நாங்கள் இந்த மூன்று நாடுகள் பயணத்திற்குத் திட்டமிடும் போதேச் சில உறவினர்களும் சில நண்பர்களும் கீழ்க்கண்டக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
• ஹஜ் யாத்திரை அல்லது உம்ரா ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது போய் வரவேண்டும். உம்ராவை சிறப்பாக நிறைவேற்றாமல் உம்ராவுக்கு முன்னும் உம்ராவுக்குப் பின்னும் மற்ற நாடுகள் பயணம் ஏன்? (ஒரு முஸ்லிம் மாரல் போலீஸ் நாங்கள் உம்ரா நிறைவேற்றிய பிறகு முகநூலில் பதிவிட்ட சில ஒளிப்படங்களைப் பார்த்துக் கோபமுற்று இவர் உம்ரா போய் வந்தததை பயணக் கட்டுரையாய் எழுதினால் இவரது வீட்டின் முன் நின்று தீக்குளிப்பேன் எனச் சூளுரைத்தார்)
• உம்ரா போய் வந்த பின் தனியாக ஒரு தடவை துபாய்க்கும் தனியாக ஒரு தடவை எகிப்துக்கும் போய் வரலாமே?
• ட்ராவல் ஏஜென்ஸிகள் துணையில்லாமல் மூன்று நாடுகள் பயணம் தற்கொலைக்குச் சமம். உன் கணவருக்கு வயது 65, உனக்கு வயது 62. சீனியர் சிட்டிசன் வயதில் சாகசம் தேவையா?
• ஏஜென்ஸி மூலம் வெளிநாட்டுப் பயணம் போகும் போது, ஒரு குழுவாய்ப் போவோம். குழுவாய்ப் போவது ஒரு கொண்டாட்ட மனநிலை. அதனை ஒத்தைக் குரங்காய் போய் இழக்கலாமா?
• காசு மிச்சம் பிடிக்கப் பார்த்து, கூடுதல் செலவு செய்து விட்டு வந்து நிற்கப் போகிறீர்கள். சேம் சேம் பப்பி ஷேம்.
கடந்த பத்து வருடங்களில் நானும் ஆர்னிகாவும் இந்தியாவில் சுற்றாத இடமே இல்லை.
பூரி ஜகன்னாதர் கோயில், கொனார்க் சூரியனார் கோவில், புத்தகயா, நாளந்தாப் பல்கலைக்கழகம், யுவான்சுவாங் மியூசியம், ஜெய்ப்பூர், உதய்பூர், பிகானீர், குஜராத், மேகாலயா, கேரளாவின் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும், கர்நாடகா மற்றும் ஆந்திரா, மதுரா, ரிஷிகேஷ், காஷ்மீர் மற்றும் ஜம்மு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபர் தீவு, ஹிமாச்சல பிரதேஷ், எங்குமே எங்களுக்கு சிறு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. எல்லாம் இறைவன் பார்த்துப்பான் என்கிற நம்பிக்கை அல்லது நல்லதே நடக்கும் என்கிற பாசிடிவ் சித்தாந்தம்.
எங்களுக்கு வயதாகிவிட்டது. தனித்தனியாக நாடுகளைச் சுற்றிப் பார்க்க இனி ஆயுள் போதாது.
மகனிடமோ மகளிடமோ பணம் பெறக்கூடாது. அவர்களேக் கொடுத்தாலும் கூட வாங்கக் கூடாது.
ஒரு பயணம் போவது என்றால், அனைவரிடம் விசாரிப்பார் ஆர்னிகா. ஆனால் தனது சொந்த முடிவின்படி தான் பயணம் மேற்கொள்வார்.
அவர் ஜாடி என்றால் நான் மூடி.
அவர் என்ன சொன்னாலும் கட்டுப்படுவேன்.
ரயிலில் போகும் போது யாருடனும் அரசியல் பேச மாட்டார். எளிமையான சாப்பாடு. எளிமையான தங்குமிடம். வாகனம் டாக்ஸிக்குப் பதில் ஆட்டோ. இரவு ரயில் பயணம்.
அதிகாலையில் பார்க்க வேண்டிய ஊருக்குப் போய்விட்டோம் என்றால் ரூம் போட மாட்டார். ரயில் நிலையத்திலேயேக் குளித்து, புத்தாடை உடுத்தி பயணச் சுமையை கிளாக் ரூமில் வைத்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவோம்.
அதே இரவில் அடுத்த ஊருக்கு ரயில் பயணம்.
அடுத்த நாள் காலையில் அடுத்த ஊர் சேரல். குளியல். பயணச் சுமையை கிளாக் ரூமில் பாதுகாத்தல் ஊர் சுற்றல்.
இப்படி நூறு நகரங்களை ஒரு நாள் ஒரு நாள் சுற்றுலாக்களாகச் சுற்றி வந்திருக்கிறோம்.
எங்களிருவருக்கும் லோயர் பர்த் எப்போதும் கிடைக்கும்.
என்னை நன்கு தூங்கச் சொல்லிவிட்டு ஆர்னிகா விழித்துக் கொண்டே வருவார். காரணம் ஒன்று பயணச் சுமை பாதுகாப்பு. நாங்கள் இறங்க வேண்டிய நேரம் அதிகாலை 3 மணியாக இருந்து இருவரும் அசந்து தூங்கிவிட்டால் என்னாவது என்கிற முன்னெச்சரிக்கை. ஊர் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னமே ஆர்னிகா இறங்கத் தயாராகி விடுவார். கம்பார்ட்மென்ட் வாசலில் நின்று ஸ்டேஷன் வரக் காத்திருப்பார். ரயில் நின்றவுடன் மெதுவாகத் தடுக்கில் கால் வைத்து
இறங்குவார். அவசரமாய் இறங்கி நடை மேடையில் பல்டி அடித்து விடக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்ச்சி அவருக்கு.
ஹஜ் யாத்திரையை அல்லது உம்ராவை ட்ராவல் ஏஜென்ஸிகள் முழு வியாபாரம் ஆக்கி விட்டன. ஏஜென்ஸிகள் அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்துச் செயல்படுகின்றனர்.
உம்ரா போக 15 நாட்கள் தேவையில்லை. ஆறு நாட்கள் போதும் என்பது ஆர்னிகா எண்ணம்.
இன்டர்நெட் யுகத்தில் ஒரு கிழவனும் ஒரு கிழவியும் தனியாகப் பயணம் போவது ஒன்றும் பிரம்ம வித்தை அல்ல. சரியான திட்டமிடல் இருந்தால் போதும் நிலவுக்கும் ஒரு சீனியர் சிட்டிசன் ஜோடி தனியே போய் வரலாம் என்பார் ஆர்னிகா.
“ஆர்னிகா உம்ரா ட்ரிப்பை பைனலைஸ் பண்ணு!”
ஜாஸ்மினிடம் கலந்து பேசி பின்வரும் நிகழ்ச்சி நிரல் வடிவமைத்தார்.
23 01 2025 இரவு ஜெத்தாவில் இருந்து மெக்காவுக்குச் செல்லுதல். நள்ளிரவில் மெக்காவின் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தல். விடியற்காலை காபா தரிசனம் +முதல் உம்ரா.
இரண்டாவது நாள் இரண்டாவது உம்ரா.
மூன்றாவது நாள் மூன்றாவது உம்ரா.
மூன்றாவது நாள் இரவு மதினா சேருதல்.
நான்காவது நாள் மதினாவில் ஜியாரத்
ஐந்தாம் நாள் தாயிப் அல்லது ஜெத்தா.
ஜெத்தா என்றால் ஐந்தாவது நாள் மாலை கெய்ரோவுக்கு விமானம் ஏறுதல்.
“ஆர்னிகா! உம்ரா நிறைவேற்றுவதற்கான சடங்குகள் நமக்குத் தெரியாது. சொல்லித் தர ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவை. இரண்டாவது காபாவின் முன் நம் இஸ்லாமிய நீதிக் கதை தொகுப்பு 22 கடவுளுக்கு ஆயிரம் பெயர்கள் வெளியிட ஒரு மக்கத்துப் பிரபலம் தேவை!”
“இரண்டையும் செய்து கொடுக்க மக்கத்தில் வசிக்கும் ஆன்மீக வழிகாட்டி பைரோஸ்கான் உதவுவார். அவரிடம் பேசி விட்டேன்!”
“நல்லது. மெக்காவில் மூன்று நாட்கள் தங்க விடுதி மதினாவில் ஒரு நாள் தங்க விடுதி தாயிப் அல்லது ஜெத்தாவில் ஒருநாள் தங்க விடுதி முன்பதிவு செய்ய வேண்டும்…!”
ஜாஸ்மினிடம் பேசினார்.
ஜாஸ்மின் மெக்காவில் தங்க ஒரு விடுதி அறையை முன் பதிவு செய்து கொடுத்தார்.
அஸாரின் ஹோட்டல் 2
அல் அஜிஜியா வடக்கு
அல்-ஐம்ஐம்மி தெரு
அல் பத் மசூதி முன்புறம்
மதீனாவில் தங்கக் கீழ்க்கண்ட விடுதி அறையை முன்பதிவு செய்து கொடுத்தார்.
ஹாஸ்டல் 35 / அஸ்சலாம் சாலை / 42315 / மதீனா / சௌதி அரேபியா ஜெத்தாவில் தங்கக் கீழ்க்கண்ட விடுதி அறையை முன்பதிவு செய்து கொடுத்தார் ஜாஸ்மின். ஹிரா தெருவில் அந்த விடுதி அமைந்திருந்தது.
ஹோட்டலின் பெயர் காரவான் ஜெத்தா ஹோட்டல்.
வாடகை ஒரு இரவுக்கு ரூ3055/-
“என்னம்மா… மெக்கா மதீனா ஜெத்தாவில் அறை புக் பண்ணி இருக்கிறாயே… பணம் ஏதாவது கட்டினாயா?”
“இல்லை. ரூம் செக் இன் பண்ணும் போது கட்டினால் போதும்!”
“நல்லது!”
“தாயிப் போறதா சொன்னீங்க… இப்ப ஜெத்தான்னு மாத்திட்டீங்க!”
“தாயிப் போயிட்டு அன்றே ஜெத்தா ஏர்போர்ட் வருவது மிக கடினம். தவிர தாயிப் ஒரு நாள் விசிட் ரொம்ப காஸ்ட்லி!”
- அக்பர் ட்ராவல் ஏஜென்ஸி. ஆர்னிகாவுக்கும் எனக்கும் உம்ரா விசா அப்ளை பண்ணினோம்.
ஏஜென்ஸி நண்பர் ஆர்னிகாவை மேலும் கீழும் பார்த்தார்.
“என்ன சார்?”
“அதென்ன ஆர்னிகா நாசர்? ஆர்னிகான்றது முஸ்லிம் பெயர் இல்லையே?”
“ஆர்னிகா என்றால் மருத்துவக் குணம் கொண்ட ஹோமியோபதி மலர். 28 வருடங்களுக்கு முன்னமே என் பெயரை ஆர்னிகா நாசர் என மாற்றிக் கொண்டேன்!”
“ஒரு விஷயம் சொன்னா கோபிச்சுக்கக் கூடாது!”
“என்ன?”
“ஆர்னிகா நாசர் இஸ்லாமிய பெயர் இல்லை என்பதற்காக உங்க உம்ரா விசா ரிஜெக்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது!”