இரவு உணவை முடித்துவிட்டு தூங்கப் போவதற்கு முந்தையப் பிரார்த்தனையை ஓத தயாரானாள் நுஸ்ரத் பர்வீன்.
நுஸ்ரத்துக்கு வயது 65. தொழுகையாளி. மகனின் குடும்ப நலனுக்காக அல்லும் பகலும் உழைப்பவள். ஆயிரம் துளி அன்பை விதைத்து ஒரு துளி அன்பை அறுவடை செய்பவள்.
“இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும் வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனை காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்துவிடு. இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்!”
பத்து வயதுப் பேரன் மஷுக் ரஹ்மான் நானியின் அறைக்குள் ஓடி வந்தான். நானியின் மடியில் மீது எகிறிக் குதித்தான்.
பேரனுக்கு அடிபடாமல் அவனை முழுதாய் மடியில் ஏந்திக் கொண்டாள்.
“நானி! தூங்கிட்டியா?”
“தூங்கினா உனக்கெப்படி பதில் சொல்வேன்? இதோ கொஞ்ச நேரத்துலத் தூங்கிடுவேன்!”
“நானி! உனக்கு என் மேல துளி அன்பில்லை!”
“எனக்கு தெரிஞ்சஅளவுக்கு உன் மேல அன்பை காட்றேன் வேற எப்படி காட்டனும்னு சொல்லிக் கொடேன்!”
“முப்பது வருடங்களுக்கு முன்னாடி பேரன் பேத்திகளுக்கு பாட்டிகள் பெட்டைம் ஸ்டோரிஸ் சொல்வாங்களாமே… நீ என்னைக்காவது எனக்கு ஒரு பெட்டைம் ஸ்டோரி சொல்லிருக்கியா?”
“பாட்டி எனக்கு ஒரு பெட்டைம் ஸ்டோரி சொல்லுன்னு கேட்டிருக்கியா? கேட்டா தானேம்பேன் கதை வரும்?”
“சரி இன்னைக்கி ஒரு கதை சொல்லு”
“என்ன மாதிரியான கதை வேணும்!”
“அது உன்னிஷ்டம்… நீ சொல்ற கதை செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கனும்…”
நுஸ்ரத் பர்வீன் யோசித்தாள்.
“சரி, உனக்கு நபிகதை ஒண்ணு சொல்றேன்!”
“நபின்னா யார் நானி!”
“நபின்னா இறைதூதர். அல்லாஹ்விடமிருந்து செய்திகளை வாங்கி மக்களிடம் பரப்பும் தபால்காரர்…. நபியை தீர்க்கதரிசி எனவும் கூறலாம். நபி என்ற சொல் ‘நுபுவ்வத்’ (உயர்ந்தவர்) என்பதிலிருந்து வந்தது அதாவது இறைவனின் முன்னிலையில் உயர்ந்த நிலையில் இருப்பவர். அறியாமையில் மூழ்கிய மக்களை இறைவனின் நற்செய்திகளால் நல்வழிப்படுத்துவதே நபியின் வேலை. நாற்பது பேர் கொண்ட வகுப்பில் தான் இல்லாத போது வகுப்பை கண்காணிக்க
மாணவர்களிலிருந்து ஒருவரை கிளாஸ் மானிட்டராக டீச்சர் நியமிப்பார் இல்லையா? அப்படிதான் நபிகள் போஸ்ட்டிங்கும்!”
‘உலகத்தில் எத்தனை நபிகள் இருந்தார்கள்?”
“ஒரு லட்சத்தி இருபத்திநாலாயிரம் நபிமார்கள் இருந்துள்ளனர். அவர்களில் கடைசி நபிகள்நாயகம். இனி உலகம் முடியும்வரை புதிதாய் நபிகள் கிடையாது!”
“ஏன்?”
“மக்களுக்கு சொல்லவேண்டிய அனைத்து செய்திகளையும் நபிகள் நாயகம் பூமிமக்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார். இந்த நற்செய்திகளை பின்பற்றி மக்கள் தீமைகளை தவிர்த்து நன்மைகளை நாடலாம்!”
“ஒரு லட்சத்தி இருபத்திநாலாயிரம் நபிகள் தேவையா?”
“ஒவ்வொரு சிறு இனக்குழுக்களுக்கும் கூட இறைத்தூதர் இருந்திருக்கிறார்கள். இறைத்தூதர்கள் எல்லா மதங்களின் வாயிலாகவும் வந்திருக்கிறார்கள்”
“ஒரு லட்சத்தி இருபத்திநாலாயிரம் நபிகளின் பெயர்கள் உனக்குத் தெரியுமா நானி?”
“தெரியாது. திருக்குர்ஆனில் இருபதுக்கும் மேற்பட்ட நபிகளை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது…”
“ஓஹோ!”
“ஒரு சின்ன சந்தேகம் நானி…”
“என்ன?”
“இறைவன் சொல்ல நினைச்சதை நேரடியாக மக்களிடம் வந்து, ‘நான்தாம்பா உங்க கடவுள். இது இதை செய்யுங்க. இது இதை செய்யாதிங்க என்று வாய் வழி எச்சரிக்கை எழுத்துப்பூர்வ எச்சரிக்கையும் தரேன். தவறாம பாலோ பண்ணி சொர்க்கத்துக்கு போங்க’ அப்டின்னு சொல்லிருக்கலாமில்ல… எதுக்கு இறைத்தூதரை நியமிக்கனும்?”
“நம்மைப் படைத்த இறைவனின் விருப்பத்தை மறுதலிக்க நாம் யார்? அவனுக்கு எல்லா நியாயங்களும் தெரியும் எல்லா தர்மங்களும் தெரியும். மனிதர்களில் உன்னதமானவர்களுக்கான கௌரவம் நபி பட்டம்….”
“சரி கதையைச் சொல்லு…”
“இன்னைக்கி நான் யூனுஸ் நபிகளை பத்திதான் கதை சொல்லப் போறேன்!”
“யூனுஸ் யார்? எங்க பிறந்தார்? ஆள் பாக்க எப்படி இருப்பார்?”
“யூனுஸ் நபிகள் ஈராக் நாட்டின் தஜ்வா நதிக்கரையோரத்தில் கிமு 860 - கிமு 784 காலகட்டத்தில் நைனுவா நகரில் வாழ்ந்தவர்!”
“சரியா எத்தனை வருஷத்துக்கு முன்னாடி?”
“இரண்டாயிரத்து எண்ணூத்தி அறுபது வருடங்களுக்கு முன் யூனுஸ் நபிகள் வாழ்ந்தார்!”
“ஓஹோ!”
“யூனுஸ் நபிகள் ஹுத் நபிகளின் வழித்தோன்றல். யூனுஸ் நபிகளின் தாயார் பெயர் மத்தா என்கிற பதூரா… யூனுஸ் நபிகளை பற்றி திருக்குர்ஆனில் ஸுரத்து யூனுஸ் என்கிற அத்தியாயம் இருக்கிறது. யூனுஸுக்கு துன்னூன்
(மீனுடையவர்) என்கிற பட்டப்பெயரும் உண்டு”
“சரி நானி கதைக்கு வர…”
“இஸ்ரவேலர்களின் அரசர் பெயர் ஹஸ்கியா. நைனுவா என்கிற நகரத்தின் அரசர் பெயர் முல்அப் இப்னுல் இர்ஷா. நைனுவா மக்கள் இஸ்ரவேலர்களின் மீது படையெடுத்து ஏராளமான இஸ்ரவேலர்களை சிறை பிடித்தனர். ஹஸ்கியா தூதராக யூனுஸை இர்ஷா மன்னரிடம் அனுப்புகிறார். யூனுஸ் இர்ஷா மன்னரிடம் சென்று வாழ்த்து கூறி பேச்சை ஆரம்பிக்கிறார்!”
“என்ன பேச்சு?”
“நைனுவா மன்னர் அவர்களே… நான் ஹஸ்கியா மன்னரின் தூதர் யூனுஸ். நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை வலியுறுத்த வந்திருக்கிறேன். ஒன்று - உங்கள் நகர மக்கள் ஏக இறைவன் அல்லாஹ்வை மறந்து வக்கிரகங்கள் மற்றும் பொம்மை வழிபாட்டில் சிக்கியுள்ளார்கள். திஸ் இஸ் டூ பேட். நீங்களும் உங்கள் மக்களும் மனம் திருந்தி முஸ்லிமாகுங்கள். அல்லாஹ் உங்களின் கடந்த கால தவறுகளை மன்னிப்பான். இரண்டு - எவ்வித நிபந்தனையும் இன்றி கைது செய்த அனைத்து இஸ்ரவேலர்களையும் விடுவியுங்கள்!”
“நைனுவா மன்னர் என்ன சொன்னார்?”
“அல்லாஹ்வை வணங்கச் சொல்ல நீ யார்? இஸ்ரவேலர்களை விடுவியுங்கள் என நீ கெஞ்சாமல் எனக்கே ஆணையிடுகிறாய்… தூதராக வந்ததால் உயிர் பிழைத்தாய்… ஓடிவிடு யூனுஸே’- என்கிறார் நைனுவா மன்னர்!”
“உடனே இந்த விஷயத்தை இஸ்ரவேலர்களின் மன்னர் ஹஸ்கியாவிடம் சொல்ல ஊர் திரும்பிவிட்டாரா யூனுஸ்?”
“அதுதான் இல்லை. தொடர்ந்து மூணு நாட்கள் நைனுவா மன்னரை நச்சரித்துக் கொண்டே இருக்கிறார் யூனுஸ். பருப்பு வேகவில்லை. யூனுஸ் அரண்மனையை விட்டு வெளியேறி நைனுவா மக்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிறார். நைனுவா மக்கள் எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல யூனிஸின் அறிவுரையை புறக்கணிக்கின்றனர். யூனுஸ் நபிகளை நைனுவா மன்னன் சிறைபிடித்து சித்திரவதை செய்கிறான். தொடர்ந்து மார்க்க உபதேசம் 30 ஆண்டுகள் யூனுஸ் செய்தும் இரண்டே இரண்டு பேர்தான் இஸ்லாமை தழுவுகின்றனர். இறைவன் அனுப்பிய நெருப்பு மழையில் நைனுவா மக்கள் திருந்தி ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றனர். இறைவன் நெருப்புமழை பொழிந்து நைனுவா மக்களை திருத்திய விவரம் தெரியாமல் யூனுஸ் நபிகள் குடும்பத்துடன் புலம் பெயர்கிறார். தஜ்வா நதிக்கரையில் இரு மகன்களையும் மனைவியையும் இழக்கிறார் யூனுஸ். ஒரு கப்பலில் ஏறுகிறார். எஜமானன் இட்ட கட்டளையை
நிறைவேற்றாமல் ஓடி வந்த ஊழியன் யூனுஸ் என்கிற உண்மையால் கப்பல் நடுக்கடலில் நின்று விடுகிறது. கப்பலில் உள்ள மற்றவர்களை காப்பாற்ற யூ.னுஸ் நபி கடலுக்குள் குதித்து விடுகிறார்….”
“கதை அவ்வளவுதானா யூனுஸ் நபி மௌத்தா போய்ட்டாரா?” “இல்லை யூனுஸ் நபியை ஒரு மீன் முழுங்கி விட்டது. மீனின் வயிற்றுக்குள் யூனுஸ் 40 நாட்கள் இருந்திருக்கிறார். யூனுஸ் நபியை விழுங்கிய மீனுக்கு பெயர் ‘நூன்’ மீனின் வயிற்றில் இருந்தபடியே யூனுஸ்நபிகள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு இறைஞ்சினார். அல்லாஹ் மன்னிக்கிறான்.
பாக்தாத் நகரில் இருந்து 170 கிமீ தூரத்தில் இருக்கும் புராத் நதிக்கரையில் மகாமே யூனூஸ் என்கிற இடத்தில் மீன் யூனுஸ் நபியை உயிருடன் துப்பியது. மீண்டும் யூனுஸ் நபி நைனுவா நகர் திரும்பி அதன் மக்களுக்கு அல்லாஹ்வின் நற்போதனைகளை தொடர்ந்தார். யூனுஸ் நபிக்கு தொலைந்து போன மகன்களும் மனைவியும் மீண்டும் கிடைத்தனர். மீனின் வயிற்றிலிருந்து தப்பித்த யூனுஸ் நபி அதன்பின் 31 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து இறைப்பணி தொடர்ந்தார்!”
“கதை சூப்பர் நானி!’
“போய் தூங்கு. நாளை யூசுப் நபி பற்றிய கதை சொல்கிறேன்…”
இரவு முழுக்க யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் இருந்து அல்லாஹ்வை வணங்கியபடி கடலின் அழகை ரசித்தார் மானசீகத்தில் மஷுக் ரஹ்மான் மனதில்.