(5)
ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே நின்று பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.
உங்க பேரு என்ன தம்பி?
மம்மது சார்...
அவன் சத்தமாகக் கூறியதைக் கேட்ட இவன், மெதுவா...மெதுவா...பொது இடங்கள்ல சத்தமில்லாமப் பேசணும்... என்றான் அவனைப் பார்த்து.
சரி சார்... என்று தலையாட்டிய அவன் ‘எங்கப்பாவுக்குச் சேர வேண்டிய பணமெல்லாம் கொடுத்துட்டீங்களா சார்...? - என்றான் அடுத்தபடியாக.
அவன் ஏதோ பிரச்னையோடுதான் வந்திருக்கிறான் என்பதாகத் தோன்றியது. அவன் குரலில் இருந்த படபடப்பு முகத்தில் தென்பட்ட கோபம், கண்களில் இருந்த கலக்கம், இது எல்லாவற்றையும்விட கலைந்து பறந்து கொண்டிருந்த தலை முடியோடு அவன் காட்சியளித்தது இவனை ரொம்பவும் யோசிக்க வைத்தது.
“ஆபீஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தை இங்கே பேச முடியாது தம்பி... புரிஞ்சிதா... எதுவானாலும் உங்க அம்மாவோட வந்து ஆபீஸ்ல விபரம் தெரிஞ்சிக்குங்க... நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. ஹபிபுல்லா பையன்னு சொல்றீங்க... இப்பத்தான் நான் உங்களை முதன் முதலாப் பார்க்கிறேன்... நீங்க அவர் பையன்தான்ங்கிறது உங்க அம்மா மூலமாகத்தான் நான் உறுதிப்படுத்திக்க முடியும். எதுவானாலும் ஆபீசுக்கு வந்து கேளுங்க... அதுதான் முறை...”
இல்ல சார்... நான் இங்கே தொழில் பார்த்துக்கிட்டிருக்கேன் சார்... அடிக்கடி அங்கே வர முடியாது. பஸ்ஸூக்கு சும்மா செலவு செய்ய முடியுமா?
வேண்டாமே... உங்க அம்மா மூலமாத் தெரிஞ்சிக்கிடலாமே? நானே அவுங்களை அலைய வேண்டாம்னுதானே சொல்லியிருக்கேன். தபால் வந்த பிறகு வந்தாப் போதும்னு சொல்லியிருக்கேனே?
நீங்க சாவகாசமா செய்வீங்க... அதுவரை நாங்க பொறுத்துக்கிட்டிருக்க முடியுமா? எங்களுக்குத் தொழிலுக்குப் பணம் தேவைப்படுதுல்ல சார்...
அவன் பேச்சு வித்தியாசப்படுவது போல் தோன்றியது இவனுக்கு.
ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு ஒலித்தது.
இந்த பாருங்க தம்பி... அநாவசியமான பேச்சு வேண்டாம்... நீங்க சின்னப் பையன். உங்களுக்கு எதுவும் தெரியாது. எதுவானாலும் உங்க அம்மாவோட வந்து பேசிக்குங்க... அவுங்கதான் ஹபிபுல்லாவோட நாமினி... லீகல் ஹேர்... எல்லாப் பணப் பலன்களும் அவுங்களைத்தான் சேரும்... அததுக்கான நேரத்துக்குள்ள அது அவுங்களுக்குக் கிடைக்கும். அதுக்கு நான் பொறுப்பு. நீங்க போகலாம்... - சொல்லிவிட்டு வண்டியினுள் ஏறினான் கணேசன்.
ரயில் லேசாக நகர்ந்தபோது இவனை நோக்கிக் கையைக் காட்டி, விரலைச்சுட்டி எச்சரிக்கை செய்வது போன்ற சைகையில் அந்தப் பையன் ஏதோ சத்தமாகக் கத்துவதைக் கண்டான்.
ஓரிரு முறை அவனை அலுவலகம் உள்ள சாலையின் எதிர் டீக்கடையில் பார்த்தது போலவும், ஹபிபுல்லாவோடு வாக்குவாதம் செய்து தகராறு ஆகி அருகிலிருந்த சிலர் விலக்கி விடுவது போன்ற காட்சியையும் ஜன்னல் வழியாகத் தான் கண்ணுற்றது இவன் மனதுக்குள் நெருடியது இப்போது.
அவன் யார், என்ன, ஏது என்று தான் விசாரிக்க முற்பட்டபோது ‘ஒண்ணுமில்ல சார்... தெரிஞ்ச பையன்தான் சார்...’ என்று ஹபிபுல்லா சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது.
தெரிஞ்ச பையன் இப்போது மகன் என்று சொல்லிக் கொண்டு வந்து நிற்கிறான். இது தெரியக் கூடாது என்றுதான் அன்று ஹபிபுல்லா அப்படிச் சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.
இரண்டு தினங்களுக்கு முன் இறந்து விட்டதாகக் கூறுகிறானே? செய்தி வரவேயில்லையே? உண்மையா? பொய்யா? முதலில் இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ஹபிபுல்லா இறந்து விட்டார் என்ற அந்தச் செய்தி மனதைத் திடுக்கிட வைத்தது. உண்மையாய் இருக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனாலும் அவர் பையன் என்று சொல்லும் அவன் சொன்னது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஓய்வு பெற்று ஓராண்டு கூட நிறையவில்லையே? அதற்குள்ளா இப்படி நிகழ வேண்டும்?
ஹபிபுல்லாவை நினைத்தபோது மனம் வேதனைப்பட்டது. அவரைப்போல் ஒரு திறமையான பியூனைப் பார்க்கவே முடியாது. பம்பரமாய்ச் சுழலுவார் ஆபீஸ் நேரத்தில். அவர் மீசையை முறுக்கும் அழகே தனி. ஆனால் அதற்குள் அவர் சிரிக்கும் பளீர் சிரிப்பும் மறக்க முடியாதது.
இது என் வேலை, இது உன் வேலை என்ற பேச்செல்லாம் அவரிடம் கிடையாது. எல்லாமே அவர் வேலைதான். பியூனுக்கான வேலைகளோடு ஒரு குமாஸ்தாவுக்கான வேலைகளையும் சேர்த்துப் பார்ப்பாட். யார் எதைச் சொன்னாலும் மனம் கோணாமல், முகம் சுழிக்காமல் பார்ப்பார். உடனே செய்து விடுவார்.
சம்பளப்பட்டியல்களை நகலெடுப்பது, கோப்புகளைத் தைப்பது, அவற்றை இனம் வாரியாகப் பிரித்து அடுக்குவது, பக்க எண்கள் போட்டுக் கொடுப்பது, டீ வாங்க ஓடுவது… என்று அவருடைய வேலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் ஒருத்தன் எதுக்காக இருக்கேன் இங்கே? நீங்கபாட்டுக்கு உள்ளே போறீங்க? வந்தீங்கன்னா என்ன விஷயம், யாரைப் பார்க்கணும்னு சொல்லுங்க... என்னைப் பார்த்தா ஆளாத் தெரியலையா?
அலுவலரின் அறைக்குள் நுழைய முயன்ற ஒருவரை ஒரு நாள் இப்படி விரட்டியடிக்க, வந்தவர் ஒரு அரசியல்வாதி.
நீங்க யாரா இருந்தா எனக்கென்ன சார்? ஆபீசுக்குள்ளே நுழைஞ்சா முறைப்படி நடந்துக்கிட வேண்டாமா? நீங்கபாட்டுக்குத் திறந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சமாதிரிப் போனா?, வந்தவர் தவறாய் எடுத்துக்கொள்ள இந்தப் பேச்சுப் போதாதா? தலைமை வரை போனான் அந்த ஆள். நான் கேட்டதுல என்னா தப்பு? என்று கடைசி வரையில் பிடியாய் நின்றார் ஹபிபுல்லா.
அவரை மாதிரி ஆள் கிடைக்காது என்று சிபாரிசு செய்தார் அதிகாரி. ஜெயித்தது ஹபிபுல்லாதான். காணாமலே போனான் அந்த ஆள். இப்படி எத்தனையோ சம்பவங்கள். ஆனால் அதே ஆள் ரெண்டு பேரை ஏவி விட்டு அவர் மாலையில் வீடு திரும்புகையில் கண்மண் தெரியாமல் அடிக்க விட்டானே?
‘பாய்’ ஆஸ்பத்திரியில் கிடந்தாரே! எவ்வளவு பரிதாபமாயிருந்தது.
போறான் சார், விடுங்க...கோழை... ஆள வச்சு அடிக்க விடுறவன் ஆம்பளையா? பொட்டைப்பய... அல்லா அவனை மன்னிக்கட்டும்…’ என்று கைகளை ஆசி கூறுவதுபோல் செய்து கண் கலங்கினாரே...
பியூன் ஹபிபுல்லாவை நினைக்க நினைக்க வரிசையாக அவரது நற்குணங்களும் நன்னடத்தையும் மனதில் தோன்றிச் சங்கடப்படுத்தின இவனை.
இன்று அலுவலகம் போனதும் முதலில் இந்தச் செய்தியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வெகு நேரம் தான் யாருடனும் பேசாமலும் சிந்தனையுடனும் பயணம் செய்தது அன்று அவனுக்கே வியப்பாய் இருந்தது.
ரயிலை விட்டு இறங்கியபோது, ஆபீஸ் நினைவுகள் அப்படியே வந்து அவன் மனதை அப்பிக் கொண்டன. மாலை, புத்தகங்களைத் திருப்பித் தருவதாய் கடைசிப் பெட்டியிலிருந்து சைகை செய்தார்கள் நண்பர்கள்.
கால்களை வீசிப் போட்டு நடக்க ஆரம்பித்தவன் அன்றைய அலுவலகப் பிரச்னைகளை எதிர்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொண்டான்.
(6)
அய்யா, இங்கே சொருகட்டுங்களா…? கேட்டவாறே எரிந்து கொண்டிருக்கும் பத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்துக் கொண்டிருந்தார் பியூன் லட்சுமணன்.
இந்த பாருங்க லட்சுமணன், நான் உங்களுக்குப் பலமுறை சொல்லிட்டேன்… என்னை இப்படி ஐயா கொய்யான்னெல்லாம் கூப்பிடாதீங்கன்னு… கேட்க மாட்டேங்கிறீங்க. சாதாரணமா சார்ன்னே கூப்பிடுங்கன்னு சொன்னா திரும்பத் திரும்ப இப்டியே கூப்பிடுறீங்களே? எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு…
ஐயா, உங்களை மாதிரி மனுசாளைக் கூப்பிடாம வேறே யாரைக் கூப்பிடச் சொல்றீங்க? நல்ல மனசுள்ளவாளைத்தான் மனசோட அப்படிக் கூப்பிட முடியும்…
சொன்னால் கேட்க மாட்டார். அவர் பாணி அது. வயசாளி… பெரிய பெரிய அதிகாரிகளிடமெல்லாம் வேலை பார்த்தவர். ஓய்வுபெறும் கடைசிக் காலத்தில் உள்ளுரோடு இருப்போமே என்று இங்கு வந்திருக்கிறார். பொறுப்பானவர். எல்லோரிடமும் மரியாதையோடும், அன்போடும் பழகுபவர். அலுவலகத்தைக் குடும்பம்போல் நினைத்து அக்கறையாய்ச் செயல்படுபவர். அவர் மாதிரி ஆட்களையெல்லாம் இப்போது பார்க்க முடிவதில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு இந்தப் பொறுப்புணர்ச்சியில் கால் பங்கு கூட இருப்பதில்லை.
அலுவலகம் வந்தால் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடக்கூட சொல்லி வாங்க வேண்டியதிருக்கிறது. அத்தோடு கடமை முடிந்தது என்று எதிர்ச்சாரியிலுள்ள டீக்கடையில் போய் அமர்ந்து விடுகிறார்கள். அதுதான் ஆபீஸ் போல… எத்தனை முறை சொன்னாலும் மண்டையில் ஏறுவதில்லை. சற்றுக் கறாராகக் கண்டித்தால் இஷ்டத்திற்கு எதிர்த்துப் பேசும் தன்மை. அதையும் மீறினால் இவன் என்னை அப்படித் திட்டினான், இப்படி வைதான் என்று மொட்டை பெட்டிஷன். பிறகு அதற்கு ஒரு என்கொயரி, அறிக்கை. ஆபீஸில் செய்ய வேண்டிய வேலைகள் வண்டி வண்டியாய் இருக்க - அத்தனையையும் மூலையில் தள்ளிவிட்டு இதற்கான நேரங்கள் வீணாகும் கொடுமை. சகிக்க முடியாத அவலங்கள் எத்தனையோ…!
அலுவலகத்தில் பொறுப்பாகச் செயல்படக்கூடியவர்கள் அனைவரையும் சுணங்க வைக்கும் நிகழ்வுகள். நிறைய விஷயங்களை வாய்விட்டே பேச முடிவதில்லை. கடமையைக் கருத்துணர்ந்து செய்ய மாட்டோம். அதைச் சுட்டிக் காட்டி யாரும் சொல்லவும் கூடாது என்கிற விட்டேற்றியான மனப்பான்மை.
இந்த மாதிரிச் சங்கடங்களுக்காகத்தான் நான் ப்ரமோஷனே வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டேன். இதுன்னா நாமுண்டு நம்ம சீட்டு வேலையுண்டுங்கிற அளவுல முடிஞ்சு போயிடும். மானேஜராப் போய் உட்கார்ந்தா ஆபீஸையே கட்டி மேய்க்கணும். எவனும் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டான். எல்லாத்தையும் கேட்டுக் கேட்டு வாங்கணும். நாமளே உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதணும். கூப்பிட்டுக் கேட்பாங்க… எவன் பதில் சொல்றது? ஃபைனான்சியலா பெரிய அளவுல பெனிஃபிட்டும் இல்ல. ஒரு இன்க்ரிமென்ட்தான்… இதுக்கு வெளியூரு போகணும்… தேவையா?
- இப்படிப் புலம்பிப் பதவி உயர்வே வேண்டாம் என்று மறுத்தவர்கள் எத்தனையோ பேர்.
இப்டி இருக்கட்டுங்கய்யா… அப்பத்தான் பத்தி மணம் உங்களுக்கு வரும்… சொல்லிக் கொண்டே தன் பின்னால் இருந்த சுவாமி படத்தில் செருகப் போனார் லெட்சுமணன்.
அலுவலகங்கள்ல எந்தச் சாமி படமும் இருக்கக் கூடாது… ஏன்னா எல்லாச் சாமிகளையும் கும்புடுறவங்க வேலை பார்க்கிற, வந்து போகிற இடம் இது. இங்க நம்ம கடமைதான் நமக்கு சாமி. அதைச் சரியாச் செய்தோம்னா சாமியக் கும்பிட்ட மாதிரிதான். வந்துபோகிற பொது ஜனங்களுக்கு வேணுங்கிறதை மனசு கோணாம உடனுக்குடனே செய்து கொடுத்து அவுங்க திருப்தியா திரும்புறாங்களில்லியா? அதுதான் முக்கியம். அவுங்க முகத்துல ஒரு நிறைவை மகிழ்ச்சியை பார்க்கிறோமில்லியா? அத விடவா ஒரு சாமி வேணும்?
ஐயா, உங்களோட பேச முடியுங்களா? நான் பழைய ஆளுங்கய்யா… என்னை விட்ருங்க… - சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தார் லெட்சுமணன்.
குட்மார்னிங்க சார்…
வணக்கம்மா…சொல்லிவிட்டு அந்தப் பெண் பணியாளரை நேரே நோக்கினான் இவன். பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட அவர்கள்
ஸாரி சார்…வர்ற வழிக்கு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன்…லேட்டாயிடுச்சி…
வெளியூர்ல இருக்கிற நான் பத்து மணிக்குள்ள வந்திடறேன்… உள்ளுர்ல அதுவும் இந்தச் சின்ன டவுன்ல இருக்கிற நீங்க தினசரி லேட்டா வர்றீங்க… எத்தனை தடவை சொன்னாலும் மாற மாட்டீங்க… அப்படித்தானே…?
அப்படியில்லை சார்… இன்னைக்குதான் லேட்டாயிடுச்சு…
தினமும் அப்படித்தானே மேடம் வர்றீங்க… கோயிலுக்குப் போனேன்னா அது ஆபீஸ் டயத்துல சேர்த்தியா? அது உங்க பர்ஸனல்…
நாளையிலேர்ந்து கரெக்டா வந்திடுறேன் சார்…
இவன் மௌனமானான். வாடிக்கையான பதில்தான். தினமும் தாமதமாகவே வந்து, அது கேள்விகளற்ற வாடிக்கையாகவே கருதப்பட வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். இவர்களுக்குப் பதமாகச் சொன்னாலும், கோபமாகச் சொனானாலும் எதுவும் உறைப்பதில்லை.
இது சரிப்படாது என்று இரண்டு நாள் தொடர்ந்தாற்போல ‘தகவலில்லை’ என்று பதிவு செய்தான். அன்று கோபித்துக் கொண்டு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பு அனைத்தையும் அன்று அவனே எழுதி அனுப்ப வேண்டியிருந்தது. மூன்றாம் நாள் வந்த அந்தப் பெண்மணிக்கு அது ரொம்பவும் வசதியாய்ப் போயிற்று. அவரது பிரிவுப் பணிகள் எதுவும் நிலுவையில்லாமல்… ஆண்களைப் போலத்தான் பெண்களும்… அலுவலகப் பணிகளைப் பொறுத்தவரை பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்று தோன்றியது.
வீட்டில் இருப்பதைப் போல அலுவலகத்திலும் கோபித்துக் கொண்டு அமைதி காப்பதும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதும், வேலை செய்யாமல் வம்புக்கு உட்கார்ந்து கிடப்பதும், இருக்கையில் அமர்ந்து அழுது அடம் பிடிப்பதும், ஏதேனும் தேவையானது சொன்னால் அதற்கு விபரீத அர்த்தம் கற்பித்துக் கொண்டு புகார் செய்ய முயல்வதும், இவைகளெல்லாம் பெரும்பாலும் பெண் பணியாளர்களிடம் விஞ்சியிருக்கிறதோ என்று தோன்றியது.
மன முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி, செயல் முதிர்ச்சி இப்படி எவற்றின் அடையாளமும் இல்லாமல் பெரும்பாலான பணியாளர்கள் இருப்பதும், ஒரு குடும்பம் என்கிற பின்னணியிலிருந்துதானே இவர்கள் வெளிப்படுகிறார்கள் என்கிற பின்புலமும் இவனுக்குள் விடைகாண முடியாத பல கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தன.
வேலை கிடைக்கும் முன்பு அதற்காக எவ்வளவு ஏக்கம் கொள்கிறோம்? எப்படியெல்லாம் முயற்சி செய்கிறோம்? பாடுபட்டுத் தேடிக் கிடைத்த பணியை மனசாட்சிக்கு விரோதமின்றி நிறைவேற்ற வேண்டாமா? ஏன் அந்த நல்லுணர்வு அற்றுப் போகிறது? செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை உறுதி, சம்பளம் உறுதி என்கிற நிலையில் இந்த விட்டேற்றியான மன நிலை வளர்ந்து போனதோ? அது தவறல்லவா?
தினசரிச் சம்பளம் எழுநூறு, எண்ணூறு என்கிற அளவுகளிலிருந்து படிப்படியாக உயரும் நிலையில் வாங்கும் சம்பளத்திற்கு உழைக்கும் நேர்மையுணர்வாவது வேண்டாமா? நிறையப் பேருக்கு அது இல்லை. சிலருக்கு அது வந்து வந்து போகிறது, சிலருக்கு அது உடம்போடு ஊறிப் போய்க் கிடக்கிறது.
எப்படியிருந்தாலும் நம் மனநிலையைப் பதமாக மாற்றிக் கொள்வதுதானே முறை?
திடீரென்று சிந்தனை அறுந்து போனவனாக ‘லெட்சுமணன், இந்த லைட்டை ஆஃப் பண்ணுங்க…’ என்றான்