தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பாரின் மகன் ஆசிப் மீரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் ஆர்னிகா. துபாயில் தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்வதற்கு மீரான் உதவவில்லை. ஆனால் பழைய தமிழ் கிரிக்கெட் வர்ணனையைப் போற்றி இந்நாள் தமிழ் கிரிக்கெட் வர்ணனையை நையாண்டி செய்து ஆர்னிகா எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை மீரானுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார் ஆர்னிகா. அக்கதை மீரானின் வாட்ஸ்அப் மக்களுக்கு இடையே வலம் வந்ததாகக் கேள்வி.
துபாயில் மூன்றரை நாட்கள் தங்க அறை ஒன்றை புக் செய்து, அதன் பின் அதனை ரத்து செய்து ஒன்றை புக் செய்து, அதன் பின் அதனை ரத்து செய்து ஆர்னிகா பல்ப் வாங்கினார்.
முதலில் துபாய் விமான நிலையத்திலிருந்து 36 கிமீ தூரமுள்ள புதிய ஜுமைரா கடற்கரையின் குட்வில் ஹாலிடேஸில் அறை முன் பதிவு செய்தார் ஆர்னிகா.
தினவாடகை 47 திர்ஹாம் இந்திய மதிப்பிற்கு ரூ 1100/- மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வாடகை ரூ 3500/-
அதனை வெகுதூரம் என ரத்து செய்தார் ஆர்னிகா.
அதனையடுத்து பர் துபாயில் இருக்கும் பிளிஸ்புல் பார்ட்டிசன் (புர்ஜ்மான் மெட்ரோ அருகில்) ஹோட்டலில் அறை புக் பண்ணினார் ஆர்னிகா.
துபாய் விமான நிலையத்திலிருந்து எட்டு கிலோமீட்டர்.
தின வாடகை 114 திர்ஹாம். இந்திய மதிப்புக்கு ரூ 2622/. மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வாடகை எட்டாயிரம் ரூபாய்.
அதனையும் ரத்து செய்தார் ஆர்னிகா.
மூன்றாவதாக டெய்ரா க்ளாக் டவருக்கு அருகில் இருக்கும் ராயல் ஹவுஸ் கேப்ஸ்யூலில் புக் செய்தார் ஆர்னிகா.
ஒரு நாளைக்கு ஒரு கேப்ஸ்யூல் வாடகை ரூ 788/- வைபை வசதி.
ராயல் ஹவுஸ் கேப்ஸ்யூலுக்கும் துபாய் விமான நிலையத்துக்கும் இடையே ஆன தூரம் 2. 7 கிமீ.
அப்போதுதான் அக்பர் டிராவல்ஸில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். துபாய் விசா அப்ளை பண்ண அக்பர் டிராவல்ஸ் மூலமாக, அறை முன் பதிவு செய்தல் கட்டாயம் என அக்பர் டிராவல்ஸ் ஏஜென்ட் சிரித்தபடி கூறினார்.
வேறு வழியின்றி ஆர்னிகா ராயல் ஹவுஸ் கேப்ஸ்யூலை ரத்து செய்தார்.
அந்த அபார்ட்மெண்ட் உரிமையாளர் ஆர்னிகாவை திட்டி தீர்த்து விட்டார்.
அக்பர் டிராவல்ஸ் எங்களுக்கு அல் சப்கா சாலையில் உள்ள மவுண்ட் சினாவில் அறை புக் செய்தது.
மூன்று நாட்கள் வாடகை (ரிசப்ஷன் லஞ்சம் சேர்த்து) 14, 000 ரூபாய்.
துபாய் அறை புக் பண்ணுவதிலேயே எங்களுக்கு 9, 500 ரூபாய் நஷ்டம்.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள்…
உள்நாட்டுச் சுற்றுலாவோ, வெளிநாட்டுச் சுற்றுலாவோ நீங்கள் கிளம்பினால் உங்கள் பட்ஜெட்டில் 20-லிருந்து 30 சதவீதம் வரை வழிப்பறி செய்து விடுவர் இடைத்தரகர்கள்.
‘நான் மிகவும் புத்திசாலி. நான் ஏமாற மாட்டேன்’ என்று சொல்வதெல்லாம் ஒரு பம்மாத்து. மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தால் வழிப்பறிக் கொள்ளையில் பாதிப் பணத்தைக் காப்பாற்றலாம்.
2024 ஆம் ஆண்டில் உலகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 145 கோடி. முப்பது லட்சம் மக்கள் சுற்றுலாத்துறையில் பணிபுரிகின்றனர். 2024 ஆம் ஆண்டில் சுற்றுலாவில் புரண்ட தொகை 460 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள். ஆறு லட்சம் ட்ராவல் ஏஜென்ஸிகள் உள்ளன. ஏஜென்ஸி மூலம் சுற்றுலா செல்வோர் 47 சதவீதம் பேர். உலகின் நம்பர் ஒன் சுற்றுலா ஏஜென்ஸி டியூஐ குழுமம். உலகின் முதல் டூர் ஆபரேட்டர் தாமஸ் குக் (22. 11. 1808 -18.07.1892) சுற்றுலாக்களில் கொஞ்சம் கவனப்பிசகாய் இருந்தால் நாம் நடுத்தெருவில் கோவணத்துடன் நிற்க வேண்டியதுதான். கம்மிங் பேக் டு தி பாயின்ட்.
துபாய் விசா வாங்கியாச்சு, உம்ரா விசா வாங்கியாச்சு, எகிப்து விசா மட்டும் தான் பாக்கி.
அக்பர் டிராவல்லில் முதலிலேயே சொல்லியிருந்தார்கள். ‘எகிப்து விசா கடைசியில் தான் எடுக்க வேண்டும்.’
டிராவல்ஸின் தஸ்தகீர் எங்களை வரவேற்றார். மலையாளமும் தமிழும் சிரிப்பும் கலந்து பேசினார்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“சார்! துபாய், உம்ரா விசாக்களில் நீங்கள் பயன்படுத்தி இருக்கும் ஒளிப்படத்தை எகிப்து விசாவுக்கு பயன்படுத்த முடியாது”
“என்ன செய்ய வேண்டும்?”
ஒரு ஸ்டூடியோ பெயர் கூறி, “அங்க போய் எகிப்து விசாவுக்கென சொல்லி போட்டோ எடுத்திட்டு வாங்க! போட்டோவில் உங்கள் இருவர் காதுகள் தெரியவேண்டும்”
“சரி!”
“துபாய் பிளைட்டுக்கு இன்னும் 22 நாட்கள் உள்ளன. எகிப்து விசா அப்ளை பண்ணும் போது உங்களின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்!”
“கூரியரில் அனுப்புவீர்களா?”
“ஆமாம்!”
“எங்கள் பாஸ்போர்ட்கள் பத்திரமாகப் போய் வருமா?”
“நாங்க ரெகுலரா அனுப்ற கூரியரில் தான் அனுப்புவோம். பயம் வேண்டாம்…”
“எகிப்து விசாவுக்கு எவ்வளவு பணம்?”
“ஒருவருக்கு ஆறாயிரம் இரண்டு பேருக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய்!”
“முதலில் ஒருவருக்கு 4500 ரூ சொன்னீர்கள்!”
“ இப்பக் கூடிருச்சு!”
“ஒரு சின்ன சந்தேகம் சார்!”
“என்ன?”
“ஜனவரி 20 ஆம் தேதிக்குள் எகிப்து விசாவும் எங்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட்டும் எங்களுக்கு வரலைன்னா எங்களுக்கு மொத்தத்தில் குறைந்தது நாலு லட்சம் ரூபா நஷ்டமாகுமே….”
“அப்படி ஆகாது சார்!”
“கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாத்தா திகிலா இருக்கு. பணம் நஷ்டம் நேரம் நஷ்டம் உறவினர் நண்பர்கள் கேலி…”
“ஒரு வாரத்தில் வந்துவிடும்!”
“இடையில் பொங்கல் விடுமுறைகள் உள்ளன!”
“எங்களுக்கு ஏது சார் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லாம்!” சிரித்தார்.
“சிரிக்கிறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. எகிப்து விசால கோட்டை விட்ராதிங்க! என்றேன்.
“அக்பர் டிராவல்ஸ் 1978 ஆம் ஆண்டு கே.வி. அப்துல் நாசரால் தொடங்கப்பட்டது. ஐஏடிஏ அங்கீகாரம் பெற்ற 50 கிளைகள் உள்ளன. தலைமையகம் மும்பை. 3000 ஊழியர்கள் வரை பணிபுரிகின்றனர். எங்களது வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை செய்கிறோம். துளி ஏமாற்றம் இருக்காது!”
“மகிழ்ச்சி!”
“இன்னொரு முக்கியமான விஷயம்!”
“சொல்லுங்கள்!”
“உங்களின் உம்ரா விசாவில் ட்ராவல் இன்ஷுரன்ஸ் கவர் ஆகியுள்ளது. ஆனால் நீங்கள் துபாய் விசாவுக்கும் எகிப்து விசாவுக்கும் தனித்தனியாக ட்ராவல் இன்ஷுரன்ஸ் எடுத்தாக வேண்டும்!”
“எந்த ஏஜென்ஸி பெஸ்ட்?”
“டாட்டா ஏஐஜி, ஐசிஐசிஐ லாம்பார்டு, ஹெச்டிஎப்சி எர்கோ, ஆக்ஸா இதில் எதாவதில் எடுக்கலாம்!”
“தொகை எவ்வளவு?”
“துபாய் ட்ராவல் இன்ஷுரன்ஸ் ஒரு நாளைக்கு 25 ரூபாய். எகிப்து ட்ராவல் இன்ஷுரன்ஸ் ஒரு நபருக்கு ரூ 1500/-”
“எடுத்து விடுங்கள் சார்!”
“நன்றி!”
சொன்னதொகைகளை போன் பே பண்ணினோம்.
07.01. 2025 எகிப்து விசா வரவில்லை.
14. 01. 2025 எகிப்து விசா வரவில்லை.
ஆர்னிகா நடுராத்திரியில் எழுந்து புலம்ப ஆரம்பித்தார். “நாம போட்டு வைத்த பயணத்திட்டம் ஓகே ஆகல கண்மணி. எகிப்து விசா புட்டுக்கிச்சே காதல் கண்மணி!”
அக்பர் டிராவல்ஸ்க்கு போன் மேல் போன் குறுஞ்செய்திக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பி ரகளை பண்ணினார்.
15 01 2025 –நோ. 16 01 2025 – நோநோ. 17.01.2025. நஹி. 18.01.2025- நஹிநஹி.
“19.01.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் ரயில் ஏறி தாம்பரத்துக்கு போய் 20.01.2025 அதிகாலை விமான நிலையம் போக வேண்டும். அத்தனையும் கோவிந்தோ கோவிந்தோ!”
மாலை 4 மணிக்கு திறன்பேசி சிணுங்கியது.