எப்போதுமே இரவு உணவு முடித்த பின் ஆர்னிகா எங்களது படுக்கையறைக்குச் செல்வார்.
ஆல் அவுட்டை ஆன் செய்வார்.
ஜீரோ வால்ட் பல்ப்பை எரிய விடுவார்.
என்னைத் தூங்கச் சொல்லிவிட்டு பக்கத்து அறைக்குப் போவார். எழுதப் போகும் கதைக்கு குறிப்புகள் எடுத்து, அதனைக் குறிப்புகள் நோட்டில் எழுதுவார். ஒரு சிறுகதைக்குக் குறிப்பெடுக்க குறைந்தது இரண்டு மணி நேரமாகும். அதன் பின் மறுநாள் எழுத வேண்டிய கதையின் தலைப்பை மார்க்கர் பேனாவால் டிசைன் பண்ணுவார். தலைப்புக்கு அருகில் கதை தொடர்பான ஓவியத்தை வரைவார். குறிப்புகள் எடுத்தபின் திறன்பேசியிலுள்ள ஒடிடி தளங்களில் உலவுவார். அதிகமாக அவர் விரும்பி பார்ப்பது கார்ட்டூன் படங்களைத்தான். குங்க்பூ பாண்டா 4 பார்த்துவிட்டு பாண்டா கரடி போலவே ஒரு வாரம் உருண்டு புரண்டார். தவிர, ஐம்பதுக்கும் மேற்பட்ட க்ரைம் அண்டு திரில்லர் படங்களை பத்து பத்து நிமிஷம் பார்த்து விட்டிருந்தார். ஆனால் சிறு பட்ஜெட் படங்களை விரும்பிப் பார்ப்பார்.
-இரவு சமையலறை வேலையை முடித்துவிட்டு மாடிப்படிகள் ஏறினேன். “எப்பா! எங்கிருக்க?” கூவினேன்.
பதில் இல்லை.
அவர் கதை எழுதும் அறைக்குப் போய்ப் பார்த்தேன். அவர் அங்கில்லை.
நாங்கள் அனந்தசயனம் கொள்ளும் படுக்கையறையில் தேடினேன். அங்கும் இல்லை.
சிக்னல் கிடைக்கவில்லை என்றால் பால்கனி கதவைத் திறந்து விட்டு போய் அவரது ஆன்மிக வழிகாட்டி ஷாகுல் ஹமீது ஜலாலியுடன் இஸ்லாமிய நீதிக்கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். அங்கும் தேடினேன். அவர் இல்லை.சொல்லாமல் கொள்ளாமல் கே ஜி சினிமாஸுக்கு செகன்ட் ஷோ போய் விட்டாரா? கைபேசியில் தொடர்பு கொண்டேன்.
ஸ்விட்ச் ஆப் என பதில் வந்தது.
மாடிப்படிகள் இறங்கி மருமகளிடம் கேட்டேன்.
“மாமாவைப் பார்த்தாயாம்மா...?”
“இல்லையே?”
“அர்ஹான்! தாத்தாவை பார்த்த?”
“இல்ல…” என்றான்.
போர்டிகோ எட்டினேன் ஸ்கூட்டி பெப் நின்றிருந்த்து. வெளிக்கேட்டின் உள் பூட்டு பூட்டியே இருந்தது.
இன்னும் பார்க்காத இடம் மொட்டை மாடிதான்…
எதிர்வீட்டு சூராக்கா, “என்ன வகிதா தேடுற?”
‘புருஷரை!”
“அவர்தான் சதா முட்டை போடும் போந்தான் கோழியாச்சே… இரண்டு டாய்லட் ரூம்களிலும் பாரு!”
பார்த்தேன். இல்லை.
மொட்டைமாடிக்கான விளக்கை உயிர்ப்பித்தேன்.
மொட்டைமாடிக் கதவுக்கும் மொட்டை மாடி படிக்கட்டுக்கும் இடையே மியூ பூனையின் கூண்டு இருந்தது.
அது என்னை பார்த்ததும் ‘மியாவ்’ என்றது.
பெரும் சப்தத்துடன் மொட்டைமாடிக் கதவைத் திறந்தேன். அலுமினியக் கூரை போட்ட முன் பகுதியில் தேடினேன். இல்லை.
பின் பகுதிக்கு நடந்தேன்.
அங்கே…
வெள்ளை நிறத்தில் ஓர் ஆறடி உருவப் பொம்மை படுத்திருந்தது.
இதயம் வாய்க்கு வர பூனை பாதம் வைத்து தத்தி தத்தி நடந்து உருவத்தை நெருங்கினேன்.
குபீரென்று அந்த உருவம் எழுந்து என்னைக் கட்டிக் கொண்டது. வீரிட்டேன்.
அந்த உருவம் கிசுகிசுப்பாய் பேசியது.
“ஏ அலிமா!”
“யார் நீ? என் ஸ்கூல் டேஸ் பேரைச் சொல்ற?”
“உனக்கு ரேடியோ கேட்க பிரியம் தானே? இலங்கை வானொலி நிலைய ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டுதானே திருமணத்திற்கு முன் மூச்சு விடுவாய்!”
“யார்ரா நீ?”
“பலாப்பழம் உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே?’
“அதெல்லாம் விடுர்ரா. யார்ரா நீ?”
“நானா? எகிப்திய மம்மி!”
மம்மியின் தொப்பையை தடவிக்காட்டி, “இது ஏன்டா மம்மிக்கு இவ்வளவு பெரிய தொப்பை!”
“செல்லமாய் வளர்த்தது!”
“உன்னைக் கொண்டு போய் வைக்க இங்க பிரமிடு எதுவும் இல்லையே?”
“அடிப்பாவி!” வெள்ளைப் போர்வையை விரித்து கடாசியபடி வெளிப்பட்டார் ஆர்னிகா.
“இதென்ன மம்மி ஆசை? நீ மம்மியாக இருக்கனும்ன்னா எகிப்து மன்னனாகப் பிறந்து இருக்கனும்!”
“ஒரு மணி நேரம் மம்மியாக இருந்தது நல்லாத்தான் இருக்குது!”
“எகிப்து போரோம்னவுடனே இப்படி ஒரு கற்பனையா?”
“நான் கெய்ரோவாசியாகி ஒன்றரை மாதங்கள் ஆகின்றன!”
“அடடா… என் பெனடிக் புருஷா!”
“சபா அல் கர்!”
“அப்டின்னா?”
“எகிப்து மொழியில் குட்மார்னிங் சொன்னேன்!”
“பதிலுக்கு நான் என்ன சொல்லனும்?”
“சபா அல் நூர். இதற்கு காலை வெளிச்சம் என பொருள்!”
“ஓஹோ!”
“சபா அல் கைய்ர்!”
“இது எங்க சொல்வாங்க?”
“சௌதி அரேபியாவில். பதிலுக்கு சபாஅன் நூர் என சொல்ல வேண்டும்!”
“துபாய்ல?”
“சபா அல் கைய்ர்தான்!”
“எகிப்தில் சாப்ட்டியான்றதை எப்படி கேக்றது?”
“ஆகில்? அல்லது ஆகில் யா?”
‘ஓஹோ!”
“ஆண்களைக் கேட்கும் போது ஆஸிஸ். பெண்களை கேட்கும் போது ஆய்ஸா”
“இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இருந்தாப் போதுமே? எல்லா நாட்டு பாஷையும் பேசிடலாமே?”
“நாமளா தேடித்தேடி அந்நிய பாஷைல கொஞ்சி கொஞ்சி தத்தி தத்தி தத்தக்கா பித்தக்கா உச்சரிப்பில் பேசுற சுகமே தனி தானே?”
“நீ ஒரு சென்டிமென்ட் லூசு” சொல்லி சிரித்தேன் நான்.
“எனக்கு ஒரு ஆசை குட்டிம்மா!”
“என்ன?”
“எகிப்தில ஒட்டகத்தின் மீதேறி கெய்ரோவை வலம் வரணும். எகிப்திய ஆடைகள் அணிந்து கும்மாளிக்கனும். ஒட்டகக்கறித் தின்னனும். ஒட்டகப்பால் குடிக்கனும்…”
“ஒட்டகக்கறி ரொம்ப ஹார்டா இருக்கும்னு சொல்வாங்க!”
“பத்து விசில் கொடுத்து வேகவைக்க வேண்டியதுதான்!”
எழுந்தார் ஆர்னிகா.
இருவரும் மொட்டை மாடிக் கதவை பூட்டிவிட்டு எங்களது படுக்கையறைக்கு நடந்தோம்.
“புனித காபா பற்றி உனக்கு கற்பனை எதுவும் இல்லையா?”
“நாமே கிஷ்வா தங்க ஜரிகை விரிப்பு நெய்து புனித காபா மீது போர்த்தனும்!”
“சரி!”
“காபாவுக்குள் பிரவேசித்து உள்ளமைப்பை பார்க்கனும்!”
“சரி!”
“இருக்கும் ஐந்தரை நாட்களில் நூறு லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் குடிக்கனும். அஞ்சு கிலோ அஜ்வா பேரீச்சம்பழம் திங்கனும்!”
“ஓவ்!”
“மக்கத்து மண்ணை ஒரு சிறு குப்பியில் சேகரித்து இந்தியாவுக்கு கொண்டு வரனும்!”
“அருமை!”
“உம்ராவுக்கு வரும் எல்லா நாட்டு முஸ்லிம்களில் ஒவ்வொரு வரை தேர்ந்தெடுத்து மொத்தம் 100 பேருடன் ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கனும்!”
“ஆப்பிரிக்க முஸ்லிம் எல்லாம் ஏழடி உயரம் இருப்பான். நீ அவன் கூட இம்னிக்கோண்டு புஸ்கான் மாதிரி நிப்ப?”
“புஸ்கான்னா?”
“லில்லிபுட் மாதிரி!”
என் திறன்பேசி சிணுங்கியது. ஏதோ குறும்செய்தி வந்திருக்கிறது. திறந்தேன்.
அதில்-
உம்ரா விசாவின் பிடிஎப் இருந்தது. ‘துள்ளிக்குதித்தேன் வானம் இடித்தது!’ என பாடியபடி உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல அந்தரத்தில் எகிறினார் ஆர்னிகா.