ஷவரில் குளித்தான் நத்தர்ஷா தாவூத். வயது 35. உயரம் 170 செமீ. அடர்த்தியான தலைகேசம். மீசை மழிக்கப்பட்ட கச்சிதத் தாடி. பொதுப்பணித்துறையில் உதவி வரைவாளராகப் பணிபுரிபவன். ஷவர் திக்கித் திணறியது. சல்லடை நீர் பீய்ச்சப்படுவது நின்றது. ஷவரை பல மாதிரியாகத் திருகி பார்த்தும் ஷவர் சண்டிதனம் செய்தது. பக்கெட் நீரில் குளித்து முடித்தான். தலை துவட்டியபடி குளியலறையிலிருந்து வெளிப்பட்டான்.
“ஜவ்!” மனைவி ஜவஹர் பீவியை சுருக்கமாகக் கூப்பிட்டான்.
“என்னப்பா?” மனைவி வெளிப்பட்டாள்.
“இந்த வீட்ல எதுவுமேச் சரியா இருக்காதா? ஷவர் ஏன் வொர்க் பண்ண மாட்டிங்குது?”
“தெரியலையே…”
“போன வாரம் வீட்டின் நான்கு எல்.ஈ.டி விளக்குகள் வெடித்துச் சிதறி விட்டன!”
“திடீர்னு கரன்ட் கூட வந்திருக்கும்!”
“நாலு நாளைக்கு முன்னாடி நம்ம வாட்டர் டாங்குல ஒரு அணில் செத்துக் கிடந்துச்சு…”
“எப்படி டாங்குக்குள்ள போச்சுன்னே தெரியல...”
“நேத்தைக்கி சமையக்கட்ல கேஸ் கசிஞ்சு... ஒரே அல்லோலகல்லோலமா போச்சு… கேஸ்காரன் வந்து சரி பண்ணான்!”
“வீட்டு மேலக் குற்றப்பத்திரிகை வாசிக்கிறீங்க. உங்க மனசுல என்னதான் ஓடுது?”
“இந்த நகர்ல இடம் வாங்கி வீடு கட்டினது என் தப்பு. 42 லட்ச ரூபாயச் செலவு பண்ணி, சொந்தமா வீடு கட்டிப் பலாயும் மொஸிபத்தும் வர வச்சுக்கிட்டேன்”
“தேவையற்ற புலம்பல். வீடுன்னா ஆயிரம் நல்லதும், நூறு கெட்டதும் இருக்கத்தான் செய்யும். ஒரு பிளம்பரைக் கூப்பிட்டு ஷவரை சரி பண்ணிடலாம். எலக்ட்ரிஷியனைக் கூப்பிட்டு ஒரு இன்வெர்டரை வச்சா வோல்டேஜ் ப்ளக்சுவேஷனை சரி பண்ணிவிடலாம்!”
“என் நண்பன் அகத்திய மாறனோடு ஆலோசிச்சேன். அவன் வீட்டோட வாஸ்து சரியில்லை. சரி பண்ணனும்னு சொல்றான்!”
“வாஸ்து பாக்றது இஸ்லாமுக்கு முரணானது ஆச்சே?”
“யாருக்கும் சொல்லாமத் தெரியாம வாஸ்து பாக்க வேண்டியதுதான்?”
“வேண்டவே வேண்டாம்பா…”
பேசிக் கொண்டிருக்கும் போதே நத்தர்ஷா தாவூத்தின் இடது தோளில் ஒரு பல்லி விழுந்தது. பல்லியின் வால் துண்டாகித் தனியே விழுந்து துடித்தது.
“பாத்தியா பாத்தியா? இப்பவாவது நான் சொல்றதை நம்பு. நம்ம வீட்டுமேல யாரோ செய்வினை வச்சிட்டாங்க!”
“என்னங்க ஆச்சு உங்களுக்கு? நம்ம மார்க்கத்துக்கு ஒவ்வாத விஷயமாப் பேசுறீங்க… செய்வினையாவது கிய்வினையாவது? பேசாம எந்திரிச்சுப் போங்க!”
“பல்லி வாலைக் கூட்டிக் குப்பைல போடு!”
போட்டாள்.
“நாலு இட்லியும் தேங்காய்ச் சட்னியும் கொடு. சாப்ட்டுட்டு கடை வீதிக்குப் போரேன். மனசே சரியில்லை!” மகனும் மகளும் ஓடிவந்து தாவூத்தை கட்டிக் கொண்டனர். மகன் வலதுகால் கட்டைவிரலைக் காட்டினான். நகம் பெயர்ந்து இரத்தம் கசிந்தது.
பதறினான் தாவூத். “என்னடாச்சு?”
“பெட்ரூம் நிலைக் கதவுல காலை இடிச்சுக்கிட்டேன்த்தா!” டெட்டால் வைத்துச் சுத்தப்படுத்தி விட்டு பிளாஸ்திரி ஒட்டினான் தாவூத்.
“ஜவ்! இவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய் காண்பி!”
இட்லி சாப்பிட்டுவிட்டு கடைவீதிக்கு ஸ்கூட்டி பெப்பில் சீறி பாய்ந்தான். வழக்கமாய் டீ குடிக்கும் கடையில் போய் அமர்ந்தான்.
“பாய்! ஸ்ட்ராங்கா அரை ஜீனில ஒரு டீ போடுங்க…”
“அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா… எனக்கும் சேத்து டீ போடச் சொல்லு… அதே ஸ்ட்ராங் அதே பாதி ஜீனி!” கதீப் பசுலுல் ஹக்
“வஅலைக்கும் ஸலாம் ஹக். வா வந்து உக்காரு… இரண்டு டீ...”
அத்தர் நறுமணத்துடன் வந்தமர்ந்தான் ஹக்.
தேநீர் உறிஞ்சிக் கொண்டே தாவூத்தின் முகத்தை உறுத்தான் ஹக். “என்னடா நண்பா… டல்லா இருக்க? என்ன பிரச்சனை? பொண்டாட்டி கூட சண்டையா?”
“அதெல்லாம் இல்லடா… சொந்தமா கட்ன வீட்ல பலாயும் முஸிபத்தும் நிறைஞ்சு கிடக்கு. வாஸ்து சரி பண்ணலாம், செய்வினை கழிக்கலாம்னு சொன்னா என் பொண்டாட்டி மார்க்கத்துக்கு முரணா பேசாதன்னு குதிக்ரா… வேற வழியே இல்லை… பேசாம வீட்டை வித்துட்டு வர்ற பணத்தை பேங்கில போட்டுட்டு வாடகை வீட்டுக்கு போயிரலாமான்னு பாக்கிறேன்!”
“முஸிபத்துக்கு பல அர்த்தங்கள் உள்ளன. தொந்திரவு, துன்பம், பெருத்த அடி, துக்கம், துரதிஷ்டம், பேரிடர், பேரழிவு, சர்வநாசம், பின்னடைவு, கசையடி, பெரும்துன்பம், சோதனை, இன்னல், தடைகற்கள் அனைத்து சொற்களும் முஸிபத் என்கிற அர்த்தத்தை கொண்டவையே…”
“நான் முஸிபத்துக்கு அர்த்தம் கேட்டேனா?”
“அவசரப்படாதேடா... ஒரு வீடு பலாய் முஸிபத் இல்லாத வீடாக இருக்க, பல தினசரி நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன...”
“அதென்னடா தினசரி நடவடிக்கைகள்?”
“நான் கேக்ற கேள்விகளுக்கு உண்மையா, நேர்மையாப் பதில் சொல்லு தாவூத்!”
“கேளுடா ஹக்!”
“நீ தினசரி அஞ்சு வேளை தொழுகிறாயா?”
“என்ன கேள்விடா இது? தினசரி அஞ்சுவேளை விடாமத் தொழுகிறேன்டா... வருடத்துக்கு முப்பது நோன்பு வைக்றேன்... ஜக்காத்து கொடுக்றேன்... கல்யாணத்துக்கு முன்னாடியே உம்ரா போய்ட்டு வந்திருக்கிறேன்!”
“நீ தொழுற சரி... உன் அம்மா உன் பொண்டாட்டி உன் மகன் மகள் வீட்ல தொழுராங்களா?”
“நான் கவனிச்சதில்லை ஹக்... குழந்தைகள் கூட தொழனுமா என்ன?”
“எங்க மஹல்லால ஜும்ஆ தொழுகைக்கு ஒருத்தர் தன் எட்டு வயது ஆறு வயது மகன்களை கூட்டிட்டு வருவார். அந்த பசங்க கைல தஸ்பீஹ்மணிமாலை வச்சு திக்ர் எடுப்பான்க… உன் பிள்ளைகளை உன் அம்மா பொண்டாட்டி கூட சேந்து தொழச் சொல். இது மொத பாயின்ட்…”
“சரி!”
“நீ வீட்ல தொழுது இருக்கியா?”
“பள்ளில தொழும்போது வீட்ல எதுக்கு?”
“பர்லான தொழுகைகளை பள்ளிவாசல்ல தொழு. சுன்னத், நபில், வாஜிபு தொழுகைகளை வீட்ல தொழு. தினம் இரண்டு ரக்காயத்தாவது வீட்ல கட்டாயம் தொழு. இது ரெண்டாவது பாயின்ட்!”
“சரி!”
“உன் குழந்தைகளை தினமும் மதர்ஸாவுக்கு அனுப்பு. பள்ளிக்கல்வியோட மார்க்கக் கல்வியும் முக்கியம்.”
“ஓகே!”
“இருபது வருஷத்துக்கு முன்னாடி பஜ்ரு தொழுகைக்கு பின்னாடி, ஒவ்வொரு வீட்லயும் யாசின் சூரா ஓதுற சத்தம் கேட்கும். இப்ப எல்லாப் பெண்களும் அழுவாச்சி சீரியல்களைத்தான் விழுந்து விழுந்து பாக்ராங்க. தினமும் வீட்டில் குர்ஆனை பார்த்தோ, பார்க்காமலோ ஒரு மணி நேரமாவது ஓதவேண்டும். குர்ஆன் ஓதாத வீடு பாழ்!”
“குர்ஆன்னை ஓதச் சொல்றேன் ஹக்!”
“வீட்ல ஸலாத்துன் நாரியா 4444 தடவை ஓதுவது வீட்டு பலாய் முஸிபத்தை அடியோடு நீக்கும்!”
“சரி!”
“ஆய்த்துல் குர்ஸி ஓதுதல் வீட்டை பலப்படுத்தும்!”
“எப்ப எப்ப ஆயத்துல் குர்ஸி ஓத வேண்டும்?”
“ஒவ்வொரு தொழுகைக்குப் பின் ஒரு தடவை ஆயத்துல் குர்ஸி ஓதினால் எதிரிகள் தலைதெறிக்க ஓடுவர். கண்திருஷ்டி அகலும் ஷைத்தான் ஒழியும்...”
“ஓதுகிறேன்!”
“முக்கியமான கேள்வி… வீட்டுக்குள் வரும் போது உன் மனைவிக்கு உன் அம்மாவுக்கு ஸலாம் சொல்வியா?”
“அவங்களுக்கு எதுக்கு? நானும் சொல்லமாட்டேன் அவங்களும் வெக்கப்படுவாங்க!”
“ஸலாம் சொல்வதில் வெட்கம் எதுக்கு? நீ ரெண்டு தடவ அம்மா, மனைவி குழந்தைகளுக்கு ஸலாம் சொல்லிப் பார். மூணாவது தடவை அவங்க ஸலாம் சொல்றதில முந்திக்குவாங்க. நீ வீட்டுக்குள்ள வரும் போது யாரையும் பாக்கலேன்னா நபிகள் நாயகத்துக்கு ஸலாம் சொல்லு…”
“சரி!”
“சுத்தம் இமானில் ஒரு அங்கம். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள். கழிவறை குளியலறை சுத்தம் மிக முக்கியம். வீட்டு அங்கத்தினர்களும் சுயசுத்தம் பேண வேண்டும்!”
“பேணுகிறேன்!”
“ஆன்மிக நடவடிக்கைகள் இல்லாத வீடு கபுர் குழிக்கு சமம்... நான் மேற்சொன்ன அனைத்தையும் தொடர்ந்து செய். ஒரு ஆறு மாதம் கழித்து உன் வீட்டைப் பற்றிய அபிப்ராயத்தை புதிதாய் என்னிடம் வெளியிடு!”
“ஓகே நண்பா... உன்னுடைய ஆலோசனைக்கு நன்றி!”
ஆறுமாதம் கழித்து…
நத்தர்ஷா தாவூத் தேநீர் குடிக்கும் போது கதீப் பசுலுல் ஹக் வந்து சேர்ந்தான். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்ன நண்பா உன் வீட்டை வித்திரலாமா?”
“எங்களது ஆன்மிக நடவடிக்கைகளால் விட்டின் ஒரு ஜன்னலில் சூரியனும் ஒரு ஜன்னலில் சந்திரனும் மொட்டைமாடியில் நட்சத்திரங்களும் கொட்டிக் கிடக்கின்றன. முஸிபத் நீங்கி, வீடு கோஹினூர் வைரமாய் ஜொலிக்கிறது. இதே வீட்டை அல்லாஹ் சொர்க்கத்திலும் கொடுத்தால் பெருமகிழ்ச்சியே!”
ஷைத்தான் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடி மறைந்தான்.