ஜுமைமாவின் திறன்பேசி நாகூர் ஹனிபா பாடலுடன் அழைத்தது. ஜுமைமாவுக்கு வயது 26. வசீகரமான தோற்றம். இளங்கலை பௌதிகம் படித்தவள்.
மாதுக் என்கிற இளைஞனை மணந்து மூன்று வருடமாகிறது. மாதுக்-ஜுமைமாவுக்குக் குழந்தைகள் இல்லை. இருவருடனும் மாதுக்கின் அம்மா ஹசிகா சேர்ந்து வாழுகிறாள்.
டிஸ்பிளேயில் பெயர் பார்த்தாள். ‘பச்சை சட்டை மாமு’ எனப் போட்டிருந்தது. மாமுவின் பெயர் அஸ்காரி முகமது. ஜுமைமாவின் தாயாரின் மூத்த அண்ணன். மத்திய அரசுப் பணி பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவியின் மரணத்திற்குப் பிறகு வேலைக்காரியுடன் சேர்ந்து வாழ்வதாக கேள்வி.
“அஸ்ஸலாமு அலைக்கும் மாமு”
“வஅலைக்கும் ஸலாம் ஜுமைமா”
“என்ன மாமு, இந்த நேரத்தில் போன் பண்றீங்க?”
“ஒரு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். உனக்குச் சொல்லலன்னா என் தலை வெடிச்சிரும்”
“அப்படி என்ன விஷயம்?”
“உன் மாமியாக் கிழவி இருக்காள்ல… அவகிட்ட நேத்தி மத்தியாணம் பேச்சுக் கொடுத்தேன். 22 நிமிடம் பேசினா, அதில 21 நிமிஷம் 40 நொடி உன்னைத்தான் கழுவிக்கழுவி ஊத்தினா. அவளுக்குத் தெரியாம அவளும் நானும் பேசினதை ரிக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்… கிழவிக்குச் சார்பாப் பேசி விஷயங்களைக் கறந்திருக்கேன். உனக்கு வாட்ஸ் அப்ல அந்தப் பதிவை அனுப்பட்டுமா?”
“அப்படி என்ன திட்னா, அந்தக் கோண வாய்க் கிழவி?”
“அதை நான் சொன்னா நல்லாருக்காது. வசவின் வீரியம் நீர்த்து விடும் அல்லது அடர்ந்து விடும். அவளும் நானும் பேசிக்கிட்ட பதிவை நான் தான் உனக்கு அனுப்பினேன்னு அவகிட்ட உளறிக் கொட்டிடாத. பின்ன அவ உஷாராய்டுவா அதோட என் கூடச் சண்டைக்கும் வருவா…”
“சரி மாமு…”
“அமைதியாப் பொறுமையா கேளு. அப்பத்தான் அவளோட வசவுகளோட உள்ளர்த்தம் உனக்கு முழுமையாகப் புரியும்”
“ஓகே மாமு”
தொடர்பைத் துண்டித்து புலனத்துக்குப் போனாள் ஜுமைமா. பதிவை ஆன் செய்தாள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்:
*‘(அடிப்படை இல்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள் (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களேI (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்’
- அபூ ஹுரைரா (ரலி) ஸஹீஹ் புகாரி 6724
|
“அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா. நல்லாயிருக்கீங்களா?”
“வலைக்கும் ஸலாம். யாரு அஸ்காரியா பேசுரது?”
“ஆமா என் தங்கச்சி மகள் எப்படி இருக்கிறாள்?”
“அவளைப்பத்தி பேசாதப்பா அவ ஒரு குரங்கு… எது சொன்னாலும் பாஞ்சு கடிச்சிடுரா…”
“அவளைத் திட்டாதீங்க. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் மாறிடும்… அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ன்னு பாட ஆரம்பிச்சுருவீங்க?”
“அவ ஒரு வாழைப்பழச் சோம்பேறி. சரியாச் சமைக்றதில்ல. ஒழுங்கா ஓதுரதில்ல, தொழுறதில்ல, சதா தூக்கம். ராத்திரி புருஷனோட சேந்து படுத்தாவுலக் குழந்தை பிறக்கும்”
“கல்யாணத்துக்குப் பிறகு திருந்தியிருப்பான்னுல நினைச்சேன்”
“நல்லா நினைச்சப் போ… எனக்குக் ‘கோணவாய் குப்பி’ ன்னு பட்டப்பெயர் வச்சிருக்கா. என்னைப் பார்க்கும் போதெல்லாம் கொலை வெறியாத்தான் முறைப்பா. நான் வேணாமாம். ஆனா, என் மகன் வேணுமாம். இது எந்த ஊர் நியாயம்?”
“சிலுக்குவார்பட்டி நியாயமால இருக்கு”
“நான் சாப்பிடும் போது, அப்படியே நின்று நான் சாப்பிடுறதைப் பாப்பா, நான் எத்னி கறித்துண்டு திங்ரேன்னு. அவ பார்த்தாலே எனக்கு வயித்தால புடுங்கிட்டு அடிக்கும்”
“அவ அப்படித்தான் ஹசிகாம்மா… யார் எதைத் தின்றாலும் அவளுக்குப் பொறுக்காது. கல்யாணத்துக்கு முன்னாடி அவ வீட்டுச் சனங்க அவளுக்கு ஒளிஞ்சு மறைஞ்சுதான் சாப்பிடும்கள். நான் அவ முன்னாடி டீ கூடக் குடிக்க மாட்டேன்”
“உன் தங்கச்சி மக மேக்கப் இல்லைன்னா சூன்யக்காரக்கிழவி மாதிரி இருப்பா. உண்மைல அவ காலேஜ்ல படிச்சாளா அல்லது படிச்ச மாதிரி காட்டி சர்டிபிகேட் வாங்கிட்டாளா?”
“ஜுமைமா படிப்புல கொஞ்சம் ஸ்லோதான்”
“எலிவால் தலைமுடி. சவரிமுடி வச்சு எல்லாத்தையும் ஏமாத்திக்கிட்டு இருக்கா”
“அதையும் கண்டுபிடிச்சிட்டீங்களா?”
“ஒழுங்காத் துணி துவைக்கத் தெரியாது. தன் பெட்ரூமைச் சுத்தமா வச்சுக்கத் தெரியாது. கட்ன புருஷனை மரியாதையாப் பேசத் தெரியாது, கல்யாணமான மூணே வருஷத்ல பலூன் மாதிரி ஊதிட்டா…”
“அதுக்கு என்ன பண்ணனும்ன்றீங்க?”
“இன்னும் ஒரு ஆறுமாசம் பார்ப்பேன்… அதுக்குள்ள அவ மாசமாகனும், என்கிட்ட மரியாதையா நடக்கனும். சமைக்கக் கத்துக்கிடனும், இல்லைன்னா அவளுக்கு தலாக் சொல்லி விரட்டிட்டு என் மகனுக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வச்சிருவேன்”
“ரெண்டாம் கல்யாணத்ல பிரியாணி போடுவீங்கதானே?”
“நீ தின்றதிலேயே இரு”
“இதெல்லாம் என் தங்கச்சி மகளுக்குத் தெரியுற மாதிரியா பேசாதிங்க. சாப்பாட்ல விஷம் வச்சுக் கொன்னிருவா”
“கொல்லுவாக் கொல்லுவா… கரன்ட் ஷாக் கொடுத்து நான் அவளை கொன்னிடுவேன்”
உரையாடல் பதிவு முடியவும், கணவர் மாதுக் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
“போன்ல யாரு ஜுமைமா?”
“ஒண்ணுமில்ல… ஹாட் ஸ்டார்ல சீரியல் பாத்துக்கிட்டு இருந்தேன்”
“பொய் சொல்லாதே. உன் போனிலிருந்து எனக்கு இரு பழகிய குரல்கள் கேட்டன. போனைக் குடு”
“மாட்டேன்”
போராடி திறன்பேசியைப் பறித்தான் மாதுக். ஹசிகா - அஸ்காரி உரையாடலை முழுவதும் கேட்டான். ஆங்காரமாகத் தரையைக் கால்களால் உதைத்தான்.
ஐந்து நொடிகள் யோசித்த அவன் அம்மாவின் அறைக்கு ஓடினான்.
போனை நோண்டிக்கொண்டிருந்தாள் ஹசிகா.
அம்மாவிடமிருந்து போனைப் பறித்தான். வாட்ஸ்அப் திறந்தான். அஸ்காரி அனுப்பிய ஆடியோவை அமுக்கினான்.
“அஸ்ஸலாம் அலைக்கும் தங்கச்சி மகளே”
“வலைக்கும் ஸலாம் மாமு”
“உனக்குச் சுடுதண்ணி கூடப் போடத் தெரியாதாமே?”
“நல்லா சமைக்கனும்னா அவ தன் மகனுக்கு ஒரு பைவ் ஸ்டார் செப்பைல்ல கட்டி வச்சிருக்கனும். என் மாமியா ஒரு தின்னிப்பண்டாரம். நான் எனக்குத் தெரிஞ்சதைச் சமைக்கிறேன். புருஷன் திருப்தியா சாப்ட்டுட்டு போரான்… இவ எதுக்குக் குறை சொல்லனும்?”
“நீ தினமும் தொழறதில்லைன்னு சொல்ரா கிழவி”
“தொழுறதை எல்லாருக்கும் கண்காட்சி ஆக்கனுமா? நான் தினமும் தொழுதுகிட்டுதான் வரேன்”
“உன்னை தூங்கு மூஞ்சின்றா…”
“எந்த கல்மிஷமும் இல்லாத எனக்குப் படுத்தவுடனேத் தூக்கம் வருது… அவதான் தூக்கமே வராம ஆந்தை மாதிரி கொட்டக்கொட்ட முழிச்சிக்கிட்ருக்கா...”
“உனக்கு எலி வால் மாதிரி தலைமுடியாம்”
“சொட்டைமண்டை என்னைக் குறை பேசுதாக்கும்”
“நீ மேக்கப் போடலைன்னா, கிழவி மாதிரி இருப்பியாம்”
“அவதான் கான்ஜுரிங் பேய்”
“நீ மலடியாம்”
“அவ கண்டா?”
“உன்னை தலாக் சொல்லிட்டு மகனுக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாளாம்…”
“இவ மகனை விட பெட்டர் புருஷனை நான் மறுமணம் பண்ணிப்பேன். முகவாதம் வந்தது பத்தாது. இடது கைகால் இழுத்துக்கிட்டு அவ படுத்த படுக்கையாகிடணும். இதை அல்லாஹ்கிட்ட வேண்டாத நாளில்லை”
பதிவு முடிந்தது.
அம்மாவையும் மனைவியையும் ஒருசேர அழைத்தான். “உங்க ரெண்டு பேரும் கிட்டயும் நல்லவன் மாதிரி பேசி பதிவு பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் பதிவுகளை அனுப்பி குடும்பத்தை பிளக்கத் திட்டம் போட்டிருக்கான் அந்த அஸ்காரி. அஸ்காரி ஒரு முனாபிக். அவனை நம்பினால் துரோகம் செய்வான், பேசினால் பொய் பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான். முனாஃபிக் என்கிறது நூல் புகாரி”
“அவனை ஏன் திட்ற? இருபக்க உண்மையைக் காட்டிக் கொடுத்திருக்கிறான்”
“நான் என் மனைவிக்கும், என் தாய்க்கும் இடையே நீதமாக நடப்பேன். இருவரும் என் கண்கள். உங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையான மாமியார் மருமகள் ஆக்குவேன். அதற்கு அல்லாஹ் உதவட்டும். யாருடைய சதிவேலைக்கும் இரையாகாதீர்கள், பெண்களே” நொடி சப்தமாக மூச்சு விட்டான் மாதுக்.
“நாளைக்குக் காலைல அவனை செமத்தியாக் கவனிச்சிடுரேன்” முணுமுணுத்தான்.
ஓடும் அஸ்காரியை மாதுக்கும், அவனது நண்பர்களும் துரத்திப் பிடித்தனர். அஸ்காரியின் திறன்பேசியைப் பிடுங்கி வாட்ஸ்அப் போனான்.
550 குரல் பதிவுகள்.
அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை வர வசதியாக இரு பக்கப் பதிவுகள். இமாமுக்கும் முத்தவல்லிக்கும் லடாய் வர வசதியாக இரு பக்கப் பதிவுகள். மொத்தத்தில் அனைத்து குரல் பதிவுகளும் பல வகையில் உறவுகளையும் நட்புகளையும் பிரிக்கப் பயன்பட்டிருந்தன.
“யோவ் அஸ்காரி, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கப் பதிவு செய்யக் காவல்துறை, உளவுத்துறை இரண்டுக்கும் மட்டுமேச் சட்டப்பூர்வ அனுமதி உண்டு. சில விஷயங்களைக் கற்கும் நோக்கோடு முன் அனுமதி பெற்று குரல் பதிவு செய்யலாம். நீ மனிதர்களைப் பிரிக்க ஷைத்தான் வேலை பார்த்திருக்கிறாய், உன் நாவில் புறம்பேசுதல், கோள்பேசுதல் போன்றவற்றால் நீ நிரம்பி இருந்தால் உன் ஆன்மீகம் பெரிய அளவில் வீழ்ச்சியடையும். நீ சந்திக்கும் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு வலி இருக்கிறது. வலியைக் குறைக்கும் நிவாரணியாக இரு, அதிகரிக்கும் விஷமாக இருந்து விடாதே. அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மலக்குகள் உன் நன்மை தீமைகளைப் பதிவு செய்கின்றன. மரணம் நீ நினைப்பதை விட, அருகில் உள்ளது. குடும்ப ஒற்றுமைக்காக, தம்பதியினருக்குள் சொல்லப்படும் பொய் ஆகுமானதாகும். வயதில் மூத்த நீ என் தாய், மனைவிக்கிடையே இருந்த விரோதத்தை, குரோதத்தை அழகிய முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டும். இம்முறை உன்னைக் காவல்துறையில் ஒப்படைக்கவில்லை. திருந்து”
அஸ்காரியின் திறன்பேசியை அடித்து நொறுக்கினான் மாதுக்
காகப்பார்வை பார்த்தான் அஸ்காரி.
“ஹதீஸ்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும் வைத்து எனக்கு அறிவுரை கூறி என் இருபதாயிரம் ரூபாய் செல்போனை அடித்து நொறுக்கி விட்டாயல்லவா நீ? இரு உனக்கும் உன் பிசினஸ் பார்ட்னருக்கும் இடையே கலகத்தை மூட்டும் ஆடியோ பதிவுகளைத் தகுந்த நேரத்தில் வெளியிட்டு உங்களை நிரந்தரமாகப் பிரிக்கிறேன்”