காலை 7 மணி. இரும்புக் கேட்டின் முன் கொக்கியில் தொங்கவிடப்பட்டுள்ள துணிப்பையில் மூன்று பால் பாக்கட்களை போட்டு விட்டுப் போனார் பால்காரர்.
பேப்பர்காரர் தினமலரை வாரமலர் இணைப்புடன் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போனார்.
போர்டிகோவில் பேரன் முஹம்மது அர்ஹானின் இரண்டுக்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தன.
ராபிடோவிலிருந்து இறங்கினார் சம்பந்தி ரபீக் முஹம்மது. வயது 50. சிறிய மெலிந்த உருவம். அடர்ந்தி குறைந்த தாடி. பவர் கிளாஸ்.
முதுகுப்பை மட்டும் கொண்டு வந்திருந்தார்.
அவர் எனக்கு மகன் வழி சம்பந்தி. என் மகன் நிலாமகனுக்கும் அவரது மகள் பஹிமா ஆப்ரினுக்கும் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. அவர் நெடுஞ்சாலைத்துறையில் உயர் பொறியியலாளராக பணிபுரிகிறார். அவரின் மனைவி என் சகோதரி பேபிராணி கரூர் பள்ளப்பட்டி இஸ்லாமிய பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தலைமையாசிரியையாக பணிபுரிகிறார். சம்பந்தி ரபீக் முஹம்மதின் சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் திருமங்கலம். பள்ளப்பட்டியில் சொந்த வீடு கட்டி வசிக்கிறார்கள். பணி மாற்றம் காரணமாக ரபீக் முஹம்மது சென்னையில் பணிபுரிகிறார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!” என்றேன் வாய் நிறைய.
“வஅலைக்கும் ஸலாம்! முஹம்மது அர்ஹான் எங்கே?”
பேச்சு சப்தம் கேட்டு அர்ஹான் உள்வாசலுக்கு வந்தான். தாத்தாவைப் பார்த்துவிட்டு, பாசமாய் மிழற்றினான். அத்துடன் தாவி அவரது நெஞ்சில் படர்ந்தான்.
அம்மா வழித் தாத்தாவுக்கும் அத்தா வழித் தாத்தாவுக்கும் இடையே பாசப் போட்டி வைத்தால் ரபீக் முஹம்மதுதான் ஜெயிப்பார். பேரனைக் கொஞ்சுவார்.
பேரனுடன் மொசைக் தரையில் உருள்வார். ஸ்கூட்டி பெப்பில் அவனை முன்னிறுத்தி வெளியில் கூட்டிப் போவார். மொத்தத்தில் அவர் பேரனின் முன் ஐஸ்கிரீம் பொம்மையாய் உருகி ஓடுவார். தாத்தாக்களுக்குள் பொறாமை எப்படி வரும்? குற்றாலம் நீர்வீழ்ச்சியில் 10 நிமிடம் நின்று விட்டு, அடுத்தவர் குளிக்க வழி விடுவோம் இல்லையா? அப்படித்தான் நானும். தினமும் 24 மணி நேரமும் நான் அர்ஹானுடன் இருக்கிறேன். வாரத்துக்கு ஒரு முறையோ மாதத்துக்கு
இருமுறையோ வரும் அம்மாவழி தாத்தா பேரனின் பாசமழையில் நனையட்டுமே?
சம்பந்திக்கு சுடச்சுட தேநீர் தயாரித்து வழங்கினாள் வகிதா.
தந்தையைக் கண்டதும் என் மருமகளின் முகம் நிலாவியது.
வாங்கி வந்த பலகாரங்களை மகளிடம் நீட்டினார் ரபீக் முஹம்மது.
“நல்லாருக்கியாம்மா?”
“நல்லாயிருக்கிகேன்த்தா!”
அவரது பையிலிருந்து இஹ்ராம் பெல்ட்டை எடுத்தார். “மச்சான்! இந்தாங்க நீங்க கேட்ட 44 இஞ்ச் சைஸ் இஹ்ராம் பெல்ட் மண்ணடில வாங்கினேன்… போட்டுப் பாருங்க!”
சட்டைக்கு மேலேயேப் போட்டுப் பார்த்தேன் சரியாக இருந்தது.
உம்ரா வழிகாட்டி இரு பிரதிகள், ஒரு லுங்கி, இரு தஸ்பீஹ்மணி மாலை, கறுப்பு பர்தா, ஹிஜாப், இஹ்ராம் மேற்துண்டு காற்துண்டு அடங்கிய பை நீட்டினார்.
“நன்றி மச்சான்!”
“ஏர்போர்ட்டுக்கு உங்களை வழியனுப்ப வந்து விடுவேன்!”
“மகிழ்ச்சி!”
உம்ரா நிறைவேற்றும் சடங்குகளை விவரித்தார்.
“நீங்கள் மெக்காவுக்கு அருகில் தானே வேலை பார்த்தீர்கள்?”
“ஜெத்தாவில் ஆறு வருடங்கள் வேலை பார்த்தேன்!”
“எத்தனை உம்ரா நிறைவேற்றி உள்ளீர்கள்?”
“பத்துக்கும் மேற்பட்ட உம்ராக்கள்!”
மகனின் திருமணத்துக்கு முன்னமே ரபீக் முஹம்மது எனக்கு தந்தை வழி உறவினர்தான். அம்மாவைப் போல மனைவி வேண்டும் என தேடிய என் மகனுக்கு மனைவியாக ரபீக் முஹம்மதின் மூத்த மகள் கிடைத்தாள்.
ரபீக்முகமது - பேபிராணி தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள். மூத்த மகள் பஹிமா ஆப்ரினை பல் மருத்துவம் படிக்க வைத்தனர். இரண்டாவது மகள் பாத்திமா சப்ரினை பொது மருத்துவம் படிக்க வைத்து வருகின்றனர். கணவன் - மனைவி இருவருமே விழித்திருக்கும் நேரமெல்லாம் மகள்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றியேச் சிந்திப்பர்.
ரபீக் முஹம்மது ஒரு வாரம் மூத்த மகளைப் பார்க்கப் போவார். ஒரு வாரம் மேல்மருத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் படிக்கும் இளைய மகளைப் பள்ளப்பட்டிக்குக் கூட்டிச் செல்வார்.
ரயில்வே ஷண்டிங் இன்ஜின் போல பயணம் பயணம் மேலும் பயணம். மாதத்தில் 2000 கிலோ மீட்டர் மகள்களுக்காகப் பயணம்.
ரயில் முன்பதிவு கிடைத்தால் ரயிலில் வருவார். முன்பதிவு கிடைக்கா விட்டால், பேருந்தில் வருவார். கோவைக்கு வந்தால் சோபாவில் படுத்துக் கொள்வார். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்.
“சென்னையில் உங்கள் தினசரி நடவடிக்கைகள் என்னென்ன?”
“அதிகாலையில் எழுந்து அதிகாலைத் தொழுகை அதன் பின் வாக்கிங். ஒரு வாடிக்கைகடையில் நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை. மதிய உணவு சமைத்து எடுத்துக் கொண்டு பணிக்குப் போதல். மாலை மஹரிப் தொழுகை. அதன் இஷா. இரவு 8:30 மணிக்கு டிபன். இரவு ஒன்பதரை மணிக்குத் தூக்கம்!” என்பார்.
“உங்களையும் சகோதரியையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மகள்களை நீங்கள் பார்த்துக் கொள்ளும் விதம் அபாரம். என் இஸ்லாமிய நீதிக்கதைகளில் என்ன கனவு கண்டேனோ, அதனை உண்மையாக்கும் விதத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். மகள்களுக்கு மார்க்கக் கல்வியும் பொதுக்கல்வியும் செவ்வனேப் புகட்டுகிறீர்கள். உங்கள் இரு மகள்களுக்கு இடையே போட்டி இல்லை. பொறாமை இல்லை!”
“அவர்களின் ஒற்றுமை கம்பம் யானைக்கார வீட்டு மரபணுவிலிருந்து வந்தது மச்சான்”
“என்னைக்காவது நமக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?”
“குழந்தைகளில் ஆண் - பெண் பாகுபாடு எதற்கு? பஹிமாவுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் தலையில் தூக்கி வைத்துத்தான் கொண்டாடுவேன்!”
“உங்களின் அபூர்வ குணம் நம் மக்களில் மிக மிகக்குறைவு!”
“அப்படிச் சொல்ல முடியாது. கடந்த 15 ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான கல்வி விழிப்புணர்ச்சி வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு மார்க்கக் கல்வி, பொதுக்கல்வி மற்றும் அனுபவக் கல்வி மூன்றுமேத் தேவை. குழந்தைகள் வளர்ப்பில் நாம் என்னதான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இறைவனின் கருணைப்பார்வை மிக மிக முக்கியம்…”
“நான் உங்களுக்கு ஒரு இனிமையான தகவல் கூற விரும்புகிறேன்!”
“சொல்லுங்கள்!”
“நான் ஒரு ஹதீஸ் படித்தேன்!”
“என்ன ஹதீஸ்?”
“இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களையும் சைகை செய்தார்கள் என ஹதீஸ் கூறுகிறது. ஹதீஸ் அறிவிப்பவர்: அனஸ் இப்னுமாலிக் (ரலி) நூல் திர்மிதீ 1837…”
ரபீக் முஹம்மது மெலிதாக சிரித்தார். அவரது கண்கள் மின்னின.
“பாதி வழிதான் பயணித்துள்ளோம். இலக்குக்கு இன்னும் நீண்ட தூரம்… மகள்கள் வளர்ப்பில் என்றுமே சொர்க்கம் நோக்கமாக எங்களுக்கு இருந்ததில்லை. மகள்களின் மீதுள்ள பாசம் தான் அவர்கள் எங்கள் மீது காட்டும் பாசம்தான் எங்களை வழிநடத்துகிறது. ஆசிரியர் மார்க்கு போட்டு விட்டால் போதுமா ஹெட் மாஸ்டர் மார்க் போட வேண்டுமே…”
“நன்கு பேசுகிறீர்கள் மச்சான்!”
“எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இறந்து போன தங்கையின் இரு மகள்களைத் தத்தெடுத்து தன்னிரு இரு மகள்களுடன் சேர்த்து வளர்த்து ஆளாக்கி மணம் செய்து வைத்தது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆறு மகள்கள். ஆறு மகள்களையும் படிக்க வைத்து ஆளாக்கி மணம் செய்துவித்து மகள்களின் குடும்பங்களுக்கு ஊழியம் செய்து வருகிறார் ஒரு தந்தை. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தன்னிடம் வேலை பார்க்க வந்த சிறுமியைப் படிக்க வைத்து ஆளாக்கி மணம் செய்து வைத்தது. நான் உங்கள் கண்களில் படுகிறேன். நம் கண்ணில் படாத ஆயிரம் நல்ல உதாரணங்கள் இஸ்லாமியக் குடும்பங்களுக்கு இடையே ஒளிந்துள்ளன. சொர்க்கம் நரகம் வியாபார கணக்கு பார்த்து பாசத்தை நாங்கள் எங்கள் மகள்கள் மீது கொட்டவில்லை கூடிய மட்டும் நன்மையின் பக்கமே இருப்பது எங்கள் இயல்பு!”
“மாஷா அல்லாஹ் மச்சான்!”
எனக்கு மெக்சிகோவில் கணவன் குழந்தையுடன் இருக்கும் மகள் ஜாஸ்மின் ஞாபகம் வந்தது.. “மகளே! உன் மேன்மைக்காக மேலும் நாங்கள் சிந்திப்போம்… இறைவன் மகத்தானவன்!” முணுமுணுத்தேன். பேரனோடு கொண்டாட்டத்தை தொடர்ந்தார் ரபீக் முஹம்மது.