“மேலும் நிச்சயமாக நாம் மனிதனை படைத்தோம்.
அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது
என்பதையும் நாம் அறிவோம்.
அன்றியும் அவன் பிடரி நரம்பை விட
நாம் அவனுக்கு சமமாக இருக்கிறோம்”
- திருக்குர்ஆன் 50:16
*****
பள்ளிவாசல்.
மினாரின் உச்சியில் சில புறாக்கள் பறந்து கொண்டிருந்தன.
இஷா தொழுகையை முடித்துவிட்டு வலது ஓரம் அமர்ந்திருந்தார் மௌலானா ஃபஸ்லுல் ஹக். வயது எழுபது. மத்திம உயரம். கனிந்த செவ்வாழைப் பழம் போலிருந்தார். நரைத்த வெள்ளி ரோமங்களால் ஆன யானைத்தந்த தாடி. மூன்றாவது பரிமாணத்தை ஊடுருவி பார்க்கும் ஆன்மிகக் கண்கள். குர்ஆனிய உதடுகள்.
தொடர்ந்து நான்காயிரம் தடவைகள் திகர் எடுத்தவர் நிறுத்தினார். தனது வலது பக்கப் பிடரி நரம்பின் பக்கம் திரும்பினார்.
“இப்பிரபஞ்சத்தில் சாந்தியும் சமாதானமும் உருவாக்குபவனே… என் திக்ரை காதுற வந்துவிட்டாயா?”
“போனால்தானே வர? நான் சதா உன் பிடரி நரம்பின் அருகில்தான் இருக்கிறேன். உன் வணக்க முறைகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்!”
“என்னை ரசிக்கும் நேரத்தில் மற்ற விஷயங்களைக் கோட்டை விட்டு விடாதே!”
“ஒரே மைக்ரோ நொடியில் கோடி இடங்களில் இருப்பவன் நான். உன்னை ரசிக்கும் போதே ஓர் ஆப்பிரிக்கச் சிறுவனுக்கு உணவளித்தேன். வாஷிங்டன் டிசியில் ஒரு விமான விபத்தை தவிர்த்தேன். இந்தியாவில் ஒரு மூமீனை ஒரு மதவெறியனிடமிருந்து காப்பாற்றினேன். முந்தின நொடியைப் போல இந்த நொடியும் நகரப் பிரபஞ்சத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்!”
“இரு உன்னை ஒரு தடவை முழுமையாக பார்த்துக் கொள்கிறேன்!”
இறைவன் லட்சம் வர்ணங்களில் பம்பரமாய்ச் சுழன்றான்.
“அடடா… நீ என்ன அழகு?”
“என்னில் எதைக் கண்டு ரசித்தாய் ஃபஸ்லுல்?”
“ஒரு க்ளைடாஸ்கோப் சாகசமாய் ரெங்குகிறாய்!”
“இதுவும் நானல்ல!”
“பிறிதொன்றாய் இருந்தும் பக்தி கண்களுக்கு நீயாகிறாய்!”
“இரவுச் சாப்பாடு சாப்பிட நீ போகவில்லையா?”
“பசிக்கவில்லை ரஹ்மானே!”
“காதலி பெயரை ஜில்லியன் தடவைகள் முணுமுணுக்கும் காதலன் ஆகிவிட்டாய். நான் எத்தனை பேர்களுக்கு காதலியாக இருப்பது?”
“கோடி கோடி ஜீவராசிகளின் காதலன் நீ!”
“என்னிடம் முத்தம் கித்தம் கேட்டுவிடப் போகிறாய்!”
“கேட்டால் நீ மறுக்கப் போகிறாயா என்ன?”
இறைவன் சிரித்தான். “நான் பௌதிக காதலின் தன்மைகளுக்கு அப்பாற்பட்டவன்!”
“நாங்கள் பௌதிகத்தில் ஒரு கால் அபௌதிகத்தில் ஒரு கால் வைத்து உன்னை நேசித்து விட்டுப் போகிறோம்!”
“உன்னுடைய பேச்சில் கவிதை ரசம் சொட்டுகிறது!”
“உன் படைப்பின் மகத்துவமே இதுதான். நீ கொஞ்சம் ரசிக தன்மையை எங்களுக்குள் வைத்தாய். நாங்கள் அதனை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டோம்!”
“நீயும் நானும் பேசுவது உன் குடும்பத்துக்கு தெரியுமா?”
“சொன்னால் நம்ப மாட்டார்கள்!”
இருவரின் உரையாடலுக்குள் ஒரு மூன்றாவது குரல் குறுக்கிட்டது.
“அஸ்ஸலாமு அலைக்கும்!” மதரஸா மாணவன் முஹம்மது வஸீர்.
மூன்றாவது பரிமாணத்துக்கு திரும்பினார் ஃபஸ்லுல் ஹக்.
“வஅலைக்கும் ஸலாம்!”
“இரவு மணி 11 ஆகிவிட்டது. இன்னும் நீங்கள் வீட்டுக்கு போகவில்லையா?”
“விரும்பும் போது போவேன்!”
“ஒரு கேள்வி மௌலானா. நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது!”
“என்ன?”
“பல வருடங்களாக நீங்கள் உங்களுடனே பேசிக்கொள்கிறீர்களாம். பக்தி முற்றி பித்துப் பிடித்து விட்டது என்கிறார்கள். ஆன்மிகக் கிறுக்கர் என பட்டப்பெயர் சூட்டி உங்களை அழைக்கிறார்கள். நான் வரும்போது கூட நீங்கள் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… மருத்துவரைப் பார்க்கலாமில்லையா நீங்கள்?”
வெடிச் சிரிப்பு சிரித்தார் ஃபஸ்லுல் ஹக். வலது பிடரி நரம்புப் பக்கம் திரும்பி கண் சிமிட்டினார் ஹக். “பாத்தியா அல்லாஹ்வே… உன்னுடன் பேசும் நான் ஆன்மிகக் கிறுக்கனாம்!”
“உனக்குப் புரியாது வஸீர்!”
“நீங்கள் பேசுவதில் ஒரு திடமான உரையாடல் இருக்கிறது. ஒருவர் கைபேசியில் பேசினால் எதிர்முனையில் யாரோ ஒருவர் இருப்பதாகத்தானே அர்த்தம்? நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள்? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்!”
“அல்லாஹ்விடம்!” முஹம்மதுவஸீருக்கு தூக்கி வாரிப் போட்டது.
“மெய்யாலுமா?”
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விடம்தான் பேசுகிறேன். என் எதிரில் உக்கார் வஸீர்!” அமர்ந்தான் முஹம்மது வஸீர்.
“இஹ்ஸான் என்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“இல்லை!”
“அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போல வணங்குவது ‘முஷாஹதா’ எனப்படும். அல்லாஹ் நம்மை பார்ப்பது போல வணங்குவது ‘முராக்கபா’ எனப்படும். இவ்விரு வகை வணக்கங்களும் ‘இஹ்ஸான்’ எனப்படும். இஹ்ஸான் இல்லாமல் தீன் முழுமை அடையாது. இஹ்ஸானில் மூழ்கியோர் ‘முஹ்ஸின்’ எனப்படுவர். நான் ஒரு முஹ்ஸின் இளைஞனே… என் வணக்கமுறை முஷாஹதா!”
பிரமித்தான் முஹம்மது வஸீர்.
“அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போல வணங்க முடியவில்லை என்றால் வருத்தப்படாதே. ஒவ்வொரு சிந்தனையின் மீதும் இறைவனின் பார்வை இருக்கிறது என்னும் விழிப்புடன் உன் உள் மனதை நீ கண்காணிப்பதே முராக்கபா. முராக்கபா வணக்கமுறையே உன் வயதளவில் போதுமானது!”
“ஆஹா!”
“மெய்ஞானம் ஓர் ஆழமான ஆன்மிக அனுபவம். அந்த அனுபவம் ஏற்படுத்தும் ஆன்மிக உறுதி நம்பிக்கைதான் உன்னத இறைஞானம்… மெய்ஞானத்தை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்!”
“விரிவாக சொல்லுங்கள் மௌலானா!”
“முதல் மெய்ஞானம்… இல்முல்யகீன். நீ ஒரு பூட்டிய அறையில் இருக்கிறாய். உன் அம்மா சமையலறையில் சுடும் நெய் தோசையின் வாசனை உன் நாசியை துளைக்கிறது. தோசையை நீ நேராகப் பார்க்கா விட்டாலும் தோசையை வாசனை மூலம் அறிகிறாய்…”
“வாவ் உதாரணம்!”
“இரண்டாவது மெய்ஞானம் – ஐனுல்யகீன். நீ உன் அறைக்கதவை திறந்து கொண்டு சமையலறை போய் அம்மா நெய் தோசை சுடுவதை இரு கண்களால் காண்கிறாய். ஸோ தோசையை நேரடியாகப் பார்த்து விட்டாய்!”
“அடுத்த மெய்ஞானம்?”
“மூன்றாவது மெய்ஞானம் – ஹக்குல்யகீன் அம்மா சுட்ட நெய்தோசையை சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடுதல். மூன்று படித்தரங்களை சொன்னேன்… புரிந்ததா?”
“புரிந்தது மௌலானா!”
“இஹ்ஸான் எனும் இறைபிரக்ஞை மூலம் நம் வாழ்வே வணக்கமாக அழகுபடுத்தப்படும். மனதை விட்டு பயமும் கலக்கமும் அகன்று நிஷ்களங்கமாகும்”
“இஹ்ஸான் நிலையை நான் எப்படி அடைவது?”
“இறைவன் எழுபது தாய்களுக்கு சமம். இறைவன் கண்காணிப்பவனாக (ராகிபாக) சிருஷ்டிகளை சூழ்ந்தவனாக (முஹீத்) ஆரம்பமானவனாக (அவ்வல்) முடிவானவனாக (ஆஹிர்) வெளியானவனாக (லாஹிர்) மறைவானவனாக (பாத்தின்) நெருக்கமானவனாக (கரீப்) மிக நெருக்கமானவனாக (அக்ரப்) ஜீவராசிகளுக்கு இருக்கிறான்! இல்முல்யகீன் என்கிற இறை நெருக்கத்தை இறைஞானிகளின் நட்பால் பெறலாம்”
“உங்களிடம் நான் பெறலாமா?”
“இன்ஷா அல்லாஹ் இறை விருப்பம் இருந்தால் முஹ்ஸீனாக உயர்த்தப்படுவாய். ‘விரைவில் நமது அடையாளங்களை வெளியிலும் உள்ளேயும் அவர்களுக்கு நாம் காட்டுவோம். அவை ஹக்குதான் என்று தெளிவாகின்றவரை காண்பிப்போம்’ என்கிறான் இறைவன்!”
ஃபஸ்லுல் ஹக்கின் வலது கையைப் பற்றி முத்தமிட்டான் முஹம்மது வஸீர் “மாஷா அல்லாஹ்!”
-இரண்டு வருடங்களுக்கு பிறகு -
பத்தாயிரம் தடவைகள் திக்ர் எடுத்த பின் வலது பிடரி நரம்பின் பக்கம் திரும்பினான் வஸீர். “யா அல்லாஹ்! நீயும் உன் வானவர் கூட்டமும் நலமா?”
“எங்களை நலம் விசாரிக்கும் அளவுக்கு ஆன்மிகப் படித்தரத்தில் உச்சம் தொட்டு விட்டாயா?”
“நான் உன் செல்லம் இல்லையா அல்லாஹ்?”
“விட்டால் என் மடியில் ஏறிக் கொஞ்சுவாய் போல...”
“விடேன்… கொஞ்சுகிறேன்!”
“இந்த அடியார்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை… மித மிஞ்சிய பக்தியால் என்னைப் பரவசப்படுத்துகிறார்கள்… இவர்களுக்கு கொடுக்கச் சொர்க்கத்தைத் தவிர, வேறென்ன இருக்கிறது என்னிடம்? (நொடி தாமதித்து) சாப்பிட்டாயா வஸீர்?”
“அம்மா சுட்ட 10 நெய் தோசைகள் சாப்பிட்டேன்!” வயிற்றைத் தொட்டுக் காட்டினான். ஆன்மிக அர்த்தம் தொக்கி நின்றது. இறைவன் ரோமாஞ்சனமாக இதழ் விரித்தான்.