ஹல்டிராம் ரசகுல்லா டின்னின் மேற்புறத்தைக் கத்தியால் வட்டமிட்டாள் ஆமிரா. முதுகலைச் செவிலியர் நங்கை படிப்பு படிப்பவள். வயது 24. நடிகை ஆலியா பட் சாயல். அவளது முக அழகில் பாரசீகப் பெண்மை ஒளிந்திருக்கும். தன் வாயில் இருப்பதைக் கூட எடுத்து எதிராளிக்கு ஊட்டி விடும் தயாளகுணம் கொண்டவள். ஆமிராவின் அழகிய முன்மாதிரி அன்னை தெரசாதான். தனது வாழ்நாளில் ஒரு லட்சம் நோயாளிகளைக் கவனித்துக் குணப்படுத்த வேண்டும் என்பதே ஆமிராவின் பேரவா. ஆமிராவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, அவளது பெற்றோர்கள் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள்.
தந்தையின் மூத்த சகோதரி லைலா மாமி வீட்டில்தான் வளர்கிறாள். வட்டத்தகடை வெளியில் எடுத்து வைத்துவிட்டு தனது வலது ஆட்காட்டி விரலையும் கட்டை விரரையும் இணைத்து ஒரு ரசகுல்லாவை கவ்வினாள். எடுத்து வாய்க்குள் போட்டாள். ஒரு ஸ்பூன் எடுத்து ஜீராவை அள்ளி வாய்க்குள் கவிழ்த்தாள். ஆமிரா ரசகுல்லா சாப்பிடுவதை ரசித்தவாறே லைலா மாமி ஒரு கை மிக்சரை எடுத்து ஆமிராவின் வாய்க்குள் திணித்தாள்.
“ரசகுல்லா ஜீரா மிக்சர் மூன்றும் கூழாகி ஒரு புது டேஸ்ட் தரும் பாரு ஆமிரா…”
மென்றவாறே ஆமிரா “ஆமா மாமிI”
“எப்படா நோன்பு திறக்கும் நேரம் வரும்னு காத்திருந்து ரசகுல்லாவை லபக்குறியாக்கும்”
“நீங்க ரெண்டு சாப்பிடுங்க மாமி”
“ சாப்ட்டு சாப்ட்டுதான் குந்தாணி மாதிரிப் பெருத்துக் கிடக்கேனே... எனக்கு வேணாம்டியம்மா…”
ஒரு இஞ்சி டீயை உறிஞ்சிக் குடித்தாள் ஆமிரா.
“மாமிI இன்னைக்கு 20 நோன்பு முடியுது. நாளைக்கு 21வது நோன்பு ஆரம்பிக்குது. ரமலான் மாதத்துக்கு மட்டும் 180 நாட்கள் இருக்கக் கூடாதான்னு மனசு ஆவலாதிக்குது”
“எனக்கு ரமலான் மாதம் 15 நா இருந்தா போதும்னு தோணுது. சஹருக்கு சமைக்கனும். நோன்பு வைக்காத பெருசுகளுக்கு தனி சமையல் பண்ணனும். இப்தாருக்கு பலகாரங்கள் ரெடி பண்ணனும். கை கால் எல்லாம் அசந்து வெலவெலத்து போகுது”
“உங்கப் பார்வை தனி மாமி, இஃதிகாப் என்றால் என்ன?”
“கேள்விப்பட்டிருக்கேன். தெளிவாத் தெரியல நீயேச் சொல்லு”
“இஃதிகாப் ஒரு இஸ்லாமிய நடைமுறை. குறிப்பிட்ட எண்ணிக்கை நாட்களில் தொழுகையாளிகள் மசூதியில் தங்கி தங்களை இபாதாவுக்கு அர்ப்பணித்து உலக விவகாரங்களில் விலகி நிற்பதே இஃதிகாப் ஆகும்.”
“ஓ.. ரம்ஜான் நோன்புகளில் கடைசிப் பத்து நாட்கள் ஆண் தொழுகையாளிகள் ஒரு நாளில் 24 மணி நேரமும் இறை வழிபாடுகளில் ஈடுபடும் இஃதிகாப்பைத் தானேச் சொல்ற?”
“இஃதிகாப் ரமலான் மாதத்தில் தான் இருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை. எப்போது வேண்டுமானாலும் இஃதிகாப் இருக்கலாம். ஷவ்வால் மாதத்தில் கூட நபிகள் நாயகம் இஃதிகாப் இருந்திருக்கிறார்.”
“10 நாள் கட்டாயமா?”
“இல்லை… ஒரே ஒரு நாள் இருக்கலாம். ஏன், ஒரே ஒரு மணி நேரம் கூட இருக்கலாம்…”
“இஃதிகாப் பள்ளிவாசலில் தான் இருக்க வேண்டுமா?”
“ஜமாஅத்தாக தொழுகை நடத்தப்படாத மசூதியில் இஃதிகாப் கூடாது. இஃதிகாப் ஒரு சுன்னத்தான வணக்க வழிபாடு கட்டாயம் இல்லை. ஆனால், ஒருவர் வாய்விட்டு இஃதிகாப் இருக்கப் போகிறேன் என அறிவித்துவிட்டால் கட்டாயக் கடமையாகிவிடும்”
“இஃதிகாப் இருந்தால் என்ன நன்மை?”
“இஃதிகாப் இருப்பவருக்கும் நரகத்துக்கும் இடையே மூன்று அகழிகளை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்கிறது ஒரு ஹதீஸ். ஆனால், அந்த ஹதீஸில் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்”
“ஓஹோ”
“இன்னொரு ஹதீஸ் கூட இருக்கிறது. ரமலானில் பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது இரண்டு ஹஜ் இரண்டு உம்ரா நிறைவேத்னதுக்குச் சமம் என்கிறது இன்னொரு ஹதீஸ். இந்த ஹதீஸும் பலவீனமானதுதான்”
“இஃதிகாப்பைத் தற்காலிக துறவறம் எனலாமா?”
“இஸ்லாமில் துறவறம் ஏது? இஃதிகாப் இறைவனை நெருங்கும் உன்னத வழிபாட்டு முறை அவ்வளவே...”
“அது சரி ஆமிரா இஃதிகாப் இஸ்லாமிய ஆண்களுக்கான வழிபாட்டு முறை. நீ ஏன் அதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய்?”
“இஸ்லாம் ஆண் - பெண்ணைப் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆன்மிகத்தில் இனக்கவர்ச்சி வந்து முட்டி மோதி சேதங்களை ஏற்படுத்தி விடக் கூடாதே என்று சில பல பாதுகாப்பு வளையங்களை அமைத்திருக்கிறது இஸ்லாம்”
“எனக்கேப் பாடம் நடத்றியா ஆமிரா?”
“எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இஃதிகாப் ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது. பெண்களும் தாராளமாய் இஃதிகாப் இருக்கலாம்… திருமணமான பெண்கள் இஃதிகாப் இருக்க அவளது கணவரின் அனுமதி தேவை. மனைவி இருக்கும் இஃதிகாப்பை இடையில் ரத்து செய்யவும் அவளது கணவருக்கு உரிமை உண்டு. திருமணமாகாதப் பெண்களுக்கு அவர்களது பெற்றோரின் அனுமதி தேவை. பெற்றோர் இல்லாத, திருமணமாகாத பெண்களுக்கு அவர்களின்
பாதுகாவலரின் அனுமதி தேவை…”
“விருப்பப்படுறப் பெண்கள் கணவரைக் கேட்டோ, தந்தையைக் கேட்டோ, கார்டியனைக் கேட்டோ இஃதிகாப் இருக்கட்டும் நீ படிக்கற வழியைப் பாரு”
“மாமி, எனக்கு 15 நாள் சம்மர் ஹாலிடேஸ் லீவ். நாளையிலிருந்து பத்து நாளைக்கு இஃதிகாப் இருக்கப் போகிறேன்”
“வீட்டில் தொழுகைக்கு ஒதுக்குமிடம் மசூதி. ஆகையால் பெண்கள் அவரவர் வீடுகளில் இஃதிகாப் இருக்கலாம் எனச் சிலர் கூறுகிறார்கள். சிலர் வீடுகளில் இஃதிகாப் இருப்பது கூடாது என்கின்றனர்”
“நம்ம மஹல்லாவில் பெண்களுக்குப் பிரத்தியேகமாக மசூதி இருக்கிறதா?”
“இல்லையே…”
“பின்ன என்ன செய்வாய்?”
“ஜமீலா உஸ்தாத்பி நம்ம மஹல்லாவுல பக்கத்துத் தெருவுல பெண்கள் மதரஸா நடத்துகிறார். அது ஒரு உண்டு உறைவிட மதரஸா. உஸ்தாத்பியுடன் பேசியிருக்கிறேன். அவர் இப்போது வந்துவிடுவார். அவரிடம் மேல் விவரங்கள் கேட்டுத் தெளிவு பெறுங்கள்”
“நாளைக்கு எப்பப் போற?”
“நாளைக்குச் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னாடிப் போய்விட்டு பிறை பார்த்து ஈத் அறிவிச்ச பிறகு வீடு திரும்புவேன்”
“மதரஸாவில் உனக்குத் தனி அறை உண்டா?”
“உண்டு”
“எதற்கும் மாமாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடு”
“சரி”
அத்தர் நறுமணத்துடன் உஸ்தாத்பி உள்ளேப் பிரவேசித்தார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“சொல்லுங்க உஸ்தாத்பி. ஆமிரா இஃதிகாப் இருக்க உங்கள் மதரஸா பாதுகாப்பான இடமா?”
“இதில் என்ன சந்தேகம்?”
“பத்து நாள் இஃதிகாப்பில் ஆமிரா என்னென்ன செய்வாள்? என்னென்ன செய்ய மாட்டாள்?”
“முதலில் அவளது திறன்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து உங்களிடம் கொடுத்துவிட்டுத்தான் ஆமிரா இஃதிகாப்புக்கு புறப்படுவாள்…”
“நல்ல ஏற்பாடு”
“பத்து நாட்களுக்கு ஆமிரா நோன்பு வைப்பாள். அவளேச் சமைத்துக் கொள்ளலாம் அல்லது நானேச் சமைத்துத் தருவேன்…”
“சரி”
“தினம் ஐவேளை தொழுகை உடன் தினமும் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகள். தினமும் குர்ஆன் ஓதுவாள். இறைவனின் 99 நாமங்களை திக்ர் எடுப்பாள். லாப்டாப் பயன்பாடோ வீடியோ ரீல்ஸோ கூடவேக் கூடாது. யார் உடல் சுகவீனப்பட்டால் அவரை நலம் விசாரிக்கச் செல்லக்கூடாது. உறவினர் நண்பர்கள் மரணங்களுக்குத் துக்கம் விசாரிக்கக் கூடாது. பெண்ணுக்குப் பெண் மார்க்கத்தை கற்கலாம், மார்க்கத்தைக் கற்பிக்கலாம். பத்துநாட்கள் தன்னந்தனியளாக இருந்து தனது கல்ப்பை தானே உள்ளும் புறமும் அறிதல். இஃதிகாப் ஒரு தியானம் போல. அது நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துகிறது”
“மிக முக்கியமான கேள்வி… இஃதிகாப் இருக்கும் பத்து நாட்களில் ஆமிராவுக்கு மாதவிடாய் வந்துவிட்டால்?”
“மாதவிலக்கு வந்துவிட்டால் இஃதிகாப் இரத்து ஆகிவிடும். அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன். ‘யூடோவ்லான்’ என்கிற மாத்திரை எடுத்துக் கொண்டால் மாதவிலக்கை விரும்பின நாட்களுக்குத் தள்ளிப் போடலாம். இந்த யூடோவ்லானில் நார்எதிஸ்டீரோன் ஹார்மோன் இருக்கிறது. அது புரஜெஸ்ட்ரான் அளவை உயர்த்தி மாதவிலக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது”
“மாத்திரை எடுத்துக் கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா?”
“உடல் ஆரோக்கியம் கெடாத வகையில், மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம்… நோ ப்ராப்ளம்”
மாமா வந்து சேர்ந்தார்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
விஷயத்தை கேட்டதும் பெருஞ்சிரிப்பை வெடித்தார் மாமா “ஆமிரா இஃதிகாப் போகும்போது என் மனைவி லைலாவையும் கூட்டிச் செல்லுங்கள் உஸ்தாத்பி. டென்ஷன் ப்ரீயாக இருப்பேன்.”
லைலா வழிப்பம் காட்டினாள்.
பெண்கள் மதரஸாவுக்குள் பயணச் சுமைகளுடன் பிரவேசித்தாள் ஆமிரா. அவளுக்கான தனியறை ஊதுபத்தி நறுமணத்துடன் காத்திருந்தது.
“பிஸ்மில்லாஹி தக்கல்து வஅலைஹி தவக்கல்து வனாவய்து சுன்னத்துல் இஃதிகாப்”
(அல்லாஹ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட பெயருடன் இந்தப் பெண்கள் மதரஸாவுக்குள் நுழைகிறேன். இஃதிகாப்பின் சுன்னாவை நோக்கமாகக் கொண்டுள்ளேன். யா அல்லாஹ் உனது கருணையின் கதவுகளை என் மீது திறந்துவிடு)
அந்தச் சின்னஞ்சிறு அறை முழுக்க மலக்குகள் குழுமினர்.
“மகிமையுள்ள இறைவனே! இந்த பெண்ணுக்கு ஒரு உஹது மலையளவு நன்மைகளை வாரி வழங்கு!”
கதை படிக்கும் நீங்கள் “ஆமின்” என்கிறீர்கள். மிகவும் நல்லது.