பெண்கள் மதர்ஸா.
25‘x 20‘ சதுர அடியில் அந்த ஒற்றையறை மதர்ஸா இயங்கிக் கொண்டிருந்தது.
சுவற்றில் கரும்பலகை. தவிர மார்க்கம் தொடர்பான சார்ட்கள் தொங்க விடப்பட்டிருந்தன.
இரு ராக்குகளில் இஸ்லாம் தொடர்பான புத்தகங்கள்.
மூன்றுக்கும் மேற்பட்ட மரவிரிப்புகளில் திருக்குர்ஆன் அரபு மூலப் பிரதிகள்.
முப்பதுக்கு மேற்பட்ட ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீற்றிருந்தனர். வயது ஆறிலிருந்து 15க்குள்.
உஸ்தாத்பீ வராததால் மாணவிகள் லூட்டி அடித்துக் கொண்டிருந்தனர். சில மாணவிகள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து புரண்டு கொண்டிருந்தனர்.
ஹப்சா அலீனாவிடம் வினவினாள். “நீ லிப்ஸ்டிக்காடி போட்டிருக்க?”
“இல்லையே… இயற்கையாகவே என் உதடுகள் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி இருக்கும்!”
“அப்டின்னா நீ பேரழகி நாங்கல்லாம் சுமார் மூஞ்சி சொங்கிகள்னு சொல்ற?”
“நான் எங்க அப்படிச் சொன்னேன்?”
‘இரு. உன் உதடுகளை கீறி பாத்துடலாம்… இரத்தம் வருதா, லிப்ஸ்டிக் வருதான்னு…”
“தொட்டக் கையை உடைச்சிருவேன்!”
“அவ்வளவு ரௌடிப் பொண்ணாடி நீ? கரும்புக்கடை பொம்பளை தாதாவா நீ?”
“பக்கத்ல வராதே!”
“வருவேன்டி!”
மற்ற மாணவிகள் சண்டையிடும் இருவரை சூழ்ந்து கொண்டனர். ஹப்சா எட்டி அலீனாவின் உதடுகளைக் கீறினாள். துளி இரத்தம் பூத்தது.
உஸ்தாத்பீ மதர்ஸாவுக்குள் பிரவேசிக்க, மதர்ஸா மாணவிகள் அவரவர் இருக்கைக்கு ஓடிப் பதுங்கினர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஒஸ்தாத்பீ..”
“வஅலைக்கும் ஸலாம் செல்லங்களா, நா வரதுக்கு முன்னாடி இங்கே ஒரு உஹ்து போர் நடந்துக்கிட்ருந்துச்சு போல…”
அழுதபடி யே எழுந்தாள் அலீனா.
“ஒஸ்தாத்பீ. ஓஸ்தாத்பீ… ஹப்ஸா என் உதட்டைக் கிழிச்சிட்டா…”
“பக்கத்தில வா… பார்த்துவிட்டு சேவ்லான் ஒத்தினாள்.
“எந்திரிருச்சு வா ஹப்சா…”
“நீ தானே அலீனா உதடுகளை கிழிச்ச?”
“இல்லவே இல்ல… வேற யாரோ கிழிச்சதை நான் கிழிச்சதா சொல்ரா…”
உஸ்தாத்பீ ஒரு கணம் யோசித்தாள்.
“எல்லாரும் எந்திரிச்சு என்கிட்ட வாங்க!”
வந்தனர்.
“எங்க எல்லாரும் அவங்கவங்களோட இரண்டு கைகளை நகம் தெரியுற மாதிரி நீட்டுங்க!”
தயங்கித்தயங்கி நீட்டினர்.
சிலர் ஒற்றை விரல் நகத்தை மட்டும் நீளமாக வளர்த்திருந்தனர்.
சிலர் நகங்களில் அழுக்கு அப்பியிருந்தது.
சிலர் நகங்கள் கடிபட்டு ஒழுங்கீனமாய்.
முப்பது மாணவிகளில் ஒருத்தி கூட நகத்தைச் சீராக வெட்டிப் பராமரிக்கவில்லை.
“அடக்கழுதைகளா… ஒருத்தி கூட நகத்தைச் சுகாதாரமாக சீர்படுத்தவில்லையே… இனாயா… இதென்ன ஒற்றைவிரலில் நகம் வளர்க்கிறாய்?”
“இது வெங்காயநகம் ஒஸ்தாத்பி. வெங்காயம் உரிக்க வெள்ளைப் பூண்டு உரிக்க இந்த விரல்நகம்தான் பயன்படும்!”
“நைலா… உன் ஒற்றைவிரலில் ஏன் நகம் வளர்க்கிறாய்?”
“பேஷன் ஒஸ்தாத்பி…”
“நாற்பது நாட்களுக்கு ஒருமுறை நகங்களை வெட்ட இஸ்லாம் வற்புறுத்துகிறது. நாம் 40 நாட்கள் காத்திருக்க வேண்டாம். இரு வாரங்களுக்கு ஒரு முறை நகம் வெட்டலாம். நகங்களை வெட்டாமல் கடித்துத் துப்புவது சுகாதாரக் கேடான விஷயம். சுத்தம் ஈமானில் ஒரு பகுதி. ஒரு இஸ்லாமிய ஆண் அல்லது இஸ்லாமியப் பெண் எப்படி நகங்களை வெட்டி சுயசுத்தம் பேண வேண்டும் என்பதற்கு இஸ்லாம் பல ஒழுங்குகளைக் கூறியுள்ளது!”
“ஓ… சொல்லாத விஷயமே இல்லை போலும். மிதமிஞ்சியக் கட்டுப்பாடுகள் மீறவே…”
“கட்டுப்பாடுகள் என்று இதனைச் சொல்லக்கூடாது. கைடன்ஸ் அல்லது ஆலோசனை என கூறலாம். மருந்து கசக்கத்தான் செய்யும்!”
“நகம் வெட்டுறதை பற்றி இஸ்லாம் என்னென்ன சொல்லுது ஒஸ்தாத்பி… எல்லாவற்றையும் சொல்லுங்க!”
“நகம் வெட்டுறதை வாரத்தின் எல்லா நாட்களிலும் செய்யக் கூடாது”
“எந்த நாளில் வெட்டலாம்?”
“வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டி அழகான ஆடை அணிந்து நறுமணம் பூசிக்கொண்டு ஜும்ஆ தொழலாம் என உலமாக்கள் கூறுகின்றனர். சிலர் வியாழக்கிழமை நகம் வெட்ட உகந்த நாள் என்கின்றனர். இன்னும் சிலர் அவரவர் தேர்வுக்குரிய காரியம் என்கின்றனர். என்னைக் கேட்டால் வாராவாரம் வியாழக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு செல்வதற்கும் முன் நகங்களை வெட்டி சீர் செய்வது உத்தமம் என்பேன்!”
“மாதவிடாய் காலத்தில் தலை சீவல், நகம் வெட்டல், குளித்தல் கூடுமா?”
“கூடும்!”
“ நகம் வெட்டுவதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்?”
“நகம் வெட்டும் ஒருவன் அல்லது ஒருத்தி முதலில் இரு கைகளிலும் வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் கால்களில் ஆரம்பிக்க வேண்டும். கைகளில் நகம் வெட்டுவதை முதலில் வலது கையில் தொடங்க வேண்டும். முதலில் வலது கையின் ஆள்காட்டி விரல். இரண்டாவதாக நடுவிரல். மூன்றாவதாக மோதிர விரல். நான்காவதாக சுண்டு விரல். ஐந்தாவதாக கட்டைவிரல்.
“வலது கையின் நகம் வெட்டிய பின் இடது கையிலும் மேற் சொன்ன விதத்தில் நகம் வெட்ட வேண்டும். அதனையடுத்து வலது கால் கடைசியாக இடது கால் இதுவே நகம் வெட்டுவதற்கு ஸுன்னத்தான முறையாகும்!”
“வெட்டிய நகங்களை என்ன செய்ய வேண்டும்?”
“கண்ணாடிக் கூண்டில் வைத்து கண்காட்சி நடத்து. வெட்டிய நகங்களை அலங்கோலமாக அப்படியே போட்டு வைக்கக்கூடாது. நகங்களைப் பொட்டலமாய்க் கட்டிப் புதைத்து விடவேண்டும்..”
“நகங்கள் வெட்டுதல் ஒளுவை முறிக்குமா?”
“முறிக்காது!”
“நகங்கள் வெட்டுவதைப் பற்றி வேறென்னென்ன விஷயங்கள் உள்ளன ஒஸ்தாத்பி…”
“நகம் வெட்டும் விஷயத்தில் இஸ்லாமிய மக்களிடையே பல மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. அவையாவன 1. இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது. 2. வீட்டில் வைத்து நகம் வெட்டுதல் தரித்திரம். 3. வெட்டியநகங்களை புதைக்கும் போது கலிமா சொல்லி அல்லது குர்ஆன் ஓதி புதைக்க வேண்டும் 4. ஒழுங்கு முறைப்படி நகம் வெட்டினால் நகம் வெட்டியவரின் செல்வம் பெருகும். இதற்கு ஒரு நபிமொழி உண்டு. ‘நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாதததை புதிதாக எவன் உருவாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’
“குர்பானி கொடுப்பவர் நகம் வெட்டலாமா?”
“நல்ல கேள்வி இது. நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடி நகத்தை வெட்ட வேண்டாம் - என நபிகள் நாயகம் கூறியுள்ளார்!”
“ஹஜ் போறவங்க நகம் வெட்டலாமா?”
“இஹ்ராம் ஆடை அணிவதற்கு முன் நகம் முடிகளை களைய வேண்டும் என எந்த நபி மொழியும் கூறவில்லை. ஆனால் இஹ்ராமுக்கு பிறகு இவற்றைக் களைதல் சிறப்பு…”
“முப்பது நோன்புகள் வைக்கும் போது நகம் வெட்டலாமா?”
“உண்ணாமலும் பருகாமலும் இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பதுதான் நோன்பாகும். இவை தவிர மார்க்கத்தில் தீமை என சொல்லப்படுகிற காரியங்களை தவிர்த்து, ஏனையக் காரியங்களைச் செய்வது குற்றமல்ல. நகம் வெட்டலாம்?”
“கடைசி கேள்வி ஒஸ்தாத்பி.”
“கேள்!”
“இஸ்லாமியப் பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் அல்லது மருதாணி போடுவது கூடுமா, கூடாதா?”
“நீர் ஊடுருவக் கூடிய ஹலாலான நெயில் பாலிஷ்களை இஸ்லாமியப் பெண்கள் போடலாம். சாதாரண நெயில் பாலிஷ் என்றால் தொழுகைக்கு முன் அகற்றுவது நல்லது. பெண்கள் கை முன்னங்கை கால் முன்னங்கால்களில் மருதாணி இட்டுக் கொள்ளலாம்! ஆண்கள் தலைமுடியில் மருதாணி தடவலாம்!” எனக்கூறிய உஸ்தாத்பீவியின் கைகளிலும் மருதாணி டாலடித்தது.