முகையதீன் ஆண்டவர் பள்ளி (சுன்னத்துல் ஜமாஅத்) முத்தல்லி அறை.
இருக்கையில் அமர்ந்திருந்தார் முத்தவல்லி நயினார் முகமது.
அவர் எதிரே -
புகார் மனு கொடுத்த நூருல் ஆலமீனும் குற்றம் சாட்டப்பட்ட ஆபிதீன் பாயும் நின்றிருந்தனர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி!”
“வஅலைக்கும் ஸலாம்… நீங்க தானே புகார் கொடுத்தது?”
“ஆமாம்!”
“என்ன வேலை செய்றீங்க?”
“மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 35 வருடம் வேலை செய்துவிட்டு 2018 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். நான் ஒரு எழுத்தாளர். பூங்கொத்தில் நிறைய எழுதுவேன். என் கல்லூரி விரிவுரையாளர் மகனும் பிசியோதெரபிஸ்ட் மருமகளும் சேலத்தில் செட்டில் ஆனார்கள். நாங்கள் முதலில் பண்பு நகரில் வாடகைவீட்டில் குடியிருந்தோம்.
அதன்பின் இதோ நிற்கிறாரே ஆபிதீன்பாய்… இவர் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட். இவர் பாத்திமா நகரில் மனைகள் பிரித்து விற்று வருகிறார். நாங்கள் இவரிடம் இரண்டு சென்ட் மனை வாங்கினோம். மனை விற்கும் போது மனை டிடிசிபி அப்ரூவல் பெற்றது எனக்கூறி சில ஆவணங்களை காட்டினார். பில்டிங் அப்ரூவல் வாங்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் பாத்திமா நகருக்கு டிடிசிபி அப்ரூவல் கிடையாது என ஆதாரப்பூர்வமாய் கூறிவிட்டனர். டிடிசிபி அப்ரூவல் இல்லாததால் வங்கிக் கடன் வட்டி 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக எகிறியது. பில்டிங் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டியதால் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சொத்து வரி கட்டினோம்…”
“உண்மையா ஆபிதீன் பாய்?”
“யார் சொன்னது? இதோ டிடிசிபி அப்ரூவல்!”
வாங்கிப் பார்த்தார் முத்தவல்லி.
நூருல் ஆலமீன் குறுக்கிட்டான். ”முந்தைய ஆட்சியில் இவர் ஆட்களைப் பிடித்து டிடிசிபி அப்ரூவலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை செய்துள்ளார். ஆட்சி மாறியதும் அப்ரூவல் கிடப்பில் போனது!”
“இவர் சொல்வது உண்மையா?”
உதடுகளைக் கடித்துக் கொண்டார் ஆபிதீன் பாய்.
“ஆபிதீன் பாய் யாரையும் மதிக்க மாட்டார். மாநகராட்சி அதிகாரிகளோ காவல்துறை அதிகாரிகளோ, விசாரணைக்கு கூப்பிட்டால் போக மாட்டார். பள்ளிவாசல் முத்தவல்லி பத்து தரம் அழைத்தும் பதினோராவது தடவை தான் வந்துள்ளார்!”
ஆபிதீன் பாய் மிரட்சியாய் கண்களை ஓட்டினார்.
“நகரைச் சுற்றி இருக்கும் அனைவரிடனும் சண்டை நகரின் பின்புறத்தை மூடிவிட்டார். நகரின் முன்புறத்தை அலங்கார வளைவாய் கட்டி தன்னகப்படுத்தி உள்ளார். திறந்தவெளி சாக்கடை கால்வாயை பாதியில் மறித்து வைத்துள்ளார். நகரில் 150 மனைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீத்த்தை விற்று விட்டாலும் நகரின் ஜமீன்தாரர்களாக பண்ணையாளர்களாக இவரும் இவரது உறவினர்களும் சுற்றி வருகின்றனர்!”
“இவ்வளவு இழிவாகவா நடந்துப்பீங்க ஆபிதீன் பாய்?”
“இவர் எங்களை ஏமாற்றியதே நம் மத நம்பிக்கையை வைத்துத்தான். மனைகளை விற்கும் போது, எங்களிடம் இவர் அடிக்கடி கூறிய வாக்கியம். ‘நானும் முஸ்லிம் நீங்களும் முஸ்லிம்கள் ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் ஏமாற்றுவானா?’ என்பதுதான். மதநம்பிக்கையை காசாக்கிய நம்பிக்கை துரோகி இவர்!”
“அதிகம் பேசாதே. நீ நமக்கு எதிரி பத்திரிக்கைல எழுதுபவன் தானே? நீ ஒரு உளவாளி. நம் முஸ்லிம் மக்களின் குற்றம் குறைகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்தத் துடிக்கிறாய்!”
“இது எதிரி பத்திரிக்கை என ஒதுக்கினால் உங்களுக்கு எந்தப் பத்திரிக்கை மிஞ்சும்? குளத்தோடு கோவிச்சுக்கிட்டு டேஷ் கழுவாம போன கதை தான் ஆகும்?”
“டிடிசிபி அப்ரூவலுக்கு இவர் என்னென்ன செய்திருக்க வேண்டும் நூருல் ஆலமீன்?”
“தார் சாலை போட்டிருக்க வேண்டும். தெருவிளக்கு போட்டிருக்க வேண்டும். இரு பூங்காக்கள் அமைத்திருக்க வேண்டும். நகரில் திறந்தவெளிச் சாக்கடையை மாநகராட்சியின் பிரதான பாதாள சாக்கடையுடன் இணைக்க வழி செய்திருக்கவேண்டும். இன்னும் பல வசதிகளை நகருக்கு இவர் செய்திருக்க வேண்டும்.!”
“இவைகளை செய்வதாக இவர் ஒத்துக்கொண்டால் புகார் மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு சமாதானமாக போய் விடுகிறீர்களா?”
“இவர் முதலில் இறங்கி வரட்டும்!”
“முத்தவல்லி இதுவரை அந்த பாத்திமா நகரில் 125 பேர் மனை வாங்கியிருக்கிறார்கள். இவரது புகார் மனுவில் எத்தனை பெயர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் இவருடன் வந்து புகாரை நேரடியாக ஆமோதித்து இருக்கிறார்கள்?”
“பாத்திமா நகரில் மனை வாங்கியோரில் பிரதானமானவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். சிறு சிறு வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டவில்லை கைப்பணத்தை கட்டுகிறார்கள். அதனால் 4சதவீத கூடுதல் வட்டி அவர்களை பாதிக்கவில்லை. எங்கள் நகரைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. எந்த நகருக்கும் டிடிசிபி அப்ரூவல் இல்லை. அதனால் பாத்திமா நகருக்கு அப்ரூவல் இல்லாதது பற்றி பாத்திமா நகரில் மனை வாங்கியோர் கவலைப்படவில்லை. அவர்களின் அறியாமையை காசாக்குகிறார் ஆபிதீன் பாய்!”
“முத்தவல்லி! இந்த நூருல் ஆலமீன் இந்தப் பள்ளிவாசலுக்கு மூன்று வருடங்களாகத் தொழ வருகிறார். நான் 30 வருடங்களாக தொழ வருகிறேன். உங்களை போல பத்துக்கும் மேற்பட்ட முத்தவல்லிகளை பார்த்து விட்டேன். இவர் மாதம் நூறு ரூபாய் சந்தா கட்டுகிறார். நான் மாதம் 500 ரூபாய் கட்டுகிறேன். பள்ளி விரிவாக்கத்துக்கு 50 ஆயிரம் ஹதியா கொடுத்துள்ளேன். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்ற கதையா இருக்குது இந்தாளு கதை. நேற்று வந்த நாடோடி உங்களுக்கு முக்கியமா? இரண்டு தலைமுறையா தொழ வர்ற நாங்கள் முக்கியமா?”
“ஆபிதீன் பாய்… உரையாடலை மானிபுலேட் பண்ணாதீங்க….”
“முத்தவல்லி நீங்க என்ன நீதிமன்றமா அல்லது காவல் நிலையமா என்னை விசாரிக்க? விசாரணைக்கு நான் ஒத்து வரலைன்னா என்னை ஊர் விலக்கம் செய்வீங்களோ?”
எகத்தாளம் நையாண்டி கொப்பளித்தது.
“இறைவனின் மீதும் பள்ளித் தலைமை மீதும் தார்மீக பயம் இருக்க வேண்டும். இந்த எள்ளி நகையாடும் வேலை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்!”
“எனக்கு ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் நெருங்கிய சொந்தக்காரர். அவர் வக்பு போர்டு வரைக்கும் செல்வாக்கானவர். போன் போட்டு தருகிறேன். பேசுகிறீர்களா?”
“நான் ஏன் பேச வேண்டும்?”
“உங்க முதுகை முதலில் பாருங்கள் முத்தவல்லி!”
“என் முதுகையும் என்னிரு கைகளையும் பார்த்துக் கொண்டேதான் முத்தவல்லி பணி செய்கிறேன்!”
“எப்படிப் பேசினாலும் படிஞ்சு பேச மாட்டேங்தீங்க முத்தவல்லி. நூருல் ஆலமீனை கொஞ்ச நேரம் தனியா நிக்க சொல்லுங்க. நீங்களும் நானும் கொஞ்சம் பேசனும்!”
“நான் உங்களோட தனியா பேச விரும்பல…”
முத்தவல்லி நூருல் ஆலமீனிடம் திரும்பினார். “பாய்! பாத்திமா நகரில் மொத்தம் எத்தனை பேர் வங்கிக் கடன் வாங்கி வீடு கட்டி இருக்காங்க, வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க?”
“இரண்டு வகையிலும் சேர்த்து 61பேர் முத்தவல்லி!”
“வட்டி வித்தியாசத்தால் வங்கிக் கடன் வாங்கிய ஒவ்வொருவரும் அடையும் நஷ்டம் எவ்வளவு?”
“தோராயமாக நாலு லட்சம்!”
“ஆபிதீன் பாய்! நான் சொல்றதை பொறுமையாக் கவனியுங்க!”
“என்ன?”
“பாதிக்கப்பட்ட 61 பேருக்கும் தலா 2 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்திருங்க!”
“அட உங்கப்புரானே… எவன் வீட்டு காசை எவன் தரச் சொல்றது?”
“மரியாதையா பேசுங்க ஆபிதீன் பாய்!”
“அபராதம் இரண்டு லட்சம். மொத்தம் ஒரு கோடியே இருபத்திரெண்டு லட்சம்”
“இன்னும் மூன்று மாசம் டைம் தரேன். அதுக்குள்ள நீங்க தார்ரோடு, தெருவிளக்கு, பூங்கா, திறந்த வெளி சாக்கடை இணைப்பு, வாசல்கள் திறப்பு செய்திடல் வேண்டும்!”
“இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகும் தெரியுமா?”
“நீங்கள் இந்த இடத்தை பவர் ஆப் அட்டர்னி வாங்கும்போது ஒரு சென்ட் இடம் ஒரு லட்சம்னு மனை உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் பண்ணுனீர்கள். இப்ப சென்ட் 16 லட்சம் ரூபாய்க்கு விக்றீங்க. 16 மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்கிறது. மொத்தம் 64 கோடி ரூபாய். நீங்கள் இடத்துக்காரர்களுக்கு கொடுப்பது நாலு கோடி. உங்களுக்கு 8 கூடுதலாய் கிடைப்பது 60 கோடி. 60 கோடியில் தோராயமாக ஒன்றரை கோடி செலவு பண்ண வலிக்கிறதா?” நூருல் ஆலமீன் கூவினான்.
“தலை இருக்க வால் ஆடாதே!”
“நான் நஷ்ட ஈடு கொடுக்காவிட்டால் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் என்ன செய்வீர்கள் முத்தவல்லி?”
“நம்ம ஜமாஅத் பள்ளிவாசல் போர்டில் உங்க கயமைத்தனங்கள் பட்டியலிடப்படும்!”
ஆபிதீன் பாய் ஆங்காரமாய் தரையை உதைத்தபடி வெளியேறினார்.
முத்தவல்லி சொன்னதை தொழில் பங்குதாரரிடம் ஒப்பித்தார் ஆபிதீன் பாய்.
பங்குதாரர் உன்மத்தமானார். “மதத்தின் பெயரால் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவோம். போர்டில் கை வலிக்க அவன் எழுதி விட்டுப் போகட்டும். நாளையிலிருந்து நாம் ஜாக் பள்ளிக்கு தொழப் போவோம். புதுப் பள்ளிக்கு ஆயிரம் ரூபாய் சந்தா கொடுப்போம்!”
மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால் சுரண்டல்கள் உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரை தொடரும்.