ராபியத்துல் பசரியா மேல்நிலைப்பள்ளி. இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஓட்டி வந்த சைக்கிளை நிறுத்திப் பூட்டினாள் அதீபா. புத்தகப் பையை எடுத்து முதுகில் கோர்த்துக் கொண்டாள். ஹிஜாப்பை சரி செய்து
கொண்டாள்.
அதீபா வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஈரானியப் பெண்கள் போல பிங்க் இடத்தில் இருப்பாள். ஆர்வக்கண்கள். ஹைப்பூன் மூக்கு. சதா மார்க்க விஷயங்களை பேசும் வாய். பச்சை நிற சீருடை அணிந்திருந்தாள். கருப்பு நிறக் காற்சட்டை. கால்களில் ஷூ. இடுப்பில் பெல்ட். வகுப்பறைக்குள் பிரவேசித்தாள்.
தோழிகள் வரவேற்றனர்.
“அஸ்ஸலாமு அலைக்கும்”
“வஅலைக்கும் ஸலாம்”
வகுப்பு தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. அதனால் அதீபா தனது நெருக்கமான தோழிகளுடன் வட்டம் கட்டி அமர்ந்து கதைக்க ஆரம்பித்தாள்.
“பக்ரீத்துக்கு ஆடு வாங்கியாச்சா. பரீய்யா?”
“வாங்கியாச்சே…. எங்கக் கொல்லைப்புறத்தில் கட்டிப் போட்டு கவனிச்சிக்கிரம். உங்க வீட்டில வாங்கியாச்சா?”
“இனிமேல் தான் வாங்கனும். தனியா குர்பானிக்கு எங்கத்தா ஆடு வாங்கா விட்டாலும் கூட்டு குர்பானிக்கு பணம் கட்டிவிடுவார்”
“கூட்டுக் குர்பானி எங்கத்தாவுக்கு அறவேப் பிடிக்காது”
“நீ பெரும் பணக்காரி… எதை விரும்பினாலும் செய்யக் கையிலக் காசு இருக்கு. நாங்க அப்படியா? நாங்க அன்றாடங்காச்சிகள்”
“நீ மனதால் கோடீஸ்வரி”
“என்னைச் சமாதானப்படுத்த அப்படிச் சொல்லாதே...”
“சரி விடு… வேற பேசுவோம்….” என்ற பரீய்யா மந்திரவாதி கறுப்புத் தொப்பியிலிருந்து முயலை எடுப்பது போல, தனது இடது கையைத் தோழிகளின் நடுவில் நீட்டினாள்.
மணிக்கட்டில் ஒரு தங்க நிற வாட்ச்.
ஊப்
ஏ அப்பா
மாஷா அல்லாஹ்!
“வாவ், ஏதுடி மஞ்சள் கலர்ல டாலடிக்குது?”
“நேத்து எங்கத்தா வாங்கிட்டு வந்து பிரசன்ட் பண்ணினார். நாலஞ்சு வருஷம் கட்டு. காலேஜுக்குப் போறப்ப அய்யாயிரத்ல சூப்பர் வாட்ச் வாங்கித் தரேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கார்”
“இதென்ன மேக்?”
“ஸோனாடா பிராண்டு. விலை 1200 ரூபாய்”
“ஒரே ஒரு தடவை இந்த வாட்ச்சைத் தொட்டுப் பாத்துக்கட்டுமா?”
“தாராளமா...”
அந்தக் கைக்கடிகாரத்தை வருடிக் கொடுத்தாள், தடவிக் கொடுத்தாள் அதீபா. தனது இடது மணிக்கட்டை வெறித்தாள்.
“உனக்கு அதிர்ஷ்டமில்லையே என் இடதுமணிக்கட்டே...!”
“நான் ஒரு தடவை உன் வாட்ச்சைக் கட்டிப் பார்க்கட்டுமா?”
“நோநோ… எதாவது பண்ணி என் வாட்ச்சை டேமேஜ் பண்ணிராதிங்க. யாருக்கும் தர மாட்டேன். அத்தோடு சிறு விண்ணப்பம். யாரும் என் வாட்ச் மீது கண் போடாதீர்கள்….”
வகுப்பு ஆசிரியை வந்தார்.
அழகிய முகமனுடன் வகுப்புகள் ஆரம்பித்தன.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அதீபா. முகம் கைகால் கழுவி வேறு ஆடைக்கு மாறினாள். அம்மா ஒரு டம்ளரில் தேநீர் கொடுத்தாள்.
மனக்கண்ணில் நொடிக்கு நொடி பரீய்யாவின் ஸோனாட்டா வாட்ச் க்ளோசப்பில் வந்து வந்து போனது.
“நான் பணக்காரிடி. நான் நினைச்சா இடது கைல அஞ்சு வாட்ச்சும், வலது கைல அஞ்சு வாட்ச்சும் கட்டுவேன். உன்னால ஒரு வாட்ச்சோட திருகாணி கூட வாங்க முடியாது”
அடிக்கடி அதீபா, ஸோனாட்டா வாட்ச் ஸோனாட்டா வாட்ச் என முணு முணுத்தாள்.
தனது இடது மணிக்கட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.
ஒரு ரப்பர் பான்டை இடது கைவிரல்களுக்குள் நுழைந்து மணிக்கட்டை இறுக்கினாள்.
ஸ்கெட்ச் பேனா எடுத்து மணிக்கட்டில் வாட்ச் படம் வரைந்தாள்.
‘அல்லாஹ்! மலக்குமார்கள் மூலம் வானத்திலிருந்து ஒரு ஸோனாட்டா வாட்ச்சைத் தூக்கிப்போடு. எட்டிப் பிடித்துக் கொள்கிறேன். கையில் வாட்ச் கட்டுவது என்பது பூமி உருண்டையை மினியேச்சர் வடிவமாக்கி, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது போல. வாட்ச் கட்டியவர்களிடம் சூரியன் சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் அனுமதி கேட்கும். வாட்ச் ஒரு மணிக்கட்டு கவிதை. வாட்ச் காலத்தின் சிறு விள்ளல். வாட்ச் மனித இதயத்தின் சிறு நகல்’ யோசித்து யோசித்துத் தவித்துப் பரிதவித்தாள்.
அம்மாக்காரி மகளின் அவஸ்தையைப் பார்த்துவிட்டு “என்னடி வெள்ளாட்டை விழுங்கின மலைப்பாம்பு மாதிரி திணர்ற? பள்ளிக்கூடத்ல ஏதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“எதுனாலும் சொல்லு. நான் சரி பண்ணித்தரேன்”
“எனக்கு வயசு பன்னண்டு ஆகுது. அரைப்பொம்பிளை ஆய்ட்டேன். எனக்கு நீ நகைநட்டு செஞ்சு போடலன்னா பரவாமில்லை. ஒரு வாட்ச் வாங்கிக் குடு. ஆசையாக் கட்டிக்கிரேன்னு சொல்வேன்னு பாத்தியா? ஒண்ணுமில்ல விடும்மா”
“முளைச்சு மூணு இலை விடல. அதுக்குள்ள கழுதைக்கு வாட்ச் கேக்குதாக்கும்”
“உன்காலம் வேற, என் காலம் வேற. ஆறு வயசு பிள்ளைக பத்தாயிரம் ரூபா வாட்ச் கட்டுதுக”
“வாட்ச் கட்டுறது அவுட் ஆப் ஃபேஷன்டா. எல்லோரும் செல்லுலதான் டைம் பாத்துக்கிராங்க”
“அப்படிச் சொல்ல முடியாது. 70% மக்கள் இன்னும் வாட்ச் கட்டவேச் செய்கிறார்கள்”
“எது எப்படியோ, என்னால இப்ப ஆயிரம் ரெண்டாயிரம் செலவு பண்ணி உனக்கு வாட்ச் தர முடியாது”
“அத்தாகிட்டக் கேளேன்”
“காச்மூச்சுன்னு கத்துவார்”
“அம்மம்மாகிட்டக் கேளேன்”
“கிழவி என்ன சம்பாதிக்குதா? அது கைல பரம் பைசா கிடையாது”
“அய்யய்யோ மண்டை மூளை முழுக்க வாட்ச் அடைமழை பெய்யுதே” தலையை ஒரு இரு கைகளால் பிடித்துக் கொண்டேப் படுக்கையறைக்குள் ஓடினாள் அதீபா.
முகம் பார்க்கும் கண்ணாடி முன் மேஜை இருந்தது. மேஜையில் ஒரு உண்டியல் இருந்தது. அம்மா அதனை சதக்கா உண்டியல் என்பாள். வீட்டு அங்கத்தினர்கள் கையில் கிடைக்கும் அஞ்சு பத்தை உண்டியலில் போடுவர். உண்டியல் நிறைந்தவுடன் அதிலுள்ள பணத்தை எடுத்து பரம ஏழைகளுக்கு சதக்கா செய்வாள் அம்மா.
ஒவ்வொரு முறை உண்டியல் நிறையும் போதும் அதில் சராசரி ரூபாய் 1500 இருக்கும். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஏழை எளியவர்களுக்கு தேவையை அறிந்து கொடுப்பாள் அம்மா.
உண்டியலை எடுத்துப் பார்த்தாள் அதீபா. உண்டியல் நிறைந்திருந்தது. குலுக்கி ஆட்டிப் பார்த்தாள். ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயம் குலுங்கின.
உள்ளே வந்தாள் அம்மா. “சதக்கா உண்டியலை வச்சு என்னடி பண்ணிக்கிட்ருக்க?”
“உண்டியலை உடைச்சா குறைஞ்சது ஆயிரத்து எரநூறு தேறும். அப்படியேக் கொண்டு போய் வாட்ச் வாங்கி விட வேண்டியதுதான். நூறு தடவை சதக்கா செய்றதுல ஒண்ணு குறைஞ்சா தப்பே இல்லை”
“வாயைக் கழுவுடி. சதக்கா தனிப்பட்ட தாராளச் செயலாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல சதக்கா பாவத்தை அணைக்கிறது. பணமற்ற தொண்டும் சதக்காதான். கல்விக்கு நிதி உதவி, கிணறு கட்டி தருதல், மரம் நடுதல், மருத்துவமனை, பள்ளி, அனாதை ஆசிரமம் கட்டுதல், அறிவு பரப்பல், தேவைப்படுவோருக்கு அறிவுரை வழங்கல், உணவைப் பகிர்தல், பிறரைப் பார்த்து புன்னகைத்தல், பிறருக்காகப் பிரார்த்தித்தல், நோயாளிகளை நலம் விசாரித்தல் எல்லாமே சதக்காதான்.
‘நிச்சயம், அவர்கள் சதக்கா ஆண், பெண் ஆகியோருக்கு கொடுத்து அல்லாஹ்வுக்கு நல்ல கடனாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அது பன்மடங்கு அதிகரிக்கப்படும். மேலும், அவர்களுக்கு கண்ணியமான நற்கூலியும் உண்டு’ என்கிறது அல்குர்ஆன் 57: 18.
மாலையில் நீ குர்ஆன் படிக்க போகும் மதரஸாவில் சதக்கா உண்டியல் ஒன்று உள்ளதே.
அதை உடைத்து வாட்ச் வாங்குவியா? வீட்டு சதக்கா உண்டியல் என்றால் உனக்கு இளப்பமா? ஒரு படத்தில் வடிவேலு பிச்சைக்காரன் பணத்தை திருடி புரோட்டா பாயா தின்பான். சதக்கா உண்டியலை உடைத்து அந்தக் காசில் வாட்ச் வாங்கிக் கட்டுவது ஏழைகளுக்குச் சேர வேண்டிய பணத்தைத் திருடுவது போல தான். வாட்ச், அத்தா அம்மா தான் வாங்கித் தரணுமா? நீ படிச்சு முடிச்சு வேலைக்கு போன பிறகு வாங்கிக் கட்டு. பிறரின் சொகுசுகளைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளாதே”
சதக்கா உண்டியலை தடவி முத்தமிட்டு எடுத்த இடத்தில் வைத்தாள் அதீபா.
“அல்லாஹ்வும் நீயும் மன்னியுங்கள்…” அம்மம்மா எட்டினாள்.
சுருக்குப் பையிலிருந்து எடுத்தக் கசங்கிய நோட்டுகளைப் பேத்தியிடம் நீட்டினாள். “இதுல 1500 இருக்கு. நல்ல வாட்ச்சா வாங்கி கட்டிக்க… பிழைச்சுப் போகட்டும் சதக்கா உண்டியலை உடைக்காம விட்ரு”