நிலாமகன் கைபேசியில் அழைத்தான்.
“அம்மா!”
“என்னடா?”
“மூன்று நாடுகள் பயணம் போறீங்களே… செலவுக்குப் பணம் தேவைன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா?”
“எங்க பென்ஷன் பணம் வச்சுச் சமாளிச்சுக்குவம். பிள்ளைகளுக்குக் கொடுக்கணுமேத் தவிர, அவங்ககிட்டயிருந்து வாங்கக் கூடாது!”
“அவசரத் தேவைக்கு வாங்கிக்கங்க. அப்றம் திருப்பிக் கொடுங்க!”
“இப்ப என்ன செய்யனும்ன்ற?”
“நீங்க சொல்லித்தானே ஜெயப்ரியால சீட்டு போட்டேன்!”
“ஆமா மூணு லட்ச ரூபாச் சீட்டு…”
“இன்னும் நாலே மாதத்ல முடியப் போகுது. இப்ப அந்தச் சீட்டை அப்பா எடுத்தார்னா இரண்டரை லட்சம் ரூபா குறைஞ்சது கிடைக்கும். நானே இன்னொரு சீட்டும் போட்டுக்கிட்டு இருக்கிறதாலே ஜாமீன் கேட்க மாட்டான். சீட்டை எடுங்க. மாதம் பதினைஞ்சாயிரம் வீதம் திருப்பிக் கொடுங்க! நாளை மறுநாள் ஏலம்!”
“ஏலம் எடுக்க சிதம்பரத்துக்குப் போகனுமோ?”
“தேவை இல்லை. கிளை அலுவலகம் கோவை காந்திபுரத்ல இருக்கு. ஏலம் காலை 11 மணிக்கு. ஆன்லைன்ல போய் ஜாய்ன்ட் பண்ணிக்கலாம்!”
“உன் சீட்டுக்கு அப்பா போனா ஒத்துப்பாங்களா?”
“நான் ஏஜன்ட் ராஜசேகருக்கு தகவல் தெரிவிச்சிடுரேன். அப்பா போகும் போது ஆதார் கார்டு எடுத்திட்டு போகச் சொல்லு”
“அப்பா ஒத்துக்கிடனுமே…”
“நைசா சொல்லுங்க கேப்பார்!”
“நீ சொல்லக் கூடாதா?”
“இரண்டு ஆண் சிங்கங்கள் நட்பு பாராட்டாது!”
“பேச்சுவாக்குல உங்க ரெண்டு பேரையும் சிங்கம்னு வர்ணிச்சிக்குற?”
“சரி, நீங்க பெண் சிங்கம். என் பொண்டாட்டி ஒரு பெண் சிங்கம். என் மகன் அர்ஹான் ஒரு குட்டிச் சிங்கம். நாம ஒரு சிங்கம் குடும்பம் போதுமா?”
“கற்பனை பண்ணிப் பார்க்கப் பயமா இருக்கு. நீங்கல்லாம் சிங்கமா இருந்துட்டு போங்க. நான் பசுமாடா இருந்துக்கிரேன்!”
‘‘எனக்குக் கல்கத்தால சாப்பாடே பிடிக்கல. ஒத்தைக் குரங்கா இருக்றது வேற பிடிக்கவே இல்லை. தினம் குறைஞ்சது ஐம்பது பேஷன்ட் பார்த்திட்டு சக்கையா வாடகை வீட்ல வந்து விழுரேன். அதுக்கு ஏதாவது வழி செய்யும்மா!”
“டூர் போய்ட்டு வந்து பேசி ஒரு தீர்வை கொண்டு வர்றேன். தவிர உனக்கும் பஹிமாவுக்கும் இரண்டாவது குழந்தை பிறக்கட்டும்…”
“நீயும் உன் புருஷனும் ஜோடியா சேந்து இருக்கீங்களே மகனும் மருமகளும் பிரிஞ்சு ஆளுக்கொரு திசைல வாழனுமா?”
“ஓவரா பேசாதே. விருந்தினர் மாளிகையில் ரெண்டு கிழங்கள் சேந்து வசிக்கற மாதிரி நானும் உன் அப்பாவும் இருக்கிறோம்.. அபவாதம் பேசாதே!”
“சரிவிடும்மா… போனை வக்கிறேன்!”
“நேரத்துக்குச் சாப்பிடுடா… பை…” திறன்பேசியை வைத்தேன்.
ஜெயப்பிரியா அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பினார் ஆர்னிகா.
வரும்போதே அவர் முகம் இறுகியிருந்தது.
உங்களுக்கெல்லாம் 32 பல்லும் தெரியும்படி சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆர்னிகாவைத்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான் உக்கிரம் தெறிக்கும் கோப முகங்கள் ஆயிரம் காட்டுவார்.
கல்யாணமான ஆரம்பக் கட்டத்தில் பயந்து நடுங்கி இருக்கிறேன். இப்போது பழகிவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் பணிபுரியும் போது காலையில் மஸ்டர்ரோல் எடுத்துத் திரும்பும் போதும் மாலையில் மஸ்டர்ரோல் எடுத்துத் திரும்பும் போதும் அவர் முகம் அதகளமாய் இருக்கும். குடித்துவிட்டுக் கலாட்டா செய்வார் ஒரு ஊழியர். தகுந்த விடுமுறை விண்ணப்பம் இல்லாமல் நீண்ட நாட்கள் பணிக்கு வராது பின் பணிக்கு திரும்பியிருக்கும் ஊழியர் சங்க பொறுப்பாளருடன் வந்து உரண்டை இழுப்பார்.
ஆர்னிகாவின் 35 வருடப் பணிக்காலம் ஆர்னிகாவைப் பொறுத்த வரை ஒரு கெட்ட கனவு போல. கெட்ட கனவுதான் அவருக்கு சோறு போட்டது. பல அனுபவங்களைத் தந்து எழுத்தாளராக மெருகேற்றியது.
ஆர்னிகா நாசரின் இடிதாங்கி நான். எத்தனை இடிகள் விழுந்தாலும் அதனை ஆழத்திற்கு கடத்தி விடுவேன். எங்களின் 35 வருட பொறுமைதான் இன்று ஓய்வூதியம் வழங்குகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில்தான் ஆர்னிகா பிரச்சனைகள் இல்லாமல் கதைகள் எழுதுகிறார். அவருக்கு தற்போதைய வாழும் காலம் தான் பொற்காலம்.
மதுரையில் பிறந்தார். திண்டுக்கல்லில் வளர்ந்தார். தஞ்சை பூண்டிபுஷ்பத்திலும் காந்திகிராமத்திலும் படித்தார். சிதம்பரத்தில் வேலை பார்த்தார். கோவையில் இளைப்பாறுகிறார். கோவை பாரம்பரியத்தின் தொன்மையையும் நகரத்தின் வசதிகளையும் உள்ளடக்கிய முப்பது சதவீத ஊட்டி.
தினம் மூன்று மணி நேரம் எழுதுவார். தினம் மூன்று மணி நேரம் தகவல் குறிப்புகள் எடுப்பார். தினம் இரண்டு மணி நேரம் கேஜி சினிமாவிலோ ஓடிடிகளிலோ சினிமா பார்ப்பார். வாரத்துக்கு ஒரு நாள் காய்கறி வாங்கி வருவது மட்டுமே அவர் வேலை. வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழப் போய் விடுவார். மனாஸ் கார்டனின் தலைவராக இருந்து நகரின் மேம்பாட்டுக்காக சில மணி நேரம் செலவு செய்வார்.
“சீட்டு என்னாச்சுப்பா?”
“சீட்டை எடுக்கல!”
“ஏன்?”
“இரண்டு லட்சத்தி எழுபத்திரெண்டாயிரத்துக்கு சீட்டு எனக்குச் சாதகமாக முடியுற வேளை ஒருத்தன் புகுந்துட்டான்!”
“என்ன பண்ணினான்?”
“தாறுமாறா ஏலம் கேட்டான். இரண்டே கால் லட்சம் வரை வந்திட்டான். ஏலத்தை ரொம்பத் தள்ளி எடுத்து மகனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்ரக் கூடாதுன்னு எண்ணி ஏலத்திலிருந்து விலகிட்டேன்!”
நொடி யோசித்தேன்.
“நீங்க செஞ்சது சரிதான். என்கிட்ட வேற ஐடியா இருக்கு!”
“என்ன?”
“நமக்கு பென்ஷன் டெபாசிட் ஆகிற பேங்க் அண்ணாமலைநகரில் இருக்கும் இண்டியன் பேங்க். அங்க ஒரு பென்ஷன் லோன்போடுங்க?”
“பென்ஷன் லோன் போட்டு உம்ரா போகலாமா?”
“பின்னாடி மாசங்கள்ல வர்ற நம்ம பென்ஷனை நாம முன்னாடி வாங்கிக்கிட்டு உம்ரா போரோம்.. அல்லாஹ் மன்னிச்சிருவான்!”
“லோன் வாங்கலாம். அதுக்கு ஒரு ஜாமீன்தாரர் வேணும். தவிர உன் கையெழுத்தும் தேவை!”
“ஒரு ஜாமீன்தாரர் ரெடி பண்றது ரொம்ப கஷ்டமா?”
“ஓய்வு பெற்ற பிறகு எனக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை. நான் அங்கு ஒரு அந்நியன்”
“உங்க பிரண்டு எக்ஸ்ரே டெக்னீஷியன் மனோகரனை ஜாமீன் தாரராக பிடி ஆர்னிகா!”
“முதல்ல போன்ல பேசி கேக்ரேன்!”
“நீங்களும் அவரும் நூறு கதை பேசி இருப்பீங்க. தீ தித்திக்கும் தீ அவர் சொன்ன கதைதானே? இன்னும் பேஸ்புக்ல ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டுத் தானே இருக்கீங்க?”
“முன்ன மாதிரி இல்ல. இப்பல்லாம் ஷுரிட்டி போட ஆயிரம் கண்டிஷன்கள் வந்து விட்டன. அவருக்கு மொதல்ல எல்ஜிபிலிட்டி இருக்கான்னு கேக்கனும்!”
“கேளுங்க!”
மாலையில் ஆர்னிகா மனேகரனுக்கு போன் செய்தார். மனோகரன் ஒரு எக்ஸ்ரே டெக்னீஷியன் என்றாலும் பத்து பல் மருத்துவர்களுக்கு சமமான மருத்துவ அறிவைப் பெற்றவர். செய்யும் வேலையில் போதை கொண்ட வொர்க்கஹாலிக்.
மனோகரனும் ஆர்னிகாவும் பேசிக் கொள்வதை நான் காது கொடுத்துக் கேட்கவில்லை. எனக்கு அது அனாவசியம். ஜாமீன்தாரர் கையெழுத்து போட அவர் வருகிறாரா இல்லையா என்பதே அதிமுக்கியம்.
கைபேசியை வைத்தார் ஆர்னிகா.
“ஜாமீன்தாரர் கையெழுத்து போட ஒத்துக்கிட்டார். பென்ஷன் பேமென்ட் ஆர்டர் வைத்திருந்தால் தான் பென்ஷன் லோன் கிடைக்குமாம். அதைத் தயார் பண்ணச் சொன்னார். முதலில் நான் மட்டும் ஜே செக்சன் போய் பிபிஓ ரெடி பண்ணிட்டு வரேன். அடுத்த வாரம் லோன் வாங்கப் போவோம்!”
அடுத்த நான்கு நாட்களில் பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் ரெடி பண்ணி விட்டார் ஆர்னிகா.
மருமகளைப் பார்த்துக் கொள்ள சம்பந்தியம்மா வந்துவிட்டார். நானும் ஆர்னிகாவும் சிதம்பரத்துக்கு கிளம்பினோம்.
ஒரு கற்றைத்தாள்களில் ஆர்னிகா, மனோகரன், குடும்ப ஓய்வூதியம் வாங்க தகுதி பெற்ற நான் கையெழுத்து இட்டோம்.
நான்கு இலட்ச ரூபாய்க்கு லோன் சாங்ஷன் ஆகியது.
மறுநாள் காலை பணம் ஆர்னிகாவின் வங்கிகணக்கில் கிரிடிட் ஆகும் என்றார்கள்.
நானும் ஆர்னிகாவும் கோவை திரும்பினோம்.
வங்கியில் பணம் போடப்பட்டதற்கான குறும்செய்தி வரக் காத்திருந்தோம். மாலை மூன்று மணி வரை காத்திருந்தோம்.
பின் ஆர்னிகா வங்கி மேலாளருக்குப் போன் செய்தார்.
“சாரி சார். உங்க லோன் ரிஜெக்ட்ட். உங்க மனைவி வகிதா நாசரின் ஆதார் கார்டில் அலிமா என்கிற பெயர் ஓவர்லாப் ஆகிறது. உங்கள் மனைவியின் பெயரை ஆதார் கார்டில் சரி செய்துவிட்டு லோன் கேட்க வாருங்கள்…”
ஆர்னிகா முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.