ஷெகனாஸ் கார்டன்.
ஏழாவது தெருவில் அப்துல்சுபானின் குடும்பம் இரண்டரை சென்ட் பரப்பளவில் வீடு கட்டிக் குடியிருந்தது.
தரைத்தளத்தில் இரட்டைப் படுக்கையறைகளுடன் கூடிய ஒரு போர்ஷன்.
முதல்தளத்தில் இரட்டைப் படுக்கையறைகளுடன் கூடிய இன்னொரு போர்ஷன்.
இரண்டாவது தளத்தில் ஒரு போர்ஷனைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் சுபான்.
சுபானுக்கு வயது 52. ஐம்பது கிலோவில் செய்யப்பட்ட கெச்சலான திரேகம். முகவாயில் மட்டும் நீண்டிருக்கும் தாடி. பிறந்த ஊர் காங்கேயம். கேரளாவில் பெண் எடுத்து மலையாள மாப்பிள்ளையாகிப் போனார். உருது முஸ்லிம். அவரது தமிழ் உச்சரிப்பு சற்றே வித்தியாசமாக இருக்கும். அதிகம் படிக்காதவர். பிறருக்கு உதவிகள் செய்து அங்கீகாரம் பெற விரும்புபவர். மனைவி மீது காதலாகி கசிந்துருகுபவர். ஜோடியாக இருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கோவையிலிருந்து பாலக்காடு பயணித்து காலை டிபன் சாப்பிடுவர்.
இரு மகன்கள். மூத்தவன் லண்டனில் மருத்துவம் படிக்கிறான். இளையவன் ப்ளஸ் டூ படிக்கிறான்.
சுபான் ஐவேளை தொழுகையாளி.
ஷெகனாஸ் கார்டனில் வீடு கட்டிக் குடியிருப்பதற்கு முன் ஒப்பணக்கார வீதியில் குடியிருந்தார்.
ஷெகனாஸ் கார்டனின் சுற்றுப்புறத்தில் ஏழெட்டுப் பள்ளிவாசல்கள் இருந்தன.
தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி, ஜாக் பள்ளி, சுன்னத் ஜமாஅத் பள்ளி இப்படி பல பிரிவுகளில் பல பள்ளிவாசல்கள்.
ஒரு பச்சைக்கிளி பல மரங்களுக்குப் பறந்து சென்று இளைப்பாறுவது போல சுபான் எல்லாப் பள்ளிவாசல்களிலும் போய் தொழுவார்.
பள்ளிவாசல் இமாம், மோதினார் மற்றும் நிர்வாகிகளுடன் நல்லுறவு பேணுவார். தொழுகையாளிகளுடன் நட்புறவு பாராட்டுவார்.
- வழக்கம் போல இரண்டாவது தளத்தின் கொத்தனார் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் சுபான்.
அவரது கைபேசி சிணுங்கியது.
லண்டனில் படிக்கும் மகன் அழைக்கிறான்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!” படிப்பைப் பற்றியும், மகனின் புது நண்பர்கள் பற்றியும் விடுதி உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் பற்றியும் விசாரித்தார்.
பின் “மஞ்சூ!” என உரக்கக் குரல் கொடுத்தார்.
மனைவி ஓடி வந்தார்.
மனைவியிடம் கைபேசியைக் கொடுத்தார். அம்மாவும் மகனும் அளவளாவிக் கொண்டனர்.
மகன் பேசி முடிக்க, மீண்டும் கைபேசி அழைத்தது. மனைவி கைபேசியைக் கணவரிடம் கொடுத்து “யாரோ கூப்பிடுராங்க பாருங்க!”
கைபேசியை வாங்கினார்.
ரோஸ் கார்டன் கௌஸர் பள்ளி முத்தவல்லிதான் அழைக்கிறார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!”
“வஅலைக்கும் ஸலாம் முத்தவல்லி!”
“நல்லாயிருக்கீங்களா?”
“நல்லாயிருக்கேன் நீங்க நல்லாயிருக்கீங்களா?”
“அல்லாஹ்வின் கருணையால் நலம்!”
“என்ன விஷயம் முத்தவல்லி?”
“பாய்! நம்ம பள்ளி 100 பேர் மட்டுமே தொழக்கூடிய சிறுபள்ளி. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பள்ளியை டெவலப் பண்ணி வருகிறோம்”
“சரி!”
“நம்ம பள்ளியில் மோதினார் ஒரு அஸ்ஸாம்காரர். சின்ன வயது. அவரின் பெயர் உஸ்மான். அவருக்குச் சொந்த ஊரில் கல்யாணம். ஒரு மாத விடுமுறையில் அஸ்ஸாம் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்!”
“சரி!”
“தற்சமயம் பள்ளியில் பாங்கு சொல்ல ஆள் இல்லை. பாங்கு சொல்லத் தெரிந்த யாரையாவது எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா? தற்காலிகமா ஒரு மாசத்துக்கு மட்டும். லுஹரும் அஸரும் மட்டும் பாங்கு சொன்னால் போதும். மீதி மூன்று நேரத் தொழுகைகளுக்கான பாங்குகளை சொல்ல வேறு நபர்கள் பார்த்து விட்டேன்!”
அப்துல் சுபான் பாய் மனதிற்குள் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன. மானசீகமாகத்தானே பாங்கு சொல்வது போல கற்பனித்து குதூகலித்தார் சுபான்.
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நானே பாங்கு சொல்றேன் முத்தவல்லி!”
“குறைந்தபட்சம் உங்க பாங்கை ஆயிரம் பேர் கேட்பார்கள். கோபித்துக் கொள்ளக்கூடாது. சரியாக பாங்கு சொல்வீர்களா?”
“வீட்டில் நான்கைந்து ரிகர்சல்கள் எடுத்துக் கொண்டு வந்து அசத்தி விடுகிறேன்!”
“நீங்கள் பாங்கு சொல்வதற்கு ஊதியம் எதுவும் கிடையாது பாய்!”
“நான் கேட்டேனா? இறைப்பணிக்கு எதற்கு ஊதியம்? நான் ரெடி… இன்றைக்கே பாங்கு சொல்ல ஆரம்பிக்கவா?”
“இன்றைய லுஹரிலிருந்து பாங்கு சொல்வதை ஆரம்பிங்க பாய்!’”
“சரி!’”
“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!’”
தொடர்பு அறுந்தது.
மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அரேபிய நடனம் டப்கேயும் கலீகியும் ஆட ஆரம்பித்தார் சுபான்.
“கைய விடுங்க யாராவது பாக்கப் போராங்க. என்ன விஷயம் இந்த சந்தோஷம்?”
“ரோஸ் கார்டன் பள்ளில அதான் சொல்லப் போறேன்!’”
“ஐந்து வேளை தொழுகைகளுக்கும் ஐந்து வெவ்வேறு பாங்குகள்தானே?”
“ஐந்து தொழுகைகளுக்கான அதான்கள் ஐந்து தனித்துவமான பாணிகளில் அல்லது மக்காம்களில் ஓதப்படுகிறது.
பஜ்ர் எனப்படும் அதிகாலை பாங்கு சூரிய உதயத்திற்கு முன்பாக இதமாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும் வகையில் உயர்ந்த சுருதியில் ஓதப்படும் ஒரு விழிப்பூட்டும் மெல்லிசை. இதனை ‘ஸபா’ என்பர்.
லுஹர் எனப்படும் நண்பகல் பாங்கு வேலைநாளின் உச்சகட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக ஒரு கம்பீரமான மற்றும் பிரம்மாண்டமான தாளத்தைப் பின்பற்றுகிறது. இதனை ‘ஓக்லே’ என்பர்.
அஸர் எனப்படும் பிற்பகல் பாங்கு மந்தநிலையைப் போக்க ஆற்றல் மிக்க மற்றும் எழுச்சியூட்டும் மெல்லிசை பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘இகிந்தி’ என்பர்.
மஹ்ரிப் எனப்படும் சூரிய அஸ்தமன பாங்கு பகலிருந்து அந்திக்கு மாறும் நிலையை பிரதிபலிக்கும் வகையில் சற்றே மெதுவான மென்மையான பாணியில் பாடப்படுகிறது. இதனை ‘அசஷம்’ என்பர்.
இஷா எனப்படும் இரவு பாங்கு கம்பீரமான ஆழ்ந்த மற்றும் சிந்தனைக்குரிய தொனியில் ஒலித்து நாளின் முடிவை உணர்த்தி விசுவாசிகளை உறக்கத்திற்கு தயார்படுத்துகிறது. இதனை ‘யத்ஸீ’ என்பர்…”
சுமார் ஒரு மணி நேரம் கிப்லா திசை நோக்கி பாங்கு சொல்லி ரிகர்சல் செய்தார் சுபான்.
பள்ளியின் ஒலிபெருக்கியின் முன் நின்று லுஹருக்கான பாங்கைக் கூறினார். இரு காது துவாரங்களையும் இரு பெருவிரல்களால் அழுந்த மூடிக் கொண்டார்.
“அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். (முகத்தை வலப்பக்கம் திருப்பி) தொழுகைக்கு வாருங்கள் தொழுகைக்கு வாருங்கள் (முகத்தை இடப்பக்கம் திருப்பி) வெற்றிக்கு வாருங்கள் வெற்றிக்கு வாருங்கள். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை!”
அதானுக்கு பிறகு பாங்கு துஆ ஓதினார் சுபான். மஹல்லா மக்கள் சுபானின் குரல் இனிமையில் மயங்கிப் போயினர்.
தொழுகை முடிந்ததும் நூற்றுக்கணக்கான தொழுகையாளிகள் முத்தவல்லியைச் சூழ்ந்து கொண்டனர். “பாங்கு சொல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க முத்தவல்லி!”
கனத்த யோசனைக்கு பிறகு முத்தவல்லி தலையாட்டினார்.
பாங்கு சொல்ல விரும்பும் மஹல்லாவாசிகளின் பெயர்களைச் சுருட்டிக் கண்ணாடிப் பாட்டிலில் போட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்ந்தெடுத்து பாங்கு சொல்ல அனுமதித்தார் முத்தல்லி.
-அஸ்ஸாம் மோதினார் பணிக்குத் திரும்பிய பிறகும் திருவுளசீட்டுக் குலுக்கல் முறையில் பாங்கு தொடர்கிறது.
நபித்தோழர் ஹழ்ரத் பிலால் (ரலி) அவர்கள் அரைக்கண் மூடி நூற்றுக்கணக்கான பாங்குகளை ரசித்தார்.