அப்துல்லாபுரம்.
அந்த ஊரில் ஆயிரம் வீடுகள் இருந்தன. ஆயிரத்தில் 990 வீடுகளில் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்தனர். அனைவருமேத் தமிழ் பேசும் முஸ்லிம்கள். ஒரு சுன்னத் ஜமாத் பள்ளிவாசலும், ஒரு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலும், ஒரு ஜாக் பள்ளிவாசலும் இருந்தன. அப்துல்லாபுரம் ஊரில் முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சுன்னத் ஜமாத் மஹல்லாவுக்கு கட்டுப்பட்டவர்களே. ஊர் முஸ்லிம் ஆண்களில் பெரும்பாலானோர் வியாபாரிகளாக இருந்தனர்.
ஓட்டி வந்த பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நடந்தான் முகமது அசாமத். வீட்டின் இடது பக்கம் அந்த ஆட்டுக்கிடா கட்டிப் போடப்பட்டிருந்தது. அதன் உடம்பில் கருப்பும் செங்கல் நிறமும் பரவியிருந்தன. கூர்மையான இரு கொம்புகள். ஆடு நின்றிருந்த இடம் முழுக்க ஆட்டுப் புழுக்கைகள் பரவிக் கிடந்தன. ஆடு தின்ன அகத்திக்கீரை கட்டு போட்டிருந்தனர். ஆடு குடிக்க ஒரு பெரிய பக்கெட்டில் தண்ணீர் நிறைத்திருந்தனர்.
ஏறக்குறைய 7 மாதங்களாக அவர்கள் வீட்டில் அந்த ஆடு வளர்கிறது. சந்தையில் வாங்கும் போது அது 40 நாள் குட்டி. இப்போது அந்த ஆடு 16. 5 கிலோ எடை இருக்கிறது. முகமது அசாமத்தின் மகன் ஐயாத் முகமது 12 வயது சிறுவன். அவன்தான் அந்த ஆட்டைப் போஷாக்காகக் கவனிக்கிறான். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் ஆட்டை வாக்கிங் கூட்டிப் போய் மேய விடுவான். ஆட்டிற்கு பெயர் ‘நாடிக்’ என வைத்திருந்தான். நாடிக்குக்கு முகமது அசாமத் பேசும் தமிழ் நன்றாகப் புரியும். நாடிக் பாச மிகுதியால் ஐயாத் முகமதின் கைகளை நக்கும். வாக்சல்யமாய் ‘ம்பே ம்பே’ என மிழற்றும்.
முகமது அசாமத் மகனிடம் “மகனே! நாடிக் மீது அதிகப் பாசத்தை வைக்காதே. இன்னும் ஒன்றரை மாசத்திலப் பக்ரீத் வரப்போகுது. பக்ரீத்துக்கு நாடிக்கைத்தான் குர்பானி கொடுக்கப் போறோம்…”
“நாடிக்கை நாம்பளே வளத்துக்கிட்டு குர்பானிக்கு முந்தின நாள் புதுசா ஒரு ஆடு வாங்கிக்கக் கூடாதா?”
சிரித்தான் முகமது அசாமத்.
“புரியாமப் பேசாதே. நமக்குப் பிரியமான ஒன்றைத்தானே, நாம் குர்பானி கொடுக்க வேண்டும். பிறந்த உயிர்கள் அனைத்தும் மரணிக்கத்தானே வேண்டும். குர்பானி கொடுக்கும் வரை நாடிக்கை நீ எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?”
“எப்படி?”
“தினம் நாடிக்கை குளிக்க வை. நாடிக்கின் வயிறு முட்ட உணவு கொடு. நாடிக்கின் உடம்பிலோ, கொம்பிலோ எவ்வகை ஒச்சமும் ஏற்படாமல் பார்த்துக் கொள். இரவில் திருடர்கள் யாரும் வந்து நாடிக்கைத் திருடிப் போய் விடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள். அக்கம்பக்கத்து குர்பானி ஆடுகளுடன் உன் ஆட்டை ஒப்பிடாதே. உன் ஆட்டைப் பற்றி யாரிடமும் பெருமையடித்துக் கொள்ளாதே. ஆட்டுக்கு எந்த நோயும் தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்…”
“சரிங்கத்தா”
“இன்னைக்கி உனக்கு ஸ்கூல் லீவுதானே? ஆட்டை எங்காவது மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு மதியம் கொண்டு வந்து கட்டு”
“ஓகே டன்”
நாடிக்கை இழுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே நடந்தான் ஐயாத் முகமது. நாடிக்கின் கழுத்து சலங்கை சப்தம் ஜலக்ஜலக் என்றது. ஆட்டின் மீதிருந்து ஒரு மெல்லிய நாற்றம் கிளர்ந்தது. திவ்யமாக நாசிகளுக்குள் இழுத்து உயிர்த்தான் ஐயாத். நாடிக்கின் வாயிலிருந்தும் நாசித் துவாரங்களிலிருந்தும் சளித்திரவம் நூலாய்ச் சொட்டியது. இருபது அடி நீளமுள்ள கயிற்றைத் தளர்த்திவிட்டு நாடிக்கைப் புல் மேய விட்டான் ஐயாத். மரத்தடியில் அமர்ந்து வாண்டுமாமா கதை ஒன்றைப் படிக்க ஆரம்பித்தான்.
அரைமணி நேரம் நகர்ந்தது.
நாடிக்கின் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்கும் நாடிக்குக்கும் சண்டை மூண்டது. கொம்புகளால் டங்கார் டங்கார் என மோதிக் கொண்டன.
சண்டையை விலக்க எழுந்தோடினான் ஐயாத்.
அதற்குள் கழுத்துக்கயிற்றை அறுத்துக் கொண்டு தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது நாடிக்.
“நாடிக், ஓடாதே நில்! நாடிக் நாடிக்”
நாடிக் அசுர வேகத்தில் ஓடியது.
பிரதான சாலையில் ஏறித் தாவியது. நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு சிவப்புநிற பெர்ராரி ரோமா சீறி சினந்தது. கார் நாடிக்கை முட்டி மோதி செந்தூக்காய் சிதற்றியது. நாடிக் இருபதடி தூரம் பறந்து தரைச்சாலையில் சொத்தேறியது. இரத்தச்சேற்றில் உயிர் நீத்து கண்கள் ஏகாந்தத்தில் நிலைத்தன.
வீரிட்டான் ஐயாத். “நாடீக்”
கார் சறுக்கி நின்றது.
தரை தேய்த்து முழங்காலிட்டு நாடிக்கை தூக்கிக் கதறினான். இரத்தம் பூசிய கைகளால் முகத்தை அறைந்து கொண்டான்.
காரிலிருந்து 32 வயது இளைஞன் இறங்கினான். “அடடா.. வண்டிக்குக் குறுக்கால பாஞ்சு ஆடு வண்டி மேல மோதிருச்சு. ஆடு இறந்திருச்சு போல. ஆடு உன் ஆடாப்பா?”
“யோவ், அநியாயமா பேய் ஸ்பீடுல வந்து என் ஆட்டைக் கொன்னுட்டியே… நீ நல்லாருப்பியா?”
“சரிப்பா.. எதிர்பாராம எல்லாம் ஒரு பிராக்சன் ஆப் செகன்ட்ல நடந்துப் போச்சு. பெரியவங்களை வரச் சொல்லு. பேசி நஷ்டஈடு கொடுக்கிறேன்!”
“என்கிட்ட போன் இல்லை. எங்கத்தா நம்பரைச் சொல்றேன், போட்டுக் கொடு…”
பத்து இலக்க எண்ணை அமுக்கி ஐயாத்திடம் கொடுத்தான். “த்தா த்தா! நம்ம நாடிக்கை ஒரு கார்காரன் மோதிக் கொன்னுட்டான்… மெயின்ரோட்டுக்கு உடனே ஓடி வாங்க!”
அடுத்தப் பத்து நிமிடங்களில், இரண்டு சக்கர வாகனங்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்தனர். அதில் ஐயாத்தின் அத்தாவும் பள்ளிவாசல் முத்தவல்லியும் இமாமும் இருந்தனர்.
சில ஊர்க்காரர்கள் கார் ஓட்டி வந்தவனின் கோட்டைக் கழற்றித் தரையில் அடித்தனர். அவனை இழுத்துப் போய் ஒரு மரத்தில் கட்டினர்.
முத்தவல்லி வினவினார். “யாருய்யா நீ? உன் பேரென்ன?”
“பாய்! நான் ஒரு தொழிலதிபர். பொள்ளாச்சிக்கு வியாபார விஷயமாகப் பேசப் போய்க் கொண்டிருக்கிறேன். என் பெயர் கார்த்திக் திலகன். நடந்தததை விசாரிக்காமல் என்னை இப்டிக் கட்டிப் போட்டது, சரியா?”
“சரி என்ன நடந்தது சொல்லு?”
“கண் இமைக்கும் நேரத்தில் ஆடு தாறுமாறான வேகத்தில் சாலையை ஊடுருவி விட்டது. நான் பிரம்மபிரயத்தனம் பண்ணிப் பாத்தேன். மோதலைத் தடுக்க முடியவில்லை. ஆட்டுக்குரிய நஷ்டஈட்டைச் சொல்லுங்கள்… தருகிறேன்”
“நீ மோதினது சாதா ஆடு இல்ல, குர்பானி கொடுக்க நேர்ந்து விடப்பட்ட ஆடு அது. உனக்குப் புரியுற மாதிரி சொல்லனுன்னா அது சாமி ஆடு”
“உங்கள் மதச் சடங்குகளைப் பெரிதும் மதிக்கிறேன். நடந்த விபத்துக்கு நான் உளமார உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். ஆட்டுக்கு ஒரு இருபதாயிரம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்கட்டுமா?”
குழுமியிருந்த ஊர்காரர்களில் ஒருத்தன் குதித்தான். “காசுத் திமிர்ல பேசுறியா? உன்னைச் சோறு தண்ணி குடுக்காம மரத்தில் ஒரு வாரம் கட்டிப் போட்டு உன் வாய்க் கொழுப்பைக் குறைக்கனும்”
“போலீஸைப் போன் பண்ணி வரச் சொல்லவா? அவங்க வந்து எதை செஞ்சாலும் நான் ஒத்துக்கிறேன்”
“எங்க ஊர்ல போலீஸுக்கு வேலை இல்லை. தண்டனையோ, பரிசோ எங்கப் பள்ளி முத்தவல்லிதான் தருவார்”
“நான் என் அதிகாரத்தையோ, பணத்தையோ இந்தச் சம்பவத்தில் முன் நிறுத்தவில்லை. கொஞ்சம் இறங்கி வாருங்கள். ஆட்டுக்கு நஷ்ட ஈடு முப்பதாயிரம் தரட்டுமா? வேற நல்ல ஆடு வாங்கி குர்பானி கொடுக்கட்டும்”
“ஆட்டுக்குப் பெயர் சூட்டி ஏழெட்டு மாசம் அன்பா வளர்த்தாங்களே, ஒரு புள்ளை மாதிரி. அதைக் கொலை பண்ணிட்டியே… அந்த உயிருக்கு உன் முப்பதாயிரம் பிச்சைக்காசு ஈடாகுமா?”
“வேற என்னதான் பண்ணச் சொல்றீங்க?”
“அரபு நாடுகளில் ஒரு கொலை நடந்து போச்சுன்னா கொலையாளியை மன்னிக்க, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு தொகை கேட்பார்கள். அந்தத் தொகையை ப்ளட் மணி அல்லது இரத்தக் காசு என்பர். நீ என்ன பண்ற? ஆட்டை இழந்த முகமது அசாமத்துக்கு அஞ்சு லட்சம் ரூபாய் இரத்தக் காசு கொடு”
“ஒரு ஆட்டுக்கு அஞ்சு லட்ச ரூபாய் அதிகம்…”
“நீ காசைக் குடுக்கலேன்னா ஆயுளுக்கும் நினைச்சு நினைச்சு வேதனைப்படுற மாதிரி அவமானங்களைச் சந்திப்ப”
வாக்குவாதம் நீண்டு இரத்தக் காசு மூன்று லட்சம் கொடுப்பது என முடிவானது.
இதுவரை பேசாமல் இருந்த முகமது அசாமத் வாய் திறந்தான். “என் ஆடு மோதி, கார்த்திக் திலகன் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ஆடு மோதின வேகத்தில் கார் திசை திரும்பி எதன் மீதாவது மோதி திலகன் இறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து. இதுதான் வாய்ப்பு என்று அவரிடம் மூன்று லட்சம் கேட்பது பேராசை. அவரை அவிழ்த்து விடுங்கள். அவர் ஒரு பைசா கூட நஷ்டஈடு தர வேண்டாம்… அவர் சுதந்திரமாகக் கிளம்பிச் செல்லட்டும். இறந்து போன ஆட்டை புதைத்துவிட்டு, குர்பானிக்கு புது ஆடு வாங்கிக் கொள்கிறேன்…. மனிதாபிமானம் இருக்கும் இடத்தில்தான் மதம் சிறக்கும்”
அரைமனதாய்க் கட்டை அவிழ்த்து விட்டனர்.
கார்த்திக் திலகனைக் கட்டியணைத்துக் கொண்டான் முகமது அசாமத். “உங்கள் காரைப் பழுது பார்க்க நான் எதுவும் நஷ்ட ஈடு தரட்டுமா?”
“உங்களின் பரிசுத்தமான அன்பு என் இதயத்தை நிறைத்து விட்டது. எதுவும் வேண்டாம்…”
மீண்டும் கார்த்திக் திலகன் கார் ஓட்டிச் செல்வதைப் பெருமிதமாய் கண்ணுற்றான் முகமதுஅசாமத்.
புதிதாய் ஒரு கிடா வாங்கி மகனிடம் கொடுத்தான் முகமது அசாமத்.
“இதன் பெயர் ஹப்ரூர்”
பக்ரீத் அன்று ஊர்மக்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ் வழங்கி, பள்ளிவாசலில் நூலகம் கட்ட 10 லட்சம் ரூபாய் காசோலையும் பரிசளித்தான் கார்த்திக் திலகன்.
“விட்டுக் கொடுத்தலும் மத நல்லிணக்கமும் மனித நேயமும் இந்த பக்ரீத் பெருநாளில் தழைத்தோங்கட்டும்” என்றனர் குழுவாக...!