மௌத்து வீடு.
சர்புன்னிஸாவின் மையத்து கிடத்தப்பட்டிருந்தது. உறவினர்களும் நண்பர்களும் தீதார் பார்க்க வந்து போய்க் கொண்டிருந்தனர். வந்தவர்களில் கால்வாசி பேர் சாமியானாவுக்குக் கீழ் கிடக்கும் பாலிமர் இருக்கைகளில் அமர்ந்து கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருந்தனர்.
மையத்தின் தலைமாட்டில் சர்புன்னிஸாவின் மூன்று மகள்கள் நபிஷா, மைமூன் மற்றும் ஜுலைகா அமர்ந்திருந்தனர். கால் மாட்டில் மகன் அன்வர் அமர்ந்திருந்தான்.
வீட்டின் வெளிவாசலின் நிலைப்படியில் நின்றிருந்தார் சர்புன்னிஸாவின் கணவர் குதுப்தீன். வயது 70. சம்மர்கிராப்பிய நரைதலைகேசம். அவநம்பிக்கைக் கண்கள். புடைத்த மூக்கு. நிக்கோட்டின் உதடுகள். ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து பத்து வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர். ஒரு விபத்தில் இடது கால் ஊனமானவர்.
மனைவியின் மரணத்தை குதுப்தீனால் நம்ப முடியவில்லை. நடப்பது கனவாக இருக்கும் என பிரமித்தார். ஐம்பது வருட திருமண வாழ்வில் வறுமையைத் தவிர வேறு எதனையும் மனைவியுடன் பகிர்ந்ததில்லை. இத்தனைக்கும் சர்புன்னிஸா வசதியான வீட்டில் பிறந்தவள். குதுப்தீனைத்தான் மணந்து கொள்வேன் என ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்து கொண்டவள். 50 வருட திருமண வாழ்வில் கணவரின் வறுமையை சர்புன்னிஸா குத்திக் காட்டியதில்லை.
அவ்வப்போது பெற்றோரிடமும் தனது உடன்பிறப்புகளிடமும் உதவி பெற்றுத்தான் மகனைப் படிக்க வைத்தாள் மற்றும் மகள்களுக்கு திருமணமும் செய்து வைத்தாள் சர்புன்னிஸா.
குதுப்தீனுக்கு நாளைய பொழுது கனத்த இருட்டாய் பயமூட்டியது.
மகள்கள் வீட்டிலோ, மகன் வீட்டிலோ ஒரு நிமிஷம் கூட அவரை வைத்திருக்க மாட்டார்கள்.
பள்ளிவாசலில் மிஸ்கீனாய் நிற்க வேண்டியதுதான்.
மௌத் வீட்டில் ஒரு பொதுவான குரல் எழுந்தது. “வர வேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்களா?”
“எல்லாரும் வந்துட்டாங்க!”
“வெளியூரிலிருந்து வெளிநாட்டில் இருந்து யாரும்…”
“அப்படி யாரும் வர வேண்டியதில்லை…”
“இது வாடகை வீடு. ஓனர் பெரிய மனசு பண்ணி மையத்தை வைக்க ஒத்திருக்கார். ஆனா அஸருக்கும் மஹரிப்புக்கும் இடையே மையத்தை நல்லடக்கம் பண்ணிடனும்னு நிபந்தனை விதிச்சிருக்கார்!”
“ஒரு பிரச்சனையும் இல்லை… இப்பவே ஜனாசாவை குளிப்பாட்டிரலாம்…”
மூன்று மகள்களும் விரைப்பாக எழுந்து நின்றனர்.
“எங்கம்மாவை குளிப்பாட்டும் போது நாங்க மூன்று பேரும் இருந்தாகனும்”
“சரி…”
ஜனாசாவை மரப்பெஞ்சில் கிடத்திச் சுற்றிலும் புடவைகளைத் தொங்க விட்டனர். அம்மாவின் காதுகளில் இருந்த கம்மல்களை ஒரு மகள் பதட்டமாகக் கழற்றினாள். கம்மல்களை க்ளோசப்பில் வைத்து திறன்பேசியால் ஒளிப்படம் எடுத்தாள் மூத்த மகள் நபிஷா. மைமூன் அம்மாவின் கழுத்தில் உள்ள இரட்டைவடச் செயினைக் கழற்றி அதனை க்ளோசப்பில் வைத்து திறன்பேசியால் ஒளிப்படம் எடுத்தாள் இரண்டாவது மகள் மைமூன். அம்மாவின் நான்கு வளையல்களையும் இரண்டு மோதிரங்களையும் கழற்றி ஒளிப்படம் எடுத்தாள் மூன்றாவது மகள் ஜுலைகா.
நபிஷா குளிப்பாட்டும் பெண்களிடம் திரும்பினாள். “எங்கம்மா தங்கத்தில அருநாக் கொடி போட்ருக்காளான்னு பாருங்க… அப்படி இருந்தா அதுவே இருபது பவுன் இருக்கும்!”
“வாயை மூடு நபிஷா. உங்கம்மா வயித்ல பிரசவக்கோடுகளும் புட்டத்தில் தசைச் சுருக்கங்களும் மட்டுமே உள்ளன…”
“அம்மாகிட்ட இருந்து கைபத்தின இரு கம்மல்கள், ஒரு இரட்டை வடசெயின், நான்கு வளையல்கள் இரண்டு மோதிரங்களை மொத்தமா போட்டோ எடுத்திட்டு ஒரு பொது மனுஷிகிட்ட ஒப்படைங்க. மவுத் அடக்கம் பண்ணிட்டு வந்த பிறகு பங்கு பிரிக்கலாம்!”
“அடியே… என் எச்சிபாலை குடிச்சு வளந்த தங்கச்சிகளா… அப்பப்ப அம்மாவுக்கு சமோசா, முட்டை பப்ஸ், அச்சு முறுக்கு வாங்கித் தந்திருக்கேன். நன்றியுணர்ச்சில அம்மா எனக்கு பின்னாடி என் நகையெல்லாம் உனக்குத்தான்டின்னு சொல்லிருக்கு!”
“சொல்லும் சொல்லும்… இப்ப வெட்டிபேச்சு விருதா பேச்சு வேணாம். நகைகளை ஒஸ்தாத்பி கிட்ட ஒப்படைங்க எதுனாலும் மையத்தாங்கரை வேலை முடிஞ்சதும் பேசிப்பம்!” என்றாள் மைமூன்.
“நான் கூடதான் அம்மாவுக்கு மூக்கு சளி பழமெல்லாம் வாங்கிக் குடுத்திருக்கேன்… அஞ்சு ரூபா சமோசாவை வாங்கிக்குடுத்துட்டு இப்ப கதை சொல்ரா அக்காக்காரி!”
குளிப்பாட்டினர்.
சந்தூக்கில் ஏற்றினர்.
மகள்கள் போலி அழுகை அழுதனர். தம்பிகாரன் நபிஷாவின் காதுகளில் கிசுகிசுத்தான்.
“பங்கு பிரிக்றப்ப என்னை விட்ராதிங்கடி!”
“பொத்திட்டு போடா!”
“அம்மா பூர்வீகச் சொத்தை விக்கும் போது நாலு சம பங்கா பிரிச்சுத்தானே எனக்கும் உங்களுக்கும் குடுத்துச்சு…”
“பொட்டாச்சி நகை பொட்டச்சிகளுக்கு தான்டா பேப்பயலே!”
“இது நியாயமாடி!”
“குரல்வளைல காலைவச்சு மிதிச்சே கொன்னிருவேன்… ஓடிப் போயிரு!”
“ஜமாஅத்ல புகார் பண்ணுவேன்!”
“நீ ஐநா சபைல கூட புகார் பண்ணு. ஐ டோன்ட் கேர்!”
சவ அடக்கம் முடிந்தது.
உறவினர்களும் நண்பர்களும் கலைந்து சென்று வீடு வெறிச்சோடியது.
வீட்டின் வரவேற்பறையில்.
ஒரு கோரைப்பாயை விரித்து மூன்று மகள்களும் உஸ்தாத் பீவியும் நகை எடை போடுபவரும் அமர்ந்தனர்.
இடப்பக்கம் கடைக்குட்டி மகனும் வலப்பக்கம் குதுப்தீனும் கைகட்டி நின்றிருந்தனர்.
ஒஸ்தாத்பீவி சுருக்கப்பையிலிருந்து நகையை எடுத்து கொட்டினாள்.
“ஒஸ்தாத்பீ நகையை லபக்கிட்டு கவரிங்நகை எதுவும் வச்சுட்டியா?”
“வாயக்கழுவு நபிஷா. நான் அல்லாஹ்வுக்கு பயந்தவ…”
நகைகளை எடை போடுபவர் எடுத்து தனது முகத்தருகே நிறுத்தி நகைகளைப் பார்த்தார். நகைகைள உரசிப் பார்த்தார்.
“உரசுறேன் உரசுறேன்னு பாதி தங்கத்தை முழுங்கிடாத அப்பிரைஸர்!”
“உன் திருட்டு புத்திய அடுத்தவங்க மேல சாட்டாதே நபிஷா…”
டிஜிட்டல் மின் தராசில் நகைகளை இட்டார்.
106 . 54 கிராம் தங்கம் இருந்தது.
“ஆறரை கிராம் தங்கத்தை தள்ளிட்டு 100 கிராம் தங்கத்தை விக்க நீங்க அலைய வேண்டியதில்லை. நானே வாங்கிக்கிரேன். செக்கோ டிடியோ கிடையாது. ஹாட் கேஷ் கொடுக்கிறேன்!”
‘‘கிராம் என்ன விலைன்னு எடுத்துப்ப?”
“புது தங்கம் கிராமின் இன்றைய விலை 12, 440 ரூபாய். உங்க அம்மா தங்கம் 916 தங்கம் இல்லை. தரம் கொஞ்சம் கம்மிதான். கிராம் 11, 500 ரூபாய்க்கு எடுத்துக்கிரேன். 100 கிராம் தங்கத்துக்கு 11,50,000 ரூபாய் தரேன். 6.54 கிராம் சேதாரம் ரொம்ப கம்மி…”
“பனிரெண்டு லட்சமா குடு. அப்பிரைஸர்! எனக்கு ஆறு. என்னிரு தங்கச்சிகளுக்கு மூணு மூணு லட்சம்!”
ஒஸ்தாத்பீவி இடை மறித்தாள். “நரி நாட்டாண்மைக்கு இங்க இடமில்லை. உங்கத்தாவுக்கு வேலையும் இல்லை பென்ஷனும் இல்லை. ஊனமுற்றவரும் கூட. உங்கத்தா உங்கம்மா நகைகளை வித்துத் தின்னிருந்தா என்ன பண்ணுவீங்க? பன்னிரெண்டு லட்சமோ பதிணென்னரை லட்சமோ நாலு சமபங்குகளாக பிரிச்சு உங்கத்தாவுக்கு ஒரு பங்கு மீதி மூணு மகள்களுக்கு மூணு பங்கு. ஏதாவது வம்பு பண்ணிங்க… நகைகளைக் கொண்டு போய் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைச்சிருவேன். அதுக்கப்புறம் குரங்கு அப்பத்தை பங்கு பிரிச்ச கதையாய்டும்!”
கடைக்குட்டி ஓடிவந்து அழுதான். “ஒஸ்தாத்பீ… நானும் பாவம் தான்… அஞ்சு பங்கா பிரிச்சு எனக்கும் கொடுங்க!”
“உனக்கு ஒட்டைக்காலணா கூட பங்கு தர முடியாது… போயிடு பேசாம… அப்பிரைஸர் பன்னண்டு லட்சம் குடுத்தார்னா உங்கத்தாவின் பங்கு மூணு லட்சத்தை மூத்த குடிமக்கள் கணக்கு தபால் அலுவலகத்தில் ஆரம்பிச்சு பிக்ஸட் டெபாசிட் பண்ணிருவேன். மாசம் மூவாயிரம் கிடைக்கும். அத வச்சு அவர் பொழைச்சிப்பார்!”
“அவர் பங்கை என்கிட்ட கொடுங்க… நான் அவரை வச்சு சோறு போடுறேன்!”
“யாரும் எந்த ஆணியையும் பிடுங்க வேணாம்…” மூன்று லட்ச ரூபாயை குதுப்தீனிடம் நீட்டினாள் ஒஸ்தாத்பீவி.
அனைவரும் போன பின் குதுப்தீனிடம் ஒரு தபால் சிறுசேமிப்புக் கணக்கு அட்டையை நீட்டினாள் ஒஸ்தாத்பீவி.
“இதில உங்க மனைவி கொஞ்ச கொஞ்சமா சேத்த பணம் ரெண்டு லட்சம் இருக்கு. உங்களை தான் வாரிசா போட்டிருக்கு சர்புனிஸா. இந்த பணத்தையும் உங்க புது கணக்கில போட்டீங்கன்னா வருமானம் கூட வரும்… பேராசைக்காரப் பிசாசுகளை பெத்துட்டீங்க… நீங்களும் உயிர் வாழனும் இல்ல…”
அரூப சர்புனிஸ்ஸா கணவரைப் பார்த்து கண் சிமிட்டினாள்.