ரம்ஜான் பெருநாளுக்கு இன்னும் பத்து நாட்கள் அவகாசம்.
அத்தா காமில் முகமதுவும் அம்மா ஃபம்யாவும் வரவேற்பறையில் அமர்ந்து ஏதோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா அம்மா!” என்றபடி வந்தாள் 14 வயது சிறுமி சல்மா.
இரண்டு இறக்கைகளைப் பொருத்திவிட்டால் சல்மா ஒரு தேவதை ஆகி விடுவாள். உலகின் அனைத்துப் பூக்களையும் அரைத்துச் செய்யப்பட்ட பல்வர்ண நறுமணக் கலவை சல்மா.
“வஅலைக்கும் ஸலாம் சல்மா!”
“என்ன இரண்டு பேரும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?”
“இந்த வருடம் நாம் கொடுக்க வேண்டிய ஜக்காத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் மகளே!”
“ஜக்காத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கத்தா!”
“இஸ்லாமியர்களின் பிரதான ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவரின் செல்வத்தில் இரண்டரை சதவீதத்தை ஜக்காத்தாக கொடுக்க வேண்டும். நிசாப் மதிப்பு 87கிராம் தங்கம் வைத்திருந்தாலும் ஜக்காத் கட்டாயம். ஈத் தொழுகைக்கு முன் ரமலான் மாதம் இறுதிக்குள் கொடுக்க வேண்டிய நன்கொடையே ஜக்காத். ஜக்காத் என்றால் சுத்திகரிப்பு என்கிற பொருளும் உண்டு செல்லம்!”
“இந்த வருஷம் எவ்வளவு ரூபாய் ஜக்காத் செய்ய இருக்கிறீர்கள் அத்தா?”
“ஒரு இலட்சத்தி இருபத்தியேழாயிரம் ரூபாய் பட்டுரோஸ்!”
“இந்தப் பணத்தை என்ன மாதிரியாக வினியோகிக்கப் போகிறீர்கள் அத்தா?”
“நூற்றி இருபத்தியேழு ஏழை முஸ்லிம்களின் பட்டியல் தயாரித்து ஆளுக்கு ஆயிரம் ஜக்காத் கொடுக்க இருக்கிறோம்!”
“கொடுக்கும் சந்தோஷம் எனக்கும் கிடைக்க வேண்டுமே?”
“ஜக்காத்தை உன் தங்கக்கையால் கொடு!”
உதடு பிதுக்கினாள் சல்மா “அது சரி வராது அத்தா?”
“பின்ன?”
“வேறொரு திட்டம் வச்சிருக்கேன்!”
“என்ன திட்டம்?”
தனது படுக்கையறைக்கு குழி முயலாய் ஓடினாள் சல்மா. 30 நொடி கரைசலில் திரும்பி வந்தாள். அவளது கையில் பெரிய மண் உண்டியல்.
“என்னம்மா இது?”
“கடந்த ஒரு வருஷமா நான் காசு சேர்த்து வச்ச உண்டியல் இது. இந்த உண்டியல்ல நீங்க தினம் கொடுத்த பாக்கெட் மணி நானா நானி மற்றும் விருந்தாளிகள் கொடுத்த அன்பளிப்பு தஞ்சமடைஞ்சிருக்கு!”
“இந்த உண்டியலை என்ன செய்யப் போற?”
“பிஸ்மில்லாஹ்!” என்றபடி உண்டியலை அத்தா அம்மா முன் உடைத்தாள்.
நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் சிதறின.
ரூபாய் நோட்டுகளை நீவிநீவி அடுக்கினாள். பின் மொத்தத்தையும் எண்ணினாள். ரூபாய் 8657 இருந்தது.
“பரவாயில்லையே சிறுகசிறுக எட்டாயிரத்தி சில்லரை சேத்ருக்கியே.. சபாஷ்டா வெல்லக்குட்டி!”
“இந்தப் பணத்தை நான் தனியா ஜக்காத் தரப்போகிறேன்!” பகபகவென சிரித்தார் அத்தா.
“உனக்கு ஜக்காத் கடமை இல்லை மகளே… நீ கொடுக்க முடியாது!”
“ஆஹா… கைச்சேதப்பட்டேனே…”
“மகளே! சல்மா என்றால் அழகானவள் இளமையானவள் என பொருள். ஸஹாபி ஒருவரின் பெயர் கூட சல்மாதான். ஆனால் இன்று சல்மா என்றால் கருணை வடிவானவள் என்பதனை கண்டு கொண்டோம்!”
“அத்தா! வேற வழியே இல்லையா? என் கையால் நான் யாருக்கும் உதவ வேற வழியே இல்லையா?”
“கவலைப்படாதே. நீ சதகா செய்யலாம். ஒரு மனிதன் இறந்தால் அவனது மற்ற செயல்கள் அனைத்தும் நின்றுவிடும் மூன்றைத் தவிர. ஒன்று - சதகா ஜாரியா, இரண்டு - ஒருவர் விட்டு செல்லும் அறிவு (அதன் மூலம் மற்றவர் பயனடைவர்), மூன்று - இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கம் உள்ள அவர்களின் குழந்தை - என்றார்கள் நபிகள் நாயகம்…”
“சதகா யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாமா?”
“தகுதியான எம்மத ஏழைகளுக்கும் செய்யலாம். நீர் நெருப்பை அணைப்பது போல. சதகா பாவத்தை அணைக்கும் என்றார்கள் நபிகள் நாயகம். சதகா இரண்டு வகைப்படும். சதகா மற்றும் சதக்கத்துல் ஜாரியா பசித்தவனுக்கு உணவு, தாகித்தவனுக்குத் தண்ணீர், உடுக்கை இழந்தவனுக்கு உடை, வறுமையில் உள்ளவனுக்கு பணம், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதே சதகா எனும் தர்மம் ஆகும்!”
“ஆஹா!”
“நன்மையான ஒவ்வொன்றுமே தர்மம் தான். ஒருவர் தன் சகோதரரைப் பார்த்து புன்னகைப்பதும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதும், வழி தவறியவருக்கு வழி காட்டுவதும், கல் முள் எலும்பு முதலியவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும், மரம் நடுவதும் தர்மம் தர்மமே!”
“அத்தா! என் உண்டியல் பணம் முழுமையும் சதகா செய்ய விரும்புகிறேன்!”
“தாராளமாகச் செய்!”
“நம் ஊரில் மொத்தம் எத்தனைப் பள்ளிவாசல்கள் உள்ளன?”
“ஆறு!”
“ஆறு பள்ளிகளின் மோதினார்களுக்கு தலா 500 ரூபாய் தரப்போகிறேன். பள்ளிவாசல்களைக் கூட்டி கழிவறைகளைச் சுத்தப்படுத்தும் ஆறு பணியாளர்களுக்கு தலா 500 ரூபாய் தரப்போகிறேன்.”
“மூவாயிரம் ப்ளஸ் மூவாயிரம் ஆறாயிரம் ரூபாய் ஆச்சு. மீதி 2657 ரூபாய் இருக்கு. உனக்கான ரம்ஜான் காசு 343 போட்டு மீதி பணத்தை 3000 ஆக்கித் தருகிறேன்… என்ன செய்யப் போற?”
“என்னுடன் படிக்கும் மூன்று ஏழை மாணவிகளுக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் செலவில் சுடிதார் செட் வாங்கித் தரப் போகிறேன்!”
அம்மா சல்மாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். “உன்னை மகளாகப் பெத்ததற்கு பெருமைப்படுறேன்டி செல்லம்!”
“இன்னும் பாக்கி இருக்கு அம்மா! அத்தா! பணம் செலவில்லாத ஒரு சதகாவும் செய்ய விரும்புகிறேன்!”
“சொல்லும்மா!”
“பெருநாளைக்குள்ள நம் மஹல்லாவில் 100 மரக்கன்றுகள் நட வேண்டும். அவைகளை என்னுடன் சேர்ந்து உங்கள் கடை ஊழியர்களும் பராமரிக்க வேண்டும்.”
“ஓகே டன்!”
“தவிர விகற்பம் தோன்றாத அளவுக்கு 100 அந்நியச் சிறுமிகளைப் பார்த்து சிநேகமாய்ப் புன்னகைப்பேன்!”
“இளிச்சவாய் என கேலி செய்யாத அளவுக்கு பதவிசாய் புன்னகை செய்!”
“சரி!”
“ரம்ஜான் அன்று அனாதை இல்லத்தின் முதியோர் இல்லத்தின் ஒருநாள் உணவு செலவை ஸ்பான்சர் செய்வோம்… அது உங்க சதகா செலவா இருக்கட்டும் அத்தா!”
புன்னகைத்தார் அத்தா.
“அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நோக்கத்துடன் நாம் ஏழைகளுக்கு உதவினால் அதனை வில்லா என்பர். நாம் செய்யும் ஜக்காத்தும் சதகாவும் வில்லாவில் சேருமா சேராதா?”
“விருந்தோம்பல், பிறருக்கு உதவுதல், இயற்கையைப் பேணுதல், தோழமையை உச்சி முகர்தல், மதநல்லிணக்கம் போற்றுதல் இவைகளை எல்லாம் மதங்கள் சொல்லாமலேயே பின்பற்றுவோம். நன்மைக்குச் சொர்க்கம் வேண்டாம். இறைவனிடம் வியாபாரம் பேசாத அன்பு போதும். ஆன்மாவை பேரானந்தப்படுத்தவும் பிறப்பை மகிமைப்படுத்தவும் நன்மைகளின் பக்கம் நிற்போம்…”
“நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை அன்புடன் தேடுகிறது!” என்றார்.
அத்தா ரூமியின் குரலில். இறைவன் அபௌதிக முகம் கொண்டு சிரித்தான். லட்சம் வானவில்கள் கிளைத்தன. ஜில்லியன் பூக்கள் மலர்ந்தன.