அறச்செல்வி தனது திறன்பேசியைக் கையில் எடுத்தாள். முகநூல் பக்கத்தைத் திறந்தாள். ஒவ்வொரு பதிவாய்ப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
பரிமேலழகன் பரி என்பவர் பதிவில்,
ஐந்து அம்ச இம்சை
1. கண்ணீர் என்பது இமையமழை.
2. ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து பயன்படுத்தப்படும் டூத்பிரஷே ஆதிபிரஷ் எனப்படும்.
3. மென்று விழுங்க முடியாமல் துப்பி விடுபவருக்கும் உணவுக்கும் இடையே உள்ள உறவே துப்புறவு எனப்படும்.
4.சோற்றுக்கும் மேக்கப் போட்டால்தான் மதிப்பு கூடும் என்பதற்கு உதாரணமே பிரியாணி.
5. நக்கல் செய்வது விரும்பத்தகாத குணம்தான். ஆனால் கோன் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது நக்கல் செய்தே ஆக வேண்டும்.
படித்துவிட்டு அறச்செல்வி சிரித்தாள்.
‘சூப்பர்’ என பின்னூட்டம் இட்டாள். அடுத்த முகநூல் பதிவுக்கு போனாள் அதில்-
பெரியகுளம் வடக்கு பள்ளியிலிருந்து ஒரு வபாத் அறிவிப்பு.
ஜெய்புனிஸா நகரைச் சேர்ந்த ஹாஜியார். எஸ். என் கலந்தரின் மகனும் பாத்திரக்கடை அபூபக்கரின் தந்தையுமான ஜனாப் கே. யாசின் இன்று அதிகாலை 3.30மணிக்கு வபாத்தாகி விட்டார். அவரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப்பின் வடக்குப்பள்ளி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தப் பதிவுக்கு மட்டும் 412 பின்னூட்டங்கள்.
பின்னூட்டம் இட்ட பலருக்கு இறந்து போன யாசினை கட்டாயம் தெரிந்திருக்காது. முகநூல் பரிட்சயம் கூட இருந்திருக்காது. ஆனாலும், பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள்.
‘இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்!’
அறச்செல்விக்கு அந்த வாக்கியத்தின் அர்த்தம் தெரியவில்லை. ஆனால், யாசினின் மரணத்துக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொண்டாள். ஆனாலும் அவளுக்கு உலக ஆச்சரியம்… நானூத்தி சில்லரை மனிதர்கள் வெவ்வேறு விதமாய் வருத்தம் தெரிவிக்காமல் ஒரே மாதிரியா வருத்தம் தெரிவிப்பார்கள்? முஸ்லிம் மக்களின் ஒற்றுமை எனக்குச் சற்றேப் பொறாமையூட்டுகிறது. இந்த ‘இன்னாலில்லாஹி’ வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்?
முகநூல் தோழி தபஸ்ஸும் ஆசியாவின் ஞாபகம் வந்தது. அவளது பத்து இலக்க எண்ணை அமுக்கினாள் அறச்செல்வி.
எதிர்முனை உயிர்த்தது. “ஹாய் அறச்செல்வி!”
“ஹாய்ஹாய் ஆசியா...”
“என்ன அதிசயமா இன்னைக்குப் போன் பண்ற...?”
“ஒரு தகவல் தெரிஞ்சிக்கத்தான் போன் பண்ணினேன்!”
“சொல்லு...”
“இன்றைக்கு முகநூலை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒரு முஸ்லிம் மரண அறிவிப்பு. அந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாய் அனைவரும் ‘இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்’ போட்டிருந்தார்கள். அதற்கு என்ன அர்த்தம்?”
“அதற்கு ‘இறைவனிடமிருந்து வந்தோம், இறைவனிடமேத் திரும்பிச் செல்கிறோம்’ என அர்த்தம். கூடுதலாய், ‘எல்லாம் வல்ல அல்லாஹ் இறந்தவரின் பிழைகளை மன்னித்து புதைகுழியில் சங்கடங்களை இலேசாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை கொடுத்து அருள் புரிவாயாக ஆமீன்’ எனவும் பொருள்படும். இந்த ‘இன்னாலில்லாஹி’ வாக்கியம் திருக்குர்ஆனில் உள்ள ஒரு வரிதான்!”
“ஓ!”
“இந்துக்களில் ஒரு சக இந்து இறந்துவிட்டால் என்ன சொல்வார்கள்? ‘அவரின் ஆன்மா சாநதியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’, ‘இறைவனடி சேர்ந்தார்’, ‘இறைவனின் ஜோதியோடு கலந்தார்’, ‘வைகுண்ட பதவி அடைந்தார்’, ‘சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார்’, ‘பரமபதம் அடைந்தார்’, ‘முக்தி அடைந்து விட்டார்’, ‘பிறவிக்கடல் நீந்திக் கடந்து விட்டார்’, ‘வீடு பேற்றினை அடைந்து விட்டார்’, எல்லாவற்றுக்கும் மேலாக, சுருக்கமாக ‘ஓம் சாந்தி’ எனவும் கூறுவர்!”
“உண்மைதான்!”
“கிறிஸ்துவர்களில் ஒரு சக கிறிஸ்துவர் இறந்துவிட்டால், ‘கர்த்தருக்குள் அவர் நித்திரை அடைந்து விட்டார்’, ‘நித்திய இளைப்பாறுதலுக்கு சென்றுவிட்டார்’ எனவும் கூறுவர்”
“அப்படியா?”
“புத்த மதத்தினருக்கு மனம், ஆன்மா, சுயத்தில் நம்பிக்கை இல்லை, அதனால் சகபுத்த மதத்தினர் யாராவது இறந்துவிட்டால், ‘நிர்வாணா நிலை’ அடைந்துவிட்டதாகக் கூறுவர்!”
“டெரிபிக்!”
“உங்க ரிக்வேதம் 10.16/19 சொல்வதைப் பார்ப்போம். அக்னி அவனை எரித்துவிடாதே, அவனை எரித்து விடாதே. அவனுடைய உடம்போ அவனுடைய தோலோ சிதறிவிடாதே. எல்லா நெருப்பையும் உடையவரே நீ அவனைப் பக்குவபடுத்தியதும் அவனை பித்ருக்களிடம் அனுப்பு. அக்னியை உடையவனாய் அவனை ஆயத்தபடுத்தி அவனை பித்ருக்களிடம் ஒப்படைத்து விடு. அவனைக் காத்துக் கொண்டிருக்கும் ஜீவனை அடையும் போது, அவன் தெய்வீக சித்தத்துக்கு அடி பணிவான். சூரியன் உன் கண்ணைப் பெறுகிறது. காற்று உன் பிராணனை (சுவாசம்) உனது தகுதியின்படி பூமிக்கோ வானத்திற்குகோச் செல். உனது பங்காக இருந்தால் தண்ணீருக்குப் போ. நீ போய் உன் அங்கத்தினர் அனைவரோடும் செடிகளில் உன் வீட்டை உருவாக்கு!”
“எனக்கு ரிக்வேதம் தெரியாது!”
“என்னால் முடிந்த அளவு பிற மதங்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை எடுத்து என் மனதில் சேமித்து வைத்திருக்கிறேன்!”
‘கிரேட்!”
“இஸ்லாமில் மரணத்தைப் பற்றி சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவர் இறைவனிடம் ‘மரணத்தை தா, இறைவா’ என வேண்டக்கூடாது... தற்கொலை கூடவே கூடாது. இஸ்லாமியர்கள் யாரும் தங்களைத் தாங்களேக் காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. மரணம் நமக்கு எதிரி அல்ல, அதனைக் கண்டு நாம் பயப்படக் கூடாது”
“நல்ல விஷயம்!”
“யூதர்களுக்கு நரகத்தின் மீதும், சொர்க்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. யூதர்கள் நம்பிக்கையின்படி இறப்புக்குப் பின் உயிர்கள் தூய்மைபடுத்தப்படுகின்றன. தூய்மைப்படுத்தப்பட்ட உயிர்கள் ‘ஓலம் ஹா-பா’ ல் பாதுக்கப்படுகின்றன. மீட்பாளர் வரும் நாளில் அனைத்து உயிர்களும் ஒன்று சேருகின்றன. துக்கம் இல்லை, போர் இல்லை, தீமை இல்லை, பூரணமான அமைதி நிலவும்...”
“இந்த விஷயத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை!”
“பொதுவாக ஒரு மனிதர் இறந்து விட்டால் அவர் நமக்கு செய்த தீமைகள் நம் முன் விஸ்வரூபித்து தலைவிரித்து ஆடும். ‘அயோக்கியப்பாவி... தொலைஞ்சிட்டான்டா… அவன் எனக்குச் செய்த கெடுதிகளுக்கு இறைவன் தக்கக் கூலி கொடுத்திட்டான்டா’ எனக் கூத்தாடுவோம். அல்லது ‘அவன்தான் இறந்தான் நான் நூத்தி சில்லரை வருடங்கள் உயிரோடு இருப்பேன்’ என ஆணவத்தால் கொக்கரிப்போம் அல்லது ஒரு மரத்திலிருந்து ஒரு இலை விழுந்ததாக அல்லது பழுத்த பழம் விழுந்ததாகக் கருதி அந்த மரணத்தை இயல்பாகக் கடப்போம். ஆத்திகத்தில் முத்துக் குளித்தவர்கள் அவரவர் ஆன்மிக அனுபவத்துக்கு ஏற்ப இறந்தவர்கள் அடைய வேண்டிய இடத்தை ஆலாபிப்பார்”
“ஆமா!”
“மனிதனின் உடலும் உயிரும் அமானிதம். கொடுத்தவன், எப்போது வேண்டுமானலும் எடுத்துக் கொள்வான். இறந்தவனின் மீது நம் சுயநலம் சார்ந்த தீர்ப்புகளை கொட்டக் கூடாது. இறந்தவனின் பத்துப் பிழைகளை மன்னிக்க இறைவனை வேண்டினால் இறைவனும் அந்தப் பத்துப் பிழை மனிதனை மன்னித்தால் பதினோரு பிழை உள்ள நம்மையும் மன்னிக்காமலா விட்டு விடுவான்? ஒரு சக முஸ்லிம் இறந்து விட்டால் முஸ்லிம் வாயால் உரக்க ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ கூறுவான். எழுதும் நேரத்தில் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ’எழுதுவான். அவனது ஆன்மாவும் இறந்தவனுக்காக, ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ கூறும் இஸ்லாமில் ஒருவர் இறந்து விட்டால் உயிரோடு இருப்பவர் என்ன கூற வேண்டும் என்கிற தெளிவான விதிமுறை இருக்கிறது. அந்த விதிமுறையைப் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் பின்பற்றுவது எளிதான விஷயம்தானே? இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!”
“உங்கள் கட்டுக்கோப்பான மதத்தில் நாத்திகர்கள் இல்லையா?”
“அப்படியும் சில சதவீதம் பேர் இருப்பார்கள். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆற்றில் மீன் மட்டுமா நீந்தும்! சருகுகளும்தானே மிதக்கும்!”
“நல்ல உதாரணம்!”
“சந்தேகம் தீர்ந்ததா, போனை வைக்கவா...?”
“இறுதியாக ஒரு சந்தேகம்!”
“என்ன?”
“அந்த மரண அறிவிப்புக்கு நானென்ன பின்னூட்டம் இட...?”
“ஆழ்ந்த இரங்கல்கள்’ அல்லது ‘என் இதயப்பூர்வமான வருத்தங்கள்’ எனப் போடு. அதுதான் யதார்த்தமாக இருக்கும்!”
“நன்றி”
“யாராவது நமக்கு இரங்கல் செய்தி வெளியிடும் வரை அல்லது ‘இன்னாலில்லாஹி’ கூறும் வரை நாம் நம் சமூகத்துக்குப் பயன்படும் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோமாக...!”