நிலாமகன் 28.01.2025லிருந்து 02.02. 2025 வரை எகிப்தின் கெய்ரோவில் தங்கக் கீழ்க்கண்ட விடுதியில் ஒரு இரட்டைப் படுக்கையறையினை முன்பதிவு செய்தான்.
”அப்னான் கெய்ரோ ஏர்போர்ட், 2 ஹெச் தாஹா ஹுசைன் சாலை, ஹக்ஸ் டெப், எல் நோலா, கெய்ரோ கவர்னரேட் 44 73 006, எகிப்து. ஹோட்டலின் whatsapp எண் + 20 1006453335. ஆறு நாள் வாடகை : ரூ 14046”
தனது கார்டு மூலம் நிலாமகன் முழு வாடகையையும் முன்பணமாகச் செலுத்தி விட்டான். அவன் பணம் செலுத்திய ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியதும் அவனுக்கு அதேப் பணத்தை ஜிபே பண்ணினார் ஆர்னிகா.
“ஏன் இவ்வளவு அவசரம்? மற்ற ஏற்பாடுகளையும் முடிச்ச பிறகு மொத்தமாக அனுப்பலாமே?” என்றேன்.
“நோ. அன்றையக் கணக்கை அன்றைக்கே அனுப்பி வைத்து விட வேண்டும்”
எகிப்து சுற்றுலாவை வடிவமைத்தார் ஆர்னிகா.
28. 01. 2025 இரவு அப்னான் கெய்ரோ ஹோட்டல் அடைதல். இரவு ஓய்வு.
29 01 2025 புதன்கிழமை
* கிஸா பிரமிடு (Giza Grand Pyramids)
* மெம்பிஸ் (Memphis)
* ஸ்பைனிக்ஸ் (Sphinx)
* மார்ஸ் அங்க் கல்லறை (Mars Ankh Tomb)
* மென்கார் பிரமிடு (Adult Menkaure’s Pyramids)
* சாகுரா பிரமிடு (Saqqara Pyramids)
* குபு பிரமிடு (Khufu Pyramids)
அனைத்துப் பிரமிடுகளின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பார்க்க அனுமதிச் சீட்டுகள் வாங்குதல்.
29 1 2025 இரவு ஏழு மணிக்கு. நைல் நதியின் குரூஸில் இரவு விருந்தும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும். இரவு பத்து மணிக்கு மேல் அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்தல்.
30.01.2025 (அலெக்ஸான்ட்ரியா ஒரு நாள் சுற்றுலா) வியாழக்கிழமை
* கிரிக்கோ ரோமன் அருங்காட்சியகம் (Greco- Roman Museum)
* கொய்ட் பே சிட்டாடல் (Qait Bay Citadel)
* புராதன ரோமன் கலையரங்கம் (Ancient Roman Theatre)
* கேட்டகோம்ப் (Cata Comb)
* ராயல் ஜுவல்லரி (Royal Jewellery)
* போம்பே பில்லர் Pompay Pillar)
* அலெக்ஸான்ட்ரியா நூலகம் (Alexandria Library)
* கடற்கரை
* அபு அல் அப்பாஸ் மசூதி (Mosque of Abu Al Abbas)
இரவு அலெக்ஸான்டராவிலிருந்து கெய்ரோவுக்கு திரும்பல். ஓய்வெடுத்தல்.
31.01. 2025 வெள்ளிக்கிழமை
* எகிப்திய நாகரிக தேசிய அருங்காட்சியகம் (National Museum of Egyptian Civilization)
* கிராண்ட் எகிப்ஸியன் அருங்காட்சியகம் (Grand Egyptian Museum- Gem)
* ஓபரா ஹவுஸ் (Opera House)
* காப்டிக் கெய்ரோ அருங்காட்சியகம்(Coptic Cairo Museum)
* பாய்ல் அல் சுகாமி அருங்காட்சியகம் ( Bayl Al Suhaymi Museum)
* கான் அல் ஹாலிலிஸ் அங்காடி (Khan Al Khalilis Market)
01.02.2025 சனிக்கிழமை பழைய கெய்ரோ
* இஸ்லாமிய நுண்கலை அருங்காட்சியகம் (Museum Of Islamic Art)
* ஆப்தீன் அரண்மனைஅருங்காட்சியகம் (Abdeen Palace Museum)
* குகை தேவாலயம் (Cave Church)
* சுல்தான் ஹசன் மசூதி (Sultan Hasan Mosque)
* மேனியல் அரண்மனை (Manial Palace)
* காயர் ஆன்டர்சன் அருங்காட்சியகம் (Gayer Anderson Museum)
02.02.2025 ஞாயிற்றுக்கிழமை
* இபு துலன் மசூதி (Ibu Tulun Mosque)
* அல் ஹக்கீம் மசூதி (Al Hakim Mosque)
* கெய்ரோ சிட்டாடல் (Cairo Citadel)
* அல் அச்சார் மசூதி (Al Achar Mosque)
* கெய்ரோ டவர் (Cairo Tower)
* மூஸ் தெரு (Moez Street)
* பாப் ஜுவைலா (Bab Zuwayla)
அப்படியேச் சுற்றிப் பார்த்தவுடன் 6. 8 கிலோ மீட்டர் தூரத்தில் கெய்ரோ விமான நிலையத்துக்குப் போக வேண்டும்.
02.02.2025 மாலை 5.40மணிக்கு அபுதாபிக்கு எதிஹாத் ஏர்வேயில் பயணம்.
இரவு 10: 55மணிக்கு அபுதாபி சேரல்.
நான்கு மணி நேரம் காத்திருப்புக்கு பின் நள்ளிரவு 2: 50மணிக்கு ப்ளைநாஸ் விமானத்தில் ஏறி சென்னை அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையத்துக்கு 03.02.2025 காலை 8: 30 மணிக்கு போதல்.
விமான நிலையத்திலிருந்து மெட்ரோவில் சென்னை சென்ட்ரல் போதல். மதியம் 1: 25மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் ஏறி இரவு 9: 30 மணிக்கு கோயம்புத்தூர் அடைதல்.
சிரித்தேன்.
“என்ன சிரிக்கிறே?” கண்களை இடுக்கினார் ஆர்னிகா.
“தலைகீழாகத் திட்டமிடுறீங்க. துளி பிசகினாலும் மூணு நாலு லட்ச ரூபாய் போயிடும்!”
“நம்பிக்கைதானே வாழ்க்கை. நம் பயண காலம் அருமையான தட்பவெப்ப சூழ்நிலை உள்ள காலம். நாம் வடிவமைக்கும் பயண நிரல் முழுமையையும் இறைவன் ஆசீர்வதிப்பான். நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கும்!”
தலையாட்டினேன்.
“எகிப்தில் முதல்நாள் பிரமிடுகள் சுற்றுதல் மற்றும் எகிப்து நைல் நதி குரூஸ். இரண்டாவது நாள் அலெக்ஸான்டிரியா. மூன்றாவது நாள் முழுமையும் அருங்காட்சியங்கள். நான்காவது நாள் முழுமையும் பழைய கெய்ரோ. ஐந்தாவது நாள் தற்போதைய கெய்ரோ. மொத்தம் 34 இடங்கள் பார்க்க நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டும்!”
“ஆமாம்…”
“லக்சார் போகனும் போகனும்னு சொன்ன. உங்கள் பயண நிரலில் லக்ஸாரைக் காணமே...?”
“கெய்ரோவிலிருந்து லக்ஸார் 650 கி.மீ. லக்ஸாரிலிருந்து கெய்ரோ 650 கிமீ. நம் குறுகியக் காலப் பயண அட்டவணையில் லக்ஸாரை சேர்ப்பது மிகமிகக் கடினம். ஏர்டிக்கெட் யானை விலை, குதிரை விலை. ரயில் இருக்கிறது. ரயில் சந்தைக்கடை மாதிரி இருக்குமாம். பஸ் நம்ம லாட்ஜ்லயிருந்து போய் பிடிச்சு லக்ஸார் போய் எங்கும் தங்காம நேரடியா லக்ஸாரை நாள் முழுக்கச் சுற்றி பாத்துட்டு மீண்டும் இன்னொரு பஸ்ஸில் இரவு கிளம்பி மறுநாள் அதிகாலை வந்து சேருவது அசாத்தியமான விஷயம். எகிப்தின் சினாய் பெனிசுலாவில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகம். குறிப்பாக பிர் அல் அப்த், ஷேக் ஜுவைத், ரபா, ஆரிஷ் போன்ற இடங்கள் தீவிரவாதிகளின் ஹாட்ஸ்பாட்கள். எகிப்து டூர் வந்த எழுத்தாளர் ஆர்னிகா நாசரும் அவரது மனைவி வகிதாநாசரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற செய்தி வரக் கூடாது அல்லவா?’
“உங்க கதைகளை படிச்சு வெறுத்துப் போய் கதை எழுதிய உங்களையும் கதை டைப் பண்ணிய என்னையும் தீவிரவாதிகள் கொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!”
இருவரும் சிரித்தோம்.
“நம்ம கதைகளை நாமேக் கழுவிக் கழுவி ஊத்துவோம்!”
பேசியபடியே திறன்பேசியை உயிர்ப்பித்தேன்.
ஆர்னிகா வடிவமைத்த எகிப்து டூர் அட்டவணையைப் புலனத்தில் அனுப்பினேன்.
புலனம் அழைப்பு உயிர்த்தது.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஸ்!”
“வஅலைக்கும் ஸலாம்!”
“அப்பா குறித்துக் கொடுத்திருக்கும் எகிப்தியச் சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை பாஸ்போர்ட்டில் உள்ள பெயரில் முன்பதிவு செய்!”
“இத்தனை இடங்களை ஐந்து நாட்களில் பார்க்க முடியுமா? ஒவ்வொரு இடமும் பத்து இருபது கிமீ தூரங்களில் அமைந்திருக்கும்!”
“பரவாயில்லை எடு!”
அடுத்த இரண்டு மணி நேரத்தில் எகிப்தின் அனைத்து நுழைவு சீட்டுகளையும் பிடிஎப் வடிவில் அனுப்பினாள் ஜாஸ்!