பறவைகள்ல புறா தனிப்பட்ட வாழ்க்கை வாழக்கூடிய பறவை. வாழ்நாள் முழுதும் ஒரே புறாவோடுதான் சேர்ந்து வாழும். வேற எந்தப் புறாவோடயும் சேர்ந்து வாழாது. ஆண்புறா இறந்துருச்சுன்னா பெண்புறா ஒடனே இறந்து போயிடும். அதே மாதிரி பெண்புறா இறந்து போச்சுன்னா ஆண்புறா இறந்துடும். இப்படி அன்போட வாழக்கூடிய பறவைங்க தான் புறா. இந்தப் புறாக்கள்ள காட்டுப்புறா, மணிப்புறா, மாடப்புறான்னு பலவகை உண்டு.
தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிற பழக்கம் இந்தப் புறாக்களுக்கு மட்டுமே உண்டு. இப்படிப்பட்ட புறாக்கள வச்சி ஒரு கதை இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கிவருது.
பெரிய காடு. அந்தக் காட்டுல ஒரு பெரிய ஆலமரம். அதுல ஆண்புறாவும் பெண்புறாவும் சேர்ந்து வாழ்ந்து வந்ததுக. அதுக ரெம்ப நல்ல புறாங்க. ஆண்புறாவும் பெண்புறாவும் ரொம்ப அன்போட வாழ்க்கைய நடத்திக்கிட்டு வந்துச்சுங்க.
அந்தக் காட்டுல பறவைகள வேட்டையாடற ஒரு வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காலையில வேட்டைக்குப் போயி பறவைகள வேட்டையாடிக்கிட்டு வந்து அவனோட குடும்பத்துக்குக் கொடுத்துச் சாப்புடுவான். தெனந்தோறும் இப்படியே இவனோட வாழ்க்கை நடந்து வந்துச்சு. ஒரு நாளு வீட்டுல சாப்புடுறதுக்கு ஒண்ணுமே இல்லை. இவன் தன்னோட பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு காலையிலேயே வீட்ட விட்டு வேட்டைக்குப் பொறப்புட்டான்.
ஒரு எடத்துல கண்ணிவச்சு கையோட எடுத்துக்கிட்டு வந்திருந்த தானியத்தைத் தூவிவிட்டுட்டு காத்துக்கிட்டு இருந்தான். ஒண்ணுமே வரல. சரி இந்தக் கண்ணி இப்படியே இருக்கட்டும். நாம போயி முயல், நரி எதாவது அகப்படுதான்னு பாப்போம்னுட்டுக் காட்டுக்குள்ளாறப் போனான். எவ்வளவோ தேடியும் அவனால எதையும் கண்டுபிடிக்க முடியல.
பசிவேற காத அடச்சது. கண்ணி வச்ச எடத்திலயாவது போயிப் பாப்போம்னுட்டுப் போனான். அவன் வச்ச கண்ணியில ஒரு புறா மாட்டியிருந்துச்சு. அதப் புடுச்சு கூண்டுக்குள்ளாறப் போட்டு அடச்சிக்கிட்டு வேற மிருகங்க எதுவும் அகப்படுதான்னு காட்டுக்குள்ளாறத் திரும்பவும் போனான்.
ரொம்ப தூரம் நடந்துகிட்டே போனான். அவனால எந்த விலங்கையும் பிடிக்க முடியல. ரொம்பக் களச்சுப் போயிட்டான். பொழுதுவேற போயிக்கிட்டே இருந்துச்சு. சரி திரும்ப நாம வீட்டுக்குப் போயிருவோமுன்னு அவன் நடையக் கட்டுனான். திடீர்னு மழை பேய ஆரம்பிச்சுருச்சு. முன்னறையும் பின்னறையுமா பெருமழை அடிக்க ஆரம்பிச்ச ஒடனே அவன் வேகவேகமா எங்கயாவது ஒண்டிக்கலாமான்னு எடம்பாத்து ஓடுனான்.
அப்படி ஓடுனவன் அந்தப் புறாக்கள் குடியிருக்கற மரத்தடிக்குக் கீழ போயி நனயாம நின்னுக்கிட்டான். அந்த மரத்துக்கிட்ட போறதுக்குள்ளாற நல்லா நனஞ்சு போயிட்டான். தான் கொண்டு வந்த கூண்ட கீழ வச்சிட்டு தன்னோட உடுப்புகளப் பிழிஞ்சி மழை படாத அளவுக்கு மரத்தோட மரமா ஒண்டி நின்னுக்கிட்டான்.
மழை பேஞ்சிக்கிட்டே இருந்தது. விட்டபாடில்ல. இருட்டிருச்சு. அவனால இருட்டுல என்ன பண்றதுன்னும் தெரியல. சரி இந்த ராத்திரி இங்கே இருந்துட்டு காலையில வீட்டுக்குக் கௌம்புவோம்னு அந்த மரத்தடியில ஒக்காந்துட்டான்.
அப்ப அந்த மரத்துல இருந்த புறா, ‘‘ஐயோ கடவுளே என்னோட மனைவி இன்னமும் திரும்பி வரலயே... அவளப் பத்திரமா எங்கிட்ட கொண்டுவந்து சேத்துரு... அவதான் என்னோட உசிரு... அவ நல்லா இருக்கணும்... இந்த மழையில எப்படி எங்க கஷ்டப்படுறாளோ தெரியலயே...? நான் என்ன செய்யிறது...?’’ அப்படீன்னு புலம்பிக்கிட்டே இருந்துச்சு.
இதையெல்லாம் கூண்டுக்குள்ளாற இருந்த பெண்புறா கேட்டுட்டு, ‘‘இங்கதான் இருக்கேன். இந்த வேடன் போட்ட கண்ணியில சிக்கிக்கிட்டு இவனோட கூண்டுக்குள்ளாற இருக்கேன். பாவம் இவன் பசியால ரெம்ப கஷ்டப்படறான். காலையில இருந்து இவன் சாப்புடாம பட்டினியாக் கெடக்கிறான். இவன் நம்ம வீட்டோட விருந்தாளியா வந்துருக்கான். இவனுக்குச் சாப்பிடறதுக்கு ஏதாவது கொடுங்க...’’ன்னு சொன்னது.
ஒடனே அந்த ஆண்புறா, ‘‘இவன் கொலைகாரனா இருந்தாலும் இவன் நம்ம வீட்டுக்கு வந்துருக்கான். இவனோட பசியப் போக்குறதுக்கு நீ சொல்லறது மாதிரி எதாவது செய்யணும்... மழையும் நின்னுருச்சு. எங்கயாவது நெருப்புக் கிடைக்குதான்னு நான் பாத்துக் கொண்டுக்கிட்டு வர்றேன்னுட்டு’’ பறந்து போயிருச்சு.
கொஞ்ச நேரத்துல அந்தப் புறா எரியற கொள்ளிக் கட்டையோட வந்தது. வந்தவுடனே மரத்தடிக்குக் கீழ கெடந்த சருகையெல்லாத்தையும் தன்னோட ரெக்கையால குமுச்சு அதுமேல தான் கொண்டு வந்த கொள்ளிக்கட்டையப் போட்டுச்சு.
நெருப்புப் புடுச்சிக்கிட்டு எரிஞ்சது. அந்த வேடன் தன்னோட குளிரப் போக்கிக்கிட்டான். அந்த ஆண்புறா வேடனைப் பாத்து, ‘‘ஐயா என்னோட வீட்டுக்கு வந்திருக்கீங்க... ஒங்களோட குளிரப் போக்கிட்டேன். ஒங்களுக்குச் சாப்புடறதுக்கு இப்பதைக்கு எனக்கிட்ட ஒண்ணுமில்லை. நீங்க ஒங்களோட கூண்டுல அடைச்சி வச்சிருக்கறது என்னோட பொண்டாட்டி. அவ இல்லாம என்னால இருக்க முடியாது. நான் இப்ப ஒங்க பசியப் போக்குறதுக்காக இந்த நெருப்புல குதிக்கப் போறேன். நீங்க என்னோட ஒடலத் தின்னுட்டு ஒங்களோட பசியப் போக்கிக்கோங்க... என்னோட மனைவிய வெளியில விட்டுருங்க’’ அப்படீன்னு சொல்லிட்டு அந்த நெருப்புல குதிச்சு எறந்துருச்சு.
அதப் பாத்த அந்த வேடன்,‘‘ஐயோ இந்தப் புறா அநியாமா எறந்துருச்சே... இனிமே இந்தக் கூண்டுல இருக்கற புறாவை நான் வச்சிருக்கக் கூடாதுன்னுட்டு’’ கூண்டத்திறந்து அந்தப் பெண்புறாவை வெளியில விட்டான்.
வெளியில வந்த பெண்புறா, ‘‘ஐயா என்னோட கணவரோட ஒடம்பு சின்னது. அதால ஒங்க பசி போகாது. நான் என்னோட கணவரப் பிரிஞ்சி ஒரு நிமிஷங்கூட இருக்க மாட்டேன். நானும் இந்த நெருப்புல விழுந்துடறேன். என்னையும் எடுத்துச் சாப்புட்டு ஒங்களோட பசியத் தீத்துக்கோங்க’’ அப்படீன்னு சொல்லிட்டு அதுவும் நெருப்புல விழுந்து எறந்துருச்சு.
இந்தப் புறாக்களோட செயலப் பாத்த இந்த வேடனுக்கு மனசு ரெம்ப கஷ்டமாப் போயிருச்சு. சே நம்மலால ஒரு நல்ல குடும்பமே அழிஞ்சி போயிருச்சே... இந்தப் புறாக்களுக்கு இருக்கற ஈவு இரக்கங் கூட நமக்கு இல்லாமப் போயிருச்சே... மழையில இருந்து தப்பிக்கிறதுக்காக இந்த எடத்துக்கு வந்து தங்கி இருந்த நமக்கு இவ்வளவு பணிவிடை செஞ்சிருக்குங்களே இந்தப் புறா... இதுகளோட சாவுக்கு நான் காரணமாயிட்டேனே... ஆண்டவனே! இனிமேலும் இந்த ஒலகத்துல நான் வாழ விரும்பல... இந்தப் புறாக்கள் எறந்த மாதிரியே நானும் எறந்துடறேன்னு’’ சொல்லிட்டு அவன் அந்த நெருப்பு வெளிச்சத்துல அங்க கெடந்த வெறகுகள எல்லாம் எடுத்து நெருப்புமேல போட்டு பெருசா நெருப்ப எரியவிட்டுட்டு அதுல குதிச்சு அவனும் எறந்துட்டான்.
இதப்பாத்த கடவுளு, ‘‘ஆஹா இந்த மூணுபேரும் ஒருத்தர மிஞ்சி ஒருத்தரு தியாகத்துல சிறந்தவங்களா இருக்கறாங்களேன்னு நெனச்சிக்கி்ட்டு புறா, வேடன் இவங்களோட உயிர்களப் புடுச்சி தன்னோட வச்சிக்கிட்டு அதுகள மீண்டும் உயிர்த்தெழவச்சி அவங்களுக்கு அருள் வழங்கினாரு.
இந்த ரெண்டுபுறாக் கதை இன்னைக்கும் வழக்கத்துல இருக்கு. என்ன பெரியவங்களுக்கு மட்டுந்தான் இதெல்லாம் தெரியும். கொஞ்சம் வளந்த புள்ளங்களுக்கு இந்தக் கதையக் கேக்குறதுக்குக்கூட நேரமில்லாம இருக்குதுங்க. புறாக்களக் கொன்னாப் பாவம்முன்னு இந்தப் பக்கம் இன்னமும் மக்கள் நெனக்கிறாங்க.