ஆர்னிகா மூன்று நாடுகள் பற்றிய தகவல் குறிப்புகளைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
முதலில் துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள். மூன்றரை நாட்களில் முடிந்த வரை பார்ப்போம்.
1. குளோபல் வில்லேஜ் - கட்டணம் விடுமுறை நாட்களில் 30 திர்ஹாம் அல்லது 700 ரூபாய். வார நாட்கள் 575 ரூபாய். இது வருடம் முழுக்கத் திறந்திருக்காது. அக்டோபர் மாதத்தின் பின் பகுதியிலிருந்து மே மாதம் பின்பகுதி வரை தான் திறந்திருக்கும். அடுத்தத் திறப்பு அடுத்த அக்டோபர் மாதத்தின் பின்பகுதிதான்.
2. அபுதாபி அரைநாள் சுற்றுலா - ஒரு நபருக்கு ரூ2500 பார்க்கும் இடங்கள்:
அ) ஷேக் ஜாயித் கிராண்ட் மசூதி
ஆ) பாரம்பரியக் கிராமம்
இ) எமிரேட்ஸ் அரண்மனை
ஈ) பேரீச்சம்பழம் அங்காடி
உ) பெர்ராரி வோர்ல்டு
ஊ) லோவர் அருங்காட்சியகம்
எ) பாப்ஸ் ஹிண்டு மந்திர்
3) இரவு - துபாய் டோவ் க்ரூஸ் படகு பயணம் மற்றும் விருந்து - தலைக்கு 2700 ரூபாய்
4) புர்ஜ் கலிபா - கட்டணம் ரூ 4200/-
5) டால்பினேரியம் - கட்டணம் தலைக்கு ரூ1161
6) இதிகாட் அருங்காட்சியகம் – தலைக்கு 600 ரூபாய்.
7) அல் பஹதி கோட்டை- ரூ70/-
8) துபாய் கோல்ட் சௌக் -இலவசம்
9) சேக் முஹமது சென்டர் -தலைக்கு 3000 ரூபாய்.
10) துபாய் கிரீக் துறைமுகம் - துறைமுகம் நுழைவு இலவசம்.
11) துபாய் பிரேம் - தலைக்கு 1161ரூபாய்.
12) பாம் ஜுமைரா கடற்கரை – இலவசம்.
13) துபாய் நீர்ஊற்று - தலைக்கு ரூ1566.
14) துபாய் அக்குவாரியம் – தலைக்கு ரூ 4624/-
15) ஓமர் பின் அல் கத்தாப் மசூதி -முஸ்லிம்கள் மட்டும் இலவசம்.
16) எதிர்கால அருங்காட்சியகம் - தலைக்கு ரூ3700/.
17) மிர்ரகிள் தோட்டம் –தலைக்கு ரூ 2000/-
18) துபாய் பழைய நகரம் – இலவசம்.
19) துபாய் பாலைவன சபாரி – 2500 ரூபாய்
20) துபாய் மால் - இலவசம்.
“ஸோ… துபாயில் நாம் பார்க்கக்கூடிய இடங்கள் இருபது!” என்றார் ஆர்னிகா.
“இருபது இடங்களுக்கும் நுழைவு கட்டணம் கணக்கு பார்த்தா அதுவே அம்பதாயிரம் அறுபதாயிரம் ரூபாய் ஆகுதே!”
“இந்த இருபது இடங்களில் ஏழெட்டு இடங்களை கட் செய்யலாம்!”
“ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக டாக்ஸி செலவு ஹெவியா இருக்கும்!”
“ உண்மைதான்!”
“துபாய் ட்ரிப்பில் நாம் கவனிக்க வேண்டிய நாலு விஷயங்கள் உள்ளன. ஒன்று நம் தங்குமிடம். காஸ்ட்லியாக இருக்கக்கூடாது. கேப்ஸ்யூல் அறைகள் சீப்பாக கிடைக்கும். இரண்டு, நம் உணவுச் செலவு. நோ நான்வெஜிடேரியன் ஃபுட். மூன்று, ட்ரான்ஸ்போர்டேஷன். அதற்கு சுமி உதவி தேவை. யாராவது தமிழ் டிரைவர்களை சுமி அமர்த்திக் கொடுத்தால் தேவலை. நான்கு, சுற்றிப் பார்க்கும் இடங்களின் நுழைவுச் சீட்டுகளைத் தேதி பிரித்து முன்னமே எடுத்து விட வேண்டும்.”
திறன்பேசி சிணுங்கியது.
எதிர்முனையில் சுமி.
“வணக்கம் மாமி!”
“வணக்கம் சுமி!”
“இன்னும் இரண்டு வாரத்தில் என் அத்தை பையன் சுமேஷுக்கு கொச்சினில் திருமணம். இன்விடேஷன் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன். நீங்களும் மாமாவும் ஷோரனூர் வந்து விடுங்கள். காரில் கொச்சின் போய்விடலாம். அப்படியே உங்கள் டூர் பற்றியும் பேசலாம்!”
“ஓகே சுமி!”
சுமேஷ் கல்யாணத்துக்கு நான் மட்டும் போய் வந்தேன்.
“என்ன திருமணம் நல்லபடியா முடிஞ்சதா?”
“முடிந்தது!”
“லவ் மேரேஜா?”
“இல்லை அரேஞ்டு மேரேஜ்தான்!”
“நல்லா கவனிச்சிட்டாங்களா?”
“ஓ. சுரேஷின் அம்மாஸ்தானத்தில் நின்று திருமணத்தை நடத்தி கொடுத்தேன். எனக்குப் புடவையெல்லாம் பரிசளித்தார்கள்!”
“ஓஹோ!”
“எல்லோரும் மாமா வரலையா மாமா வரலையான்னு கேட்டாங்க!”
“மகிழ்ச்சி!”
“சுந்தரம் நல்லா இருக்காரா?”
“நல்லா இருக்கார் வாயைத் திறந்தா மகன் மகள் பெருமைதான்!”
“சுந்தரத்தின் மனைவி கடும் உழைப்பாளி. அவரால் தான் சுந்தரத்தின் குடும்பம் தலைநிமிர்ந்தது. சுந்தரத்தின் அண்ணன் ஸ்ரீதருக்கும் எனக்கும்தான் ஆகாது. யூனியன் மோதல். சுந்தரத்தின் மகன் சஜி கெட்டிக்காரன். அவன் வீட்டில் தங்கிதான் மும்பை முழுக்க சுற்றி பார்த்தோம்.. பொதுவாக கேரளாக்காரர்கள் அன்பானவர்கள் நட்பை பராமரிப்பவர்கள்…”
“உங்களுக்கு ஒரு திடுக்கிடும் ந்யூஸ் கொண்டு வந்திருக்கிறேன்!”
“என்ன?”
“சுமி துபாய் வேலையை ரிசைன் பண்ணிட்டு ஒன்ஸ் பார் ஆல் ஷோரனூர் வந்துட்டாளாம். தமிழ் டிரைவர்ஸ் கான்டாக்ட் எல்லாம் கைவசம் இல்லையாம்…”
ஒரு மாதிரி சிரித்தார் ஆர்னிகா.
“என்ன சிரிக்கறீங்க?”
“நாம எதை செய்ய தொடங்கினாலும் தடங்கல்கள் அடுக்கடுக்கா வந்து நிற்கும். தடங்கலை தாவி குதித்து போகனும்!”
“துபாய் விசா நாம் நேரடியா அப்ளை பண்ண வேண்டாம் கோயம்புத்தூர் அக்பர் டிராவல்ஸ் மூலம் செய்வது நல்லது என சுமி கூறினாள்!”
“சரி!”
இரவு எட்டு மணிக்கு மகள் ஜாஸ்மினுக்கு வாட்ஸ்அப் கால் பண்ணினேன்.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஸ்!”
“வஅலைக்கும் ஸலாம் அம்மா. டூர் விஷயம் என்னாச்சு?”
சுமியை முழுக்க நம்பி ஏமாற்றம் அடைந்ததை விவரித்தேன்.
“துபாய்க்கு அவ கூப்பிடும் போதெல்லாம் நீங்க போகல. அவ வேலையை ரிசைன் பண்ணிட்டு வர்ற நேரமா பாத்து துபாய் போனா அவ என்ன செய்வா? விடுங்கம்மா.. உங்க டூரை இனி நான் பார்த்துக்கிரேன்!”
“என்னடி சொல்ற? நீ மெக்சிகோவில் உக்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணுவ?”
“எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் இல்லாத ட்ராவல்ஸ் அனுபவங்களா? மெக்சிகோவிலிருந்து தனி ஆளா கிளம்பி மூணு விமானங்கள் மாறி இந்தியா வந்து மெக்ஸிகோ திரும்பலையா நான்? என் கணவர் ஒரு கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட்!”
“ஆமாம்!”
“20.01.2025 மாலை துபாய் போறீங்க. 23 .01.2025 மாலை ஜெத்தா கிளம்புறீங்க. இதுக்குள்ள நீங்க துபாய்ல என்னென்ன இடங்கள் பார்க்கலாம்? எங்கு தங்கலாம்? ஈஸி ட்ரான்ஸ்போர்ட்டேஷன் எப்படி பண்ணலாம்? மொத்தமா ஒரு அட்டவணை தயார் பண்ணுறேன். முதல் நாள் இரவு குளோபல் வில்லேஜ். இரண்டாம் நாள் அரை நாள் அபுதாபி டூர். இரவு துபாய் க்ரூஸ் சபாரி. மூன்றாம் நாள் ஒரு நான்கு இடங்கள்.
நான்காவது நாள் ஒரு மூன்று இடங்கள். நான்காவது நாள் மூன்றாவது இடம் பார்த்து முடித்த பின் நேராக துபாய் விமான நிலையம். ஓகே?”
“ஓகே ஜாஸ்!”
“அபுதாபி டூர், டோவ் குரூஸ், டெசர்ட் சபாரி இதெல்லாம் தனியார் ஏஜென்சிதான் அரேன்ஞ் பண்ணி தருவாங்க. மூணையும் முதல்ல புக் பண்ணிடுறேன்!”
“சரி!”
“மீதி டூரிஸ்ட் ஸ்பாட் எல்லாம் அதிகாரப்பூர்வ வெப் சைட்டுகளுக்கு போய் உங்க ரெண்டு பேருக்கும் என்ட்ரி டிக்கெட் புக் பண்றேன்!”
“ரைட்டோ!”
“துபாய் பிரேம் போனீங்கன்னா புர்ஜ் கலீபா வேண்டாம். துபாய் மால் பார்த்துட்டு இறங்கி சைடுல வந்தீங்கன்னா புர்ஜ் கலீபாவையுடன் துபாய் பவுண்டைனையும் பக்கத்தில் பக்கம் பார்க்கலாம். புர்ஜ் கலீபா, துபாய் பவுன்டைன் முன்னாடி நின்று நீங்க ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்கங்க. ரெண்டு பேருக்கும் சேத்து பத்தாயிரம் மிச்சமாகும்!”
“அப்படியேச் செய்றேன்!”
“சுமி சொன்ன மாதிரி நாளைக்கு காலை அக்பர் டிராவல்ஸ் போங்க. துபாய் விசா அப்ளை பண்ணுங்க. நான் டிக்கெட் புக் பண்றதுக்கு முன்னாடி ஸ்கிரீன்ஷாட்ஸ் அனுப்புறேன். அப்பா ஓகே சொன்ன பிறகு டிக்கெட் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன்!”
நானும் ஆர்னிகாவும் அக்பர் டிராவல்ஸ் பிரவேசித்தோம். தென்காசி கருணைராஜா காத்தமன் நபி மகன் ஷேக்கின் சாயலில் ஒருவர் எங்களை வரவேற்றார். சுற்றுலாவுக்கான முதல் கதவு திறந்தது.