‘ஊறும் பிளட்’ பாடலை சீழ்க்கையடித்தபடி வீட்டுக்குள் பிரவேசித்தான் முகமது இலியாஸ்.
வயது16. 165 செமீ உயரம். ரோஜா நிறம். சுருள்சுருள் தலைகேசம். பத்தாம் வகுப்பு படிப்பவன். கருப்பு ஜீன்ஸும் கருப்பு டி சர்ட்டும் அணிந்திருந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த அத்தா அவூப் ஹனீபா அம்மா ஷாஜாதி இருவரையும் நோக்கிச் சென்றான் இலியாஸ். இலியாஸ் அவர்களின் ஒரே மகன்.
“ஹாய் அத்தா! ஹாய் அம்மா!”
“சலாம் சொல்லி பழகு மகனே!”
“ஸாரி. இதுதான் எனக்கு கம்பர்டபிளா இருக்கு…”
“அஸ்ஸலாமு அலைக்கும் சொன்னா உன் நாக்கு சுளுக்கிக்குமா?” அத்தா.
“இன்னையிருந்தாவது சலாம் சொல்லி பழகு மகனே!” அம்மா.
“பார்ப்பம்!”
“டியூஷன் போய்ட்டு வந்தியா?”
“மக்கு பயலுகளுக்குத்தான் டியூஷன். எனக்கெதுக்கு டியூஷன் வச்சீங்க?”
“புத்திசாலி மேலும் புத்திசாலியாக!”
“என் படிப்பு விஷயத்தில் நீங்கள் செய்யும் அதிகபிரசங்கி தனங்கள் எனக்கு அறவே பிடிக்கல…”
“ப்ளஸ் டூ வரை பல்லைக் கடிச்சிக்க. நீ காலேஜ் போனவுடன் எல்லாத்தையும் ஈஸி பண்ணிடுவோம்!”
“விஷயத்துக்கு வருகிறேன். என் பிரண்ட் சந்துரு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கிருக்கான்!”
“அவனுக்கும் வயசு பதினாறு தானே ஆகும். டிரைவிங் லைசென்ஸ் 18 வயது பூர்த்தியானவுடன் தானே வாங்க முடியும்!”
“நானும் அவனும் பன்னண்டு வயசிலயிருந்தே பைக் ஓட்டுரோம்… நாங்கல்லாம் குட்டி அஜீத். நாங்கல்லாம் குட்டிவாசன்!”
“நொட்டோரியஸ் பாபுலாரிட்டிக்கு ஆசைப்படாதே!”
“டாடி! மம்மி! கடந்த இரண்டு வாரமா ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பத்திதான் தகவல்கள் சேகரிச்சிட்டு இருந்தேன். பஜாஜ் பல்சர், கேடி எம் டியூக் 390, டிவிஎஸ் அபாச்சி, ஹீரோ எக்ஸ்ட்ரீம், சுஜீகி கிஸ்ஸர், டிகாட்டி மற்றும் கபிரா மொபிலிட்டி பார்த்தேன். எதுவும் பிடிக்கல. கடைசியா கவசாகி நின்ஜா இஸட் எக்ஸ் – டென் ஆர் பார்த்தேன். சூப்பர் பைக். விலை இருபத்திரெண்டரை லட்சம்… வருகிற என் பெர்த் டேக்கு கிப்ட்டா வாங்கிக் குடுத்திருங்க!”
அவூப் ஹனீபா ஆணித்தரமாக மறுத்தார். “சான்ஸே இல்லை மகனே. பைக்கின் விலை ஒரு பிரச்சனை இல்லை. உன் பாதுகாப்பு தான் முக்கியப் பிரச்சனை. நீ காலேஜ்க்கு போனவுடன் சாதாரண பைக் வாங்கித் தருவேன்!”
“பாதுகாப்பு கீதுகாப்புன்னு என்ன உளர்றீங்க? வாங்கித் தர முடியுமா, முடியாதா?”
“ப்ளீஸ் சொன்னா கேளு மகனே. உனக்கு பதினெட்டு வயசானவுடனே உன்னை ஒரு டிரைவிங் ஸ்கூல்ல சேத்து முறையா டிரைவிங் கத்துக் கொடுத்து ட்ராபிக் ரூல்ஸ் டீச் பண்ணி லைசென்ஸ் வாங்கித்தரம். முதல்ல ஸ்கூட்டி. ஸ்கூட்டில நிதானமா போய் வா!” அம்மா.
“என்னம்மா, அத்தா கூட நடிக்றியா?”
“நீ எங்களுக்கு ஒரே பய்யன். எங்க எதிர்காலமே நீதானடா. உன் பாதுகாப்பை யோசிக்காம நாங்க தாம்தூம்னு முடிவெடுக்க முடியுமா?”
“ஹெல்மெட், நீ கார்ட், எல்போ கார்ட் எல்லாம் போட்டுக்கிட்டு தான் வண்டி ஓட்டப்போரேன்… பாதுகாப்பு பாதுகாப்புன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லாதீங்க… நீங்க இன்னும் ஒரு வாரத்ல எனக்கு நான் கேட்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கித் தரணும்!”
“முடியாதுப்பா…”
“வாங்கித் தரலேன்னா நடக்றதே வேற…”
“என்ன பண்ணுவ?”
“என்ன பண்ணுவேன்னு வெளிப்படையா சொல்ல மாட்டேன்… பெர்த்டே அன்னைக்கி ஸ்போர்ட்ஸ் பைக் சாவியை நீங்க என்கிட்ட ஒப்படைக்கனும்!”
“சொன்னா கேளு… இலியாஸ் ப்ளீஸ்!”
“கெஞ்சினா மிஞ்சுவீங்க மிஞ்சுனா கெஞ்சுவீங்க… கெடு கொடுத்திட்டேன்… வாங்கிக் குடுக்கலேன்னா வீபரீத விளைவுகளை சந்திக்கத் தயாராகுங்க!”
விருட்டென்று வெளியேறினான் முகமது இலியாஸ்.
“ஏங்க அவன் பேசுற விதம் திகிலா இருக்கு. மெதுவா ஓட்டனும் நம்ம நகருக்குள்ள ஓட்டனும்ன்ற கண்டிசனோட அவன் கேக்ற ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கிக்குடுத்திருங்க!”
“எமோஷனல் பிளாக்மெயில் பண்றான்… இதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்க மாட்டேன்! நீ போய் உன் வேலையை பார். அவனை செல்லம் கொடுத்து கெடுக்கறதே நீதான்!”
பிறந்த நாள் நெருங்க நெருங்க முகமது இலியாஸின் நடவடிக்கைகள் உக்கிரமாயின. வீட்டிலுள்ள உடையும் பொருட்களைப் போட்டு உடைத்தான். கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து அத்தாவை வாய்க்குள் திட்டினான். சரிவர சாப்பிடாமல் அடம்பிடித்தான்.
பிறந்தநாள் வந்தது.
ஒரு வங்கிச் சான்றிதழை நீட்டினார் அத்தா. “இருபத்தியைஞ்சு லட்ச ரூபாயை உன் பெயர்ல பிக்ஸட் டெபாசிட் போட்டிருக்கேன். 18 வயசு பூர்த்தியானதும் பணத்தை எடுத்து நீ விரும்பின பைக்கை வாங்கிக்கலாம். இது எங்க பிறந்தநாள் பரிசு!”
வாங்கி சுக்குநூறாக கிழித்து போட்டான் இலியாஸ்.
மொட்டைமாடிக்கு பேய்த்தனமாக ஓடி ஆழ தரைக்கு குதித்து இரத்த வெள்ளத்தில் சிதறினான்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முகமது இலியாஸின் உடலை அவனது பெற்றோரிடம் அரசு மருத்துவமனை ஒப்படைத்தது.
தந்தையும் தாயும் அழுது அழுது வீங்கி வெம்பி முட்டி மோதி கதறி சிதறி வறண்டிருந்தனர்.
உறவினர் கூட்டம் ஒப்பாரி வைத்தது.
சில உறவினர்கள் இலியாஸின் பெற்றோரை சபித்தனர். “கோடி கோடியா பணம் வச்சிருந்தும் பிசினாரிதனம் தேவையா? பர்த்டே கிப்ட்டா ஒரே மகன் பைக்தானே கேட்டான்? வாங்கிக் குடுத்திருக்கலாமில்ல? இப்ப ஒரே மகனை இழந்துட்டு வாய்லயும் வயித்லயும் அடிச்சிக்கிட்டா எப்படி?”
முகமது இலியாஸ் குளிப்பாட்டப்பட்டு கபன் துணி அணிவிக்கப்பட்டு சந்தூக்கில் வைக்கப்பட்டான்.
ஜனாஸா பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பள்ளி இமாம் வெளியே வந்தார். “எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். தற்கொலை செஞ்சுகிட்ட ஒரு விடலை சிறுவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த மாட்டேன்!”
“என்ன இமாம், புதுக்குண்டை தூக்கிப் போடுறீங்க?”
“உலகில் வருடாவருடம் 740000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு 43 நொடிக்கும் ஒருவர் தற்கொலை. நம் நாட்டில் இளைஞர்கள் உயிரிழப்புக்கு 16 சதவீதம் தற்கொலை காரணமாகிறது. ஒன்பது சதவீதம் பேர் இதய ரத்தக்குழாய் பாதிப்புகளாலும் ஏழுசதவீதம் பேர் செரிமான நோய்களாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைக்கு முழுக்க முழுக்க எதிரான மதம் இஸ்லாம். பெற்றோர் பைக் வாங்கித்தரலைன்னு தற்கொலை செய்து கொண்ட இந்த விடலைப் பையன் ஒரு தற்குறி. இவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த என் மனம் ஒப்பவில்லை!”
“தற்கொலை செய்து கொண்ட முஸ்லிமுக்கு ஜனாஸா தொழுகை தொழக்கூடாதுன்னு மார்க்கத் தடை நம்ம இஸ்லாமல இருக்கா?”
“கடனைத் திருப்பிச் செலுத்தாதவரின் ஜனாஸா தொழுகைக்கும் தற்கொலை செய்து கொண்டவரின் ஜனாஸா தொழுகைக்கும் நபிகள் நாயகம் செல்லவில்லையே?”
“அவர் செல்லவில்லை சரி மற்றவர்களை அவர் தடுத்தாரா?”
“ஒருவர் காயத்தின் வலியால் பொறுமை இழந்து தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்ட போது ‘எனது அடியார் தன்னைத் தானே கொலை செய்து கொள்வதில் அவசரப்பட்டார் எனவே அவருக்கு சுவனத்தை நான் ஹராமாக்கி
விட்டேன்’ என அல்லாஹ் கூறுகிறான் ”
“இமாம்! ஒரு வஹாபி போல நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாக பிறந்த அனைவருக்கும் ஜனாஸா தொழுகையின் மீது உரிமை உண்டு. தற்கொலை செய்து மௌத்தான சிறுவனின் நடத்தைக்கு மறுமை நாளில் தகுந்த நியாயத் தீர்ப்பு வழங்குவான் இறைவன். நாம் ஜனாஸா தொழுகை நடத்திய பல முஸ்லிம்கள் வட்டி வாங்கியவர்கள், போதை பொருள் விற்றவர்கள், மார்க்கத்திற்கு முரணாக நடந்தவர்கள். அவர்களின் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்தீர்களா? மகனைப் பறி
கொடுத்து நிற்கும் பெற்றோருக்கு ஆறுதலாக நம் செய்கை இருக்கட்டும். சிறுவனுக்கான ஜனாஸா தொழுகையில் அறியா சிறுவனின் செயலை மன்னிக்க இறைவனை வேண்டுவோம்…”
இமாம் மனம் இரங்கினார்.
“இருங்கள்… மற்ற இமாம்களிடம் இதுபற்றி அபிப்ராயம் கேக்கிறேன்!”
கைபேசியில் வினவினார்.
“இமாம்களாகிய நமக்கே மறுமை நாளில் என்ன தீர்ப்பளிப்பான் இறைவன் என நமக்கே தெரியாது. சிறுவனின் தற்கொலையில் நீங்கள் தீர்ப்பு வழங்காதீர்கள். ஜனாஸா தொழுகை தொழ வையுங்கள்!”
நான்கு ரக்காத் ஜனாஸா தொழுகையில் மஹல்லா மக்கள் சிறுவன் முகமது இலியாஸின் பாவத்தை மன்னிக்க அதிகம் அதிகம் இறைஞ்சினர்.
முகமது இலியாஸின் ரூஹு பெற்றோரின் முன் மன்றாடியது.
“கட்டுக்கடங்கா இளமையின் அறியாமையால் நான் செய்த தவற்றை மன்னியுங்கள். இறைவனிடமும் எனக்கான பாவமன்னிப்பைக் கேட்டு இரவும் பகலும் பிரார்த்தியுங்கள்!”