உம்மு அபிஹா வாட்டர் ஹீட்டரை ஆன் பண்ணினாள்.
உம்முவுக்கு வயது 32. இளங்கலை பட்டப்படிப்பு படித்த இல்லதரசி. யாரையும் எதற்கும் கடிந்து கொள்ளாத மனேபாவம். உம்மு எதனைச் செய்தாலும் அதில் ஒரு நளினம் ஒளிந்திருக்கும். எளிமையான சமையல் என்றாலும் சுவையான சமையல் செய்வாள். உம்முவுக்கு எட்டு வயதில் மகள் ஆயிஷா ரின்ஷா இருக்கிறாள்.
மகளின் கேசத்திற்கு ஷாம்பு தடவி விட்டாள்.
புதிதாக ஒரு ஹமாம் சோப்பை பிரித்து அதற்குரிய டப்பாவில் போட்டாள்.
மகளின் மேலாடையைக் கழற்றினாள்.
சுடுநீருடன் குளிர்நீரை இதமாகக் கலந்தாள்.
ஸ்வீம்மியுடன் மகளைக் குளிக்க வைத்தாள்.
“அம்மா! எனக்குக் குளிக்கத் தெரியாதா? நீ என்னை கைக்குழந்தை மாதிரி ட்ரீட் பண்ற?”
“இன்னும் ரெண்டு மூணு வருஷம் உன்னைக் குளிக்க வைப்பேனா? அப்றம் நீ தான்…. குளியல் ஒரு சந்தோஷம். குளியல் ஒரு நாளின் செயல்பாடுகளைப் புத்துணர்ச்சியாக்குகிறது. குளியல் ஓர் அடிப்படை சுயசுத்தம்…”
குளித்து முடித்த மகளின் தலையைப் பூத்துவாலை வைத்துத் துவட்டி விட்டாள் உம்மு அபிஹா
சிறிதளவு தேங்காயெண்ணெய் எடுத்து துவட்டியத் தலையில் கோதி விட்டாள்.
ஆயிஷா ரின்ஷா தும்பினாள். ‘ஆ! ஹச்சூ!’
“மகளே! தும்மியவுடன் அல்ஹம்துலில்லாஹ் சொல்லு!”
“அல்ஹம்துலில்லாஹ்- சொல்லிட்டேன் இந்த வார்த்தைக்கு என்னம்மா அர்த்தம்?”
“எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்லது இறைவனுக்கு நன்றி என்று அர்த்தம். நீ அல்ஹம்துலில்லாஹ் சொன்ன பிறகு நான் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்!”
“என்ன வார்த்தை?”
“யர்ஹமுகல்லாஹ் என கூற வேண்டும்!”
“அதற்கென்ன அர்த்தம்?”
“அல்லாஹ் உனக்குக் கருணை புரிவானாக - என அர்த்தம். இதோ உனக்கு மறு மொழி கூறுகிறேன். யர்ஹமுகல்லாஹ்!”
“ஓவ்!”
“நான் சொன்னதிற்கு மூன்றாவதாக நீ ‘யஹ்தீகுமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலகும்’ என கூற வேண்டும்!”
“அதற்கு என்ன அர்த்தம்?”
“அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலையைச் சீராக்குவானாக என பொருள்!”
“இஸ்லாம் தும்மலைப் பற்றி என்ன கூறுகிறது?”
“நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கிறான். கொட்டாவி விடுவதை உவப்பதில்லை. எனவே உங்களின் எவரேனும் தும்மி இறைவனைப் புகழ்ந்தால் அதனைச் செவியுறும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ‘யர்ஹமுகல்லாஹ்’ என மறுமொழி கூறுவது கடமையாகும். ஆனால் கொட்டாவியோ ஷைத்தானின் வழி வருவதாகும். எனவே உங்களில் எவருக்கேனும் தொழும் போது கொட்டாவி வந்தால் இயன்ற வரை அடக்கவும் வாயை மூடிக்கொள்ளவும் ஹாஹா என கூற வேண்டாம். இது ஷைத்தானின் செய்கையாகும் கொட்டாவி கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் - என்கிறார் நபிகள் நாயகம்!”
“ஓஹோ!”
“மூன்று முறை உங்கள் சகோதரின் தும்மலுக்கு மறுமொழி கூறுங்கள். அதற்கு மேல் அவர் தும்மினால் அவருக்கு சளி பிடித்திருக்கிறது என அர்த்தம் எனவும் நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்!”
“அம்மா! தும்மல் பற்றி விஞ்ஞானம் என்னம்மா கூறுகிறது?”
“மூக்கு அல்லது தொண்டையில் எரிச்சல் ஏற்படும் போது, அதனை நீக்குவதற்காக நுரையீரலில் இருந்து மூக்கு மற்றும் வாய் வழியாக வேகமாக வெளியேற்றப்படும் காற்றின் தன்னிச்சையான செயல்பாடே தும்மலாகும்!”
“எதனால் தும்மல் ஏற்படுகிறது என விஞ்ஞானம் சொல்கிறது?”
“எரிச்சலூட்டிகள், தூசி மற்றும் மகரந்த ஒவ்வாமை, நோய்த்தொற்றுகள், அதீத வெளிச்சம், காரமான உணவுகள் தும்மலுக்கு அடிப்படைக் காரணங்கள்…”
“புரிகிறது!”
“தும்மல் என்பது உடலின் ஒரு தற்காப்பு வழிமுறை மகளே…”
“தும்மல் நல்லதா கெட்டதா?”
“தும்மல் நல்லதும் கெட்டதும் இரண்டும் அடங்கியது. தொடர் தும்மல் கெடுதி…”
“தும்மலின் வேகம் என்ன?”
“சொன்னால் ஆச்சரியப்படுவாய் மணிக்கு 160 கிமீ வேகம்…”
“தும்மலின் போது கண்களை மூடிக்கொள்ள வேண்டுமா? அல்லது கண்களை திறந்து வைக்கலாமா?”
“தும்மலின் போது ஆட்டோமேட்டிக்காக கண்கள் மூடிக்கொள்ளும். கண்களைத் திறந்து கொண்டு தும்முவது ஆபத்தானது!”
“தும்மலை அடக்கினால் என்னவாகும்?”
“நல்ல கேள்வி இது. தும்மலை அடக்கினால் காதில் அழுத்தம், சைனஸ் தொற்று மற்றும் கழுத்து எலும்பு காயம் ஏற்படும்!”
“அம்மா! ஒருவர் தும்மி விட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறினால் நாம் மறுமொழியாக ‘யர்ஹமுகல்லாஹ்’ கூற வேண்டும் சரி. தும்மினவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறாவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?”
“தும்மியவர் இறைவனைப் புகழாவிட்டால் நாமும் அவருக்கு மறுமொழி கூறத் தேவையில்லை என நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்!”
“நபிகள் நாயகம் எப்படித் தும்முவார்?”
“நபிகள் நாயகம் அவர்களுக்குத் தும்மல் வந்தால் தன்னுடைய இரு கையாலோ அல்லது துணியாலோ முகத்தை மூடிக்கொண்டு தங்களின் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள்!”
“கிரேட்!”
“நபிகள் நாயகத்துடன் இருக்கும் போது சில யூதர்கள் வேண்டுமென்றே தும்மி அதற்கு நபிகள் நாயகம் ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறுகிறாரா என நோட்டமிடுவர். ஆனால் நபிகள் நாயகம் ‘அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்துவானாக மேலும் அல்லாஹ் உங்களின் மனதைச் சீர்திருத்துவானாக’ எனக் கூறுவார்!”
“நெத்தியடி!”
“ஆம்!”
“தும்முவதில் உலக சாதனை உண்டா?”
“உண்டுண்டு. டோனா கிரிபித்ஸ் என்பவர் தொடர்ந்து 976 நாட்கள் தும்மியிருக்கிறார். ஒரே வருடத்தில் 10 லட்சம் தடவை தும்மி இருக்கிறார்!”
“அம்மாடி! நான் தப்பிச்சேன்….”
“அல்ஹம்துலில்லாஹ்’ என்கிற வார்த்தையை நல்ல மற்றும் கெட்டச் சூழ்நிலைகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தலாம். இந்த வார்த்தை சூரா அல் பாத்தியாவில் உள்ளது!”
“கொட்டாவி பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது அம்மா?”
“முதுகெலும்புள்ள விலங்குகளுக்கு இடையில் கொட்டாவி விடுதல் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு நரம்பியல் இயற்பியல் தழுவலாகும்!”
“சரி!”
“கொட்டாவி மூளையைக் குளிர்விக்கிறது. விழிப்புணர்வை அதிகரிக்கிறது. சலிப்பு அல்லது சோர்வை அகற்றுகிறது. கொட்டாவி மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்பி செல்களைத் தூண்டி மூளையின் வெப்பநிலையைச் சீராக்குகிறது. கொட்டாவி என்பது ஒரு தன்னியக்க எதிர்வினை. கொட்டாவி சமூகத் தொடர்புகளின் ஒரு பகுதி. கொட்டாவி தூக்கத்தை குறிக்கும் சமிக்ஞைகளுடன் தொடர்புடையது. ஒருவரிலிருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியது. அடிக்கடி கொட்டாவி எதிர்மறை மருத்துவநிலையின் அறிகுறி. கல்லீரல் அழற்சி காரணமாகக் கூட கொட்டாவி வரலாம்”
“கொட்டாவி விடும் போது கண்ணீர் வருமா?”
“கொட்டாவி விடும்போது முகத்தசைகள் சுருங்குவதால் கண்ணீரைச் சுரக்கும் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்பட்டுக் கண்ணீர் வெளியேறுகிறது!”
“கொட்டாவி வரும்போது ஒரு முஸ்லிம் என்ன செய்ய வேண்டும்?”
“இயன்ற வரை அடக்க முயற்சி செய்ய வேண்டும். வாயை இடது கையால் மூட வேண்டும். மேலே ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்’ எனக் கூற வேண்டும்!”
“இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்?”
“அல்லாஹ்வைத் தவிர வேற சக்தி இல்லை எனப் பொருள்…”
“சரி!”
“மொத்தத்தில் மகளே! அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். ஆனால் கொட்டாவியை வெறுக்கிறான். தொழுகையின் போது கொட்டாவியை அடக்க வேண்டும். கொட்டாவி வந்தால் ‘ஷைத்தான் இடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என கூறுவது நபிகள் நாயகம் வழிமுறை அல்ல. ஆகவே, அதனைக் கூற வேண்டாம். கொட்டாவி நல்லது என விஞ்ஞானம் கூறுகிறது. கொட்டாவி கெட்டது என இஸ்லாம் கூறுகிறது. சில சமயம் இஸ்லாமை அறிவால் பார்க்காதே நம்பிக்கையாய் பார்…. இஸ்லாம் தித்திக்கும்!”
உம்மி அபிஹா தும்மினாள். தும்மலுக்கு பின் ‘அல்ஹம்துல்லாஹ்’ என்றாள். மகள் ஆயிஷா ரின்ஷா ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறினாள். அதற்கு உம்மு ‘யஹ்தீகுமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலகும்’ மறுமொழி கூறினாள்.
மலக்குகள் உற்சாகமாக தும்மினர்.