உள்நாட்டுச் சுற்றுலா மற்றும் பன்னாட்டுச் சுற்றுலாக்களை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர்.
நீங்கள் உங்களின் வீட்டை விட்டு வெளியேக் காலை வைத்தால் தான் அவர்களுக்குச் சோறு.
உங்களுக்கு நியாயமான சேவையைச் செய்து நியாயமான பணத்தைப் பெற்றுச் செல்வோர் மிகச் சிலரே.
பெரும்பாலானோர் உங்களை உறிஞ்சித் தள்ளி விடுவர்.
விடுதியில் தங்கினால் இரட்டிப்புக் கட்டணம், வாடகைக்கார் அமர்த்தினால் இரட்டிப்புக் கட்டணம்.
‘நான் யாரிடமும் ஏமாறமாட்டேன். என்ன நிதிக்குள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டேனோ, அதே நிதிக்குள் முடிப்பேன்’ எனச் சூளுரைப்பது எல்லாம் குதிரை முட்டை. வடநாட்டுச் சுற்றுலாக்களில் ஆங்கிலம் தெரிந்தாலும், பேசாமல் ஹிந்தியில் பேசிதான் நம்மை வெறுப்பேற்றுவர். ஒரு வாடகைக் காரைப் பத்து இடங்கள் பார்ப்பதற்கு எட்டு மணி நேரம் அமர்த்துனீர்கள் என்றால் நான்கு மணி நேரத்தில் மூன்று இடங்களைக் காண்பித்து விட்டு அன்றைய நாள் சுற்றுலாவை முடித்து விடுவார் வாடகைக் கார் ஓட்டுநர்.
ஒரு சுற்றுலா முகமையில் ஒரு பெரிய தொகைக்கு, டூர் பேக்கேஜ் புக் பண்ணுனீர்கள் என்றால் உங்களுக்கு மரியாதை உண்டு.
‘டூர் பேக்கேஜ் வேண்டாம். நாங்களே போய் கொள்கிறோம். வெறும் விசா மட்டும் எடுத்துத் தாருங்கள்’ எனக் கூறினால் உங்களைச் செத்த எலியைப் பார்ப்பது போல பார்ப்பர்.
-அக்பர் சுற்றுலா முகமையில் எங்கள் இருவருக்கும் துபாய் சுற்றுப்பயண விசா எடுக்க ஒரு தொகை கேட்டது.
அத்தொகை ஆன்லைனில் விசா பெறும் தொகையை விட 3000 + 3000 அதிகம் இருந்தது.
நாமாக டூரிஸ்ட் விசா அப்ளை பண்ணும் போது சில பல விஷயங்களை மறந்து விடுவோம். விசா ரிஜெக்ட் ஆகிவிடும். ஏஜென்ஸி மூலம் விசா அப்ளை பண்ணும் போது நிராகரிக்கப்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
“சார்! துபாய் விசா எடுக்கும்போதே உம்ரா விசாவும் எகிப்து விசாவும் எடுத்து விடலாமா?”
அந்த அலுவலர், “இல்லை ஒண்ணொன்னா எடுப்போம். எகிப்து விசா டெல்லிக்கு அனுப்பிதான் எடுக்கனும்!” என்றார்.
துபாய் விசா அப்ளை செய்தோம்.
“சார்! என்ன வேலை பாக்ராரு?”
“முழு நேர எழுத்தாளர்!”
“எங்க ஏஜென்சி பற்றி நெகட்டிவ்வா எதுவும் எழுதிராதிங்க…”
“பயப்படாதிங்க… எழுத மாட்டேன்…”
விசாக் கட்டணத்தை ஜிபே பண்ணிவிட்டு கிளம்பினோம்.
ஆர்னிகா துபாய், மெக்கா, எகிப்தில் இருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
புதுச்சேரியில் வசித்தபடி ஒரு மின்னிதழை நடத்தும் நண்பர் ஒரு தடவை ஒரு சம்பவத்தை என் கணவரிடம் கூறினார்.
பிரான்சில் இருக்கும் நண்பர் ஒருவர் இந்த ஆசிரியரைப் பிரான்ஸை சுற்றிப் பார்க்க அழைத்திருக்கிறார்.
“ஏர் டிக்கெட் மட்டும் எடு. மீதி செலவெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்!”
ஆனால், பிரான்ஸ் சென்ற எடிட்டரை ஒரு வாரம் கொலை பட்டினி போட்டிருக்கிறார் பள்ளி நண்பர். கடும் மன உளைச்சலுக்குப் பிறகு நண்பருக்கும் சேர்த்துப் பணம் செலவழித்த பிறகு, இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார். புதுச்சேரி
ஆசிரியர்.
வெளிநாடுகளில் வேலை செய்பவர் பெரும்பாலும் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில்தான் இருப்பர். ஒரே அறையில் ஏழெட்டு பேர் தங்கியிருப்பர். முகநூலில் அவர்கள் கொடுக்கும் பில்டப்களை நம்பக்கூடாது. அவர்களின் பொழைப்பே டப்பா டான்ஸ் ஆடும் போது உங்களை எப்படி விருந்துபசரிப்பர்?
முகநூல் நட்பு பெரும்பாலும் செயற்கையானது. தினம் உங்களுக்கு ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ ‘சாப்பிட்டீங்களா?’, ‘தூங்குனீங்களா’, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’, ‘உங்கள் வீட்டு நாய் இறந்ததற்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ மெசேஜ் அனுப்புவார்கள். அவர்கள் ஊருக்குச் சென்று பாருங்கள் ஓடி ஒளிந்து கொள்வர்.
எண்பது வயது பிபி சுகர் கிழவிக்கு ‘டோலீ… வாங்க எங்காவது ஓடிப் போய் விடலாம்’ எனக் கள்ளக்காதல் மெசேஜ் அனுப்புவார்கள். கிழவிகள் அவர்களை நம்பிப் போனால் நடுரோட்டில் பிச்சை எடுக்க வேண்டியது தான்.
என் கணவர் பிரபல எழுத்தாளர் ஆச்சே! வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் சங்கங்கள் என் கணவரை அழைத்துக் கூட்டம் நடத்திப் பேசச் சொல்லி ஊர் சுற்றிக் காட்டுவார்களா?- என எதிர்பார்த்தேன்.
அவர்கள் சினிமா, டிவி நடிகைகளைத் தான் கூப்பிடுவர்.
நானும் ஆர்னிகாவும் அந்தமான் போன போது, அங்கிருக்கும் தமிழ்ச் சங்கம் தீக்கோழியாய் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டது.
ஒரு சில தமிழ் சங்கங்கள் விதிவிலக்காய் சிறப்பாய் செயல்படலாம். எங்களுக்கு நேரடி அனுபவமில்லை.
சில தமிழ் சங்கங்கள் சுற்றுலா ஏற்பாடு பண்ணி இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கும்.
‘நான் நைட்டி அணிந்தேன்
மேடு பள்ளங்கள் முளைத்தனச
றுக்கி விழுந்து விடாதீர்கள்
டோலர்களே’
என யாராவது ஒரு பெண் பெயர் பேக்ஐடி ‘க(ழு)விதை’ எழுதினால்-
‘ஆஸம் டோலீ’
‘இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கவிதை’
‘கம்பன் தோற்றான்’
-எனப் பின்னூட்டம் இடுவர்.
ஒரு போஸ்ட் கம்பத்துக்கு புடவையை சுற்றி விட்டாலும் ஜொள்ளு மழை பொழிவர்.
எந்த வெளிநாட்டு முகநூல் நண்பரும் எங்களை இருகை நீட்டி வரவேற்கவில்லை.
“அய்யய்யோ… நீங்க நாலு மாசத்துக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதா? இப்ப அந்த அப்பார்ட்மெண்ட்டை காலி பண்ணிட்டு சில பேச்சிலர்களுடன் தங்கி இருக்கிறேன்!”
“ஆக்சுவலா நான் துபாயில் இல்லை. அபுதாபியில் இருக்கிறேன். தினம் துபாய்க்கு வந்துவந்து போகிறேன்!”
“நீங்க தனியா வர்றது தப்பு இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல. ஏதாவது ஒரு ஏஜென்ஸியின் டூர் பேக்கேஜில் சேருங்கள்!”
“உம்ரா போற நீங்க நேரா உம்ரா போகாம எதுக்கு துபாய் எகிப்தெல்லாம் போறீங்க?. எகிப்துல தீவிரவாதமும் திருட்டும் அதிகம். பாஸ்போர்ட் விசா பணத்தைத் திருடு கொடுத்துட்டு எகிப்து பிரமிடு வாசலில் அழுதிட்டு நிக்கப் போறீங்க!”
“ஆர்னிகா நாசர் பழைய கால எழுத்தாளர் ஆச்சே… இப்பவும் எழுதுராரா?”
“வயசான காலத்ல மூணு நாடுகளின் டூர் தேவையா?”
ஆர்னிகா எப்போதும் எதிர்நீச்சல் போட்டே பழக்கப்பட்டவர். புயலிரவு கடலில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்.
கடந்தப் பத்து வருடங்களில் நானும் ஆர்னிகாவும் இந்தியாவில் சுற்றாத இடமேக் கிடையாது.
குருவாயூர் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் பிரவேசித்தால் பத்தாயிரம் அபராதம் என பயமுறுத்தினர்.
தைரியமாக நானும் ஆர்னிகாவும் கோயிலுக்குள் போய் வந்தோம். சுற்றுலா செல்ல அடிப்படையில் ஒரு திட்டம் போடுவார் ஆர்னிகா. அதன் பின், சாதக பாதங்களை ஆராய்ந்து திட்டத்தை மேம்படுத்திக் கொண்டே வந்து திட்டத்தை
முழுமைப்படுத்துவார்.
யாரையும் நம்பிச் சுற்றுலா செல்ல மாட்டார். ஆனால் எல்லாரிடமும் விசாரிப்பார்.
ஆர்னிகா தினமலர் வாரமலரில் ‘சூரியன் சந்திப்பு’ என்கிற நேர்காணல் தொடர் எழுதினார்.
அதில் ஒரு பெண்மணிக்கு அவரது தந்தை கூறிய அட்வைஸ்:
‘புதிய ஊருக்கு போனால் மூவரிடம் வழி கேட்டு சரியான வழியை உறுதி செய்!’
ஆர்னிகா யாரிடமும் பேசும் போது ஒன்றுமேத் தெரியாதவர் போல அப்பாவியாய் விஷயங்களைக் கேட்பார். ஆனால் இறுதியில் புத்திசாலித் தனமாகச் செயல்படுவார்.
“நீங்க இமாமோ ஆலிமோ இல்லை. உங்களிடம் முஸ்லிம்களுக்குரிய அடையாளம் இல்லை. தினம் ஐந்து வேளை தொழுகிற மாதிரியும் தெரியலை. அப்புறம் எப்படி இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதுகிறீர்கள்?” எனக் கேட்பர்.
“மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்து பரிசு வாங்க செல்லும் தருமி அல்ல நான். ஒரு இஸ்லாமிய நீதிக்கதைக்கு நான்கைந்து வாரங்கள் செலவழித்து தகவல் குறிப்புகள் சேகரிக்கிறேன். ஒரு விஷயத்தை தேடிக் கற்றுக் கொள்கிறேன். கற்றுக் கொண்டதை பிறருக்கு எடுத்து வைக்கிறேன்” என்பார்.
மகள் ஜாஸ்மின் மெக்ஸிகோவில் இருந்து போன் பண்ணினாள்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்னப்பா பண்றீங்க?”
“துபாய் விசா அப்ளை பண்ணிட்டோம்!”
“நல்லது. ஒரு அய்டியா சொல்றேன் கேளுங்க!”
“சொல்லுங்க!”
“உங்களிருவரின் பாஸ்போர்ட் புத்தகத்தின் முதல் பக்கத்தை போட்டோ எடுத்து அனுப்புங்க. உங்க மூணு நாட்டு ஏர் டிக்கெட்டுகளின் காப்பி அனுப்புங்கள்!”
“சரி!”
“மீண்டும் சொல்கிறேன். நான் மூணு நாடுகளிலும் ஹோட்டல் புக் பண்ணுகிறேன். அது தவிர, நீங்கள் மூணு நாடுகளிலும் பார்க்கக்கூடிய டூரிஸ்ட் ஸ்பாட்களை எந்தெந்த தேதிகள் பார்க்கலாம் என புரோக்ராம் சார்ட் அவுட் பண்ணித் தருகிறேன்!”
“சரி!”
“துபாயில் 12 இடங்கள் உம்ராவில் மெக்கா மூன்று நாட்கள் மதீனா ஒரு நாள் ஜெத்தா ஒரு நாள் எகிப்து ஐந்து நாட்கள். மொத்தம் 50 டூரிஸ்ட்ஸ்பாட்களையாவது நீங்கள் பார்க்க அந்தந்த நாட்டின் அதிகாரப்பூர்வ டூரிஸ்ட் வெப்சைட்டுக்கு சென்று அமெரிக்கன் டாலரில் பணம் கட்டி நுழைவு சீட்டுகள் ரெடி பண்ணி விடுகிறேன். எல்லா நுழைவுசீட்டுகளின் பிடிஎப் உங்களுக்கு அனுப்புகிறேன். ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பிரிண்ட் அவுட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!” மீண்டும் வலியுறுத்தினாள்.
“சரி!”
“அஞ்சு பைல் ரெடி பண்ணிக்கங்க. ஒரு பைல் துபாய். ஒரு பைல் உம்ரா. ஒரு பைல் எகிப்து. ஏர்போர்ட் பார்மலிட்டீஸ் ஒரு பைல். மிஸ்ஸலேனியஸ் ஒரு பைல்.”
“சரி!”
“நீங்க ரெண்டு பேரும் கொரோனா தடுப்பூசி போட்ருக்கீங்களா?”
“பர்ஸ்ட் செகன்ட் பூஸ்டர் போட்டிருக்கிறோம்!”
“தடுப்பூசி போட்ட சான்றிதழை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்க. இப்ப கொரோனா பற்றி எதுவும் கேக்ரதில்லை. இருந்தாலும் ஒரு சேப்டிக்கு…”
கண்ணபரமாத்மா அர்ச்சுனனுக்கு கீதாபதேசம் பண்ணுவது போல ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கினாள் ஜாச் அக்கா என்கிற ஜாஸ்மின்.