வானம் அல்லாத வானம்.
சூரியன் இல்லை, சந்திரன் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை. ஆனால் இறைவனின் சிம்மாசனமான அர்ஷின் வெளிச்சம் சுவனம் முழுக்க சீராய் பரவியது. அதிக வெப்பமும் அதிக குளிர்ச்சியும் இல்லாத அந்திமாலை வெளிச்சம்.
தூரத்தில் மாடமாளிகை, கூட கோபுர கோபுரங்களுடன் சொர்க்கம் மிதந்து கொண்டிருந்தது.
வெள்ளி, பொன், மரகதம், சன்னமுத்து, ஆணிமுத்து, மாணிக்கம் மற்றும் ஒளியாலான சொர்க்கத்திற்கு ஏழு சுவர்களும் எட்டு வாசல்களும் இருந்தன. சொர்க்கத்தில் 100 அந்தஸ்துகள். ஒவ்வொரு அந்தஸ்துக்கும் இடையில் 500 வருட பிரயாண தூரம். அகலம் ஏழு வானங்கள். ஏழு பூமிகள்.
எட்டு சொர்க்கங்களின் பெயர்களாவன;
நூருல் ஜவால், தாருஸ்ஸலாம், ஜன்னத்துல் மஃவா, ஜன்னத்துல் குல்து, ஜன்னத்துல் நகீம், ஜன்னத்துல் பிர்தௌஸ், ஜன்னத்துல் அதன், தாருல் கராம்
சொர்க்கத்தின் தரைப்பகுதி கற்பூரத்தால் மெழுகப்பட்டிருந்தது. சொர்க்கத்தின் மணல் குங்குமம் கலந்த கஸ்தூரியால் பொடிந்திருந்தது.
சொக்கவாசிகளுக்கு 70 அழகிய மானிடப் பெண்டிரும் ,30 ஹுருல்ஈன்களும் சொந்தமாக்கப்பட்டிருந்தனர். தினம் தினம் புதிய பெண்களும் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு சொர்க்கவாசியின் மாளிகையிலும் 70 அறைகள் இருந்தன. அழகிய பெண்கள் தவிர, 70 ஆண் பணியாளர்களும், 70 பெண் பணியாளர்களும் சொர்க்கவாசிக்குச் சேவகம் செய்யக் காத்திருந்தனர்.
மாளிகையில் 70 வகை பானங்களும் 70 வகை உணவுகளும் சொர்க்கவாசிகளுக்காக காத்துக் கிடந்தன.
சொர்க்கவாசிக்கு திரை, மூப்பு, மலம், சிறுநீர், நித்திரை, மயக்கம், மறதி, வெறுப்பு, அலுப்பு, அச்சம், கவலை, பொறாமை மற்றும் நோய் கிடையாது.
சொர்க்கவாசிக்கு பசி கிடையாது. ஆனாலும் உண்ணலாம், பருகலாம். உண்டது பருகியது செரிமானமாகி நறுமணக் காற்றாய் வெளிப்படும்.
ஆண்களுக்கு இந்திரியம் வெளிப்படாது. ஆனால் புணர்ச்சி மனப்பிரியப்படி. புணரும் ஆண்கள் விரும்பினால் குழந்தைகள் உருவாகி உடனே பிறக்கும்.
சொர்க்கத்தின் மாடமாளிகையின் ஜன்னல் திறந்திருந்தால் அது பகல். மூடியிருந்தால் அது இரவு.
சமமான சீதோஷ்ண நிலை.
சொர்க்கத்தில் நாழிகைக்குறிப்பு, நாட்குறிப்பு, வாரக்குறிப்பு, மாதக் குறிப்பு மற்றும் வருடக்குறிப்பு உண்டு.
சொர்க்கவாசிகள் அனைவருக்கும் பொதுவான மொழி அரபு மொழி.
சொர்க்கவாசிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அழகிய முகமன் கூறிக் கொள்ளலாம்
குர்ஆன் சொர்க்கத்தில் தேவைப்படாது.
தொழுகை அவசியமில்லை.
சொர்க்கவாசிகள் அவரவர் தந்தை பெயருடன் இணைத்துக் கூப்பிடப்படுகிறார்.
சொர்க்கவாசிகள் இறைவனையும் நபிமார்களையும் விரும்பிய போது சந்திக்க முடியும்.
மலக்குகளுக்கு வழக்கமான இறைப்பணி. மலக்குகள் சொர்க்கவாசிகளுடன் பேச விரும்பினால் சொர்க்கவாசிகளின் அனுமதி பெற்றுப் பேசலாம்.
சொர்க்கவாசிகள் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு வாகனத்திலும் போகலாம், பறந்தும் போகலாம்.
சொர்க்கத்தில் ஏராளனமான நதிகள் உண்டு.
* நஹற் ரஹுமத்
* கௌதர் (ஆழம் 70000 காதம்)
* நஹருல் காபூர் (கற்பூர நதி)
* ரம்யான் * கஹ்ரு தஸ்னீம்
* ஸல்ஸபீல்.
தவிர, தேன் மது ஓடும் நதிகள் உண்டு.
தண்ணீர் கடல், தேன் கடல், பால் கடல் ஹவ்லு தடாகத்தில் சங்கமிக்கும்.
இதைத் தவிர ஆகாய நதிகளும் உண்டு.
சொர்க்கத்தில் மரங்கள் தலைகீழாக இருக்கும். பொன் வெள்ளி மரங்கள். கனி பறித்தால் புதுக்கனி உருவாகும். ஒவ்வொரு கனியிலும் ஆயிரம் கனிகளின் சுவைகள்.
மரங்களின் பெயர்களாவன-
சித்ரத்துல் முக்கஹா, ஸஜ்ரத்து குல்து
வஜரத்துத் தூபா எட்டு சொர்க்கங்களிலும் குடைவிரித்திருக்கும். அர்ஷின் கால் வரை பரவி இருக்கும்.
சித்ரத்துல் முன்தஹா - இலந்தை மரம்.
சொர்க்கத்தில் குதிரை, மாடு, ஆடு, மான், மரை மற்றும் முயல் உண்டு. சொர்க்கம் முழுமையும் இசையும் பாடல்களும் வியாபித்து நிற்கும். பறவைகள் பாடும். ஹுருல்ஈன்கள் பாடுவர். மலக்குகள் பாடுவர். நபி தாவூது பாடுவார். குர்ஆன் ஆயத்துகளும் ஸபூர் வேதமும் பாடு பொருள்.
சொர்க்கத்து ஹுருல்ஈன் பெண்கள் பாதம் முதல் முழங்கால் வரை குங்குமத்தாலும் மார்பு வரை கஸ்தூரியாலும் கழுத்து வரை அம்பராலும் உச்சிவரை கற்பூரத்தாலும் ஆனவர்கள்.
அவர்களிடம் முத்தின் வெண்மை, மரகதத்தின் பசுமை, மாணிக்கத்தின் சிவப்பு மற்றும் புஷ்பராகத்தின் மஞ்சள் குடியிருக்கும்.
அவர்களின் வாய் உமிழ்நீர் கடலில் விழுந்தால் கடல் நீர் முழுமையும் அமிர்தமாகும். ஹுருல்ஈன் பெண்களின் மார்பில் அவர்களது கணவன் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
சொர்க்கத்தின் ஒரு மாளிகையில் கணவர் ஷபியுல்லா மனைவி ஜெஸிரா மகள் பர்ஹான் நவாஸ் மருமகள் நைஸா கதீஜா பேரன்கள் அஸ்ரப் மற்றும் கரீமுல் ஹக் இருந்தனர்.
எல்லோருக்கும் வயது 33.
“அத்தா ஒரு சந்தேகம்!”
“என்ன?”
“சொக்கத்தில் நாம் எத்தனை வருடங்கள் இருப்போம்?”
“சொர்க்கம் ஒரு முடிவற்ற நிரந்தரம் மகனே!”
“மீண்டும் ஒரு பூமி உருவாக்கப்பட்டு மனிதர்கள் நன்மை தீமை செய்ய அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கும் ஒரு மறுமை நாள் வைத்து அவர்களுக்கு சொர்க்கம், நரகம் பரிசளிக்கப்படுமா?”
“இல்லை!”
“நமக்கு முன்பின் சந்ததியினரில் சொர்க்கவாசிகளை நேரில் போய்ச் சந்தித்து வருவோமா?”
“வரும் திங்கட்கிழமை செல்வோம் மகனே!”
“இன்று வெள்ளிக்கிழமை சந்தைக்குச் செல்வோமா?”
“செல்வோம். சந்தை கோலாகலமாக இருக்கும். சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை. ஆடல் பாடல் கொண்டாட்டம் குதூகலம் அங்கு நிறைந்திருக்கும்!”
“அங்கு பொருள் வாங்கப் பணம் தேவையா?”
“பூமியில் நாம் செய்த நன்மைகளே பணம். நன்மைதான் சுவனத்து சந்தையில் பண்டமாற்று!”
ஒட்டுமொத்தக் குடும்பமும் சந்தைக்கு பறந்தது.
90 அடி உயர ஆதம் நபி நின்றிருந்தார். ஈஸா, யூசுப், மூஸா, ஹாரூன் நபிகள் ஒருவரின் தோளில் ஒருவர் கைபோட்டபடி கோரஸாய் ஒரு பாடல் பாடினர்.
சந்தையின் பிரமாண்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கோடிக்கணக்கான சொர்க்கவாசிகள் வந்து போன வண்ணம் இருந்தனர்.
சொர்க்கவாசிகள் வாங்கி வந்த பொருளை எடுத்துச் செல்ல மலக்குகள் உதவினர். சில சொர்க்கவாசிகள் விரும்பிய முகத்தை வாங்கி அணிந்து கொண்டனர்.
மீனின் ஈரலை சுவைத்தபடி நின்றிருந்தான் ஷபியுல்லா.
சந்தையின் ஒரு கடைக்குள் ஷபியுல்லாவின் குடும்பம் பிரவேசித்தது.
“என்ன வேண்டும் உங்களுக்கு?” கடைக்காரர் கேட்டார்.
பேரன் அஸ்ரப் குறும்பு புன்னகை வெடித்தான்.
“100 கிராம் எலிப் புழுக்கை மிட்டாய்!”
அவ்வளவுதான் சொர்க்கத்தின் ஒட்டுமொத்தச் சந்தையும் அல்லோலகல்லோலப்பட்டது.
சொர்க்கவாசிகளும் நபிமார்களும் மலக்குமார்களும் கூடி விவாதித்தனர்.
கடைசியில் விஷயம் இறைவனுக்குப் போயிற்று. “அஸ்ரப் கேட்டது சிறுசிறு சீரக மிட்டாய்களை!”
சீரகமிட்டாய் அஸ்ரப்புக்கு வழங்கப்பட்டது.
நபிகள் நாயகம் ஒரு கொத்து சீரக மிட்டாய்களை வாய்க்குள் போட்டு மென்றார்.
“ஆஹா! எல்லாப்புகழும் இறைவனுக்கே!”