மணி நண்பகல் 12.
பரபரத்தேன் “வகிதாI மணியாய்டுச்சு… கிளம்பு முஹம்மது அர்ஹானை போய்க் கூட்டிட்டு வரணும்”
பேரன் முஹம்மது அர்ஹானுக்கு வயது இரண்டே கால். சரியாகப் பேச்சு வரவில்லை. ஆனால் உச்சபட்ச குறும்பு.
மருத்துவர் அறிவுரைப்படி அவனை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு யூரோ கிட் பிளே ஸ்கூலில் சேர்த்தோம். காலையில் மகன் நிலாமகன் கொண்டு போய் விட்டு விடுவான். மதியம் 12.30மணிக்கு நானும் வகிதாவும் போய் அர்ஹானை வீட்டுக்குக் கூட்டி வர வேண்டும்.
ஸ்கூட்டியைக் கிளப்பினேன் பின்னால் வகிதா அமர்ந்தாள்.
மனாஸ் கார்டனிலிருந்து பதினைந்து நிமிஷ தூரம் அர்ஹானின் பிளே ஸ்கூல். பிளே ஸ்கூல் வாசலில் ஏராளமான பெற்றோர்களும் தாத்தாமார்களும் தத்தம் குழந்தைகளைத் தத்தம் பேரன் பேத்திகளைக் கூட்டிச் செல்லக் காத்திருந்தனர்.
குட்டிப்பையை முதுகில் சுமந்தபடி அர்ஹான் வெளிப்பட்டான். அவனது தலையில் பொம்மைகள் வரைந்த ஹெல்மெட்டை மாட்டினாள் வகிதா.
எங்கள் இருவருக்கும் இடையே அர்ஹான் அமர்ந்து கொண்டான்.
“ஸ்கூல்ல என்னடா சொல்லிக் குடுத்தாங்க அர்க்கு குட்டி?”
“உய் உய்… க்யோ… குர்… பபம்…” என்றான் அர்ஹான்.
“ஓஹோ அப்படியா? அதான் சொல்லிக் குடுத்தாங்களா பட்டுக்குட்டி?”
அர்ஹானுக்கு மருமகள் மற்றும் சம்பந்தியம்மா முகச் சாயல். அவன் சிரித்தால் அவனது அழகிய பல்வரிசை பளீரிடும்.
“தங்கக்குட்டி பவளக்குட்டி எது கேட்டாலும் க்ளுக்குன்னு சிரிக்கும்”
வாலாங்குளம் சாலையில் வரும்போது அந்தத் தள்ளுவண்டி பழக்கடையைப் பார்த்தேன். கடந்த மூன்று மாதங்களாக போகும் போது வரும் போதெல்லாம் அந்தக் கடையை நோட்டமிடுவேன், தள்ளுவண்டியின் நான்கு பக்கங்களிலும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட தகரப்பலகை தொங்கும்.
அதில் -
‘உங்கள் வியாபாரத்துக்காக இறைவன் தராசை அமைத்தான். நீங்கள் நிறுவையில் கூட்டிக் குறைத்து வரம்பை மீறாதீர்கள். ஆகவே எடையைக் குறைத்திடாது நியாயமாக நிறுத்திடுங்கள் (55-7 வசனம்)’
‘நீங்கள் அளக்கையில் சரியாக அளந்திடுங்கள். நிறுக்கையில் சரியாக நிறுத்திடுங்கள். இச்செயல் உங்களுக்கு நற்பலனைத்தரும் (17-35 வசனம்)’
‘வாங்கும் போது அதிகமாக அளந்தும் நிறுத்தும், விற்கும் போது குறைவாக நிறுத்தும் அளந்தும் மற்றவர்களை இழப்புக்குள்ளாக்கும் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான் (83-1, 3வசனம்)’
‘அளவையில் ஏமாற்றி வாழ்ந்த மத்யன் ஊர்மக்கள் ஷுஐப் நபிகளின் அறிவுரையை புறகணித்தனர். விளைவு ஒட்டுமொத்த மத்யன் மக்களும் கொடிய இடியோசையில் மடிந்தனர்’.
என்று வாசகங்கள் பச்சை நிறத்தில் பெயின்ட் பண்ணப்பட்டிருந்தன.
அந்தத் தள்ளுவண்டியில் சப்போட்டா பழம், ஆப்பிள் பழம், திராட்சைப் பழம், பெரிய இலந்தைப் பழம் குவிந்திருந்தன.
பழவியாபாரத்தைக் கவனித்தபடி நின்றிருந்தார் ஒரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர். தலையில் அழுக்கு தொப்பி சால்ட் அண்ட் பெப்பர் தாடி ஜிப்பா கைலி.
‘இந்த முஸ்லிம் பெரியவர், வியாபாரத்துக்கு இறை வசனத்தை பணயம் வைக்கிறார். இறைவசனத்தை நம்பி நிறைய முஸ்லிம்கள் இந்தப் பெரியவரிடம் பழம் வாங்குவார்கள். முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் இவரின் நேர்மையை நம்பி வியாபாரம் செய்வார்கள். இது ஒரு வியாபரத் தந்திரம். இறங்கி வியாபாரியை ஆழம் பார்ப்போம்’
வண்டியை நிறுத்தி ஸ்டாண்டிட்டேன். பேரனை வகிதா தூக்கிக் கொண்டாள்.
“அஸ்ஸலாமு அலைக்கும் பழக்கடைக்காரரே”
“வஅலைக்கும் ஸலாம்”
“உங்க பேரென்ன?”
“ஷா நவாஸ்”
“சொந்த ஊர்?”
“பாலக்காடு. கோயம்புத்தூர் வந்து செட்டிலாகி முப்பது வருஷமாகுது”
“பாய். இந்த திருக்குர்ஆன் வசனங்களை எழுதி வண்டியில் யார் பொருத்தியது?”
“நான்தான்”
“நான் சொல்றேனேன்னு கோவிச்சிக்காதிங்க பாய்… எனக்கு வயசு 64 ஆகுது இதுவரைக்கும் ஒரு நாணயமான தள்ளுவண்டி வியாபாரியை நான் பார்த்ததில்லை”
பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கிட்டார்.
“மாதுளம் பழம் இருக்கா பாய்?”
“இல்லை… அதோ அந்தப் பழக்கடைல மாதுளம்பழம் விக்கிறாங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்க, கிலோக்குப் பத்து இருபது குறைச்சுப்பார் கடைக்காரர்”
பக்கத்து கடையிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.
“திராட்சைப் பழம் கிலோ என்ன விலை?”
“அம்பது ரூபா, அந்தக் கடைல என்ன விலை சொன்னாங்க?”
“அதே அம்பது ரூபாய் பாய்…“
“ரெண்டு பேரும் விக்றது ஒரே திராட்சைதான். அவர்கிட்டேயேத் திராட்சை வாங்கிக்கங்க..” அனுப்பி விட்டு என்னிடம் திரும்பினார் ஷா நவாஸ்.
“நல்ல வியாபாரிகள் நூறு பேர் இருக்காங்க. அது உங்க கண்களுக்குத் தெரியல.. திருமறை வசனங்களை எழுதிப் போட்டது வியாபார தந்திரமல்ல - தினம் தினம் வியாபாரத்தை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த எனக்கான அறிவூட்டல் அது”
ஷா நாவாஸின் இடதுகைப் பக்கம் ஒரு கூடை இருந்தது. அதில் அழுகிய பழங்களை பொறுக்கி போட்டிருந்தார்.
“அழுகின பழங்களை நல்ல பழங்களுடன் வச்சு விற்க விரும்பல. அதான் அழுகினதைத் தனியே பொறுக்கி எடுத்திட்டேன். கால்நடைகளுக்குப் போடுவேன்...”
“பழங்கள் என்ன விலை?”
“சப்போட்டாப் பழம் கிலோ 35ரூபாய். திராட்சைப் பழம் கிலோ 45ரூபாய். பக்கத்துக் கடை வியாபாரத்தைக் கெடுக்கக் கூடாதுன்றதுக்காக அம்பது ரூபான்னு சொன்னேன். ஆப்பிள் பழம் கிலோ எண்பது ரூபாய். பெரியஇலந்தை பழம் கிலோ முப்பது ரூபாய்”
“எல்லாக் கடைகளையும் விட கிலோவுக்கு அஞ்சு அஞ்சு ரூபாய் குறைச்சு விக்குறீங்க”
“குறைந்த லாபம் போதும்”
“உங்களைப் பத்திச் சொல்லுங்களேன் ஷா நவாஸ்..”
“நான் படிச்சது பத்தாம் கிளாஸ்தான். எனக்குத் திருமணமாகி 26 வருஷமாகுது. எனக்கு மூணு மகன்கள். மூத்தவன் ஆலிமுக்கு படித்து விட்டு இமாமாக இருக்கிறான். இரண்டாமவன் டிகிரி முடித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். மூன்றாமவன் தமிழ்ல பிஹெச்டி பண்ணிகிட்டு இருக்கான். மூத்தவனுக்கு கல்யாணமாய்ருச்சு. ரெண்டு வயசுல பேத்தி இருக்கா. இருபத்தியாறு வருஷ நேர்மையான சம்பாத்தியத்தில் ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு கட்டியிருக்கேன். பசங்களை படிக்க வச்சிருக்கேன். வியாபாரத்ல தில்லுமுல்லு செய்து பாவத்தைச் சம்பாதிக்க நான் தயாராய் இல்லை”
“உங்களிடம் டிஜிட்டல் தராசு இருக்கா?”
“இல்ல.. சாதா தராசுதான்”
“எங்க உங்க தராசை காட்டுங்க..”
காட்டினார். அரதபழசாக இருந்தது.
“எடைக்கற்களைக் கொடுங்க”
கொடுத்தார். ஒரு கிலோ, இரண்டு கிலோ, ஐந்து கிலோ எடைக்கற்கள்.
“எதிலயும் தொழிலாளர் அலுவலக எடைக்கான முத்திரை இல்லையே பாய்?”
“கற்களின் எடை துல்லியமா இருக்றதை சரி பார்த்துட்டேன்”
ஒரு வயதான யாசகப்பெண் கை நீட்டினார். நல்லதொரு ஆப்பிளை எடுத்துக் கொடுத்தார் ஷாநவாஸ்.
“பணக்காரர்கள் மட்டும்தான் ஆப்பிள் சாப்பிட வேண்டுமா, யாசகம் பெறுபவரும் சாப்பிடட்டுமே?”
“பாய்I எனக்கு நாலு பழங்களிலும் ஒவ்வொரு கிலோ கொடுங்க...”
நிறுத்துக் கொடுத்தார்.
வாங்கி சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு “எவ்வளவு பாய்?” என்றேன்.
“நூத்திதொண்ணூறு ஆகுது, நூத்தி எண்பது கொடுங்க...”
எண்ணிக் கொடுத்தேன்.
மீண்டும் பேரனை நடுவில் அமர வைத்து நானும் வகிதாவும் வீட்டுக்குப் புறப்பட்டோம்.
அடுத்த 15 நாட்களில் ஷா நவாஸிடம் வாங்கிய பழங்களை வீட்டு டிஜிட்டல் தராசில் எடை பார்த்தேன்.
ஒரு கிலோ எடை போட்டு வாங்கிய பழங்களில் 10நாள் டிஜிட்டல் நிறுவைகள் - 1,020கிகி, 1.023கிகி 1,100கிகி, 1,023கிகி, 1,010கிகி, 1,040கிகி 1.010கிகி, 1.050கிகி. 1.025கிகி, 1.100கிகி
ஒரு ஆடம்பர இஸ்லாமிய டிபாரட்மென்டல் ஸ்டோரில் ஒரு கிலோ எடை போட்டு வாங்கிய பொருட்களின் பத்துநாள் டிஜிட்டல் நிறுவைகள் - 0,900கிகி, 0.950கிகி, 0.850கிகி 0.925கிகி 0.910கிகி 0.940கிகி 0.875கிகி, 0.900கிகி., 0.975கிகி 0.960கிகி.
ஷா நவாஸ் மானசீகமாக வந்து சிரித்தார். “நான் அன்னாடங்காய்ச்சிதான். ஆனால் மார்க்க நெறிகளை பேணி அல்லாஹ்வின் பிரியங்களை டன் கணக்கில் பெற்றிருக்கும் பாக்கியவான் நான்”
ஷாநவாஸிடம் வாங்கிய திராட்சைப் பழத்தில் ஒன்றை வாய்க்குள் இட்டேன்.
சுவனத்துப் பழம் போலத் திதிதித்தித்தது திராட்சை.