இமாம் மிகவும் மென்மையாக வாசல் கதவின் அழைப்பு மணியை மும்முறை அமுக்கினார்.
வீட்டுக்குள்ளிருந்து ஓர் அதிகாரக்குரல் எழுந்தது. “யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும். நான் இந்த மஹல்லாவின் இமாம் வந்திருக்கிறேன். உள்ளே வரலாமா?”
“வஅலைக்கும் ஸலாம். வாசல் கதவு வரை வந்துட்டீங்க. அப்றமும் உள்ள வரலாமான்னு என்ன கேள்வி? உள்ள வாங்க இமாம்!”
குரலுக்குரியவரின் பெயர் மாலிக் கபூர். வயது 55. மஹல்லாவின் மிகப்பெரிய பணக்காரர். தான் என்கிற அகந்தை கொண்டவர். துடுக்குத்தனமாகப் பேசுவார்.
இருகைகளையும் விரித்து பறவை போல அமர்ந்திருந்தார் மாலிக் கபூர்.
அவரின் எதிரில் அமர்ந்தார் இமாம்.
“நல்லா இருக்கீங்களா பாய்?”
“ஏன் - நான் நல்லா இல்லேன்னு சொன்னா என்னைத் தூக்கி நிறுத்தப் போறீங்களா இமாம்?”
“தூக்கி நிறுத்தவும் தலைகீழாய் குப்புறக் கவிழ்க்கவும் கூடியவன் இறைவனே…”
“என்ன விஷயமாக வந்தீர்கள் இமாம்?”
“உங்கள் வீட்டுப் பெண் ரோஸ்மின் பற்றிப் பேச வந்தேன்!”
“ரோஸ்மின் எங்கள் வீட்டுப்பெண் அல்ல எங்கள் வீட்டுவேலைக்காரி. அவள் எங்களுக்கு ஓர் அடிமைப்பெண் போல…”
“அப்படியா?”
“இருபது வருடங்களுக்கு முன் முச்சந்தியில் ஒரு நாற்பது நாள் பெண் குழந்தையைக் கண்டெடுத்தேன். அந்தக் குழந்தையை நாங்களே வளர்த்தோம். அவளுக்கு ரோஸ்மின் எனப் பெயர் வைத்தோம். ரோஸ்மின் என்பது ஒரு பெர்சியன் மற்றும் உருதுப்பெயர். ரோஸ்மின் என்றால் ரோஜா மலர்கள், அழகு, கனிவு, அன்பு, பரிசுத்தம், மென்மை என பொருள். ரோஸ்மினுக்கு அப்பா பெயராக என் பெயரை போட்டு பிறப்புச் சான்றிதழ் எடுத்தோம். ரோஸ்மினுக்கு ஐந்து வயதான போது ஐந்து கலிமாக்களைச் சொல்லிக் கொடுத்து இஸ்லாமியப் பெண்ணாக்கினோம். என் மகள்களுடன் சேர்ந்து ரோஸ்மினும் பள்ளிக்குப் போனாள் மதர்ஸாவுக்கும் போனாள். மொத்தத்தில் சகல வசதி வாய்ப்புகளும் நல்கப்பட்ட எங்கள் வீட்டின் ஆஸ்தான வேலைக்காரி ரோஸ்மின்… அவளைப்பற்றி நீங்க பேச வேண்டியதின் காரணம் என்ன?”
“மொஹபத்தான விஷயம்… நம்ம மஹல்லாவில் வசிக்கும் காசிமின் மகன் அன்சார் ஷேக்கை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவனுக்கு வயது 25. ஆள் பாக்க யூசுப்நபி மாதிரி அழகு. ஆர்க்கிடெக்ட்டாக இருக்கிறான். மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பான். அவன் ரோஸ்மினை வெளியில் எங்கேயோ பார்த்திருக்கிறான். சில தடவை சாதாரணமாக பேசி இருக்கிறான். அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவளை மணந்து கொள்ள விரும்புகிறான். நீங்கள் சம்மதித்துத்
திருமணத்தை நடத்திக் கொடுத்தால் மகிழ்ச்சி!”
மாலிக் கபூரின் முகம் இருண்டது.
“ரோஸ்மினுக்கு கல்யாணமா?”
“ஏன் ரோஸ்மினுக்கு நிக்காஹ் நடக்கக் கூடாதா? இருபது வயதுப் பெண்ணுக்கு நிக்காஹ் எல்லா மஹல்லாக்களிலும் நடப்பது தானே?”
“ரோஸ்மின் எங்கள் வீட்டுப் பெண் மாதிரி தெரிந்தாலும் உண்மையில் அவள் எங்கள் வீட்டு வேலைக்காரியே… நாங்கள் சாப்பிட்ட பின் தான் அவள் சாப்பிடுவாள். என் மகள் உடுத்திய பழையஆடைகளைத் தான் அவள் உடுத்துவாள். இரு படுக்கையறைகளுக்கு இடையே ஆன தரையில் கோரைப்பாய் விரித்து படுப்பாள். அவளுக்கு மாத சம்பளம் இவ்வளவு என நிர்ணயித்து அவளது வங்கிக் கணக்கில் போட்டு வருகிறேன். அவள் மௌத்தாகும் வரை எங்கள் வீட்டில் ஊழியம் செய்ய வேண்டியது தான்!”
“கொஞ்சம் மனிதாபிமானத்தோடு பேசுங்கள் பாய்!”
“விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் போல ஒரு அனாதைக்கழுதைக்கு ரோஸ்மின் எனப் பெயர் வைத்திருக்கிறேன். நாளைக்கு அவளின் பெற்றோர், குழந்தையைத் திரும்பிக் கேட்டால் ரோஸ்மினை அவர்களிடம் கையளிப்போம். ரோஸ்மினின் பெயர் முனியம்மா அல்லது குப்பம்மா என மாறிவிடும். வெள்ளைத்தோலைப் பார்த்து மயங்கி விட்டான் அந்த இன்ஜினியர் பய. இப்ப அழகைப் பார்த்து மயங்கிக் கட்டுவான்க. ஆனா, ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாளில் தீர்ந்துவிடும்.
அப்றம் வரதட்சணை கொண்டு வரலன்னு அவளை அடிச்சு விரட்டி விட்ருவான். இது தேவையா?”
“அன்சார் ஷேக் மன உறுதியா இருக்கிறான். அவனின் காதல் நூறு வருடம் செல்லுபடி ஆகும்!”
“அன்சார் ஷேக்கின் பெற்றோர் என்ன சொல்ராங்க?”
“மகனின் விருப்பம்தான் அவங்க விருப்பமும். ரோஸ்மினிடம் ஷேக்கின் அம்மா பலமுறை பேசியிருக்கிறார்…”
“நான் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ரோஸ்மினின் கையை அன்சார் ஷேக்கின கைகளில் பிடித்துக் கொடுத்து ஊரை விட்டு ஓடுங்கன்னு சொல்லனுமா நான்?”
“நீங்கதானே ரோஸ்மினின் வளர்ப்பு அத்தா… நீங்கள் ‘வலி’யாக இருந்து இந்தத் திருமணத்தை நடத்திக் கொடுங்கள்!”
“ஒரு பெண் இன்னொரு பெண்ணின் திருமணத்தை நடத்த திட்டமிடக் கூடாது. தன்னுடைய திருமணத்தை தானே ஒரு பெண் நடக்கவும் கூடாது. தன் திருமணத்தைத் தானே நடத்தும் பெண் விபச்சாரியாகக் கருதப்படுவாள். ‘வலி’யின் அனுமதியில்லாமல் ஒரு பெண்ணின் திருமணம் நடந்தால் அந்த திருமணம் செல்லாது. அந்தத் திருமணம் செல்லாது என்கிறார் நபிகள் நாயகம்…”
“ஓஹோ!”
“வலியாக யாரார் இருக்கலாம் இமாம்?’
“வலி என்றால் பாதுகாவலர் சட்டப்பூர்வ உதவியாளர். வலி ஒரு பெண்ணின் தந்தையாக, சகோதரனாக, தாய் மாமனாக, தாத்தாவாக, இமாமாக, ஆன்மீகத் தலைவராக, ஆட்சியாளராக இருக்கலாம்!”
“நான் வலி அல்ல இமாம்!”
“பின்னே?”
“ரோஸ்மினை இருபது வருடம் வளர்த்திருக்கிறேன். 55 வயதாகியும் இளமையாக இருக்கிறேன். கை நிறையப் பணமும் இருக்கிறது. மனைவியும் ஆட்சேபிக்க மாட்டாள். நானே ரோஸ்மினை இரண்டாவது மனைவியாக வரித்துக்கொள்ளப்
போகிறேன். இந்த மஹல்லா இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் அவளை ஆசை நாயகியாக வைத்துக் கொள்வேன்!”
“ரோஸ்மின் உங்களது தகாத ஆசைக்கு உடன்பட மாட்டாள்!”
“ரோஸ்மினுக்கு வலியாக இருந்து அவளின் திருமணத்தை நடத்திக் கொடுக்க என்னை மீறி யாரும் வர மாட்டார்கள். வந்தால் உயிரோடு திரும்ப மாட்டார்கள்!”
“வலி என்பவர் நல்ல மனநிலையுள்ளவராக வயது வந்தவராக மூமினாக இருக்க வேண்டும். மாலிக்கி, ஷாபி, ஹன்பலி பிரிவினரின் திருமணங்களில் பெண்களுக்கு ‘வலி’ இருக்க வேண்டும். ஹனபி பிரிவினரில் மட்டும் மணப்பெண்ணுக்கு ‘வலி’
தேவையில்லை. பண்ணையார் மனோபாவத்தோடு பேசாதீர்கள். ஜமாஅத் போலீஸில் புகார் செய்து உங்களை லாக்கப்பில் அடைக்கும்!”
“இமாம்! மணப்பெண்ணால் தான் விரும்பிய வலியை நியமிக்க முடியாது. ரோஸ்மினை மணந்து கொள்ள விரும்பும் அன்சார் ஷேக்கும் வலியாக முடியாது!”
“உங்களிடம் நெகடிவிட்டி அதிகம். ‘வலி’ என்பவர் மணப்பெண்ணின் விருப்பங்களை பாதுகாப்பவர். மணப்பெண்ணை உணர்வுரீதியாக பொருளாதார ரீதியாக ஆன்மீக ரீதியாக வலியே பாதுகாப்பார்!”
“அப்படி யாரந்த சூப்பர்மேன் வலி நம்ம மஹல்லால எனக்குத் தெரியாம…”
“ஓர் இஸ்லாமிய திருமணத்திற்கு வலியின் சம்மதம், இரு சாட்சிகள், மணமகன் மணமகள் வாய்வழி ஒப்புதல், மஹர்தொகை நிர்ணயிப்பு முக்கியம். வலி யாரென்று இப்போது சொல்ல மாட்டேன்… வெயிட் அண்ட் ஸி பாய்!”
“ரோஸ்மினை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டால் எப்படி அவள் கல்யாணம் நடக்கும்?” இமாம் ஜிப்பா பாக்கட்டிலிருந்து திறன்பேசியை கையில் எடுத்தார்.
“ஒரு கொடூரனின் பேச்சை அப்படிக்கப்படியே பதிவு செய்து விட்டேன்!”
வாசலுக்கு திரும்பினார் இமாம்.
“டிசிபி கொஞ்சம் வாங்க!”
உதவி போலீஸ் கமிஷனர் சபானா பர்வீன் வெளிப்பட்டார். அவருக்குப் பின் பெரிய போலீஸ் படை.
“என்ன என்ன நடக்குது இங்க?”
“வாய மூடுங்க (உள்ளே தலையை நீட்டி) ரோஸ்மின்! வெளியே வாம்மா!” என்றார் டிசிபி முழு நிலா போல வெளிப்பட்டாள் ரோஸ்மின்.
“நீ ரோஸ்மினா?”
“ஆம்!”
“ஐந்து கலிமாக்களை சொல்!” சொன்னாள்.
“அன்சார் ஷேக்கை மணந்து கொள்ள உனக்கு சம்மதமா?”
“சம்மதம் சம்மதம் சம்மதம்!”
“உனக்கு வலியாக ஓய்வு பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜ் அக்பர் அலி இருப்பார் இருந்து உன் திருமணத்தை ஜாம்ஜாம் என்று நடத்திக் கொடுப்பார்!”
“நன்றி!” ஆனந்தக்கண்ணீர் வடித்தாள் ரோஸ்மின்.
-அன்சார் ஷேக் –ரோஸ்மின திருமணம் மஹல்லா பள்ளிவாசலில் நடந்தது.
திருமணத்தில் இரகசியமாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர் ரோஸ்மினின் பெற்றோர்.
“பாத்திமா நாச்சியார் போல வாழ் இஸ்லாம் தத்தெடுத்த மகளே!”