அப்துல் ஸலாம் தேனீர் விடுதி.
ஒரு பக்கம் சுடச்சுட தேனீர் தயாரிப்பும் மறுபக்கம் உளுந்தம் வடை சுடலும் நடந்து கொண்டிருந்தன.
தேனீர் விடுதிக்கு எதிரே இருமர பெஞ்ச்கள். பெஞ்ச்சுகளில் மக்கள் அமர்ந்து தினத்தந்தி, தினமலர் வாசித்தபடி தேனீர் உறிஞ்சினர்.
ஓட்டி வந்த ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்தினார் ஹுஸ்னி ஜாபிர் காதரி.
காதரிக்கு வயது 35. சுருமா ஈஷிய கண்கள். தொழுகை அடையாளம் பூத்த நெற்றி. நடுவகிடு எடுக்கப்பட்ட தலைக்கேசம். மீசை இல்லாத கச்சிதத் தாடி. வெள்ளை நிற ஜிப்பா. அதே நிற குர்தா. கால்களில் காதிம் செருப்பு. புன்னகை முகம். கண்களுடன் சேர்ந்து யோசிக்கும் ரோமானிய மூக்கு. ரோஜா அடித்த உதடுகள். கைகால் நகங்களை செதுக்கலாய் கத்தரித்து இருந்தார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் ஸலாம்!”
“வஅலைக்கும் ஸலாம் இமாம். இன்னைக்கி என்ன லேட்?”
“பள்ளியில் சிறுவேலை பார்த்துவிட்டு வந்தேன்!”
“உக்காருங்க… ரெண்டு உளுந்தம் வடை சாப்பிட்டு டீயக் குடிங்க!”
‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி உளுந்த வடையைக் கடித்தார் காதரி.
“கேள்விபட்டீங்களா இமாம்?”
“என்ன?”
“மக்காமதீனா ஜெத்தால வரலாறு காணாத பனியும் மழையும். காபா அருகில் தேங்கி நிற்கும் மழைநீரில் நிறைய ஹாஜிகள் சறுக்கி விளையாடியதைப் பார்த்தீர்களா? சிலர் காபா மழைத்தரையை முத்தமிட்டார்கள்!”
“ஆமாம், பார்த்தேன்!”
“கடந்த இரண்டு மூணு வாரத்ல ரெண்டு மூணு விமான விபத்துகள்!”
“ஆமா!”
“லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ 16 பேர் மரணம் ஒருலட்சம் பேர் தங்கள் வீடுகள் இழந்துள்ளனர்!”
“ஆமாம்!”
“இரண்டாயிரத்தி இருபத்தி மூணு அக்டோபரிலிருந்து இதுவரை இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 50000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் காயப்பட்டுள்ளனர்!”
“இஸ்ரேல் இராணுவத்தினர் மனித மிருகங்கள். உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்!”
“இதெல்லாம் பாக்கும்போது எனக்கு ஒண்ணு தோணுது இமாம்!”
“என்ன தோணுது!”
“உலகம் அழியப்போவதற்கான அறிகுறிகள் இவைதானோ?”
“நீ அளவுக்கதிமா யோசிக்ற ஸலாம்!”
“எனக்குத் தோணுறதைச் சொல்றேன்… தகுந்த விளக்கத்தை நீங்கதான் கொடுக்கனும் இமாம்!”
“சற்று அவதானித்துத்தான் உன் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்!”
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு கனத்த காலடி அரவம் கேட்டது. அரவம் கேட்ட திசை திரும்பினார் காதரி.
ஒரு மனிதன் காதரி நோக்கி நடந்து வந்தான்.
அவனைப் பார்க்கும் மைக்ரோ நொடியில் வந்தவனுக்கு பின்னணியில் நெருப்பும் நீரும் சுழன்றடித்து மறைந்தன.
வந்தவன் சிவப்பு இரால் போல சிவந்திருந்தான்.
பச்சை நிறத் திராட்சைக் கண்கள். நெற்றி புடைத்திருந்தது. சுருள்தலைமுடி கேசம். கனத்த சரீரம் செம்பவள நிறமுகம். தாடி நுனியை ரப்பர் பான்ட்கள் சுற்றி ஐந்து குஞ்சங்கள் அமைத்திருந்தான்.
ஜீன்ஸும் ‘இதோ நெருங்கி விட்டேன்’ வாசகங்கள் கொண்ட பனியனும் அணிந்திருந்தான். கால்களில் புழுதி படிந்த ஷு.
வந்தவன் காதரியின் முகத்துக்கருகே முகம் வைத்து முறுவலித்தான்.
“யார் நீங்க?” என்றார் காதரி.
எதிராளியின் மீது அரளிப்பூ வாசைனயடித்தது.
“நான் கிழக்குதிசையிலிருந்து வருகிறேன்…”
“கிழக்குத்திசை என்றால்?”
“ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் இவற்றில் எதாவது ஒரு நாட்டிலிருந்து!”
“நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள்!”
“எனக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியும்!”
“ஓ!”
“உலக நாடுகள் அனைத்தும் சுற்றி வந்திருக்கிறேன் மெக்கா, மதீனா தவிர!”
“ஏன் அங்கு போகவில்லை?”
“தோணவில்லை, போகவில்லை!”
“நீங்கள் முஸ்லிம்தானே?”
ஆமாம் என்றும், இல்லை என்னும் மையமாக தலையாட்டினான் வந்தவன்.
“உங்க பெயர்?”
“பெஹ்ஸாத் பாக்தாதி!”
“உங்கள் தொழில் என்ன?”
“இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன், நோயாளிகளை குணப்படுத்துவேன், மொத்தத்தில் பல்வேறு விதமான அற்புதங்களை நிகழ்த்துவேன்!”
“விளையாடாதீர்கள். உங்கள் உண்மையான தொழில் என்ன?”
“நான் ஒரு நாடோடி கிடைத்த வேலையைச் செய்வேன். இன்னும் 40நாட்கள் தான் இங்கிருப்பேன்!”
“அதன்பின்?”
“இன்னொரு நகரத்துக்குப் போய் விடுவேன்!”
“தேனீர் குடிக்கிறீர்களா?”
“கொடுங்கள்!”
உளுந்தம் வடையும் தேனீரும் வந்தன. மறைவாக உளுந்த வடை சாப்பிட்டான் வந்தவன்
“நன்றி.. உங்கள் பெயர் என்ன?”
“ஹுஸ்னி ஜாபிர் காதரி!”
“உங்கள் பணி என்ன?”
“சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இமாமாக இருக்கிறேன்!”
“வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் பயான் செய்வீர்கள் இல்லையா?”
“ஆமாம்!”
“இறுதிநாள் அருகாமையில் தஜ்ஜால் என்பவன் வருவான் என பயான் பண்ணி இருக்கிறீர்களா?”
“ஆமாம். தஜ்ஜாலுக்கு அல் மஸீஹ் என்கிற பெயரும் உண்டு. அவனை கிபி 661ல் தமீம் அல் தாரி என்கிற லக்கம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர் தஜ்ஜாலை சந்தித்து இருக்கிறார். அவருக்கு ‘துணிச்சலான தேசாந்தரி’ என்கிற பட்டப் பெயரும் உண்டு. தஜ்ஜாலை நாங்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவர்களும் நம்புகின்றனர்!”
“ஓ அப்படியா?”
“இப்போதைய திறன்பேசிகள்தான் தஜ்ஜால் என சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். தஜ்ஜாலுக்கு ஒற்றைக்கண்தான் இருக்கும். அவனது நெற்றியில் கே – எப்- ஆர் என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் என்பார்கள்!”
“இஹ்!”
“நபிகள் நாயகம் தஜ்ஜால் பற்றி பலமுறை எச்சரித்திருக்கிறார். அவன் நரகத்தையும் சொர்க்கத்தையும் கொண்டு வருவான். அவன் சொல்லும் சொர்க்கம் நமக்கு உண்மையில் நரகம். அவன் சொல்லும் நரகம் நமக்கு உண்மையில் சொர்க்கம்!”
“இதெல்லாம் நம்புகிறீர்களா என்ன?”
“இஸ்லாமின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நபிகள் நாயகம் எங்கள் ஆதர்சநாயகன்!”
“எனக்கு எரிச்சல் வருகிறது!”
“ஏன்?”
“நபிகள் பெயரைக் கேட்டாலே எனக்கொரு ஒவ்வாமை!”
‘இதற்கு மேல் நான் உங்களுடன் பேசவிரும்பவில்லை நீங்கள் போகலாம்!”
வந்தவன் சிரித்தான்.
“நீங்கள் போகச் சொன்னால், நான் போவதற்கு நான் என்ன உங்கள் அடிமையா?”
“வாக்கு வாதம் தவிர்ப்போம்!”
“மிகமிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டேன். எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. (நிறுத்தி கர்ணகடூர குரலில்) என் இன்னொரு பெயர் தஜ்ஜால்!”
தஜ்ஜால் என்கிற பெயரைக் கேட்டதும் ஹுஸ்னி ஜாபிர் காதரியின் முகம் இறுகியது.
“எனக்கும் இன்னொரு பெயர் இருக்கிறது (மிடுக்காக) முஹம்மது ஈஸா!”
ஈஸாவா? தஜ்ஜாலின் முகம் வெளிறியது.
முகத்தில் ஒற்றைக்கண்ணும் நெற்றியில் இறைமறுப்பாளன் வாசகமும் பூத்தன.
ஈஸா தஜ்ஜாலின் தலையைத் தொட, தஜ்ஜால் மரண ஓலத்துடன் காற்றில் கரைந்து மறைந்து போனான்.