மனைவி கையளித்த ஓட்ஸ் கஞ்சியைக் குடித்தார் ரிபாத் லத்தீப். வயது 67. திராவிட நிறம். சால்ட் அண்ட் பெப்பர் தலைக்கேசம். இடுங்கிய கண்கள். பாலஸ்தீன மூக்கு. மீசை இல்லாத மேலுதடு. முகத்தில் ஒய் வடிவில் வியாபித்திருக்கும் தாடி. முழங்காலுக்கும் கீழே நீண்ட ஜிப்பா பைஜாமா. தலையில் நிரந்தரமாய் ஒரு துணித் தொப்பி.
ரிபாத் லத்தீப் அரசு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ரிபாத் லத்தீப் -சாஹிபா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். மூத்தது மகள். கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் கனடாவில் இருக்கிறாள்.
இளையவன் மகன். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசிக்கிறான்.
கோவை உக்கடத்தில் இரு மனைகள் வாங்கி நான்கு வீடுகளாய் கட்டியிருந்தான் மகன் இர்பான் இஷாக். ஒரு வீட்டில் பெற்றோரை இருக்கச் சொல்லிவிட்டு, மீதி மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தான். வாடகையை வசூல் பண்ணி மகனின் போஸ்டல் வங்கிக் கணக்கில் மாதாமாதம் போடச் சொல்லி இருந்தான் மகன்.
ரிபாத் லத்தீப்-சாஹிபா தம்பதியினரிடம் ஒரு பைசா சேமிப்பு இல்லை. பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பித் திருமணம் செய்துவித்து பேரக்குழந்தைகளை வளர்க்கும் விதமாய் தனது அனைத்து சம்பாத்தியத்தையும் செலவு செய்தார் லத்தீப். கணவர் குழந்தைகளுக்குச் செலவு செய்வதை முழு மனதுடன் அனுமதித்தாள் சாஹிபா.
இப்போது பிள்ளைகளுக்கு இறக்கை முளைத்து விட்டன.
அவர்கள் கைநிறையச் சம்பாதிக்கிறார்கள்.
பிள்ளைகளுக்குக் கல்வியும் பதவியும் அதிகாரமும் கொடுத்தது வீண் போகவில்லை. மகள் 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவாள். மகன் வருடாவருடம் இந்தியா வருவான்.
ஒரு வாரம் பத்து நாள் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சல். அந்தக் கொஞ்சல். ரிபாத் லத்தீப்- சாஹிபா தம்பதியினரின் 40 வருட உழைப்பை மகிமைப்படுத்தும்.
“நீ ஓட்ஸ் குடிச்சியா சாஹிபா?”
“குடிச்சிட்டேன். ஓட்ஸ் இன்னும் இரண்டு நாளைக்கு தான் வரும்!”
தலையாட்டினார் ரிபாத் லத்தீப்.
“சாப்பாட்டு அரிசி தீரப் போகுதுங்க!”
“இம்!”
“வீட்ல சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறி எதுவும் இல்லை. கேஸ் கூட தீரப் போகுது பதியனும்!”
“இம்!”
“எல்லாத்தையும் விட முக்கியமா நம்ம பிபி மற்றும் சுகர் மாத்திரைகள் தீரப் போகுது. இன்னையோட நோ ஸ்டாக்!”
“கைல எவ்வளவு ரூபா வச்சிருக்க!”
தனது மணிபர்ஸைக் கொட்டினாள் சாஹிபா. ஒரு பத்து ரூபாய் நோட்டு. ஒரு ஐந்து ரூபாய் நாணயம். இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் ஹேர்பின், ஊக்குகள்.
“உன் கணக்கில எவ்வளவு பணமிருக்கு பாரு!”
கைபேசியைத் திறந்து சோதித்தாள். ரூபாய் 56 இருந்தது.
“என் கணக்கில் எவ்வளவு பணமிருக்கு பாரு!”
கணவரின் கைபேசியைத் திறந்து சோதித்தாள். ரூபாய்108 இருந்தது.
“சாஹிபா! சோறு தண்ணி இல்லாமக் கூட இருந்திரலாம். ஆனா மருந்து மாத்திரை இல்லாம நாம ஒருவேளை இருக்க முடியாது!”
“ஆமாங்க ஒருவேளை மாத்திரை ஸ்கிப் பண்ணினாலும் இதயம் படபடக்கும் கைகால்கள் வெலவெலக்கும் தலை தட்டாமாலை சுற்றும்!”
“என்ன பண்ணலாம்?”
பக்கத்து மாடி போர்ஷனின் வாடகைதாரர் வந்து அழைப்பு மணியை அமுக்கினார். கதவைத் திறந்து விட்டார் லத்தீப்.
அழகிய முகமன் பரிமாற்றம்.
பதினெட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி லத்தீப்பிடம் நீட்டினார் வாடகைதாரர். “இந்த மாச வாடகை பாய்!”
“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!”
“வரேன் பாய்!”
“வீட்ல வாடகைக்கு இருக்கிறதுல ஏதாவது ஆவலாதி இருக்கா?”
“இல்லை… புருஷன் பொண்டாட்டி நீங்க ரெண்டு பேரும்தான் மாறிமாறி வாடகை வீட்டுப் பிரச்சினைகளை ஹாண்டில் பண்றீங்களே… யூ ஆர் கிரேட்… அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்யட்டும்!’
“மகிழ்ச்சி!”
வாடகைதாரர் கிளம்பிப் போனார்.
மனைவி கையில் வாடகைப்பணத்தை கொடுத்தார் லத்தீப்.
“சாஹிபா! நம்ம இரண்டு மாத மருந்து மாத்திரைச் செலவுக்கு எவ்வளவு தேவை?”
“ஆறாயிரத்து அய்நூறு!”
“மீதி இரண்டாயிரத்து எரநூறு ரூபாய்க்கு அரிசி, பருப்பு, கேஸ் எல்லாம் வாங்கிடலாம்!”
பதைபதைத்தாள் சாஹிபா.
“என்ன காரியம் பண்றீங்க? இது மகன் வீட்டு வாடகைப் பணம், இதைச் செலவு பண்றது நம்ம சொந்த வீட்ல திருடுற மாதிரி!”
“திருடுறதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே சாஹிபா!”
“இதை நீங்க புதுசா செய்யல. கடந்த எட்டு மாதங்களாக மகன் வீட்டு வாடகைப் பணத்ல கை வைக்குறீங்க. அந்த வாடகைப் பணத்தையும் சேத்தா இதுவரைக்கும் நீங்க 58000 ரூபாய் கையாடல் பண்ணி இருக்கீங்க!”
“திருடுதல் கையாடல் என் வாழ்க்கையில் கிடையவே கிடையாது!”
“மகன் நம்பிக்கையா மூணு வீட்டு வாடகையை வசூலிக்கறப் பொறுப்பை நம்மகிட்ட ஒப்படைச்சிருக்கான். நாளைக்கே திடுதிடுப்னு இந்தியா வந்து இறங்கிக் கணக்கைப் பார்த்தான்னா நம்பள காரித் துப்பிருவான்!”
“வார்த்தைகளை அளந்து பேசு. எட்டு மாசத்திற்கு முன்னாடி வரைக்கும் பென்ஷன் வாங்கிட்டு இருந்தேன். நிதிநிலைச் சிக்கல் காரணமா பென்ஷன் தர்றதை முழுசும் நிப்பாட்டிட்டாங்க. நாங்க ஓய்வூதியர்கள் 631 பேர் தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கோம்… பேச்சு வார்த்தை போய்க்கிட்டு இருக்கு. மீண்டும் பென்ஷன் வழங்குப்படும்னு உறுதியளிச்சிருக்காங்க. எட்டு மாத நிலுவை பென்ஷனும் கிடைக்க வாய்ப்பிருக்கு. பணம் வந்த மறுநொடி பணத்தை மகனின் போஸ்டல் கணக்கில் போட்ருவோம்!”
“உங்களுக்கு பென்ஷன் மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. உங்க சக ஓய்வூதியர்களே அவநம்பிக்கையா பேசுராங்க!”
“வீட்ல இருந்துக்கிட்டு யூகத்தகவல் பேசாதே!”
“இந்த ஒம்பதாயிரம் பணத்தை மகனின் போஸ்டல் கணக்கில் போட்டுட்டு வாங்க. மருந்து மாத்திரை இல்லாம நாம செத்தாலும் சரி… மூணு நேரம் சாப்பிடுறதை விட்டுட்டு ஒரு நேரம் சாப்பிடுவோம்… கேஸ் அடுப்பு வேணாம் விறகடுப்பு யூஸ் பண்ணுவோம். உங்க வண்டியை யூஸ் பண்றதை விட்டுட்டு எங்கயும் நடந்து போங்க… நீங்க ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போங்க. நான் ஏதாவது வீட்டு வேலைக்குப் போறேன்!”
“நீ சொன்னதெல்லாம் செய்யலாம். இப்ப மருந்துக்கு போனில் ஆர்டர் பண்ணு!”
“நான் ஆர்டர் பண்ண மாட்டேன். நீங்க பண்ணிக்கங்க”
டெலிவரி பாய் ஆர்டர் பண்ணிய மருந்தை கொண்டு வந்து கொடுத்துப் பணத்தை பெற்றான். அரிசி, எண்ணெய், மளிகை சாமான் வாங்கி வந்தார் ரிபாத் லத்தீப்.
வீட்டு வாசலில் ஒரு வாடகை டாக்ஸி வந்து நின்றது.
அதிலிருந்து மகன் மருமகள் பேரக்குழந்தைகள் வந்திறங்கினர். பேரக்குழந்தைகளை கட்டிக் கொண்டார் ரிபாத் லத்தீப்.
“என்னப்பா திடீர்னு இந்தியா விசிட்?”
“என்னுடன் பணிபுரிபவரின் தங்கைக்கு ஊட்டியில் திருமணம். அட்டன்ட் பண்ண வந்தோம்!” மதிய உணவுக்குப் பிறகு வீட்டு வாடகைக் கணக்கு வழக்கை பார்த்தான் இர்பான் இஷாக்.
அம்மா முந்திக் கொண்டாள். “நீ கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன். உன் வீட்டு வாடகைப் பணத்தில் அம்பத்தி எட்டாயிரம் ரூபாயை அத்தா எடுத்திருக்கிறார்… எங்களுக்குப் பென்ஷன் வரலப்பா! அத்தா வாட்ச்மேன் வேலைக்கு போய் எடுத்த பணத்தை திருப்பித் தந்திடுவார்!”
இரு கைகளை கட்டிக்கொண்டு தலைகுனிந்து நிற்கும் தந்தையை வெறித்தான் இஷாக். “நீயும் உனது செல்வமும் உனது தந்தைக்கே உரியவை என்கிறது இப்னு மாஜா அஹ்மத். ‘மகனின் பணத்தை தந்தை தேவைக்கு எடுக்கலாம். தந்தை தன் வறுமையினை போக்க மகனின் பணத்தை எடுக்கலாம். தந்தை எடுக்கும் பணம் மகனின் குடும்பச் செலவுகளை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்’ - என்கிறது இஸ்லாம். நான் என்ன அவ்வளவு நன்றி கெட்டவனா? நீங்க எதுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போகனும்? வாடகைப் பணத்ல மாசம் பத்தாயிரம் எடுத்துக்கங்க. பென்ஷன் மீண்டும் உங்களுக்கு வந்தாலும் வராட்டியும் மாசம் பத்தாயிரம் எடுத்துக்கலாம். கூடுதல் தேவை இருந்தாலும் எடுத்துக்கங்க… உங்க காலடில தான் என் சொர்க்கம் இருக்கிறது!”
பாசமாய் நட்ட மரத்திலிருந்து பழம் பழுத்தது. லத்தீப்பும் சாஹிபாவும் பழங்களை பறித்துப் புசித்தனர்.