அக்கா தங்கச்சிகளப் பத்தி நெறையக் கதைகள் இந்தப் பக்கத்துல வழங்கி வருது. வளர்ரபோது எல்லாரும் கள்ளங் கபடமில்லாமத்தான் வளர்றோம். அதுக்குப் பின்னால அவங்க அவங்க நடத்தையினாலயும் சூழலாயும் மாறிப் போறாங்க. அப்பறம் அவங்க மனசுல ஏற்றத்தாழ்வு வந்து பொறாமை போட்டின்னு தேவையில்லாத குணமெல்லாம் வந்து குடியேறி வாழ்க்கையே பொறட்டிப் போடுற அளவுக்குப் போயிடுது. இததெளிவாக்குற மாதிரி ஒரு கத புதுக்கோட்டை வட்டாரத்துல வழங்கி வருது.
ஒரு ஊருல அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரு இருந்தாங்க. பெரியவ நல்லவ. ஆனா சின்னவ பொறாமை புடிச்சவ. எல்லாம் தனக்கு மட்டுமே கெடைக்கணும்னு நெனைக்கக் கூடிய சுயநலக்காரி.
அக்காவைப் பக்கத்தூருல இருக்கற ஒரு விவசாயிக்கும் தங்கச்சிகாரிய அதே ஊருல நல்ல வசதி படைச்ச ஒருத்தருக்குமா அவங்க அப்பா கட்டிக் கொடுத்தாரு. அக்கா தங்கச்சிங்க ரெண்டுபேரும் ஒரே ஊருல அடுத்த அடுத்த தெருவுல இருந்தாங்க.
அக்காகாரி தங்கச்சிகாரி மேல ரொம்பப் பாசமா இருந்தாலும் தங்கச்சிகாரிக்கு அதுபுடிக்காது. ஏன்னா தன்னைவிட வசதி கொறைவா இருக்கறதால தன்னோட அக்காகாரியோட பேசினா தன்னோட கௌரவம் கொறைஞ்சி போயிடும்னு நெனச்சி அக்காகாரி வந்தா மொகங்குடுத்துப் பேசமாட்டா.
இவ இப்படி இருக்கறதப் பாத்த அக்காகாரி அதப் பெருசா எடுத்துக்கிடல. அக்காகாரி தன்னோட வீட்டுக்கு யாராவது வந்து ஒதவின்னோ பொருளோ கேட்டா ஒடனே அவங்களுக்குக் கொடுத்துருவா. ஆனா தங்கச்சிகாரி ரொம்பக் கருமி. எச்சிக்கையாலகூட காக்கையா வெரட்டமாட்டா.
அக்காகாரி தன்னோட வீட்டுக்கு வர்ரவங்களுக்குக் கொடுத்துக் கொடுத்து ஏழையாப் போயிட்டா. அப்படி ர்ப்ம்ப ஏழையாப் போனாலும் அக்காகாரி கஷ்டம்னு வந்து யாராவது எதாவது கேட்டாலும் அப்படியும் தன்னால முடிஞ்சதக் கொடுத்தா.
ஒருநாளு அக்காகாரியும் அவளோட புருஷனும் சாப்புடறதுக்கு எதுவும் இல்லாம பட்டினியாக் கெடந்தாங்க. யாருக்கிட்டயும் எதுவும் கேக்கறதுக்கும் அவங்களுக்குக் கூச்சம். பச்சத்தண்ணிய மோந்து குடிச்சிட்டு ஆண்டவன நெனச்சிக்கிட்டு படுத்திருந்தாங்க. அப்படியே பசிக் களைப்புல தூங்கிட்டாங்க.
அப்படிப் படுத்திருந்தவங்களோட கனவுல திடீர்னு ஒரு பெரியவரு வந்தாரு. வந்த பெரியவரு, ‘‘நீங்க கவலப் படாதீங்க... நல்லவங்க கஷ்டப்படறத பார்க்கறதுக்கு என்னால முடியாது. எல்லாருக்கும் ஒதவி செஞ்ச ஒங்களுக்கு நன் ஒதவி செய்யிறேன். நான் சொல்றத மட்டும் கவனமாக் கேட்டுக்கோங்க... ஒங்க வீட்டுக்கு நாளைக்குக் காலையில ஒரு வயசான பெரியவரு வருவாரு. அவரு வந்த ஒடனே நீங்க யோசிக்காம பெரிய ஒலக்கைய எடுத்து அவரோட மண்டையில அடிச்சிப்பாருங்க. அப்படி அடிச்ச ஒடனே அவரு தங்கச் சிலையா மாறி கீழ விழுவாரு. அந்தத் தங்கச் சிலைய எடுத்து வித்து நீங்க சந்தோஷமா இருங்க’’ அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
திடீர்னு கண்ணுவிழிச்சிப் பாத்த அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரனும் அவங்க அவங்க பாத்த சொப்பனத்தை(கனவை) ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கிட்டாங்க. கனவுல வந்த பெரியவரு ஆண்டவனாத்தான் இருக்கணும். அப்படி இல்லைன்னா ரெண்டுபேருக்கும் எப்படி ஒரேமாதிரி கனவு வந்திருக்கும்னு நெனச்சிக்கிட்டு அதிகாலையில எழுந்திருச்சி குளிச்சிட்டு சாமியக் கும்பிட்டுட்டு ஒலக்கைய வச்சிக்கிட்டு வாசலப் பாத்துக்கிட்டுக் காத்திருந்தாங்க.
பளபளன்னு விடிஞ்ச ஒடனே வயசான பெரியவரு ஒருத்தரு வந்து அக்காகாரியோட வீட்டுக்கு முன்னால வந்து நின்னாரு. அதப் பாத்த அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரனுக்கும் ரொம்ப ரொம்ப ஆச்சரியம். அக்காகாரி தன்னோட வீட்டுக்காரனுக்கிட்ட பெரிய ஒலக்கைய எடுத்துக் கொடுத்து அந்தப் பெரியவர் மண்டையில அடிங்கன்னு சொன்னா.
அவனும் எதைப் பத்தியும் யோசிக்காம கனவுல வந்த பெரியவர் சொன்னமாதிரியே நடு மண்டையில ஓங்கி அடிச்சான். அடிபட்ட அந்தப் பெரியவரு ஒடனே தங்கச் சிலையா மாறி கீழ விழுந்தாரு. அதப்பாத்த அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரனும் அந்தச் சிலைய வீட்டுக்குள்ளாறக் கொண்டுபோயி பத்திரப்படுத்திட்டாங்க.
அதுக்குப் பெறகு அந்தச் சிலையில இருந்து கொஞ்சங்கொஞ்சமாத் தங்கத்த எடுத்து வித்துட்டு தங்களுக்குத் தேவையானத வாங்கிக்கிட்டாங்க. அதோடுமட்டுமில்லாம நெலம்நீச்சுன்னு வசதியா வாழ்ந்து வந்தாங்க. தங்களோட வீட்டுக்கு வர்றவங்களுக்கும் வேணுங்கறதையும கொடுத்தாங்க.
அக்காகாரி வசதியா மாறுனதப் பாத்த தங்கச்சிகாரிக்குப் பொறுக்க முடியல. இத எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு நெனச்சி ஒடனே அக்காகாரி வீட்டுக்கு வந்தா. என்னைக்கும் வராத தங்கச்சிகாரி தன்னோட வீட்டுக்கு வந்ததப் பாத்த அக்காகாரி தங்கச்சிய கூப்புட்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்தா.
ஆனா, தங்கச்சிகாரி அக்காகாரிக்கிட்ட, ‘‘அக்கா ஒனக்கு ஏம்மேல பாசம்னா நான் கேக்குறதுக்கு மட்டும் பதிலச் சொல்லு. நீ எப்படி இந்தமாதிரி வசதியா வந்த? அந்த ரகசியத்த என்கிட்ட சொல்லு’’ அப்படீன்னு கேட்டா.
அதக்கேட்ட அக்காகாரி தங்கச்சியோட நச்சரிப்புப் பொறுக்க முடியாம நடந்தத அப்படியே சொன்னா. தங்கச்சிகாரிக்குப் பேராசை அதிகமாயிடிச்சி. அவ ஒடனே தன்னோட வீட்டுக்குப் பொறப்பட்டு வந்து தன்னோட வீட்டுக்காரனுகிட்ட சொன்னா. அதுக்கு அவன், ‘‘நாமளும் சாமியக் கும்புட்டுட்டுப் படுப்போம். கடவுளு நம்மளோட கனவுல வந்து ஏதாவது சொல்றாரான்னு பாப்போம்னு’’ சொன்னான்.
ரெண்டுபேரும் சாமியக் கும்புட்டுட்டுப் படுத்தாங்க. ஆனா அவங்களுக்குத் தூக்கமும் வர்ல. கனவும் வரல. இருந்தாலும் தங்கச்சிகாரி தன்னோட புருஷங்காரனுகிட்ட, ‘‘ஏங்கனவுல சாமி வந்து ஒங்க வீட்டுக்கு நாளைக்குக் காலையில பிச்ச கேட்டு வர்ற பெரியவர ஒலக்கையால மண்டையில அடிங்க அவரு தங்கச்சிலையா மாறி விழுவாரு. அந்தச் சிலையத் தூக்கி நீங்க வச்சிக்கிடுங்க.ன்னு சொன்னாரு’’ அப்படீன்னு சொன்னா.
அவளோட புருஷனும் சரி இன்னக்கிக் காலையில நம்ம வீட்டுக்கு வர்ர வயசான பெரியவர மண்டையில அடிச்சித் தங்கச்சிலைய எடுத்துக்குவோம்னு சொல்லிட்டு அதிகாலையில ஏந்திருச்சி குளிச்சிட்டு வந்து ஒலக்கைய வச்சிக்கிட்டுக் காத்திருந்தான்.
தங்கச்சிகாரியும் புருஷன் பக்கத்துல காத்துக்கிட்டு இருந்தா. பொழுதும் விடிஞ்சிருச்சு. கொஞ்ச நேரத்துல ஒரு வயசான பெரியவரு, ‘‘அம்மா பசிக்குதும்மா... கொஞ்சம் சோறு இருந்தாப் போடுங்கம்மான்னு’’ கேட்டாரு. அதக்கேட்ட தங்கச்சிகாரி தன்னோட புருஷங்கிட்ட, ‘‘யோசிக்காமப் போயி ஒலக்கய எடுத்து அந்தப் பெரியவரோட நடு மண்டையில ஓங்கி ஒரு போடு போடுங்க... போங்க அந்தாளு போயிருவாரு... போங்க போங்கன்னு’’ அவனப் போகச்சொன்னா.
அவனும் வேகவேகமாப் போயி அந்தப் பெரியவரோட மண்டையில ஓங்கி அடிச்சான். அந்த அடி தாங்க முடியாம மண்டை பொளந்துபோயி இரத்தம் பெருகக் கீழ விழுந்து செத்துப்போயிட்டாரு. அந்தப் பெரியவரோட சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்துல இருக்கறவங்க ஓடியாந்து பாத்தாங்க பெரியவர ஒலக்கையால அடிச்சுக் கொன்ன தங்கச்சிகாரியயையும் அவளோட வீட்டுக்காரனையும் புடிச்சிக்கிட்டுப் போயி அந்த ஊரு ராசாக்கிட்ட ஒப்படைச்சாங்க. அந்த ராசா அவங்க சொன்னதக் கேட்டு, அவங்களுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கு. இவங்கள இப்படியே விட்டுட்டோம்னா எல்லாரையும் அடிச்சே கொன்னுபுடுவாங்கன்னு சொல்லி அவங்கள வெட்டுப்பாறைக்குக் கொண்டு போயி வெட்டிக் கொல்லச் சொன்னாரு.
தங்கச்சிகாரியும் அவளோட வீட்டுக்காரனும் மனசு நொந்துபோயி அழுதுகிட்டே போனாங்க. பொறாமையும் ஆசையும் அவங்களோட வாழ்க்கையையே அழிச்சிருச்சி. அவங்களோட முடிவ அவங்களாகவே தேடிக்கிட்டாங்க.