(3)
“உங்க ஆபீஸர் பேசினார். வந்தவுடனே உங்களைப் பேசச் சொன்னார்…”
“வண்டி பஞ்சராயிருக்கு. நல்ல வேளை அவனை விட்டுட்டுத் திரும்புறபோதுதான் பஞ்சர். இல்லைன்னா அவன் ஸ்கூல் போறதும் லேட்டாயிருக்கும்…” என்றவாறே மெதுவாய் வண்டியை உருட்டி வந்து வராண்டாவில் ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வந்ததில் மூச்சிரைத்தது.
“வழியிலே ஏதாச்சும் ஒர்க்சாப்புல விட வேண்டிதானே…?”
“ஏழு மணிக்கு எந்த ஒர்க்சாப் திறந்து வச்சிருக்கான்…? ஒன்பதாகும்… பாஸ்கரன்ட்டத்தான் விடணும்…”
அன்று பஸ்ஸில்தான் ஜங்ஷன் வரை போயாக வேண்டும். அப்படியானால் கால் மணி நேரம் முன்னதாகக் கிளம்ப வேண்டும். வேலை நாள் பார்த்துத்தான் பஞ்சராகிறது. லீவு நாளில் ஆனால் கூடப் பரவாயில்லை. இந்தப் பரபரப்பு இருக்காது.
மனதில் பதிந்த காலைப் பதட்டத்தோடு தொலைபேசி நம்பர்களை அழுத்தினான்.
“ஹலோ…ஏ.இ.இ., இருக்காரா?”
“வணக்கம் நாந்தான் பேசுறேன்…”
“வணக்கம் ஸார்…கூப்பிட்டீங்களாமே?”
“ஆமா கணேசன்…நேத்து கலெக்டர் மீட்டிங் போயிருந்தேனில்லையா… அது சம்பந்தமாகத்தான் சொல்லணும்னு…க்ரியெவின்ஸ் டே பெட்டிஷன் நம்ம கிட்டே எத்தனை பெண்டிங்?”
”மொத்தம் அஞ்சு இருக்கும் ஸார்…”
“அதெல்லாத்துக்கும் ஃபைனல் ரிப்ளை அனுப்பிட்டமா?”
“இல்ல சார்… சைட் இன்ஸ்பெக்சன் முடிச்சு பதில் கொடுக்கச் சொல்லி செக்சன் ஆபீசர்களுக்கு சர்க்குலர் கொடுத்திருக்கோம்…”
“எத்தனை ஐடெம் அந்த மாதிரி?”
“நாலு சார்…”
“அஞ்சாவது…?”
“அது ஒரு டி.ஏ.பில் பிரச்னை சார்…”
“யாருடையது…?”
“நம்ம ஆபீஸ்ல ரெண்டாயிரத்து அஞ்சுல ரிடையர்ட் ஆகியிருக்கார் சார்… ஒரு டிரைவர்… ஜீப் டிரைவர் சார்… அப்போ கொடுத்த பில் சார் அது… அதை இன்னைக்கு வரைக்கும் சாங்ஷன் பண்ணலைன்னு புகார் கொடுத்திருக்காரு…”
“நாமளா சாங்ஷன் பண்ணனும்?”
“உங்க ப்ரிடிசெஸ்ஸார் பண்ணியிருக்கணும் சார்… என்ன பிரச்னையோ, அவுரு போட்டு வச்சிட்டுப் போயிட்டாரு… இப்போ வந்து இவர் நம்ம கிட்டே தொங்குறார் சார்…”
“நாம சாங்ஷன் பண்ணலாமா? எனி ப்ராப்ளம்…?”
“அதெப்படி சார்… ஓவர் ஒன் இயர்… சுப்பீரியரோட ஒப்புதல் வாங்காம செய்ய முடியாது சார்…”
“ரைட் ஓ.கே… இன்னைக்கு அந்த அஞ்சு ஃபைலயும் புட் அப் பண்ணுங்க… ஃபைனலைஸ் பண்ணிடுவோம்… அடுத்த வாரம் கலெக்டர் மீட்டிங் போது நம்ம ஆபீஸ் பென்டிங் எதும் இருக்கக் கூடாது… ஓ.கே…?”
“ஓ.கே… ஸார்…”
“சார் இன்னொரு விஷயம்…”
“என்ன…?”
“இன்றைக்கு ஆபீஸ் வர்றீங்களா, கேம்ப்பா சார்?”
“கேம்ப்தான்... போகணும்… வெள்ளிமலை சைட்டுக்குப் போறேன்… ஏன்?”
“ஆபீஸ் வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்… ரெண்டு மூணு பில் டிரஷரிக்கு அனுப்பணும்… அழகேசன், எஸ்.டி.டி. யோட ஜி. பி. எப். வேறே இருக்கு…”
“அதுக்கென்ன இப்போ அவசரம்? நான் வந்து பார்த்துக்கலாம்…”
“சார், அது அப்படியில்ல… டார்கெட் முடிக்கலைன்னா அதுக்கு தனி நடவடிக்கை. இது அவரோட பர்ஸனல்… நிறுத்தக் கூடாது…”
“நான் இப்ப சைட்டுக்குத்தான் போறேன்… வேலை எந்தளவுக்கு முடிஞ்சிருக்குன்னு பார்த்துக்குறேன்…”
“ஒருத்தரோட பர்ஸனல மட்டும் தயவுசெய்து நிறுத்தாதீங்க…”
“அட்வான்ஸ் போடுறது, பயணப்படி வாங்குறது இதிலெல்லாம் மட்டும் கவனமா இருக்காங்கல்ல… அதுபோல வேலைலயும் இருக்க வேண்டாமா? ட்டியூட்டியையும் சின்சியரா செய்யணுமில்லையா?”
“அது ஏன் டிலே ஆகுதுன்னு கூப்பிட்டு வச்சி ரெவ்யூ பண்ணுங்க ஸார்… அதுக்கா இதை நிறுத்தாதீங்க...”
எதிர் வரிசையில் அமைதி.
“சரி, பார்ப்போம்… முடிஞ்சா வர்றேன்…” லைன் துண்டிக்கப்பட்டது.
வரமாட்டார் என்று தோன்றியது இவனுக்கு. அலுவலருக்கும் பாதிக்காமல், பணியாளருக்கும் பாதிக்காமல் ஒரு விஷயத்தை சுமுகமாக முடிக்க வேண்டியது தன் கடமையாகிறது. ஆனால் விதிமுறைப்படி இன்னின்னவற்றை இப்படியிப்படி செய்துதான் ஆக வேண்டும் என்று எடுத்துச் சொல்லி அவை மறுக்கப்படும் பொழுது? மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. தன்னை நம்பித்தான் அலுவலகத்தை ஒப்படைத்துச் செல்கிறார். அலுவலக நிர்வாகம் அவர் சார்பாகத் தன்னிடம். உயர்அலுவலர்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். கீழுள்ளோரின் தேவைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். அதே சமயம் அலுவலகப் பணியாளர்களும் பாதிக்கப்படாமல் கொண்டு செல்ல வேண்டும்.
எதுவொன்றானாலும் தன்னிடம்தான் வந்து நிற்பார்கள். அவர்களின் தேவைகளைத் தாமதமின்றிப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது தன்னின் கடமையாகிறது. அதில் அலுவலரின் நற்பெயரும் அடங்கியிருக்கிறது. அம்மாதிரித் தாமதமின்றி செய்து கொடுப்பது, தான் பெயர் வாங்கிக் கொள்வதற்கல்ல. அலுவலரின் பெயரைக் காப்பாற்றுவதற்காக. அந்த அலுவலகத்தின் நிர்வாகம் நல்லபடியாக நடக்கிறது என்பதை உயர் அலுவலர்கள் உணர வேண்டும் என்பதற்காக. இப்படியான தன்னின் பொறுப்பு அங்கே மதிக்கப்படாமல் ஒதுக்கப்படுவது போல் உணர நேர்ந்தால்? இப்பொழுது அப்படித்தான் உணரத் தலைப்பட்டான் கணேசன். தன் மேலாளர் பதவிக்கான கவுரவம் பாதிக்கப்படுவதாகவே நினைத்தான்.
“பேசி முடிச்சிட்டீங்களா? ஆபீஸ் வேலைக்கு இப்படி வீட்டு ஃபோனைப் பயன்படுத்தினா பில் எக்கச்சக்கமா ஏறுது… பணம் யாரு குடுக்குறது? நாமதானே கட்டியாகணும்?”
“சரி, விடு… ரொம்பத் தேவைன்னாத்தானே…”
“ஃபோனே வேண்டாம்… எடுத்திடுங்கன்னு சொல்றேன்... அதான் செல் வேறே வச்சிருக்கீங்களே… அதுக்கு ஆகுற செலவு பத்தாதா?” சொல்லியவாறே சுசீலா கொண்டு வந்து வைத்த சாப்பாட்டுக் காரியரை எடுத்துப் பைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஜங்ஷனுக்குப் போகும் நேரடி பஸ் இருக்குமோ, போயிருக்குமோ என்ற சந்தேகத்தில் நடையை எட்டிப் போட்டான். உள்ளூரில் வேலை பார்க்கும் பலரும் வேக வேகமாய்க் கைகளை வீசிக் கொண்டு வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.
தான் உள்ளூரில் இருந்த போது காலையில் ஆறு பத்துக்கு ஸ்கூல் பையனை ஏற்றி அனுப்பிய கையோடு நாலைந்து பேர் சேர்ந்து வாக்கிங் போனதையும், போக, வர சுமார் ஆறு கி.மீ, தூரம் நடந்து திரும்புகையில் சந்தையுள் கூட்டமாய் நுழைந்து புதிதாகக் காய்கறி வாங்கி வந்த நடைமுறையையும் நினைத்துப் பார்த்தான்.
மறுபடியும் தான் உள்ளூர் மாறுதலில் வந்து என்று அந்த வாக்கிங் கோஷ்டியோடு மீண்டும் சேர்ந்து கொள்ளப் போகிறோமோ? என்று நினைத்தபோது ஏக்கப் பெருமூச்சு எழுந்தது.
இப்பொழுதுதான் வெளியூர் போயிருக்கிறோம். அதற்குள் உள்ளுருக்கு எப்பொழுது வருவது என்று நினைத்துப் பார்க்கிறோமே? காலம் காலமாய் குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்களாய் வெளியூரிலேயே மாறுதல் கிடைக்காமல் பணிபுரியும் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமும் கூடவே எழுந்த போது தனது எண்ணம் ரொம்ப அதீதம் என்று தோன்றியது. என்னதான் ஆனாலும் மனிதனுக்குச் சுயநலம் என்பது அவ்வப்போது தோன்றிக் கொண்டேதான் இருக்கும் போலும்… இப்டி தினசரி அடிச்சிப் பிடிச்சி எதுக்கு ஓடணும்… சிவனேன்னு கிடைக்கிற சம்பளம் போதும்னு உள்ளூரில கிடக்க வேண்டிதானே…? சுசீலாவின் அன்றாட அலுப்பு நினைவு வந்தது.
வாக்கிங் கோஷ்டி இந்நேரம் எங்கு போய்க் கொண்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். நிச்சயமாக ரேஸ்கோர்ஸ் நெருங்கியிருப்பார்கள். அங்கு போய் அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்தவுடன் குஷி பிறந்து விடும் எல்லாருக்கும். நான் முந்தி நீ முந்தி என்று எல்லோரும் அந்த வட்ட மைதானத்தில் ஓட ஆரம்பித்து விடுவார்கள். வயது வித்தியாசமில்லாமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடுவது பார்க்கவே புது உற்சாகமாய் இருக்கும். வியர்வை சொட்டச் சொட்ட பனியன் தெப்பமாய் நனைந்தால்தான் திருப்தி. அந்த அனுபவமே தனி.
அப்படியான இந்த நேரத்தில் தான் ஆபீசுக்கு என்று கிளம்பியாயிற்று. ஜங்ஷன் போய் காலை ஏழே முக்காலுக்குக் கிளம்பும் அந்தப் பாசஞ்சர் ரயிலில் ஏறி அமர வேண்டும். இரண்டு மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு அடையும் அலுவலகம்.
வெளியூரிலிருந்து எண்பது கி.மீ. கடந்து வரும் தான் அலுவலக நேரமான பத்து மணிக்குள் தாமதமின்றிப் போய்ச் சேர்ந்து விடுகிறோம்… ஆனால் உள்ளுரில் உள்ள பலரும் பத்தரை பத்தே முக்கால் என்று படுதாமதமாக வரும் நடைமுறை உள்ளதே? இது என்ன கெட்ட பழக்கம்?
அந்த அலுவலகத்தில் பதவி உயர்வில் பணியில் சேர்ந்த அன்று இவனைப் பேரிதும் நெருடிய விஷயம் அதுவாகத்தான் இருந்தது.
இந்த எண்ணங்களூடே நேரடி சிட்டி பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் கணேசன்.
(4)
பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசித்து எழுத ஆரம்பித்தான்.
தனது இருப்பின் தன்மையில்தான் அதன் பொறுப்புணர்ச்சியில்தான் அலுவலகத்தின் சீரான இயக்கமே உள்ளதாய்த் தோன்றியது.
சற்றே நெகிழ விட்டால் ஒரேயடியாய் நெகிழ்ந்து தளர்ந்து முடமாகி ஸ்தம்பித்து விடுகிறது.
தான் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையில்தான் அலுவலர் நிம்மதியாய் முகாம் செல்கிறார். திட்டப்பணிகளைக் கவனமாய்க் கண்காணிக்க முடிகிறது. அந்த வகையில் தனது பங்கு மிக அதிகம்.
“நீங்க இந்த ஆபீஸ்ல இருக்கீங்க என்கிற நம்பிக்கையிலேதான் நானே இங்கே வந்தேன். ஹெட் குவார்ட்டர்ஸ்லயே உங்களைப்பற்றி நிறையச் சொன்னாங்க... நீங்க கவலையே பட வேண்டாம்னாங்க. அந்த திருப்திதான் எனக்கும்...”
- இது வெறும் மெப்பனைக்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல என்பதை அதிகாரியின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் தன் கைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தில் நம்பிக்கை ஒளி படர உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய போது புரிந்து கொண்டான்.
- ஆபீஸைப் பற்றி நீங்க கவலையே பட வேண்டாம். அதனுடைய முழுப் பொறுப்பு என்னுடையது. ஆனால் திட்டம் சம்பந்தப்பட்ட அறிக்கைகள், புள்ளி விபரங்கள், அனுப்புறபோது என்னோடு செக்ஷன் ஆபீசர்ஸ் ஒத்துழைக்கணும். அப்பத்தான் அதையும் என்னால் சரியா வச்சுக்க முடியும். நான் எது கேட்டாலும் கேட்கிற டயத்துக்கு எனக்குக் கொடுத்து உதவணும். அப்பத்தான் கன்சாலிடேட் பண்ணி ஹெட் ஆபீசுக்கு அனுப்ப முடியும். சுருக்கமாச் சொன்னா அலுவலகத்தையும் அலுவலக நடைமுறைகளையும் மதிக்கத் தெரியணும். இதே அலுவலகத்துக்கு நாளைக்குப் பதவி உயஎவிலே அவங்கள்ல யாராவது அதிகாரியா வந்து உட்காரலாம். அது வேறே. ஆனா இன்றைக்கு அவுங்க செக்ஷன் அலுவலர்கள்தான்ங்கிறதாலே ஆபீஸ் நடைமுறைக்கு ஒத்துழைக்கிறதுதான் முறை. நான் இப்படிச் சொல்றது உங்களுக்குக் கூடக் கொஞ்சம் சங்கடமா இருக்கலாம். ஆனா நீங்க என் மேலே வச்சிருக்கிற நம்பிக்கையை நான் காப்பாத்தியாகணுமில்லையா? அதுக்காகச் சொல்றேன். தயவுசெய்து தவறா நினைச்சுக்காதீங்க...
தன்னுடைய பேச்சில் அவருக்கே கொஞ்சம் பயம் வந்திருக்கிறதோ என்பதுபோல் இருந்தது அவரது முகபாவனை.
அவர் பயப்பட வேண்டும் என்பது இவனது விருப்பமல்ல. அது தன் மீது ஏற்பட்ட பயமுமல்ல. தனது சின்சியாரிட்டியின் மீது தனது ஒழுக்கத்தின் மீது ஒரு அலுவலகத்தை கௌரவமாக நடத்திச் செல்ல, தான் கொண்டிருக்கும் அனுபவ பலத்தின் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பயம் என்றே தோன்றியது.
“ஓ.கே. மிஸ்டர் கணேசன்... உங்களுடைய பேச்சு எனக்கு முழு நம்பிக்கையைத் தருது... ப்ரொஸீட்...” - சொல்லியவாறே கைகளைக் குலக்கிய அலுவலகத் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய்த்தான் இன்றுவரை இருந்து வருகிறான் கணேசன்.
“சாட்... ஜங்ஷன் ஸ்டாப்... இறங்கலியா...?” -கண்டக்டரின் உசுப்பலில் சட்டென்று நினைவுக்கு வர வண்டியை விட்டுக் கீழே இறங்கினான்.
இருபுறமும் நிதானித்துப் பார்த்துவிட்டுச் சாலையைக் குறுக்கே கடந்தான். அன்றொருநாள் இந்த நிதானமின்றி ஏதோ நினைப்பில் கடக்க முயன்று அடிஎடுத்து வைக்க முனைந்தபோது ஒரு ஆட்டோ சட்டென்று அடித்துக் கீழே தள்ளும் வகையில் நெருங்கி, உரசிச் சென்றதை நினைத்தான். அன்று அடிபட்டிருந்தால் நிச்சயம் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதி ஊனப்பட்டிருக்கும். நினைத்தபோது மனசு நடுங்கியது.
இயற்கையான மரணம் என்பதோடு, இன்று விபத்துக்கள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமான நிகழ்வாகவே மாறிப்போய்விட்டது என்று தோன்றியது.
சாலையைக் கடந்து ஜங்ஷன் வெளி ப்ளாட்பார்ம் பகுதிக்கு வந்தபோது வாசலில் இருக்கும் விநாயகர் கோயில் கண்ணுக்குப்பட்டது. விடிகாலையில் அங்கு ஒலி பரப்பப்படும் ஜேசுதாஸின் கர்நாடக இசைப் பாடல்கள் இவன் கவனத்தைப் பெரிதும் கவரும். ஒரு நிமிஷம் நின்று கேட்டு விட்டுப் போவான். மனதை இதமாக்கும் குரல் வளம்.
“ஹேமநாதபாகவதரின் இசையின் மகத்துவம் அறியாமல் பேசுகிறாய்...” என்ற திருவிளையாடல் வசனம்தான் இவனுக்கு நினைவுக்கு வரும். அந்த மகத்துவம் என்ற வார்த்தையின் மகத்துவம் இவனை ரொம்பவும் ஆச்சரியப்படுத்தும்.
ஆற, அமர இருந்து ரசிப்பதற்கு உலகில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று படிப்பது. அதற்கென்று அதிகமான நேரம் ஒதுக்கப்படுவது - தான் பதவி உயர்வு மாறுதலில் வெளியூருக்கு இம்மாதிரிப் பயணம் மேற்கொள்ளும் இந்தக் கால கட்டம்தான். ரயிலில் நிறையப் படிக்க நேரம் கிடைக்கிறது.
எண்ணியவாறே ஜங்ஷனுக்குள் நுழைந்தவன் ஏழாவது ப்ளாட்பாரம் செல்வதற்காய் மாடிப்படி ஏறினான். ஐம்பது வயதைத் தாண்டிய பொழுதில் தான் அவ்வாறு முச்சிரைக்காமல் படியேறுவது இவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.
“ஆள் அன்றைக்குப் பார்த்த மாதிரியே ஒல்லியா, அதே சைசுல, அப்படியே இருக்கீங்களே?” - வெகுநாள் கழித்து ரயிலில் சந்தித்த நண்பர் பிரகாசம் இப்படி ஆச்சரியப்பட்டார். அதுநாள்வரை தினசரி வாக்கிங் போன பழக்கமும், சிறிய சிறிய உடற்பயிற்சிகளும் அவனை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க வைத்திருப்பதை நினைத்தபோது பெருமையாயிருந்தது.
வாழ்க்கையில் ஆரோக்கியம்தான் முக்கியம். உடல் ஆரோக்கியமாய் இருந்தால் மனசும் ஆரோக்கியமாய் இருக்கும். உடல் தெம்போடு திடமாய் இருந்தால்தான் மனசும் திடமாய் இருக்கும். நண்பர்களோடு பேசிக் கொண்டே பயணிக்கையில் இப்பேச்சு அடிக்கடி இடம் பெறுவதை நினைத்துக் கொண்டான்.
ஏழாவது ப்ளாட்பாரம் மாடிப்படிகளில் இறங்கி வழக்கம் போல் இரண்டாவது காரேஜில் போய் துண்டை விரித்து புத்தகங்களைப் போட்டு நண்பர்களுக்கு இடம் பிடித்து வைத்தான்.
“இந்த ரயிலில் புதுப் புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினது நீங்கதான் சார்... வெறுமே அரட்டை அடிச்சிட்டு வர்றவங்க மத்தியிலே படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தின பெருமையும் உங்களுக்குத்தான்... இப்படிப்பட்ட பெயர்ல எல்லாம் புத்தகங்கள், பத்திரிகைகள் இருக்குங்கிறது நீங்க வந்த பின்னாடிதான் எங்களுக்கே தெரியும். - சொல்லி விட்டு ஆர்வமாகப் படித்தனர் பலர். சிலர் வாங்கிக்கொண்டு அவரவர் இருக்கைக்குச் சென்றனர். மாலையில் திரும்புகையில் கொடுத்தனர். எல்லோரிடமும் படிக்கும் பழக்கம் அடியொட்டிக் கிடப்பதுவும், அதைக் கிளறி விடுவதுதான் முக்கியம் என்றும் இவனுக்குத் தோன்றியது.
“வணக்கம் ஸார்...” - குரல் கேட்டு ஜன்னலுக்கு வெளியே நின்றவரைப் பார்த்துப் பதிலுக்கு வணங்கினான் கணேசன்.
“நான் ஹபிபுல்லாவோட பையன்...” - இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் மதிக்கத்தக்க அந்த இளைஞன் இவனைப் பார்த்து இப்படிக் கூறியதும், ஒரு மெல்லிய அதிர்வு பரவுவதை உணர்ந்தான்.
சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஹபிபுல்லா என்ற பியூன் தனது தந்தை என்றும் அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டதாகவும், அந்த இளைஞன் கூறியபோது அடுத்தாற்போல் கவனமாக ஒரு பிரச்னையைத் தான் எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை அக்கணமே உணர்ந்தான் கணேசன்.