தஞ்சாவூர் சந்திப்பு.
நடைமேடை ஒன்றில் நானும் எழுத்தாளர் தஞ்சாவூர் ஹரணியும் காரைக்குடி - எர்ணாகுளம் விரைவு வண்டிக்காகக் காத்திருந்தோம். ஹரணியின் இயற்பெயர் அன்பழகன். ஹரணி மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவர் புதிதாக ‘என்பா’ கவிதைகளை கண்டுபிடித்து தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாகப் பணிபுரிந்த போது ஹரணி தொலைதூரக் கல்வி இயக்ககத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். எப்போதுமே எனக்கும் தமிழ்துறைக்கும் ஏழாம் பொருத்தம் தான். என்னுடைய கதைகளில் ஆங்கிலக் கலப்பும் சமஸ்கிருதக் கலப்பும் அதிகம் எனக் குற்றம் சாட்டுவர். மர்மக்கதைகள் துப்பறியும் கதைகள் எழுதும் எழுத்தாளர்களைக் கண்டால் அவர்களுக்குச் சிறப்பு ஒவ்வாமை. விதிவிலக்காக ஹரணி என் எழுத்தின் மீது அபிமானம் கொண்டிருந்தார். எங்கள் பல்கலைகழகக் குடியிருப்புக்கும் ஓரிரு முறை வந்து போயிருக்கிறார்.
நான்கு வருடங்களுக்கு முன் நான் பல்கலைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை சிதம்பரத்தில் இருந்த நாங்கள் 2020 ஆம் ஆண்டு கடைசியில் கோவைக்குக் குடிபெயர்ந்து மகனின் குடும்பத்துடன் ஐக்கியம் ஆனோம்.
ஹரணியும் கொரோனா காலத்துப் பிரச்சனைகளைத் தாங்க முடியாது விருப்ப ஓய்வு பெற்றுத் தஞ்சைக்குப் போய் விட்டார்.
அதன்பின் இருவரும் முகநூல் மூலம் அளவளாவிக் கொண்டோம். ஓய்வு பெற்ற பின் எங்கள் இருவரின் எழுத்தும் வீரியமானது.
ஹரணி என்னைத் தஞ்சைக்குக் கூப்பிட்டிருந்தார், போனேன். இருவரும் தஞ்சைப் பெரிய கோயில் சுற்றிப் பார்த்தோம். சிறப்பான விருந்தோம்பல். தவிர, நானும் அவரும் நிறைய இலக்கியம் பேசினோம்.
“ஹரணி! உங்களுக்கும் எனக்கும் காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் பெர்த் ரிசர்வேஷன் பண்ணிட்டேன். வாங்க எங்க கோவை வீட்டுக்கு. என் மனைவி மருமகள் மகன் பேரனைச் சந்திக்கலாம்…”
“சரி... வருகிறேன்.. ஒரே நாள்தான். இரவு 12.30 மணிக்குக் கிளம்பும் செம்மொழி எக்ஸ்பிரஸில் என்னை ஏற்றிவிடுங்கள்!”
ரயில் ஒரு மணிநேரத் தாமதமாய் வந்தது. எஸ் 4 பெட்டியில் ஏறிக்கொண்டோம். இருவருக்கும் லோயர் பெர்த்தான்.
ரயிலில் இருவரும் தூங்கவில்லை பேசிக்கொண்டே வந்தோம்.
“ஆர்னிகா! அடுத்தமாதம் என் மகன் குகனுக்குத் திருமணம் குடும்பத்தோடு வந்து வாழ்த்துங்கள்!”
“ஜமாய்ச்சிரலாம்...”
ரயில் கோவைக்கு நள்ளிரவு 2.15 மணிக்கு வந்து நின்றது. இருவரும் இறங்கினோம். ரயில் நிலையத்தின் முன் பகுதிக்கு வந்தோம்.
பேர் ஆட்டோவுக்கு போன் பண்ணினேன். யாரும் எடுக்கவில்லை.
ஆட்டோக்காரர்கள் சூழ்ந்தனர்.
“எங்க சார் போகனும்?”
“உக்கடம்... ஜிஎம் நகருக்கு அருகில் இருககும் மனாஸ் கார்டனுக்கு!”
“அய்நூறு ரூபா குடு சார்!”
“எப்பவும் எண்பது ரூபாதான்ப்பா குடுப்பேன்!’
“எண்பது ரூபாயையும் மிச்சப்படுத்தனும்னா நடந்தே போ சார்!”
பணி ஓய்வு பெற்ற பின் நான் மகாசிக்கனக்காரன் ஆகிவிட்டேன். சுளையாய் 500 ரூபாய் கொடுக்க மனம் ஒப்பவில்லை.
பல ஆட்டோக்காரரர்களிடம் பேரம் பேசினேன்.
450 ரூபாய் வரை இறங்கி வந்தார்கள்.
அப்போது திடீரென்று ஒரு தாடிக்கார முதியவர் என்னிடம் ஓடி வந்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!”
“வஅலைக்கும் ஸலாம்!”
“என் ஆட்டோல ஏறுங்க!”
“வாடகை?”
“வாடகையா முக்கியம்? நீங்க வாங்க பாய்...”
“இறக்கிவிடுற எடத்ல வாடகை இவ்வளவு அவ்வளவு என்று சண்டை போடக் கூடாது!”
சிரித்தார் தாடிக்காரர்.
“எனக்கு உங்களை நல்லாத் தெரியும். நீங்க எழுத்தாளர் ஆர்னிகா நாசர்தானே? உங்க திருமறை இஸ்லாமிய நீதிக்கதைகளைப் படிச்சிருக்கேன் பாய். அற்புதமான கதைகள். தவிர, என் பேரனுக்கு உங்க மகனின் நிலா டென்டல் கிளினிக்கில் தான் சொத்தைப்பல் அகற்றினோம். உங்களுக்கு வாடகை குடுத்தே ஆகனும்னு தோணுச்சுன்னா எண்பது ரூபா கொடுங்க!”
இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். ஆட்டோ சீறிப் பாய்ந்தது.
நான் எழுதின கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்தார் ஆட்டோக்காரர். “இந்து- முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்காக நீங்க இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதி வரீங்க. உங்க கதைகள் காலத்தின் கட்டாயம். கோவை மக்களுக்கு மதநல்லிணக்கம் மிக மிக அவசியம்!”
வீட்டுவாசலில் ஆட்டோவை நிறுத்தினார்.
ஒரு நூறுருபாய் தாளை எடுத்து நீட்டினேன்.
“வேண்டாம் பாய் ஒரு அருமையான எழுத்தாளருக்கு நான் காட்டும் அன்பு, வாடகை வேண்டாம்!”
பலமுறை கொடுக்க முயற்சித்தும் வேண்டவே வேண்டாம் என முரண்டினார்.
“உங்க பேரு என்ன பாய்?”
“உமர் பாரூக்!”
அவரின் கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். “ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!” என்றேன்.
பதிலுக்கு அவர் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு “ஆமீன்! ஆமீன்!” என்றார்.
ஆட்டோ கிளம்பிச் சென்றது.
ஹரணி என்னிடம் திரும்பினார். “ஆர்னிகா! நன்றி எனச் சொல்வதற்குப் பதிலாக வேறொரு வார்த்தையை ஆட்டோகாரரிடம் கூறுனீர்கள். அதென்ன வார்த்தை? அதற்கென்ன அர்த்தம்!”
“ஹரணி! ஒருவர் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி சொல்வது உயர் கலாச்சார வெளிப்பாடு. ஒவ்வொரு மொழியிலும் ‘நன்றி’ வார்த்தைக்கு சமமான வார்த்தைகள் உள்ளன. பிரஞ்சு மக்கள் நன்றியை ‘மெர்ஸி’ என்கிற வார்த்தையால் தெரிவிப்பர். ஜப்பான்காரர்கள் ‘அரிகாட்டோ’ என்பர். ஸ்பானிஷ் மக்கள் ‘கிரேஸியஸ் முச்சாஸ்’ என்பர். சீனர்கள் ‘ஜிஜி‘ என்பர். ஆப்பிரிக்கர்கள் ‘டான்கி’ என்பர். அஸ்ஸாமியர்கள் ‘டொய்னோபாத்’ எனவும், பிரேசில் மக்கள் ‘ஒப்ரிகாடோ’ எனவும், பெர்ஸியன் ‘ஜெய்லி மாம்னுனம்’ எனவும், குஜரத்திகள் ‘தன்யாவாத்’ எனவும், ஹிப்ருமக்கள் ‘தோடா’ எனவும், வடஇந்திய மக்கள் ‘சுக்ரியா’ எனவும் கூறுவர்.
ஹரணி உற்சாகமாய் காதுற்றார்.
“ரஷ்யர்கள் ‘ஸ்பாசிபா’ எனவும், சமஸ்கிருதம் பேசுவோர் ‘அனு கிரிட்டோஸ்மி’ எனவும், இத்தாலியர்கள் ‘கிராஸி’ எனவும், உஸ்பெக் மக்கள் ‘ரஹ்மத்’ எனவும், இந்தோனேசியர்கள் ‘தெரிமா கசி’ எனவும், சோமாலியர்கள் ‘மஹட்சனிட்’ எனவும், தாய்லாந்தியர்கள் ‘கேப்கூன் கிராப்’ எனவும் கூறுவர். நார்வேயில் ‘தக்’ என்பர்!”
“பட்டியல் அவ்வளவுதானே?”
“பொதுவாக மக்கள் நன்றி என்கிற வார்த்தையை மேலோட்டமாக கேஷுவலாக திரும்ப உதவி கிடைக்க வைக்கும் தூண்டிலாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இஸ்லாம் நன்றி கூறும் வார்த்தையை ஆத்மார்த்தபடுத்துகிறது. ‘ஜஸாக்கல்லாஹ் ஹைரன்’ என்றால் ‘இறைவன் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக’ என்று அர்த்தம். ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கூறிய சகமுஸ்லிமுக்கு முஸ்லிம் ‘வா இய்யாக்க’ என்றோ ‘ஜாமீஉன்’ என்றோ ‘ஆமீன்’ என்றோப் பதில் கூறுவர். இஸ்லாமில் வெறும் சம்பிரதாயமான வார்த்தைகளுக்கு இடமே இல்லை!”
நெகிழ்ந்தார் ஹரணி.
மகன் மருமகள் பேரன் மற்றும் என் மனைவி ஹரணியை வரவேற்றனர். ஹரணிக்கு தனிப் படுக்கையறை ஒதுக்கப்பட்டது.
காலையில் இடியாப்பமும் பாயாவும்.
மனைவி வகிதா ஹரணியிடம், “உங்களுக்கு மட்டன் பிரியாணி பிடிக்குமா, சிக்கன் பிரியாணி பிடிக்குமா?”
“உங்கள் விருப்பம் போல...”
மதியம் ஜுஆம்மா தொழக் கிளம்பினேன்.
ஹரணி, “நீங்க தொழுறதை நானும் பார்க்க வரலாமா?”
வந்தார்.
வீடு திரும்பினோம். பிரியாணி சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் மாலைமதி நாவலை வழங்கினேன். “ஹரணி! மாலைமதியில் நான் ‘லப்டப் லடாக்’ நாவல் எழுதியுள்ளேன். நாவலின் 16அத்தியாயங்களில் முகப்பு கவிதைகளாக உங்கள் என்பா கவிதைகளைப் போட்டுள்ளேன்...”
நான் எதிர்பாராவிதமாக ஹரணி “ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!” என்றார்.
பதிலுக்கு நான் “வா இய்யாக்க!’‘ என்றேன். இரு மதங்களும் அங்கே இசுலாமிய வழக்குச் சொற்களால் இணைந்து கொண்டிருந்தன.