பொன்விழா ஜமாஅத் பள்ளிவாசல் உக்கடம் அன்பு நகரில் அமைந்திருந்தது. பள்ளியின் முதல் தளம் கட்டும் பணி ஒளிவேகமாய் நடந்தேறிக் கொண்டிருந்தது.
பள்ளியின் இடதுபுறம் மதரஸா இருந்தது.
அன்பு நகரில் நானும் என் மகன் - மருமகள் குடும்பமும் வாடகை வீட்டில் இருந்த போது அந்த பள்ளிக்கு ஜும்ஆ தொழப் போவேன்.
மகன் ஜி எம் நகரின் மனாஸ் கார்டனில் சொந்த வீடு கட்டி குடியேறின பிறகும், கடந்த இரண்டு வருடங்களாக நான் பொன்விழா ஜமாஅத் பள்ளிக்குதான் ஜும்ஆ தொழப் போவேன். காரணம், பள்ளி இமாம் மௌலானா எஸ். மிக்தாம் ஹுஸைன் கலீமி ஆமிரியின் பயான். ஹைடெக் இமாம் அவர். பயான் பக்கங்களை டிடிபி செய்து எடுத்து வருவார். பயான் பண்ணும் போது தனது திறன்பேசியில் பயானை பதிவு செய்வார். பயான் பதிவை எனக்கு வாட்ஸப்பில் அனுப்பிவிடுவார். முதல் முறை காதுகுளிர பள்ளியில் நேரடியாக பயான் கேட்கும் நான் இரண்டாவது முறை வாட்ஸப்பில்,கேட்பேன். சில சமயம் அவரின் பயான் கருத்துகளை நான் சிறுகதையாய் எழுதுவதும் உண்டு.
ஜும்ஆ தொழுகைக்கு நான் நண்பகல் 12 30 மணிக்கு போய் விடுவேன். தொழும் பிரதான ஹாலின் இடது பக்க சுவரை ஒட்டி அமர்ந்து கொள்வேன். ஜும்ஆ தொழ வரும் 500 தொழுகையாளிகளையும் உன்னிப்பாய் கவனித்து அவர்களின் உடல்மொழி ஆளுமை ஆராய்வேன்., நரம்புத் தளர்ச்சி காரணமாக உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டு வரும் பென்சில் போன்ற உடலமைப்பு கொண்ட 38 வயது தொழுகையாளி. மொடமொட வெள்ளை கதர் சட்டை கதர் வேஷ்டி வெள்ளி மோதிரம் தங்கமுலாம் பூசிய கைகடிகாரத்துடன் நளினமாக தொழுமிடத்துக்கு நடந்து வருவார் ஒரு தொழுகையாளி.
என்னை விட, கனத்த சம வயதுள்ள தொழுகையாளி லுங்கியுடன் வருவார். எனக்கு அவர் பெயர் தெரியாது. அவருக்கு என் பெயர் தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி டெஸிபல் இல்லாமல் சலாம் சொல்லிக் கொள்வோம். கோதுமை அல்வா உடல்வாகு கொண்ட வாலிபர் ஒருவர் தனது ஐந்து வயது மகனுடன் தொழ வருவார்.
அன்பு நகர் சலூனில் பணிபுரியும் இரு வடஇந்திய இளைஞர்கள். மளிகைக் கடை நண்பர் ஒருவர். எங்கள் பழைய வீட்டின் உரிமையாளர் ஒருவர். அவரின் மேல் வாசனை பத்தி நறுமணம் வீசும். முக்கால்கை மடித்து விடப்பட்ட சட்டையுடன் முத்தவல்லி பயானுக்கு பின் அறிவிக்க வேண்டிய செய்திகளை துண்டு சீட்டுகளாய் இமாமிடம் கொண்டு போய்k கொடுப்பார்.
பள்ளி நிர்வாகி ஒருவர் நின்று கொண்டு முன் தொழுமிடம் நிரம்பினால் கூடுதல் தொழுகையாளிகளை முதல் தளத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பார். தொழுகைக்குபின் சந்தா வசூலிக்க டேபிள் மேஜையும் ரசீது புத்தகங்களும் காத்துக்கொண்டு இருக்கும். சில தொழுகையாளிகள் கூடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் தொப்பிகளை எடுத்து அணிந்து கொள்வர். பள்ளியின் இரு மோதினார்களில் ஒருவர் பள்ளியின் மின்விசிறிகளை குழல் விளக்குகளை உயிர்ப்பிப்பார்.
சட்டென்று இமாம் தனது அறையிலிருந்து குறிப்புகளுடன் வாட்டர் பாட்டிலுடன் அழகிய அணில் போல் குதித்து வெளிவருவார். தொழுகையாளிகளுக்கு இடையே தொந்தரவு இல்லாமல் நடந்து தனது இடம் போவார். பயான் ஆரம்பிக்கும். வழக்கமான தொழுகையாளிகளுக்கு நடுவே ஒரு 70 வயதான தொழுகையாளி என் கண்களை கவர்ந்தார். துணி தொப்பி. நரைத்ததாடி வெள்ளை ஜிப்பா. வெள்ளை கைலி. நான் இடது பக்க சுவரில் சாய்ந்து உட்கார்வேன் என்றால் அவர் வலது பக்க சுவரில் சாய்ந்து தஸ்பீஹ் மணி மாலையை உருட்டிக் கொண்டிருப்பார்.
ஜீனத்தான முகம். ஆன்மிகக் கண்கள். ரோஜா அடித்த உதடுகள். பிரதான தொழுமிடத்துக்கு பக்கவாட்டு வராண்டாவில் இருபதுக்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் பாலிமர் இருக்கையில் அமர்ந்து தொழுவர். சிலருக்கு 45 வயது கூட இருக்காது முழு ஆரோக்கியம். அவர்கள் தரையில் மற்ற தொழுகையாளிகளுடன் சேர்ந்தே தொழலாம். இந்த 70 வயது தொழுகையாளிக்கு வலது காலில் மிகப்பெரிய பேன்டேஜ். பேன்டேஜில் இரத்தம் கசிந்திருக்கும். இடது காலை விட பூதாகரமாய் வீங்கி இருக்கும் வலது கால். வலியை சகித்து கொண்டு அவர் தரை விரிப்பில் தான் தொழுவார்.
யாராவது அவரிடம் பேசி அவரை பாலிமர் இருக்கையில் அமர்ந்து தொழ சொல்லக் கூடாதா?
ஏறக்குறைய 20 ஜும்ஆ தொழுகைகளிலாவது அந்த 70 வயது தொழுகையாளியை நெருக்கமாக கவனித்து வந்தேன். இந்த ஜும்ஆவில் அவருடன் பேசிவிட வேண்டும். ஸலவாத் ஓதிய பிறகு தொழுகையாளிகளின் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
நான் வேகமாய் ஓடி அந்த முதியவரை மறித்தேன். “அஸ்ஸலாமு அலைக்கும். நான் மனாஸ் கார்டனில் குடியிருக்கிறேன். பெயர் ஆர்னிகா நாசர். எழுத்தாளர்!”
“வஅலைக்கும் சலாம்!” என்றார்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டுமே?”
பேச வசதியாய் ஒரு பக்கம் ஒதுங்கினோம். பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொட்டி எண்ணிக் கொண்டிருந்தனர் பள்ளி நிர்வாகிகள்.
“உங்க பெயர் பாய்?”
“முஹம்மது முஸம்மில்!”
“உங்க சொந்த ஊர்?”
“பாலக்காடு மூன்று தலைமுறைகளுக்கு முன்னமே உக்கடம் பகுதியில் செட்டில் ஆகிவிட்டோம்!”
“என்ன தொழில் செய்கிறீர்கள்?”
“மகன்களுடன் லாரிபேட்டையில் பழைய இரும்புக்கடை வைத்திருக்கிறேன்!”
“உங்கள் வலது காலில் என்ன காயம்?”
“சுகர் புண் பெரிதாகிவிட்டது. டாக்டர் காலை எடுக்க வேண்டும் என்கிறார்”
“தரை விரிப்பில் அனைவருடன் சேர்ந்து தொழும்போது கால் காயம் அக்ரிவேட் ஆகுமே… புதிதாக ரத்தம் கசியுமே… எந்த மாத்திரை சாப்பிட்டாலும் குணமாகாதே..”
“அதனால்?”
“அதனால் நீங்கள் பாலிமர் இருக்கையில் அமர்ந்து தொழலாமே?”
என்னை அர்த்தபுஷ்டியாய் உன்னித்தார் முஸம்மில். “எனக்கு சேரில் அமர்ந்து தொழுவதில் உடன்பாடில்லை”
“சேரில் அமர்ந்து தொழுவது தவறு என்கிறீர்களா?”
“இல்லை. நான் யார் அதைs சொல்ல? ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவது நன்மையான விஷயம். அதற்குதான் அவர்களும் வருகிறார்கள். நானும் வருகிறேன். அவர்கள் சேரில் அமர்ந்து தொழுவது பற்றி நான் ஏன் ஆராய வேண்டும்?”
“தொழுகையில் உங்கள் உடலை சிரமப்படுத்தி இறைவனின் கருணையைக் கூடுதலாகப் பெற நினைக்கிறீர்களோ?” சிரித்தார் முஸம்மில்.
“என்னிரு கால்களிலும் கைகளிலும் புண்கள் வந்து இரத்தம் கசிந்தாலும் நான் தரையில் தான் தொழுவேன். ஜமாஅத்தார்கள் சுடும் மணலில் தொழுதால் நானும் அங்கு தான் தொழுவேன். இறைவனின் கருணை எல்லா மூமின்களுக்கும் சமமாய் கிடைக்கட்டும். எனக்கு எதுவும் பிரத்தியேகமாக தேவையில்லை!”
“ஆங்கில மருத்துவம் மேற்கொள்கிறீர்களா அல்லது சித்தாவா?”
“எல்லா மருத்துவமும் முயற்சி செய்து பார்த்து விட்டேன். சுகர் 450 இருக்கிறது!”
“என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னியுங்கள் பாய்!”
“என் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி சகோதரரே!”
இருவரும் கைப்பேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம்.
அழகிய முகமன்கள் கூறி பிரிந்தோம். தத்தி தத்தி நடந்து ஜிப்பாவில் இருந்த பத்து ரூபாய் நாணயங்களை மிஸ்கின்களுக்கு போட்டார் முஸம்மில்.
- ஆறு மாதங்களுக்கு பிறகு -
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு முஸம்மிலை தேடினேன். இருந்தார். அழகிய முகமன் பரிமாற்றம் அவரது கால்கட்டு காணாமல் போயிருந்தது. வலது கால் புண் முழுமையாய் ஆறியிருந்தது.
“ஆஹா… சுகர் புண் குணமாய்ருச்சு போல. நீங்கள் தொழும் விதத்துக்காக இறைவன் உங்கள் மீது விசேஷ கருணையை பெருமழையாய் பொழிந்து விட்டான் போல…” சிரித்தார் முஸம்மில்.
“நான் அப்படி நினைக்கவில்லை. இறைவனின் விசேஷ கருணைக்கு நான் தகுதியானவன் இல்லை. கோடிக்கணக்கான ஈமான்தாரர்களில் நான் ஒரு சாதாரணன்!”
தொழுகை ஒரு இஸ்லாமியனை பக்குவப்படுத்தும் மகத்துவம் கண்டு பிரமித்தேன்.