நாள் ‘வாரிசுரிமை சட்டங்கள்’, ஐந்தாவது நாள் ‘உணர்வுகள்’, ஆறாவது நாள் ‘இருண்ட நாட்கள்’, ஏழாவது நாள் ‘அழியும் உலகம்’...”
“சரிசரி.. நான் ஏன் உங்களை வரச்சொன்னேன் தெரியுமா?”
“தெரியாது!”
“திராவீஹ் தொழுகையைத் தொழ வைக்கப் போகிறீர்கள். உங்களுக்கு உதவியாக ஒரு ஸாமியாவை நியமிக்க உத்தேசித்துள்ளேன்!”
“கச்சேரிகளில் அல்லது இந்துத் திருமணங்களில் ஒரு பிரதான நாகஸ்வரக் கலைஞர் இருப்பார். அவர் ஊதுவார், அவர் சில சமயங்களில் ஊதுவதை நிறுத்தி விட்டு மூச்சு வாங்குவார். அவர் விட்ட இடத்திலிருந்து துணை நாகஸ்வர கலைஞர் ஊதுவார். நிறைய சமயங்களில் முதலாமவர் ஊதுவதை விட்டதும் தெரியாது. இரண்டாமவர் ஊதுவதை தொடர்ந்ததும் தெரியாது. அப்படி ஒரு ஒத்திசைப்பு இருக்கும். துணை நாகஸ்வர கலைஞர்தான் ஸாமியா இல்லையா முத்தவல்லி?”
“ஏறக்குறைய உங்கள் உதாரணம் சரி. நிறைய இந்துக்கள் கல்யாணங்களுக்குப் போய் நாதஸ்வரக் கச்சேரி கேட்டிருப்பீங்களோ இமாம்?”
“சின்னவயசுல தில்லானா மோகனாம்பாள் பார்த்த ஞாபகம்!”
“சரி விஷயத்துக்கு வருவோம். நிறைய பள்ளிவாசல்கள்ல திராவீஹ் தொழுகைக்கு ஸாமியா நியமிக்கிறதில்லை. நான்தான் செய்வன திருந்தச்செய் கேட்டகிரியாச்சே... இந்த வருஷம் நம்ம பள்ளில ஸாமியா இருப்பாரு!”
“என்னைப் பொறுத்தவரை ஸாமியா தேவையில்லை, என்றே நினைக்கிறேன்!’‘
“இமாமும் மனுஷன்தானே! இமாமும் தொழ வைக்கும் போது, திருமறை வசனங்களை சில நேரம் மறந்து விடக்கூடும். அப்போது பின்னாடி இருந்து ஸாமியா எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.”
“சரி உங்கள் இஷ்டம் முத்தவல்லி!”
“உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. நான் நியமிக்கப் போகும் ஸாமியாவில் இரு சாய்ஸ்களை வைத்துள்ளேன்!”
“புரியவில்லை!”
“உங்களிடம் இரு ஸாமியாக்களின் பெயர்களைக் கூறப் போகிறேன் இருவரில் ஒருவரை நீங்களேத் தேர்நதெடுக்கலாம்!”
“சொல்லுங்க!”
“முதலாமவரின் பெயர் ஜுபைர் அஹமது பாகவி வயது 72. மார்க்க அறிஞர் ஆயிரக்கணக்கான ஆலிம்களுக்கு ஆன்மிகக்குரு. உங்களுக்கு மாதச் சம்பளம் இருபதாயிரம் தருகிறோம் இல்லையா? அவருக்கு ஸாமியா பணிக்காக 25000 ரூபாய் தர உத்தேசித்துள்ளோம். அவர் ஸாமியாவாக வருவது நம் பள்ளிக்குப் பெருமை…”
“மாஷா அல்லாஹ்!”
“இரண்டாமவரின் பெயர் செய்யது மஸ்வூது ஜமாலி. அரபியுடன் முதுகலை ஆங்கிலமும், முதுகலை தமிழும் படித்தவர் வயது 26. திருக்குர் ஆனை பத்தாயிரம் தடவை ஓதியவர். சூபியிஸத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரை ஸாமியாவாக நியமித்தால் 8000 ரூபாய் ஹதியாவாக வழங்கத் தீர்மானித்துள்ளோம்.”
நூருல் அமீன் காதிரீ யோசித்தார்.
எத்தனையோப் பள்ளிகளில் இமாம்களுக்கும் ஸாமியாக்களுக்கும் ஈகோ போர் நடந்து இமாம்கள் தோற்றுப்போனதாக கேள்விப்பட்டுள்ளார் நூருல் அமீன்.
பல ஸாமியாக்கள் இமாம்களின் அரபி உச்சரிப்பைக் கேலி செய்து சிரித்தது உண்டு.
ஸாமியாக்கள் இல்லாத போது சரளமாய் ஓதும் இமாம்கள் ஸாமியாக்கள் இருப்பில் திக்கித்திணறுவது கண்கூடு.
பத்து ரக்அத் தொழுகைக்கு நாம் தொழ வைப்போம் வருபவர் ஸாமியாவாக இருக்கட்டும். மீதி பத்து ரக்அத் தொழுகையை ஸாமியா தொழ வைக்கட்டும். நாம் ஸாமியா வேலை பார்ப்பம்.
“என்ன யோசிக்கிறீர்கள் இமாம்? சுயகௌரவம் தடுக்கிறதா?” முறுவலித்தார் இமாம்.
“ஈகோவை தூக்கி எறிந்துவிட்டுதான் இமாம் ஆனேன். நான் 18 வருடங்களாக இமாம் பணி செய்கிறேன் இதுவரை ஸாமியாக்கள் யாரும் என் பொருட்டு நியமிக்கப்பட்டதில்லை. அந்த அனுபவத்தையும் ஏன் தவறவிடவேண்டும்? நீங்கள் தாராளமாக ஸாமியாவை நியமிக்கலாம். நீங்கள் இரண்டாவதாகச் சொன்ன செய்யது மஸ்வூது ஜமாலி என்கிற இளைஞரை ஸாமியாவாக நியமியுங்கள்!”
“மகிழ்ச்சி அவரின் கைபேசி எண் என்னிடம் உள்ளது. தருகிறேன். பேசுகிறீர்களா?”
“இல்லை.. நேரில் பார்த்துப் பேசிக் கொள்கிறேன்...”
ரமலான் ஆரம்பித்தது.
இமாமும் ஸாமியாவும் அழகிய முகமன்கள் கூறிச் சந்தித்துக் கொண்டனர். செய்யது மஸ்வூது ஜமாலி யூசுப் நபி போல அழகாய் இருந்தார். ரோஜா இதழ் கைகளால் கை குலுக்கினார்.
திராவீஹ் தொழுகைகள் தினம் தொடங்கின.
ஸாமியா மிக அமைதியாக இமாமை தொழுகையில் பின் தொடர்ந்தார். குறுக்கீடுகள் இல்லை சிறுசிறு பணி விடைகள் செய்தார்.
இறுதி திராவீஹ் தொழுகையை நடத்தி முடித்த இமாம் நூருல் அமீன், கூட்டத்தில் ஒரு முகத்தைப் பார்த்து விட்டார். அந்த முகத்துக்கு உரியவர் ஜுபைர் அஹமது பாகவி.
இருவரும் முஸாபஹா செய்து கொண்டனர். இருவரிடம் வந்து நின்றார் ஸாமியா.
“நீங்கள் எப்படி இங்கே பாகவி!”
“உன் அரபி உச்சரிப்பை நெருக்கத்தில் நின்று கேட்டு மகிழவே ஸாமியாவாக விரும்பினேன். நீ இளையவரைத் தேர்ந்தெடுத்து விட்டாய். இருந்தாலும் என்ன? தினமும் உனக்குத் தெரியாமல் வந்து தொழுகையாளிகளுடன் தொழுகையாளியாய் நின்று உன் ஓதுதலை காதுகுளிரக் கேட்டுவிட்டேன்…”
ஸாமியா தனக்குக் கொடுக்கப்பட்ட ஹதியாவை இமாமிடம் கையளித்து “உங்களைக் குறை கூற சில மஹல்லாவாசிகள் என்னை நிர்பந்தித்தார்கள். குறை கூற வாய்ப்பே இல்லை. அடுத்த வருட ரமலான் மாத திராவீஹ் தொழுகைக்கு இப்போதே ஏங்குகிறேன்!” என்றார் செய்யது மஸ்வூது ஜமாலி.
“ஜஸாக்கல்லாஹு கைரன்!” என்றார் இமாம் நூருல் அமீன்.