ஆர்னிகா ஏஜென்ஸி நண்பரின் அருகில் சென்றார்.
“உலகின் 57 நாடுகளில் 200 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த மண்வாசனைவுடன் முஸ்லிம் பெயர்கள் உள்ளன. சீனாவில் வைக்கப்படும் இஸ்லாமியப் பெயர்களில், இஸ்லாமியக் கலாசாரமும் சீனக் கலாசாரமும் பிண்ணிப் பிணைந்துள்ளன. கூடவே அராபிக் மற்றும் பெர்ஷியன் துணுக்குகளும் கலந்துள்ளன.
“சீன முஸ்லிம் இனக்குழுக்களான ஹுய் (Hui), உய்கர் (Uighur), கஸாக் (Kazakh), கைர்ஜ் (Kyrgyz), உஸ்பெக் (Uzbek), தஜிக் (Tajik), தத்தார் (Tatar), சலார் (Salar), டாங்ஸியாங்,(Dongxiang),போனான் (Bonan)களில் வெவ்வேறு விதமான முஸ்லிம் பெயர்கள் சூட்டப்படுகின்றன”
“அப்படியா சார்?”
“உய்கர் இனக்குழு முஸ்லிம் பெண்ணின் பெயர் குல்நிசா (Gulnisa), இதற்கு மலர்ப்பெண் என அர்த்தம்.
“ஹுய் முஸ்லிம் ஆண் ஒருவருக்கு பெயர் இன் பா லா ஹாய் மி (இப்ராகிம்). மரியம் என்கிற பெயரை மா லி யா மி என்கின்றனர். பாத்திமா என்கிற பெயரை பா டி மி என்கின்றனர்.
“உய்கர் முஸ்லிம் ஆணுக்கு பெயர் தோமுர். பெண்ணுக்கு பெயர் தான் சூ லு”
“டாங்சியாங் முஸ்லிம் ஆணுக்கு லாஹமான் என பெயர் வைத்துள்ளனர். இப்ராகிம் என்கிற பெயரை யீபுலாஹிக்மு என்கின்றனர்...”
“எல்லாம் வாயிலேயே நுழையாத பெயர்கள்!”
“ஒரு உதாரணத்துக்குச் சீன முஸ்லிம் பெயர்களைக் கூறினேன். இது போலப் பல நாடுகளில் முஸ்லிம் பெயர்கள் எனத் தெரியாத முஸ்லிம் பெயர்கள் புழங்குகின்றன. அந்த பெயர்களுக்கு எவ்வித மதரீதியான ஆட்சேபனையும் இல்லை...”
“நீங்கள் நடத்துகிற பாடம் எனக்குப் புரிகிறது. ஆனால் உங்களுக்கு விசா கொடுக்கும் அரபிக்கு உங்கள் பெயர் நியாயம் புரிய வேண்டுமே?”
“வருடம் ஒரு கோடி முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை மேற்கொள்கின்றனர். கோடிக்கணக்கான முஸ்லிம் பெயர்கள் அறிமுகமான ஒரு அரபிக்கு என் பெயர் காரணம் புரியாதா?”
“நான் குறுக்கேப் புகுந்து உங்களுக்கு விசா வழங்குவதைத் தடுக்கவில்லை. கொடுத்தால் மிகுந்த சந்தோஷம்”
“என் மகனின் பெயர் நிலாமகன். அவர் உம்ரா செல்லும் போது அவருக்கும் விசா கிடைக்குமா? கிடைக்காதா?”
“நோ கமெண்ட்ஸ்”
“நிலாமகன் என்றால் இப்னுபத்ர் என பொருள்!”
“விடுங்க அவருக்கு வேப்பிலை அடிக்காதீங்க. நாம கிளம்புவோம்!” என்றேன்.
நானும் ஆர்னிகாவும் மூன்று நாடுகள் சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லும் அனைத்து பொருட்களையும் பட்டியலிட்டோம்.
* எங்கள் இருவரின் பாஸ்போர்ட் (பாஸ்போர்ட் பயணத்தேதிக்கு பின் ஆறு மாத காலமாவது செல்லுபடி ஆகவேண்டும்) பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தை உள்பக்கத்தை ஸ்கேன் பண்ணி திறன்பேசியில் சேமிக்க வேண்டும். பாஸ்போர்ட் தொலைந்து போனாலோ, திருடு போனாலோ ரிட்டர்ன் ஜர்னிக்கு பாஸ்போர்ட் ஸ்கேன் உதவும். பாஸ்போர்ட்டின் மீது எண்ணெய் கறையோ டீக்கறையோப் படக்கூடாது
* மூன்று நாட்டு விசாக்கள்.
* சென்னை - துபாய், துபாய் - ஜெத்தா, ஜெத்தா- கெய்ரோ, கெய்ரோ - சென்னை விமான டிக்கெட்கள்.
* நான்கு கண்ணாடி பைல்கள். ஒரு பைல் துபாய். ஒருபைல் உம்ரா, ஒரு பைல் எகிப்து. ஒரு பைல் இதர ஆவணங்கள்.
* 22 C 14C 09 இன்ச் அல்லது 56 C 36 C 23 செமீ அளவுகளில் இரு வெவ்வேறு நிற சூட்கேஸ்கள். ஒன்று எனக்கு. இன்னொன்று ஆர்னிகாவுக்கு. சூட்கேஸ் கொள்ளளவு 30 லிருந்து 45 லிட்டர்.
ஓவர் சைஸ் சூட்கேஸ்கள் விமான நிலையத்திலும் ஜெத்தா- மெக்கா ரயில் பயணத்திலும் சிக்கல்.
* எனக்கு பத்துப் புடவை + பிளவுஸ் + ஜாக்கெட் செட். +இரு நைட்டிகள். மூன்று ஹிஜாப்புகள்.
* ஆர்னிகாவுக்கு 12 சட்டைகள் + 3 ஜீன்ஸ் +10 உள்ளாடைகள் + உம்ரா ஆடை இரண்டு செட். (உம்ரா ஆடை சம்பந்தி வாங்கித் தந்தது)
* ஆளுக்கொரு தஸ்பீஹ்மணி மாலை மற்றும் துஆ புத்தகங்கள். குர்ஆன் தமிழ் பதிப்பு.
* ஆளுக்கு மூன்று செட் காலுறைகள். தலைக்கு ஒரு ஒரு ஸ்போர்ட்ஸ் தொப்பி மற்றும் ஆர்னிகாவுக்கு ஒரு துணி தொப்பி.
* எல்லா நாட்டுக்கும் பின்கள் பொருந்தும் விதத்தில் யுனிவர்சல் அடாப்டர் ஒன்று (அமேசானில் ஆர்டர் பண்ணி வாங்க வேண்டும்)
* சன் கிரீம், தலைக்கு போட ஹிமாலயன் கேர்கிரீம்.
* டூத் பேஸ்ட், இரு டூத் பிரஷ்கள், இரு நாக்குசுத்தப்படுத்திகள், ஆளுக்கொரு குளியல் திரவ சோப் 100 மில்லி டப்பா.
* குறிப்பு நோட்டு சின்ன சைஸ். இரண்டு பேனாக்கள்.
* ரஸ்க், பிளம்கேக், பால் பவுடர், காபித்தூள், தேயிலைத் தூள், ஜீனி, டிட்பிட்ஸ்.
* இருவருக்கும் 15 நாட்களுக்கான மருந்து மாத்திரைகள் (மருத்துவர் சான்றிதழ்களுடன்) மருத்துவர் சான்றிதழ் இல்லாவிட்டால் மருந்து மாத்திரைகளை அனுமதிக்க மாட்டார்கள்.
* எங்களது ஆறு ஆறு பாஸ்போர்ட் சைஸ் ஒளிப்படங்கள்.
* துபாயில் சில ஆப்புகள் டவுன்லோட் செய்தல். போக்குவரத்துக்கும் தகவல் தொடர்புக்கும்.
* உம்ராவுக்கு தலா ஒரு பாத்ரூம் செருப்பு. முன்னங்கால் பின்னங்கால் மறைபடக் கூடாது.
* கடவுளின் திருப்பெயர்கள் இஸ்லாமிய நீதிக்கதை தொகுப்பு எண் 22- ஐந்து பிரதிகள் காபாவில் வெளியிட.
* ஆளுக்கு ஆறு ஆறு ராம்ராஜ் பிராண்ட் மாஸ்க்குகள்.
* துபாய்க்கு மூன்று நாள் கைச்செலவுக்கு 800 ரியால்கள். இந்திய மதிப்புக்கு 23, 000 ரூபாய். உம்ரா ஐந்தரை நாள் செலவு 1000 திர்ஹாம்கள். இந்திய மதிப்பு 18400 ரூபாய். எகிப்து செலவுக்கு 750 அமெரிக்கன் டாலர். இந்திய மதிப்புக்கு 60, 000 ரூபாய். எகிப்தில் லோக்கல் கரன்ஸிக்கு துளி மதிப்பில்லை. எல்லாம் டாலர்கள்தான். மணி எக்ஸ்சேஞ்ச்சில் கமிஷன் அதிகம். சில வங்கி பணபரிமாற்றத்திலும் கமிஷன் அதிகம். கையில் கொண்டு செல்லும் வெளிநாட்டு பணத்துக்குள் அந்தந்த நாட்டு கைச்செலவை கட்டுப்படுத்தி விடலாம்.
* கோவிட் முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் ரோஸ் சான்றிதழ் போட்டோ காப்பியாய்.
* அந்தரங்க இடங்களில் உள்ள ரோமங்களை போக்க ஹேர் ரீமூவர் கிரீம்.
* சர்வதேச கால்கள் பேச பயணநேரத்தில் ஏர்டெல்லில் தனி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
* திறன்பேசியில் உள்ள தேவையற்ற ஒளிப்படங்களை அகற்றிவிட்டு புதிதாக நிறைய ஒளிப்படங்கள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
* பயணம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து தனி பைலாக திறன் பேசியில் சேமிக்க வேண்டும்.
* அமிர்தாஞ்சன், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் Loparamide, தலைவலி காய்ச்சல் போக்க பாரசிடமால், செரிமானத்துக்கு டைஜின் மாத்திரைகள்.
* நெயில் கட்டர் மற்றும் சிறு கத்திரிக்கோல்.
* கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் ஆப் பதிவிறக்கம்.
* ஆர்னிகாவுக்கு இரு பேகிஸ் டவுசர் மற்றும் ஒரு லுங்கி.
* கிப்லா திசை காட்டும் கருவி.
* துபாயில் மருமகனின் சாச்சாவின் தொடர்பு எண், சௌதி அரேபியாவில் மருமகனின் அண்ணன் ஷேக் பரீத் மற்றும் பைரோஸ் கான் தொடர்பு எண், எகிப்து நண்பர்கள் தொடர்பு எண்.
* எனக்கு கால்களில் தேய்க்க ஆயுர்வேதிக் தைலம். மூட்டு வலிக்கு ஆயுர்வேதிக் மாத்திரைகள் மருத்துவர் பிரிஸ்கிரிப்ஷனுடன்.
* வங்கியில் தனியாக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் அவசர தேவைக்கு.
* FOGG Body Spray
* ஊக்கு பாக்கெட் ஒன்று.
* இரண்டு கோதுமை பிரட்கள். ஜாம் டப்பா. மயோனிஸ் டப்பா
* ஆளுக்கு நான்கு நான்கு கர்ச்சிப்கள்.
* ஆளுக்கு ஒரு ஜோடி புதிய காதிம் செருப்புகள். குடை
* ஆல் அவுட் கொசுவத்தி மெஷினுடன்.
* பஞ்சு ஒரு ரோல்.
* சூட்கேஸின் மீது ஒட்ட தனித்தனி லேபிள்கள் மற்றும் தொங்கும் முகவரி அட்டைகள், பச்சை நிற மார்க்கார் பேனா.
* சூட்கேஸை எடை போட போர்ட்டபிள் எடை காட்டி.
“இப்போதைக்கு இது போதும். பயண நேரத்தில் வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் அதனை வாங்கி பட்டியலில் சேர்ப்போம்!”
அக்பர் ட்ராவல்ஸிலிருந்து whatsapp செய்தி வந்திருந்தது. அது துபாய் விசா!