என் இயற்பெயர் பி.ச. நாசர். பின்னாளில் அதிகாரப்பூர்வமாக ஆர்னிகா நாசர் ஆனேன். என் தந்தை பெயர் பி. சம்சுதீன். கால்பந்தாட்டத்திலும் இறகு பந்தாட்டத்திலும் சிறந்த விளையாட்டு வீரர். அத்துடன் அரசின் தலநிதிக் கணக்குத் துறையில் உதவித் தலைமைத் தணிக்கை அதிகாரியாகப் பணியாற்றியவர். இலக்கியம் படைக்கவோ வாசிக்கவோ செய்யாதவர். ஆனால் ஷேக்ஸ்பியரின் மீது அதிகமான காதல் கொண்டவர். இந்திப் பாடல்களை வெகுவாக ரசிப்பார். என் தம்பி தங்கைகள் நால்வருமே இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என கேட்டவர்கள். என் தந்தை வழி உறவினர்கள் யாருமே அதிகம் படிக்கவில்லை. படிப்பு அவர்களுக்கு எட்டிக்காய். விதிவிலக்காக என் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் மகன்கள் படித்து அரசுப்பணி புரிந்தனர்.
என் தந்தையின் தந்தை பெயர் காட்டு பிச்சையப்பா இராவுத்தர். அவர் காலத்திலோ அவருக்கு முந்திய காலத்திலோ பாட்டனாரின் தலைமுறைகள் மலைவாழ் மக்களாய் இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் இஸ்லாமுக்கு வந்திருக்கிறார்கள். தந்தையின் தந்தைக்கு முந்திய தலைமுறை மனிதர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
என் தாயின் பெயர் ரஹிமா. என் தந்தையை அவர் மணக்கும் போது அவருக்கு வயது 15. என் தந்தைக்கு வயது 32. என் தந்தைக்கு வலது காலை விட இடதுகால் சில அங்குலம் உயரக் குறைவு. என் தாய்க்கும் என் தந்தைக்கும் வயது வித்தியாசம் 17. இந்த இரண்டு விஷயங்களாலும் பெற்றோர் தினமும் சண்டை இட்டுக் கொண்டனர். என் தாய் இலக்கியம் படிக்க மாட்டார். நிறைய தமிழ் சினிமா பார்ப்பார். என் பெத்தம்மா (தாயின் தாய்) அழகிய குரல் வளம் கொண்டவர். ரோஜா நிறம் அமைந்தவர். கதைகள் நிறைய வாசிப்பார். ஆயிரக்கணக்கான கதைகள் பைண்டிங் சேர்த்து வைத்திருந்தார்.
அவருடைய சேகரிப்பிலிருந்து தான் எனக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஆயிரத்தோரு அராபிய இரவுகள், சிந்துபாத் கதை, ஈஷாப் கதைகள், வாண்டுமாமா, தமிழ்வாணன், என்னுடைய பெரியம்மா ,சாச்சிகள் யாருக்கும் இலக்கிய ஆர்வம் கிடையாது. இப்போதுதான் இந்தக்கதையின் முக்கியமான அறிமுகம் நடக்கப் போகிறது.
அது என் பெத்தம்மாவின் அம்மா. பெரிய பெத்தம்மா என அழைப்போம் பெரிய பெத்தம்மாவின் பெயர் தெரியாது. 135 செமீ உயரம். பழுத்த வெள்ளரிப்பழம் போல இருப்பார். மதுரை மேலூரில் வசித்தார். அபூர்வமான குரல் வளம். எனக்கு அப்போது வயது 12 இருக்கும். என் பெரிய பெத்தம்மாவுக்கு அப்போதே வயது 100ஐத் தாண்டி இருக்கும். நான் ஏராளமாய் வாசிப்பதை பெருமையாகக் கண்ணுறுவார். அத்துடன் இஸ்லாமியப் பெண்களுக்கு நான் ஒரு சிறந்த கதை சொல்லியாக திகழ்ந்ததும் அவருக்குப் பெருமகிழ்ச்சி. என்னுடைய பெயரை சங்கீதமாய் ‘நாஜரு’ என அழைப்பார். அவருடைய சுருக்குப்பையில் இருந்து இரண்டு பைசா, ஐந்து பைசா எடுத்து வாஞ்சையாய்க் கொடுப்பார். அவருக்கு ஜின்களுடன் சகவாசம் இருந்தது. இருட்டில் மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்து ஜின்களுடன் பேசிக் கொண்டு இருப்பார்.
ஒரு நாள் நான் என் சாச்சிகளுக்கு ஒரு கதை சொல்லி முடித்தேன். பெரியபெத்தா என்னை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
“ஒருநாள் நீ மிகப்பெரிய எழுத்தாளர் ஆவடா!”
“அது எப்படி உனக்கு தெரியும் பெரியபெத்தா?”
“நீ யாரோட வம்சம்னு நினைச்ச? உன்னோட எள்ளுஎள்ளு தாத்தன் யாருன்னு உனக்குத் தெரியுமாடா?”
“தெரியாது!”
“நாம உமறுப்புலவர் வகையறாடா…”
“உமறுப்புலவர் யாரு பெத்தா?”
“சீறாப்புராணம் என்கிற மெஹா காவியத்தை எழுதியவர். அவர் பிறந்தது எட்டயபுரத்துக்கு அருகில் இருக்கும் நாகலாபுரத்தில். பிறந்த வருடம் 4.12.1642. அவர் ஒரு தமிழ் முஸ்லிம் ராவுத்தர். உமறுப்புலவரின் தந்தை பெயர் செய்கு முகம்மது அலியார். உமறுப்புலவரின் இயற்பெயர் உமறுகத்தாப் அல்லது சையத் காதர்!”
“அப்படியா?’
“உமறுப்புலவரை சீதக்காதி என்கிற வள்ளல் ஆதரித்தார். உமறுப்புலவர் எட்டையாபுரம் ஜமீனின் அரசவைக் கவிஞராக இருந்தார்.”
“சீறாப்புராணம் என்றால் என்ன?”
“நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை 5027 கவிதைகளில் எழுதியுள்ளார் உமறுப்புலவர். சீறாப்புராணம் மூன்று காண்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, விலாதத்து காண்டம் (பிறப்பியல் காண்டம்), இரண்டு நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்), மூன்று, ஹிஜ்ரத்து காண்டம். (மதினாவுக்கு இடம் பெயர்ந்த காண்டம்), எனக்கு சீறாப்புராணம் மனப்பாடமாகத் தெரியும்!”
“எங்கே பாடிக்காட்டு பெத்தா!”
பெத்தம்மா பாடினார்.
நபிகள் நாயகம் பாலைவனத்தில் புழுதி பறக்க ஒட்டகத்தில் சவாரித்தார். அவருக்கு பின் மற்ற ஒட்டகங்களுடன் நபித்தோழர்கள் பின் தொடர்ந்தனர்.
“மயிர் கூச்செரிகிறது பெத்தா!”
‘உமறுப்புலவர் முத்துமொழி மாலை, சேரகத்தி திருமணக் கவிதைகள் மற்றும் சீதக்காதி நொண்டி நாடகம் முதலியவற்றையும் எழுதினார்!”
“உமறுப்புலவர் பாக்க எப்படி இருப்பார்?”
“அவர் காலத்தில் போட்டோ ஏது? கையால வரைஞ்ச படங்கள் தான் இருக்கும். பெரிய கருப்புத் தொப்பி. தீட்சண்யமான கண்கள். பெரிய பெரிய காதுகள். மாநிறம். அழகிய மீசைதாடி. கழுத்து வரை பொத்தான் இடப்பட்ட சட்டை. சுருக்கமாக அவர் வயசானா நீ அவரை மாதிரி தான் இருப்ப…”
“எத்னி வயசில மௌத்தாய் போனார்?”
“அறுபது வயசில…”
அவர் யோசித்து நிமிர்ந்தார். “இப்ப கிபி 1973. நீ 1960 ஆம் ஆண்டில பிறந்த உனக்கும் உமறுப்புலவருக்கும் 270 ஆண்டுகள் வித்தியாசம். அவர் உன் 13 அல்லது 15 ஆவது தலைமுறை தாத்தா!”
சட்டைக் காலரை உயர்த்திக்கொண்டேன்.
சிறிது காலத்தில் பெரிய பெத்தா மௌத்தானார்.
என் பால்ய நண்பன் இர்ஷாத்திடம் இதனை கூறிய போது பவர் கிளாஸ் வழியாக என்னை உறுத்தான். “வாங்க குட்டி உமறுப்புலவரே!”
“கிண்டல் பண்றியா?”
“உமறுப் புலவரின் கடைசி வாரிசு பி.எப். நசீரிடம் உமறுப் புலவரின் வெளியிடப்படாத கவிதைகள் மேனுஸ்கிரிப்ட் இருந்ததாக கூறுவர்!”
“ஓ!”
“ஆர்னிகா! இப்ப உனக்கு 65வயசாகுது. ஒரு இரண்டு வருஷம் முயற்சி பண்ணயிருந்தா உன்னோட ஆணிவேரைத் தேடிக் கண்டு பிடிச்சிருக்கலாமே நீ?”
“ஒன்று, தேட சோம்பேறித்தனம். தேடிப் பார்க்கும் போது உண்மையில் நான் உமறுப்புலவரின் வாரிசு இல்லை எனத் தெரிந்தால் ஒரு மித் கலைந்து விடும். வெட் இட் பி ஆஸ் இட் இஸ்…”
- மனைவியுடன் எட்டயபுரம் கிளம்பினேன்.
உமறுப்புலவர் மணிமண்டபம். “அஸ்ஸலாமு அலைக்கும். எள்ளு எள்ளு அப்பா. நான் உங்களைப்போல எழுத்தில் பரிபூரணமடைய இறைவனிடம் பரிந்துரையுங்கள்!”
என்னுடைய பேனாவை எடுத்து உமறுப்புலவரின் கபுரில் வைத்தேன்.
மீண்டும் பேனாவை எடுத்தபோது பேனாவில் சந்தனம் பூசியிருந்தது. மண்டபம் முழுக்க மரிக்கொழுந்து வாசனை மூண்டது.