முஸம்மிலும் அபிமன்யுவும் நண்பர்கள். வயது 17. இருவரும் பிளஸ் டூ படிக்கிறார்கள். கணக்கில் அதிக மதிப்பெண் பெறத் தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்று வருகின்றனர்.
இருவரும் பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வழியில் இருந்த தேநீர் விடுதியில் இருவரும் இறங்கி, தேநீர் அருந்தினர். தேநீர் அருந்த ஒரு இமாம் டிவிஎஸ் 50ல் வந்திறங்கினார்.
தலையில் தலைப்பாகை. சுருமா ஈஷிய புருவங்களும் கண்களும். குடைமிளகாய் மூக்கு. மீசை இல்லாத மேல் உதடு. மருதாணி வைத்து சாயம் ஏற்றிய ஒழுங்கற்ற தாடி. வெள்ளை நிற குர்தா வெள்ளை நிற பைஜாமா. குர்தா பையில் தெரியும் தஸ்பீஹ்மணி மாலை.
"அஸ்ஸலாமு அலைக்கும் இமாம்..."
"வ அலைக்கும் ஸலாம்... நீ பவாஸ் பாய் பையன் தானே?"
"ஆமாம் இமாம்!. நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். மேத்ஸ் டியூஷன் போயிட்டு வரேன்!"
"நல்லா படிப்பா… நீ சுயமாய் சிந்திப்பவன். உனக்காக துஆ பண்ணுகிறேன்”
“நன்றி இமாம்”
இமாம் கிளம்பி போனார். அவர் போனதும் அபிமன்யு முஸம்மிலிடம் ஓடி வந்தான். “இவர் முஸ்லிம் பூசாரிதானே?”
சிரித்தான் முஸம்மில். “இரு மதங்களிலும் இறைவனை வழிபடும் விதங்கள் வேறுவேறு. எங்கள் இமாம் ஆறு வருடங்கள் குர்ஆனையும் ஹதீஸையும் படித்து ஆலிம் பட்டம் பெற்றவர். ஆலிம் பட்டம் பெற்ற பின் அவர் ஏதாவது ஒரு பள்ளிவாசலில் இமாமாவார். ஐந்து வேளை தொழுகைகளையும் முன்னின்று கிப்லா நோக்கி நடத்தி கொடுப்பார்… ‘முஸ்லிம் பூசாரி’ என்கிற வார்த்தை பிரயோகமே தப்பு”
“ மன்னித்துக்கொள் முஸம்மில்”
“அறியாமல் கேட்டாய். விளக்கம் சொன்னேன். இப்ப புரிஞ்சிருப்ப…”
“முஸ்லிம் மதத்தில் புழங்கும் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக வார்த்தைகளுக்கான அர்த்தத்தை சொல்வாயா”
“முதலில் முஸ்லிம் மதகுருக்கள் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைப் பார்ப்போம். ஒன்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மத அறிஞர்களை உலமாக்கள் என்பர். உலமாக்கள் இறையியலிலும் இறை தத்துவத்திலும் நிபுணர்கள். உலமா பன்மையினர் குறித்த சொல். ஆலிம் ஒருமையைக் குறிக்கும் சொல். உலமா ப்ளூரல். ஆலிம் சிங்குலர்…”
“ஓஹோ”
“முல்லா நசுருதீன் கதைகளைக் கேட்டிருப்பாய், அதில் ‘முல்லா’ என்ற வார்த்தை இஸ்லாமியப் புனித நூல் திருக்குரானையும் இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் காக்கும் ஆசிரியர் எனப் பொருள்… ‘மௌலவி’ என்கிற பெர்ஷியன் வார்த்தை இஸ்லாமிய ஆசிரியரைக் குறிக்கும். ‘ஷேக்’ என்கிற அரபு வார்த்தை மூத்தவர்களை மரியாதைப்படுத்தும் வார்த்தை. மதரஸா ஆசிரியரை ‘உஸ்தாத்’ என்றும் ‘ஹென்டு’ என்றும் கூட அழைப்பர். பெண் உஸ்தாத்தை ‘உஸ்தாத்பி’ என்பர்…”
“ஆண்பால் ஆலிம் என்றால் பெண்பால் ஆலிமாவா”
“ஆமாம், இஸ்லாமிய மத ஆசிரியர்களைக் கீழ்க்கண்டவாறு அழைப்பர் அபிமன்யு.
முத்தாரிஸ்
முஅதீப்
முராபி
முர்ஷித்
முஆலிம்
முஜ்தாஹித்
முஜாதித்…”
“ஓவ்”
“இமாம் என்பவர் யார் தெரியுமா? தொழுகைத் தலைவர், ஆன்மீக அறிவுரையாளர், இஸ்லாமியச் சட்டத் திட்டங்களின் நிபுணர்… சூபி ஆசிரியர்களை ‘ஷைய்க்’ என்று அழைப்பர். 1993ஆம் ஆண்டு அல்ஜீரியன் உள்நாட்டு போரில் 500 பெண் இமாம்கள் நியமிக்கப்பட்டனர் என்பது ஒரு செய்தி”
“அப்படியா?”
“ஆல் டைம் மிகச்சிறந்த நான்கு இமாம்களின் பெயர்களைக் கூறுகிறேன் கேள். ஒன்று - அபு ஹனிபா. இரண்டு - மாலிக். மூன்று - அல் ஷாபிஇ. நான்கு - இப்னு ஹன்பால். திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களும் கற்றுத்தரும் ஆசிரியர்களும் இஸ்லாமியரில் சிறந்தவர்கள் என்கிறார்கள் நபிகள் நாயகம்”
“மகிழ்ச்சி முஸம்மில்”
“எனக்கு ஒரு நபர் புதிய வார்த்தைகளைக் கற்றுத் தந்தார் என்றால், நான் அவருக்கு ஆயுட்கால பணியாள் என்கிறார் ஹஜ்ரத் அலி… கல்விக்கு அதிக முக்கியத்துவம் என்றென்றும் தருகிறது இஸ்லாம்…”
“இஸ்லாமியர்கள் இடையில் ஓய்ந்திருந்து இப்போது மீண்டும் கல்வியை முழுமூச்சாய் கற்கத் தொடங்கி விட்டார்கள் முஸம்மில்”
“முஸ்லிம்களின் மத விஷயங்களிலும் தனிப்பட்ட விஷயங்களிலும் சட்டப்படி தீர்ப்பு சொல்ல அதிகாரம் பெற்றவர்களை ‘முப்தி’ என்போம். துருக்கி நாட்டின் இமாம்களை ‘ஹோகா’ என்கிறார்கள். ‘அயத்துல்லா’ என்கிற வார்த்தை ஈரானில் இமாம்களை குறிக்கும். பெண் மத அறிஞர்களை உஸ்தாதா, ஷெய்கா, முவலிமா என்றும் அழைக்கிறார்கள். திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை ‘ஹாபிஸ்’ என்பர். இஸ்லாமிய நீதிபதிகளை ‘காஜிஸ்’ என்பர். இஸ்லாமிய ராணுவத் தலைவர்களை ‘சிபா சலார்’ என்றழைப்பர்…”
“சிறப்பான தகவல்”
“இந்து மத ஆசிரியர்களை பற்றிப் பார்ப்போமா அபிமன்யு? இந்து மத அழகிய முன்மாதிரிகளை ‘குரு’ என்பர். மத ஆசிரியர்களை சிக்சாகா, பதக்கா, அத்யபாகா, உபாத்யாயா என்பர். மதகுருமார்களை பண்டிட், பூஜாரி, புரோகித் என்றழைப்பர்…”
“எனக்கேத் தெரியாது முஸம்மில்”
“இப்பொழுது யூதர்களைப் பற்றிப் பார்ப்போமா?”
“சரி”
“யூத மத ஆசிரியனை ‘ராபி’ என்று அழைப்பர். ‘ரவ்’ என்கிற ஹிப்ரு வார்த்தையும் உண்டு. ஹஸ்ஸான், கோகனிம் என்கிற வார்த்தைகளும் மதகுருமார்களை குறிக்கும்”
“ராபி என்கிற வார்த்தையை ஏற்கனவேக் கேள்விப்பட்டிருக்கிறேன்”
“புத்த மதத்தில் மத ஆசிரியனை ‘லாமாஸ்’ என்பர். ‘பிக்கு’ என்கிற வார்த்தையும் உண்டு. பெண் ஆசிரியையை ‘பிக்குனி’ என்பர்”
“அட்டகாசமான தகவல்”
“ஜெயினர்கள் தங்கள் மத ஆசிரியர்களை ‘தீர்த்தங்கரா’ என்பர்”
“தீர்த்தங்கரா.. வாவ்”
“தாவோயிஸத்தில் மத ஆசிரியர்களை ‘லாவோஸி’ என்பர்”
“செம…”
“ஹஜ்ரத் என்கிற வார்த்தையில் மரியாதை, நெருக்கம், கண்ணியம் அடங்கியிருக்கிறது. துருக்கியில் ஹஜ்ரத் என்கிற வார்த்தையை ‘ஹஜ்ரெட்’ என உச்சரிப்பர். பாரசீகத்தில் ‘ஹத்ரத்’ என்கிற உச்சரிப்பும் உண்டு. ஹாபிழ், மௌலானா, ஹாபிஸ் என்கிற வார்த்தைகளும் இஸ்லாமிய மதஅறிஞர்களைக் குறிக்கின்றன”
“கிறிஸ்துவ மதத்தைப் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே முஸம்மில்?”
“கிறிஸ்துவத்தில் மத ஆசிரியர்களை ‘பாஸ்டர்’ என்பர். சுவிசேஷகர் ஆங்கிலத்தில் இவான்ஜலிஸ்ட் என்கிற வார்த்தைகளும் கிறிஸ்துவ மத ஆசிரியர்களைக் குறிக்கும். ரெவரன்ட், பார்சன், பாட்ரே, அபோஸ்டல், காஸ்பெல்லர், குருஸேடர், சர்ச்மேன், பாதர், புல்பிட்டீர், ஸரமோனைஸர், மிஷினர், அபே, மாங்க், அபாட், ஆர்ச் டெக்கான், மினிஸ்டர், ஜோஸர் போன்ற ஆங்கில வார்த்தைகளும் கிறிஸ்துவ மத ஆசிரியர்களைக் குறிக்கும்…”
“நீளமான பட்டியல்”
“என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு விஷயத்தைக் கருத்தில் கொள்கிறேன்”
“என்ன விஷயம்?”
“மதங்கள் ஆயிரம் இருக்கலாம் மத ஆசிரியர்கள் லட்சம் பேர் இருக்கலாம்… அவர்கள் மத விழுமியங்களையும் கோட்பாடுகளையும் நமக்குக் கற்றுத் தரலாம். மனித வாழ்க்கை ஒரு தேர்வு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி வினாத்தாள். விடைகள் பிரத்தியேகமானவை. இன்னொரு நபர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் விடைத்தாளைப் பார்த்து நீ காப்பி அடித்தால் உனக்கு பூஜ்யம் மதிப்பெண்தான். இறைவனை நமக்குள் தேடி அடைவோம்…. யூகங்களும் நம்பிக்கைகளுமே மதங்கள். என் மதம் உசத்தி, உன் மதம் தாழ்த்தி என சண்டை அனாவசியம். நன்மையை நாடினால், நாம் இறைவனின் பக்கம். தீமையை நாடினால் நாம் இறைவனுக்கு எதிர்பக்கம்”
“நீ இப்படிப் பேசுவது உன் குடும்பத்திற்கு, உன் இமாமுக்குத் தெரியுமா?”
“தெரியும். குறிப்பாக, நான் இமாமுடன் பல விஷயங்களை விவாதிப்பேன். இமாம் என் கருத்துக்களை மறுதலிக்க மாட்டார். என்னை ஆழமாகப் பார்த்து முறுவலிப்பார்”
“பெரும் மகிழ்ச்சி”
க்ளைடாஸ்கோப் வர்ணங்களாய் கிளைத்திருத்த இறைவன் புன்னகைத்தான்.