கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. கடவுளை முழுமையாக நம்ப வேண்டும். அவ்வாறு கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவனைக் கடவுள் கைவிடாமல் காப்பாற்றுவார். இக்கடவுள் நம்பிக்கை எல்லா இடங்களிலும் இருக்கிறது. இது குறித்த கதை ஒன்று இம்மாவட்ட வழக்காற்றுக் கதையாக மக்களிடையே இருந்து வருகின்றது.
ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவன் கடவுள் மேல மிகுந்த பக்தியாக இருந்தான். காலையில எழுந்ததுல இருந்து இரவு படுக்கைக்குப் போற வரைக்கும் கடவுளை நினைத்துக் கொண்டுதான் இருப்பான்.
ஒவ்வொரு நாளும் எழுந்த உடனே, ‘‘இறைவனே, இன்றைக்கு எல்லாமே நல்லதா அமையணும். நீதான் எல்லாத்துக்கும் எனக்கு உறுதுணையா இருக்கணும்னு’’ வேண்டிக்கிட்டு வேலைகளைத் தொடங்குவான். அதே போன்று இரவு படுக்கப் போகும்போதும் தான் செஞ்ச வேலைகளை எல்லாத்தையும் ஒண்ணுவிடாம கடவுளுக்கிட்ட சொல்லிட்டுத்தான் படுப்பான்.
கடவுளும் அவனுக்கு ஒரு குறையும் வைக்கல. அவன் வேண்டியதை எல்லாம் கொடுத்தாரு. அவனும் கடவுளத் தன்னோடு இருக்கற ஒருத்தராவே நினைச்சிக்கிட்டான். அப்படியே அவன் வாழ்ந்து வந்தான். இப்படி இருக்கறபோது ஒருநாள் அவனுக்கு ரொம்ப முடியல.
அவன் கடவுளுக்கிட்ட வேண்டிக்கிட்டான். ‘‘கடவுளே! எனக்கு ஏன் இப்படிப்பட்ட கஷ்டத்தக் கொடுக்குறே. என்னையக் காப்பாத்துன்னு’’ வேண்டிக்கிட்டான். ஆனாலும் அவனுக்கு அதைவிட ஒடம்பு சரியில்லாமப் போயி அவன் இறந்துட்டான்.
இறந்தவன் மேலுலகம் போனான். அப்படிப் போனவன் கடவுளப் பாத்தான். அவனுக்கு ரொம்ப ரொம்ப வருத்தம். கடவுள் அவனைப் பார்த்து, ‘‘வா… கடைசியில நீ என்கிட்டயே வந்துட்ட...’’ன்னு வரவேற்றார். அவன் கடவுளைக் கும்பிட்டான்.
அதுக்குப் பிறகு அவன் கடவுளைப் பாத்து, ‘‘கடவுளே! நான் ஒங்க கிட்ட சில கேள்விகளைக் கேட்கணும். அது என்னோட மனசுக்குள்ளாற இருந்துக்கிட்டு அரிச்சிக்கிட்டே இருக்குது. நான் கேட்கலாமா’’ன்னு கேட்டான்.
கடவுளும், ‘‘நீ தானே எங்கிட்ட கேக்கப் போறே. நல்லாக் கேளு’’ன்னு சொன்னாரு.
அவனும், ‘‘கடவுளே நான் ஒங்களையே நினைச்சிக்கிட்டுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். என்னையக் கடைசி நேரத்துல கைவிட்டுட்டீங்களே... அது தப்பில்லையா? உங்கள நினைக்கிற என்னையக் காப்பாத்த வேண்டியது ஒங்களோட கடமையில்லையா...?’’ன்னு அழுதுக்கிட்டேக் கேட்டான்.
அதைக் கேட்ட கடவுள், ‘‘ஏங்கூட வா... நான் எப்படியெல்லாம் ஒன்னப் பாத்துக்கிட்டேன்னு காட்றேன். அதைப் பாத்துட்டு நான் எப்பவாவது கைவிட்டனான்னு சொல்லு’’ அப்படீன்னு சொல்லிட்டு அவனோட கையப் பிடிச்சிக்கிட்டு வானவெளியில கூட்டிக்கிட்டுப் போனாரு.
வானத்துல இருந்து அவன் வாழ்ந்த எடத்தப் பாத்தான். அப்ப நான்கு காலடித் தடங்கள் தெரிந்தன. கொஞ்சதூரம் போன ஒடனே ரெண்டு காலடித் தடங்கள் மட்டுமே தெரிந்தது. உடனே அவன் அழுதுட்டான்.
அவன் அழுவதைப் பார்த்த கடவுள், ‘‘ஏப்பா நீ அழுகின்றாய்? காரணம் என்ன..?”ன்னு கேட்டாரு.
அதைக் கேட்ட அவன், ‘‘கடவுளே, அந்தத் தடங்களப் பார்த்தீங்களா? அதப் பார்த்த ஒடனேதான் எனக்கு அழுகை அழுகையா வருது...’’ன்னு சொன்னான்.
கடவுள், ‘‘அட, எந்தத் தடத்தப் பாத்துட்டு இப்படிச் சொல்கிறாய்?’’ன்னு கேட்டாரு.
‘‘கடவுளே இந்தப் பக்கம் இருக்கற நாலு காலடித் தடங்களப் பாத்தீங்கள்ள... இதுஎன்ன?’’ அப்படீன்னு கடவுளைப் பார்த்துக் கேட்டான்.
கடவுள், ‘‘அதுவா நீ போனபோது நான் உன்கூடவே பாதுகாப்பா நடந்து வந்தேன். அதனலாதான் ஒரு காலடித் தடத்தோட பின்னால அடுத்த காலடித் தடம் பின்தொடருது. அதுதான் அந்த நான்கு காலடிகளோட தடம். முன்னால போறது ஒன்னோட காலடித் தடம். பின்னால வர்றது என்னோட காலடித் தடம். இப்பவாது நான் உன்கூடவே இருந்தேன்னு தெரிஞ்சிக்கிட்டியா...?”ன்னு கேட்டாரு.
அதுக்கு அவன், ‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனால் இந்தப் பக்கம் பாருங்க ஒரு காலடித் தடம் மட்டுமே தெரியுது. அது என்னோடதுதான் பார்த்துக்கிட்டீங்களா...? நான் சந்தோஷமா இருந்த போது நீங்க ஏங்கூடவே இருந்தீங்க. ஆனா எனக்குக் கஷ்டம் வந்த பின்னால என்னைய விட்டுட்டு நீங்க போயிட்டீங்க. அத நினைச்சாத்தான் எனக்கு அழுகை அழுகையா வருது. இப்படி என்னைய விட்டுட்டுப் போகலாமா?”ன்னு கேட்டுட்டு அழுதான்.
கடவுளு அவனோடத் தோள்ல தட்டிக் கொடுத்து, ‘‘ஏப்பா அழுகின்றாய்? இங்க பாரு அந்தக் காலடித் தடத்த நல்லா உத்துப் பாரு. அது யாரோட காலடித் தடம்னு தெரியும். நல்லாப் பாரு. பாத்துட்டியா? அது என்னோட காலடித் தடம். ஒனக்குத் துன்பம் வந்தபோது ஒன்னைய என்னோட தோள்ல சுமந்துக்கிட்டுத் திரிஞ்சேன். அதனாலதான் என்னோட காலடித் தடம் மட்டும் தனியாத் தெரியுது. இப்பத் தெரிஞ்சிக்கிட்டியா? சந்தோஷத்திலும் கஷ்டத்திலும் உன்கூடவே நான் இருந்தேங்கிறத’’ன்னு சொன்னாரு.
அதக் கேட்ட அவன், ‘‘கடவுளே என்னைய மன்னிச்சிருங்க. நீங்க எப்போதும் என்கூடவேதான் இருந்திருக்கீங்க. நான்தான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்’’ ன்னு சொன்னான். கடவுளும் அவனத் தன்கூடவே அழைச்சிக்கிட்டுப் போயிட்டாரு.
கடவுள் நம்ம கூடத்தான் இருக்காரு. இத முழுமையா நம்பணும். எதையும் முழுமையா நம்புனாத்தான் வாழ்க்கையில வெற்றி பெற முடியும்.