அந்த வீடு 1200 சதுர அடியில் தரைத்தளமும், 600 சதுர அடியில் முதல் தளமும், 600 சதுர அடியில் இரண்டாவது தளமும் கட்டப்பட்டிருந்தது. மொட்டை மாடியில் சின்டெக்ஸ் வாட்டர் டேங்க்.
புத்தம் புதிதாய்க் கட்டப்பட்ட வீட்டுக்கு அன்று காலைதான் புதிதாய் குடி வந்திருந்தனர் கமாலுதீன் குடும்பத்தார்.
கமாலுதீன் 50 வயதான பணக்கார முஸ்லிம். அவர் ஒரு வடிகட்டின கஞ்சன். இஸ்லாமியர்களில் டேஷ் என்கிற பிரிவை சேர்ந்தவர். டேஷ் பிரிவினர் இஸ்லாமியர்களில் 10 சதவீதம் இருப்பர். பெரும்பாலும் கீமான் கட்சி பாணி இளைஞர்களே... டேஷ் பிரிவினர் இமாம்களை மதிக்க மாட்டார்கள். இமாம்கள் புரோகிதர்கள். இறைவனுக்கும் மனிதருக்கும் இடையேப் புரோகிதர்கள் எதற்கு? எனக் கூறி இமாம்களின் இருப்பை மறுதலிப்பர்.
அவர்கள் வாயில் ‘ஷிர்க்’ ‘பித்அத்’ ‘ஹராம்’ வார்த்தைகள் அதிகம் புழங்கும். இறந்தவர்களுக்கு மௌலுது ஓதினால் அது ஷிர்க். கபர்களில் ஜியாரத் பண்ணினல் அது ஷிர்க். சுன்னத் கல்யாணம் ஷிர்க். தர்கா சென்று வருதல் ஷிர்க். புது வீட்டுக்குப் பால் காய்ச்சினால் ஷிர்க். பெரிய மனுஷி ஆன பெண்ணுக்கு விழா நடத்தினால் ஷிர்க். நாகூர் கந்தூரி ஏர்வாடி கந்தூரி ஷிர்க். நபிகள் நாயகத்திற்கு ஸலவாத்து ஓதுதல் ஷிர்க். ஹதீஸ்களை ஒப்புக் கொள்ள மாட்டோம் எனப் பிடிவாதம் பிடிப்பர். மொத்தத்தில் இந்த டேஷ் பிரிவினர் எகனைக்கு மொகனை பேசுபவர்கள். விதாண்டாவாதம் இவர்களது சுவாசம். ஆனால், இவர்கள் தங்களை ‘தூய்மை வாதிகள்’ என அழைத்துக் கொள்வர்.
தெருவில் நின்று கமாலுதீன் புதிய வீட்டை முழுமையாக ஒரு முறை பார்த்தார் அபூ தல்ஹா. அபூ தல்ஹா கமாலுதீனுக்கு எதிர்பிரிவைச் சேர்ந்தவர். கமாலுதீன் எதையெல்லாம் ஆகாது என்கிறாரோ, அதனை எல்லாம் ஆகும் என்பார் அபூ. அபூவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.
கமாலுதீன் எதிரணி என்று விலகிப் போக மாட்டார். அவருடன் பேசி ஒரண்டை இழுப்பார். ஒரண்டையின் கடைசியில் கமாலுதீன் தலைக்கு மேல் இருகைகளைக் குவித்து “எப்பா அபூ, என்னை விட்ருப்பா… டோட்டல் சரணாகதி உன்னிடம்..” என மிழற்றுவார்.
பெயின்ட் வாசனை அடித்த புது வீட்டுக்குள் பிரவேசித்தார் அபூ தல்ஹா.
“உள்ள வரலாமா? உள்ள வரலாமா? உள்ள வரலாமா?”
“வந்திட்டு என்ன கேள்வி. வா… வா.”
“அஸ்ஸலாமு அலைக்கும் கமாலுதீன்!”
“வஅலைக்கும் ஸலாம் அபூ…”
“வீட்டுக்கு குடி வந்துட்டீங்க போல…”
“ஆமா..”
‘‘வீடு கட்ட எவ்வளவு செலவாச்சு…?”
“அரைக் கோடி!”
“இவ்வளவு அழகா வீடு கட்டியிருக்கியே ஒரு விழா வச்சு ஒரு அய்நூறு பேருக்கு கறிச் சோறு போட்டிருக்கலாமில்ல?”
“வயிறு நிறையத் தின்னுட்டு வீட்டைக் குறை சொல்லவா?”
“ஊரெல்லாம் பலன் சொல்லுமாம், பல்லி கழனி பானைக்குள்ள விழுமாம் துள்ளி என்பார்கள். நீங்கல்லாம் ஊருக்கு ஒண்ணு பேசுவீர்கள் பெர்சனலா வேறொண்ணு செய்வீங்க…”
“அப்படி என்ன நான் செஞ்சதை நீ பாத்த?”
“வீட்டுக்கு அஸ்திவாரம் போடும் போது இந்து மதச் சகோதரரான கொத்தனார் பூமி பூஜை போட அனுமதிச்சியே அது ஷிர்க் இல்லையா?”
”அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கல!”
பூமி பூஜை நடந்த விடியோ கிளிப்பிங்கை காட்டினார் அபூ. “அப்டின்னா இது?”
“அது வந்து… வீடு கட்டின கொத்தனார் சித்தாள் எல்லாம் இந்து மதச் சகோதரர்கள்.. அவங்களைப் பூமி பூஜை பண்ண நான் அனுமதிக்கலைன்னு வச்சுக்க, வீடு கட்டும் போது ஏதாவது ஒரு விபத்து நடந்தால், பூமி பூஜை நடத்தாதினாலதான் விபத்து நடந்ததுன்னு என் தலையை உருட்டுவாங்க. அதனால அனுமதிச்சேன்!”
“பூமி பூஜை மங்கலகரமான விஷயம். பிற மத நம்பிக்கைகளை மதிப்போம். ஆனா இதெல்லாம் இணை வைப்புன்னு சொல்லிக்கிட்டே இதைச் செய்தீங்க பாருங்க… அதான் சகிக்கல…”
“உன் விடியோவை எரேஸ் பண்ணு அபூ…”
“ஒரு விடியோன்னா அழிச்சிரலாம் பத்து பதினைஞ்சு இருக்கே!”
“வேறு எதைஎதை விடியோ எடுத்து தொலைச்ச?”
“நேத்து நடுராத்திரி ரகசியமா ஒரு இமாமையும் ஏழெட்டு ஓதுற பிள்ளைகளையும் வச்சு மௌலிது ஓதின பாரு… வீட்டு வாசல்ல நின்னு மாடிப்படில நின்னு மொட்டை மாடில நின்னு மெளலிது ஓதுற சப்தம் கேக்குதான்னு காதைத் தீட்டி நின்னே பாரு… கண்கொள்ளாக் காட்சி!”
“இல்லையே…”
“இதோ விடியோ!”
“ஹிஹி… பொண்டாட்டி ஆசை தவிர்க்க முடியல…”
“இமாமை வச்சு தரைத்தள நடுவுல நின்னு முதல்தளத்தில நின்னு இரண்டாவது தளத்தில நின்னு பாங்கு சொல்ல வச்சியே அது மச்சினி ஆசையா?”
“அட ஆமாம்ப்பா… அழகான மச்சினிச்சி… அவ சொல்லைத் தட்ட முடியுமா?”
“புதுசா கட்டின வீட்டுக்கு கண் திருஷ்டி படாம இருக்க ஆயத்துல் குர்ஸி எழுதின தாயத்தை வீட்டு நிலை வாசல்ல தொங்கவிட்டியே அது…”
”அது என் மகனோட விருப்பம் அபூ…”
“எனக்கு வீட்டைச் சுத்திக் காண்பிக்க மாட்டியா கமாலுதீன்?”
“இன்னும் என்னென்ன நொட்டைச் சொல்லப் போறியோ… வா… வந்து தொலை… எங்க வீட்டை உளவு பார்த்து விடியோ எடுத்த கையை சொடக்குன்னு உடைக்கனும்!”
ஒவ்வொரு அறையாய் பார்த்தபடி வந்தார் அபூ. கமாலுதீனின் குடும்பத்தாரின் ஸலாம்களை பெற்று பதில் ஸலாம் கூறினார் அபூ.
சமையலறையில் வந்து நின்றார் அபூ. ஆரஞ்சு நிற வண்ணம் பூசிய சமையலறை.
“சமையலறை எத்தனை சதுர அடில கட்டிருக்கு?”
“நானூறு சதுர அடி. ஆங்கில யூ வடிவ மாடுலார் சமையலறை. பெப்பர்ப்ரை கம்பெனிக்காரன்தான் மட்டு சமையலறையை அமைத்துக் கொடுத்தான். மொத்தம் ஒரு லட்சம் செலவாச்சு. பணி சூழலியலுடன் லே-அவுட் டிசைன் பிளேஸ்மென்ட் பார்த்து இந்தச் சமையலறை கட்டப்பட்டது. மூன்று எரிகருவி உள்ள கேஸ் அடுப்பு, மின்சார சிம்னி, பாத்திரங்களைக் கழுவும் வாஷ்பேசின், பாத்திரங்கள் அடுக்கி, நீர் சுத்தப்படுத்தும் கருவி, குளிர்சாதனப்பெட்டி, மின் அடுப்பு, பலசரக்கு சாமான்கள் அடுக்கும் செல்ப், வெட்டும் அளக்கும் கலக்கும் சமைக்கும் கருவிகள்…”
“எல்லாம் சரி கமாலுதீன்” குரலை இரகசியமாகக் குழைத்தார் அபூ “உன் வீட்டுச் சமையலறையை வாஸ்து நிபுணரை வச்சுத்தானேக் கட்ன?”
“எவன் சொன்னான்? எவன் சொன்னான்?”
“உன் சமையலறை தென்கிழக்கு திசை பார்த்து கட்டப்பட்டிருக்கு… சமையலறை கதவு கடிகார திசையில் நிற்கும் வகையில் அமைத்திருக்கிறாய்.. குளியலறையும் சமையலறையையும் ஒன்றாக நீ கட்டவில்லை. கிழக்கு அல்லது தெற்கில் ஜன்னல் அமைந்திருக்கிறாய். குளிர்சாதனப் பெட்டியை தென்கிழக்கு மூலையில் வைத்திருக்கிறாய். இவ்வளவு பேசும் நீ உன் புதிய வீட்டுச் சமையலறையை வடகிழக்கு, தென்மேற்கு திசையில் ஏன் அமைக்கவில்லை?”
“சூரிய வெளிச்சம் சமையலறைக்கு போதுமான அளவு வரட்டும் என்று தான் சமையலறையை தென்கிழக்குத் திசையில் வைத்தேன்!”
“நீயும் வாஸ்து நிபுணரும் பேசும் விடியோ காட்சி இதோ!”
“என்னைப் பழி வாங்கிடாத. கஞ்சத்தனம் பண்ணத்தான் இந்தப் பிரிவு அனுதாபியாக மாறினேன்!”
“கண்டா சைவ மனிதர், காணாட்டி பூனைதின்னி மனிதர்… பிறரை மகிழ்ச்சிபடுத்த, பிறருக்கு வயிறார உணவிட, மதம் அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இமாம்களையும், வலிமார்களையும், ஒலிமார்களையும் கண்ணியப்படுத்தி மகிழ்வோம். நபிகள் நாயகத்தை மனிதகுலத்தின் முன்மாதிரி மனிதராக மரியாதைப்படுத்துவோம். இஸ்லாமின் உட்பிரிவினர் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று கூடுவோம்! மாஷா அல்லாஹ்!”
கமாலுதீனின் மனைவி கொண்டு வந்த பீர்னியை குடித்தார் அபூ தல்ஹா.