உள் வாசலில் பிரவேசித்தபடியே உஸ்தாத் ஷாகுல் ஹமீது ஜலாலீ “அஸ்ஸலாமு அலைக்கும்I” என்றார்.
“வஅலைக்கும் ஸலாம்I” என்றனர் கணவனும் மனைவியும். கணவரின் பெயர் பரக்கத் அலி. மனைவியின் பெயர் சாபிரா பானு. இருவருமே பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
சாபிரா பானு நிறைமாத கர்ப்பிணி. இன்றோ நாளையோ தலைச்சான் குழந்தையை பெற்று எடுத்து விடுவாள்.
“உட்காருங்கள் உஸ்தாத்I” சோபாவில் அமர்ந்தார் ஜலாலீ.
எதிரில் அமர்ந்தான் பரக்கத் அலி.
கணவருக்கு பின் நின்று கொண்டாள் சாபிரா பானு.
“என்ன விஷயமாக என்னை வரச் சொன்னீர்கள் அலி?”
“எங்களுக்குக் குழந்தை பிறக்க இருக்கிறது, பெயர் வைப்பது தொடர்பான ஆலோசனையை உங்களிடமிருந்து பெற விரும்புகிறோம்!”
“பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டீர்களா?”
“மருத்துவச் சட்டத்தை மீற விரும்பவில்லை. அத்துடன் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதில் உள்ள த்ரில்லை விரும்பி ரசிக்கிறோம்!”
“மகிழ்ச்சி… ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக பிறந்தால் சரி!”
“உங்கள் ஆலோசனைகளை ஆரம்பிக்கலாம் உஸ்தாத் நீங்கள்!”
“பொதுவாக இன்றைய நவீன உலக தம்பதிகள் தங்கள் பெயர்களின் பாதி பாதியை இணைத்து பிறக்கும் குழந்தைக்கு சூடுகிறார்கள். அந்தத் தப்பை நீங்கள் ஒரு போதும் செய்யாதீர்கள். ரோஜாவின் ஒரு இதழையும், மல்லிகையின் ஒரு இதழையும் இணைத்து ஒரு புதுப்பூ செய்ய முடியுமா?”
“சரி”
“தாத்தா பெயரை வைக்கிறேன் பாட்டி பெயரை வைக்கிறேன் என பழைய பெயர்களை கொண்ட குறுகிய வட்டத்தில் குறுக்கு சால் ஓட்டாதீர்கள்!”
“சரி!”
“சில முஸ்லிம்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகம். அவர்கள் அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றைத் தங்கள் குழந்தைக்கு வைத்து விடுகிறார்கள். இது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதற்கு சமம், நாம் அல்லாஹ்வின் பணியாளர்கள் அல்லது அடிமைகள். ஆகையால் ஒன்று செய்யலாம். அல்லாஹ்வின் பெயர்களின் முன்னால் ‘அப்துல்’ என்கிற பெயரையும் சேர்த்து வைக்கலாம். ‘அப்துல்’ என்றால் பணியாளன் அல்லது அடிமை என்று பொருள்…”
“உதாரணத்துக்கு சில பெயர்களை சொல்லுங்கள் உஸ்தாத்!”
“அப்துல் ரகுமான், அப்துல் காலிக், அப்துல் குத்தூஸ் இப்படி பெயர்கள் வைக்கலாம்!”
“அல்லாஹ்வின் 99 பெயர் பட்டியல் கிடைக்குமா?”
“உங்கள் புலன எண்ணுக்கு முழு பட்டியலை அனுப்புகிறேன்!”
“நன்றி உஸ்தாத்!”
“குழந்தைகளுக்கு நல்ல நியதியான பெயர் சூடுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமையைப் பாழ்படுத்திவிடக் கூடாது!”
“என்னென்ன மாதிரியான பெயர்களை வைக்கக்கூடாது உஸ்தாத்!”
“அப்ரஹா, பிரோன், ஹமான், ஷதாத், ஷைத்தான், நம்ரூத், இப்லீஸ், குரூன் மற்றும் இப்ன் சபா போன்ற பெயர்களை வைக்கக் கூடாது!”
“ஓ!’
“ஹராமி, பத்ஜாத், மர்தூத், மஜ்னூம், பாகல், கம்பக்த், பேட்பக்த், டோக்லா, மற்றும் மன்ஹுஸ் பெயர்கள் வைக்க கூடாது. இந்த வார்த்தைகள் பழிக்கும் வார்த்தைகள்!”
“ஓ சரி!”
“இன்னொரு முக்கியமான விஷயம். பிற சமய கடவுளின் பெயர்களை இஸ்லாமிய குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அது புராண, பிற சமயப் பெயராக இருந்தாலும் சரி, அது நவீன பிற சமயப் பெயராக இருந்தாலும் சரி…”
“அது மாதிரியான பெயர்களுக்கு உதாரணம் சொல்ல முடியுமா உஸ்தாத்?”
‘நைலா, லாத், முனாத், இஜ்ஜா, அஹானா போன்ற பெயர்கள் கூடாது. மிருகங்களின் பெயர்கள் கல்ப், குத்தா, கின்ஜீர் மற்றும் சுவர், குவாரத் என்கிற வசவுப்பெயர்கள் சூடக் கூடாது!”
“அப்படியா?’
“நபிமார்கள் பெயர்கள், சஹாபா பெயர்கள், இஸ்லாமிய மன்னர்களின் பெயர்கள், சூபி ஞானிகளின் பெயர்கள் வைக்கலாம்!”
“அது சரியோ”
“ஆமாம். பரக்கத்தான ஆண் குழந்தை பெயர்கள் கூறுகிறேன். மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்”
“சரி!”
“ஹாரூண், மூஸா, அஹ்மது, ஈஸா, இதிரீஸ், முஹம்மது, உமர், பிலால், அபூபக்கர், ஹுசைபா, அலி, உஸ்மான், சித்திக், அப்துல் கனி, அப்துல்லா, இம்தியாஸ், நூர், மோமின், சலா, மஹ்பூப், மன்சூர், மசூக், அப்ரார், அப்துல் காதிர், மொய்னுதீன், ஜமீல், ஹசன், ஹூசைன், ஜுனைத்…”
“அடுத்த பெண்கள் பெயர்கள் கூறுங்கள் உஸ்தாத்!”
“பாத்திமா, ஆயிஷா, ஜைனப், ரஹிமா, ஷாகிதா, நசீமா, ஜுபைதா, நூர், நபீலா, தாஹிரா, ஆசியா, ஜுவாரியா, மெஹ்பூபா, கஜாலா, காஜல், நஜ்மா, சனா, குஷ்பூ, அஸ்மத், அய்மா, ஆலியா, பத்ரா, பாஹியா, ஹபீபா, ஹாலா, ஹாஜிபா, ராபியா”
“ நல்ல பட்டியல்!”
“ நீங்கள் விரும்பினால் ஆயிரம் இஸ்லாமிய ஆண் பெயர்கள், ஆயிரம் இஸ்லாமிய பெண் பெயர்கள் பட்டியலை உங்கள் புலன எண்ணுக்கு அனுப்புகிறேன்”
“மகிழ்ச்சி!”
“ஆண் குழந்தைக்கு இரு வித்தியாசமான பெயர்கள் கூறுகிறேன்”
“சொல்லுங்கள் உஸ்தாத்!”
“அசத்துல்லாஹ்!”
“பெயரின் பொருள்?”
“இறைவனின் சிங்கம்!”
“இன்னொரு பெயர்!”
“அசாத்துத்தீன் பெயரின் அர்த்தம் இஸ்லாமின் சிங்கம்!”
“உஸ்தாத், ஒரு சிறு சந்தேகம்!”
“என்ன?”
“இஸ்லாமியப் பெண் குழந்தைக்கு முஹம்மது பெயர் வைப்பார்களா?”
ஆழமாக யோசித்தார் ஜலாலீ. பின் புன்னகைத்தார்.
“தென் தமிழ்நாட்டில் 40 வருடங்களுக்கு முன் முஹம்மது என்கிற வார்த்தை முதலில் வரும்படியான இஸ்லாமியப் பெண் பெயரைச் சூடுவார்கள். அப்படி பெயர் சூடுவது பரக்கத்தான விஷயம்!”
பரக்கத் அலி சூரியனித்தான். சாபிரா பானு நிலாவினாள்.
சாபிரா பானு சமையலறைக்கு போய் ஒரு மெலாமைன் கோப்பையில் தேனீர் கொண்டு வந்து ஜலாலீயிடம் நீட்டினாள்.
வாங்கி உறிஞ்சினார்.
அழகிய முகமனுடன் விடை பெற்றார் ஷாகுல் ஹமீது ஜலாலீ.
- இரண்டு நாட்களுக்குப் பின் பரக்கத் அலி சலாம் கூறி, “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு உஸ்தாத்!”
“மாஷா அல்லாஹ்… என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?”
“முஹம்மது ஆமீனா!”