உங்கள் குழந்தைகளை ஏழு வயதில் தொழும்படி சொல்லுங்கள்! பத்து வயதில் தொழாததற்காக அடியுங்கள். படுக்கையை (ஆண் பெண் குழந்தைகள் இடையே) பிரித்து விடுங்கள் என நபிமார்கள் கூறினார்கள்.
- ஜத்து அம்ரு பின் ஷுஐபு (ரலி) / ரியாலுஸ் ஸாலிஹீன்
கால் செருப்புகளை திசைக்கு ஒன்றாய் உதறியபடி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தார் லியாகத் அலி.
“எங்கே அப்துல் கரீம்? எங்கே அப்துல்கரீம்-” என்று கூச்சலிட்டார்.
பூனைப் பாதம் வைத்து வெளிப்பட்டாள் லியாகத் அலியின் மனைவி.
“அவன் ரூமல் உக்காந்து படிச்சிட்டிருப்பான்!”
அவனது அறைக்கு கத்தியபடி ஓடினார்.
தந்தையை பார்த்ததும் பத்து வயது சிறுவன் அப்துல் கரீம் முறுவலித்தான்.
“அஸ்ஸலாமு அலைக்கும். என்னத்தா… பெரும் சப்தம் போட்டுட்டு வரீங்க?”
“வஅலைக்கும் ஸலாம். மணி என்ன ஆகுதுடா?”
“விடியற்காலை ஆறுமணி ஆவுது!”
“பஜ்ரு தொழுகைக்கு பள்ளிக்கு போகச் சொன்னேனே… ஏன் போகல?”
“போகத் தோணல… போகல…”
“உன்னோட ஏழு வயசிலயிருந்து கடந்த மூணு வருஷமா உன்னைச்‘மகனே பள்ளிக்கு தொழப்போ மகனே பள்ளிக்கு தொழப்போ’ன்னு கெஞ்சிக்கிட்டு இருக்கேனே… அது உன் காதுல ஏறல… உனக்கு பஜ்ரு தொழுகை முக்கியமா அதிகாலைத் தூக்கம் முக்கியமா?”
“என் பள்ளிபடிப்பு முக்கியம். நானும் அதிகாலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சு வீட்டுப்பாடங்களை செஞ்சுக்கிட்டுத் தானே இருக்கிறேன்!”
“பள்ளிப்படிப்பும் முக்கியம் தொழுகையும் முக்கியம்!”
“அல்லாஹ் இருக்கிறான் என்கிற நம்பிக்கை வந்ததும் தொழப் போறேன்!”
எட்டி கன்னத்தில் அறைவிட்டார். மகனின் தலைமுடியைக் கொத்தாய்ப் பற்றிப் பத்தடிதூரம் தரதரவென இழுத்துப் போனார்.
“எவ்வளவு திமிர் இருக்கனும் உனக்கு? அல்லாஹ் இருக்கான்னு 200கோடி மக்கள் நம்பும் போது நீ என்ன பிசாத்து பய நம்பாம இருக்கிறதுக்கு? பத்து வயசிலேயே நாத்திகம் பேசுறியா நீ? எந்த கறுப்புசட்டைக்காரன் உன்
மனசைக் கலைச்சான்?”
“யாரும் என மனசைக் கலைக்கல, சுயமாச் சிந்திச்சேன்...”
“நீ என்னடா சுயமாச் சிந்திக்கிறது? அப்பன் நான் சொல்ரேன், நீ கண்ணை மூடிக்கிட்டு தொழ வேண்டியதுதானே?”
“நான் சுயமாய்ச் சிந்திப்பதைத் தடுக்க உங்களுக்கு அனுமதி இல்லை. என்னைக் கைநீட்டி அடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்!”
“நீ என்னடா சொல்றது?” முதுகில் நாலு சாத்து சாத்தினார்.
லியாகத் அலியின் மனைவி ஓடிவந்தாள்,
“ஒத்த மகனை இப்டி அடிக்றீங்களே… நியாயமா?”
“பத்து வயது நிரம்பிய மகன் தொழப் போகாமல் இருந்தால் அடிக்கச் சொல்கிறார் நபிகள் நாயகம்!”
“மகனே, அத்தா சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு கேட்க வேண்டியதுதானே?”
“முடியாது அம்மா… உங்க ரெண்டு பேருக்கும் கலீல் ஜிப்ரான் என்கிற கவிஞரைப் பற்றித் தெரியுமா?”
“தெரியாது, அவன் உன்னைத் தொழப் போகக்கூடாதுன்னு சொன்னானா?”
“அவர் 1883 ஆம் ஆண்டு பிறந்து 1931 ஆம்ஆண்டு இறந்த லெபனானீஸ் அமெரிக்கன் கவிஞன். அவருடைய ‘ஆன்சில்ட்ரன்’ உரைநடைக் கவிதையைப் பற்றிக் கேள்விபட்டிருக்கீங்களா?”
“இல்லை… பத்து வயசுப் பையனுக்கு இதெல்லாம் தேவையா?”
“அவருடையக் கவிதையைச் சொல்கிறேன்… கேளுங்க…”
இருவரும் காதுகளை தீட்டி கூர்ப்பாகினர்.
“உங்கள் குழந்தைகள் உங்கள்
குழந்தைகள் அல்ல
வாழ்வின் ஏக்கத்தின் மகன்கள்.
மகள்கள் அவர்கள்.
அவர்கள் உங்கள் வழியாக வருகின்றனர்.
ஆனால் உங்களிடமிருந்து அல்ல
அவர்கள் உங்களுடன் இருந்தாலும்
அவர்கள் உங்களுக்கு
சொந்தமானவர்கள் அல்ல.
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை
கொடுக்கலாம் ஆனால் உங்கள்
எண்ணங்களை அல்ல.
ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த
எண்ணங்களை கொண்டுள்ளனர்-
ஆனால் அவர்களின் ஆன்மாவை அல்ல.
உங்கள் கனவில் கூட நீங்கள் பார்க்க முடியாத
நாளைய வீட்டில் அவர்களின்
ஆன்மாக்கள் வாழ்கின்றன.
நீங்கள் அவர்களை போல இருக்க முயற்சிக்கலாம்
ஆனால் அவர்களை உங்களை போல் ஆக்கவேண்டாம்.
ஏனென்றால் வாழ்க்கை பின்னோக்கி போவதில்லை
நேற்றோடு நிற்காது
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகள்
அனுப்பப்படும் வில்கள் நீங்கள்”
“அய்யயோ… என் மகன் பேய் பிடிச்ச மாதிரி உளறுகிறானே?”
“பேய் பிடிக்கவில்லை… கவிதை பிடித்திருக்கிறது எனக்கு?”
கொஞ்சம் இறங்கி வந்தார் லியாகத் அலி.
“என்னதான்டா சொல்ல வர்ற?”
“எனக்கு ஈமான் வந்த பிறகு தொழப் போகிறேன்!”
“எப்ப ஈமான் வரும்?”
“வரும் போது வரும்!” வடிவேலு பாணியில் கூறினான்.
“சரி உனக்கு வேண்டாம், எனக்கும் வேண்டாம்… நான் ஒரு டீல் சொல்றேன்… பிடிச்சிருந்தா இறங்கி வா!”
“சரி!”
“இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பள்ளிக்கு போய் வா.. மற்றவர் ஈமான்களை கண்கூடாகப் பார்… இமாமிடம் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறு. தொழுகை உனக்குள் நிகழ்த்தும் மாயாஜாலத்தை உணர்… ஆறு மாதம்
கழித்து உனக்கு ஈமான் வராவிட்டால் அதன் பின் ஆயுளுக்கும் தொழப்போ என நிர்பந்திக்க மாட்டேன். அது உனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே ஆன பிரச்சனை என ஒதுங்கிக் கொள்கிறேன்…”
“உங்க டீலுக்கு ஒப்புக்கொள்கிறேன். முதலில் என்னை அடித்ததற்கு மன்னிப்பு கேளுங்கள்!”
“குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் கற்றுத்தரும் பெற்றோரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றார் நபிகள் நாயகம். அதனால் உன்னைக் கொஞ்சம் கடுமையாகக் கண்டித்தேன்… என்னை மன்னிச்சிருடா அப்துல்கரீம்”
“ஓகே… டீலுக்கு நான் ரெடி..” எழுந்து தலைமுடியைச் சரி செய்து கொண்டான் அப்துல் கரீம். தூரத்து கோணத்தில் பள்ளிவாசல் அப்துல்கரீமை பார்த்து கண் சிமிட்டியது. ஓஸோனை சுவாசித்தபடி ஒலு செய்யப் போனான். இரு
கால்களை இரு கைகளை இரு காதுகளை நாசித்துவாரங்களை தலைமுடியை வாயை குளிர்நீர் வைத்து சுத்தம் செய்தபோது ஆன்மாவும் சுத்தமானது.
நான்கு வரிசைகளில் தொழுகையாளிகள்.
இரண்டாவது வரிசையில் ஒரு ஆறுவயது சிறுவன் நின்றிருந்தான்.
சிவப்பு நிற எம்ப்ராய்டரி பூக்கள் வரையபட்ட தொப்பி அணிந்திருந்தான்.
ஜிப்பா. கணுக்கால் தெரியும் லுங்கி.
ஒரு வாரம் போன பின்பு…
தொழுகை முடிந்துவரும் ஆறுவயது சிறுவனை முஸாபஹா செய்தான் அப்துல் கரீம்.
“உன் பெயர்?”
“ரிஸ்வான் ரூமி!”
“என்ன படிக்கிறாய்?”
“இரண்டாம் வகுப்பு!”
“உன்னைத் தொழச் சொல்லி உன் அத்தா உன்னை அடித்து விரட்டினாரா?”
“இல்லை. அவர் தனியாகத் தொழ வருகிறார். நான் தனியாகத் தொழ வருகிறேன்”
“அல்லாஹ் இருக்கிறானா?” தந்தை தொழப் போ என அடித்து விரட்டியதை விவரித்தான் அப்துல் கரீம்.
“எங்கும் தீக்கமற நிறைந்திருக்கிறான் அல்லாஹ். நீ ஒரு வியாபாரம் செய்கிறாய். வியாபாரத்தில் வரும் லாபநஷ்டம் உனக்கில்லை என்றால் ஒப்புக் கொள்வாயா? நஷ்டம் நரகம் லாபம் சொர்க்கம். கடவுள் இல்லை – ஏகப்பட்ட கடவுள்கள் – ஏக கடவுள் இதில் எது உனக்கு சௌகரியமானது?
மேய்ப்பன் இல்லாத ஆடுகள் வழி நாசம். ஆடுகளுக்கு ஒரு தரமான மேய்ப்பன் இருப்பதே பொருத்தமானது. ஈமானை விடு தொழுகை உன்னை உடல் ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் உன்னதப்படுத்துகிறது. இறைவன் இருந்தால் தொழுகை இறைவனை சேரட்டும். இறைவன் இல்லை என்றால் தொழுகை நம் உடல், மன ஆரோக்கியங்களை பெருக்கட்டும். கடவுள் இருந்தால்தான் நல்லவனாக இருப்பாயா? நல்லவனாக இருப்பதில் கிடைக்கும் சந்தோஷத்துக்காக நீ நல்லவனாக இரு. கோடி புறாக்களில் ஒரு புறாவாக கூட்டத்தில் தொலைவது சௌகரியம். தனியாக காக வடிவெடுக்காதே. கொத்தி துரத்தப்படுவாய். ஒரு தந்தைக்கு மகனை வழி நடத்த ஆலோசனை கூற முழு உரிமை உண்டு. உன் தந்தை மென்மையான போக்கைக் கடைபிடித்திருக்கலாம். இறைவன் இருக்கிறான் என்பதற்கான கோடி அலிபிகளுக்கு இடையே வாழ்கிறோம். இருந்தும் கடவுளை மறுதலிப்பது பெரும் அறியாமை… ஆன்மிகத்தில் ஆழ்நீச்சலடித்து கலகக் குணத்தைக் கைவிடு!”
அகத்தூய்மை பெற்று உள்ளும் புறமும் உயிர்த்தெழுந்தான் அப்துல்கரீம்.