அதிகாலை மணி மூன்று.
“யா அல்லாஹ்!” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தான் ஆதம் ஜபருல்லாஹ். வயது 40. உயரம் 170 செமீ. சம்மர் கிராபிய தலைகேசம். மீசை மழிக்கப்பட்ட குறுந்தாடி. கரிய கண்கள். வெட்டுக்காயம் நிறைந்த காப்பு காய்ந்த கைகள். நகரின் பிரதான கசாப்புக்கடையில் கசாப்புக்காரனாக, சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன். கடந்த 20 வருடங்களில் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளை ஹலால் முறையில் கசாப்பு செய்திருக்கிறான். அருகில் படுத்திருந்த மனைவி நிஷானாவையும் 13 வயது இஷாக்கையும் உன்னித்தான்.
எழுந்து பல் துலக்கி காலைக்கடன் மூடித்தான். உளூ செய்து விட்டு ஆறு ரக்அத்கள் தஹஜ்ஜத் தொழுதான்.
கொல்லைப்புறத்துக்கு சென்றான்.
கூரையில் செருகி இருந்த இருபதுக்கும் மேற்பட்ட கத்திகளை எடுத்து, கூர் தீட்ட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத் தீட்டலுக்குp பின் கத்திகளின் கூர்ப்பை விரலால் வருடிப் பார்த்தான். நான்கு நான்கு கத்திகளாகப் பிரித்து மரக்கட்டை மற்றும் இரும்பு கொக்கிகளுடன் ஐந்து துணிப்பைகளில் சுருட்டி இறுக்கினான்.
அதற்குள் மனைவி நிஷானா பர்வீன் எழுந்து விட்டாள்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம் நிஷானா!”
“பக்ரீத் பெருநாள் தொழுகை எத்தனை மணிக்கு?”
“காலைல ஆறரை மணிக்கு!”
“எத்தனை குர்பானி ஆடுமாடுகளை அறுத்து கொடுப்பதாகப் பேசி உள்ளீர்கள்?”
“பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு வந்து இன்று 12 ஆடுகளையும் நான்கு மாடுகளையும் அறுத்துத் துண்டாடிக் கொடுக்கப் போகிறேன். நாளைக்குப் பத்து ஆடுகள் இரண்டு மாடுகள். நாளை மறுநாள் ஆறு ஆடுகள் ஒரு மாடு!”
“இதெல்லாம் தனியாவா செய்யப் போகிறீர்கள்? நம் மகனை துணைக்குக் கூட்டிச் செல்ல வேண்டியதுதானே?”
“என் தொழில் என்னுடன் போகட்டும். என் மகன் படித்து கலெக்டர் ஆவான்…”
“இறைவன் நிறைவேற்றித் தரட்டும்!”
“கேள்விகள் அவ்வளவுதான் நிஷானா?”
“இந்த பக்ரீத்துக்கு ஆடு அறுக்க எவ்வளவு சார்ஜ் பண்ணுகிறீர்கள்? மாடு அறுக்க எவ்வளவு சார்ஜ் பண்ணுகிறீர்கள்?”
“ஆட்டுக்கு ஆயிரம் ரூபாய். மாட்டுக்கு ஆயிரத்தி அய்நூறு ரூபா. அறுக்குமிடத்தில் தலையோ குடலோ கொடுத்தால் வாங்க மாட்டேன்..”
“நல்லது!”
“காலை டிபன் என்ன?”
“இட்லி பூசணிக்காய் சாம்பார் தேங்காய் சட்னி இனிப்பு சுத்ரியான்!”
மகன் இஷாக் எழுந்தான். அழகிய முகமன் பரிமாற்றம்.
“அத்தா! அம்மா! உங்களிருவருக்கும் ஈதுல் அல்ஹா தியாகத்தின் பண்டிகை நாள் வாழ்த்துகள்!”
“உனக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துகள்!”
மூவரும் குளித்தனர்.
கணவனுக்கும் மகனுக்கும் நிஷானா புத்தாடை வழங்கினாள்.
நிஷானாவுக்கு புத்தாடை வழங்கினான் ஆதம் ஜபருல்லாஹ். மூவரும் சாப்பிட்டனர்.
தலையில் தொப்பி அணிந்து கொண்டு தொழுகை விரிப்புகள் எடுத்துக் கொண்டு தொழுகை நடக்கும் திடலுக்கு தந்தையும் மகனும் மொபெட்டில் பறந்தனர்.
இரண்டாயிரம் பேர் குழுமியிருந்தனர்.
பெருநாள் தொழுகை நடந்து முடிந்தது. ஜிப்பாவிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான். அதில் நூறு ஐந்து ரூபாய் நாணயங்கள்.
மிஸ்கீன்களுக்கு மகனை விட்டுக் கொடுக்கச் சொன்னான்.
வீடு திரும்பினர்.
கணவனுக்கும் மகனுக்கும் ஆரத்தி எடுத்தாள் நிஷானா.
புத்தாடைகளைக் கலைந்து விட்டு இரத்தக்கறை படிந்த முரட்டுக் காட்டன் ஆடை உடுத்திக் கொண்டான். கத்திகள் அடங்கிய துணிப்பைகளை இரு உதவியாளர்களிடம் கொடுத்தான்.
பாக்கட் நோட்டை எடுத்தான் அதில் -
1. ஹைதர் அலி பாய் வீடு
2. அப்துல்லா பாய் வீடு
3. முகமது காசிம் பாய் வீடு
4. ஹாஜா மைதீன் பாய் வீடு.
5. இதிரீஸ் பாய் வீடு.
6. மக்தூம் பாய் வீடு.
7. லியாகத் அலிபாய் வீடு
8. ஜின்னா பாய் வீடு
9. ராசிக் பாய் வீடு
10. இஸ்மாயில் பாய் வீடு
முதலில் ஹைதர் அலி பாய் வீட்டில் போய் இறங்கினர். இவர்களைப் பார்த்ததுமே ஆடு மிரண்டது. ஊஞ்சல் வளையத்தில் கொக்கியைக் கோர்த்தான். கட்டையை எடுத்து வைத்தான். ஆட்டின் நான்கு கால்களை பிடித்துக் கொண்டான். வாயில் மூன்று முறை நீர் ஊற்றினான். ஹைதர் அலி கையில் கத்தியை கொடுத்து அறுக்கச் சொன்னான்.
“ பிஸ்மில்லாஹி! அல்லாஹு அக்பர்”
வெதுவெதுப்பான இரத்தம் பெருக்கெடுத்தோடியது. முழு இரத்தமும் வடிந்த பின் ஆட்டின் தோலை அகற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டினான்.
“பள்ளிவாசலுக்கு கொடுத்திருங்க!” ஆட்டு மாமிசத்தைத் துண்டாடி எடை போட்டான்.
“பதினேழரை கிலோ இருக்கு ஹைதர் பாய்!”
“மாஷா அல்லாஹ்!”
எவர்சில்வர் பாத்திரங்களில் கறிகளை பிரித்துக் கொடுத்துவிட்டு ஆடு வெட்டின இடத்தைச் சுத்தப்படுத்தினான்.
ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டான். அழகிய முகமன் பரிமாற்றத்துடன் இரண்டாவது வீட்டுக்கு கிளம்பினான் ஆதம் ஜபருல்லாஹ்.
மூன்றாம் நாள் காலை 11 மணிக்கு தனது அனைத்துக் கசாப்பு பணிகளையும் முடித்தான்.
உதவியாளர்களிடம் கணக்கு கூறினான்.
“மொத்தம் 28 ஆடுகளும் ஏழு மாடுகளும் அறுத்திருக்கிறோம். மொத்தத்தில் நமக்குக் கூலியாகக் கிடைத்ததொகை 38, 500ரூபாய். முதல் உதவியாளனுக்கு 8500ரூபாய். இரண்டாவது உதவியாளனுக்கு ஆறாயிரம் ரூபாய். மீதி ரூபாய் 24000 எனக்கு”
“சரிங்க பாய்!”
“திருப்தி தானே? உங்களுக்கு எந்த மனக் குறையும் இல்லையே..”
“பெருநா காசு அய்நூறு அய்நூறு ரூபா தனியா கொடுங்க பாய்… வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போவோம்!”
கொடுத்தான்.
அழகிய முகமன் பரிமாற்றத்துடன் இரு உதவியாளர்களும் புறப்பட்டனர்.
மனைவியிடம் 23000 ரூபாயைக் கொண்டு போய்க் கொடுத்தான் ஆதம் ஜபருல்லாஹ்.
“இந்த பணத்தில் 38 கால்நடைகளின் குர்பானி கொடுக்கப்பட்ட புண்ணியம் ஒளிந்திருக்கிறது!”
“நிஷானா! எனக்கு ஒரு ஹாஜத்து!”
“என்ன?”
“இத்னி வருஷமா அடுத்தவங்க குர்பானி கொடுக்ற ஆடு மாடுகளை அறுத்துக் கொடுக்கும் வேலையையேச் செஞ்சிட்டு வந்திருக்கிறேன். என் பெற்றோர் அன்றாடங்காய்ச்சிகள். எனக்கோ என் சகோதரர்களுக்கோ அவர்கள் குர்பானி கொடுத்ததில்லை. நம் மகனுக்கு 13 வயசாகுது. நமக்காக நாம இதுவரை குர்பானி கொடுத்ததில்லை. இந்த பக்ரீத்துக்கு நாம நம்ம சார்பா குர்பானி கொடுத்தா என்ன?”
“குர்பானி கொடுக்கும் தகுதி நமக்கு இருக்கா?”
“நாம கடனாளி அல்ல. நம்மிடம் 11 பவுன் தங்கநகைகள் இருக்கு. ஒருவர் ஆண்டு முழுவதும் ஏழையாக இருந்து குர்பானிக்கென அறிவிக்கப்பட்ட நாளில் குர்பானி கொடுப்பதற்கான வசதி வாய்ப்பைப் பெற்று விட்டால் குர்பானி கொடுக்கலாம் நிஷானா!”
“பக்ரீத் பண்டிகைதான் முடிந்துவிட்டதே?”
“பக்ரீத் பண்டிகையின் மூன்றாம் நாள் மாலைத் தொழுகை வரை குர்பானி கொடுக்கலாம்”
“இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. குர்பானி கொடுக்க ஆட்டுக்கு எங்கேப் போவீர்கள்?”
மொபெட்டை எடுத்துக்கொண்டு சீறி பாய்ந்தான் ஆதம் ஜபருல்லாஹ்.
இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டு உரிமையாளர்களை அணுகி கடைசியில் ஒரு 25 கிலோ செம்மறி ஆட்டை ரூபாய் 20 ஆயிரத்துக்கு வாங்கினான். ஆட்டை, குட்டி யானை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வரும் போது மணி மதியம் மூன்று.
தந்தையும் மகனும் தொப்பி அணிந்து கொண்டனர். ஆட்டை பிடித்துக் கொண்டான் ஆதம். மகன் கத்தியை எடுத்து “பிஸ்மில்லாஹி…. அல்லாஹு அக்பர்I” என்ன கூறி அறுத்தான்.
ஆட்டுக்கறியை மூன்று பங்காகப் பிரிப்பதற்கு பதில் இரண்டு பங்குகளாகப் பிரித்து உறவினருக்கும் ஏழைகளுக்கும் தலா 500 கிராம் வழங்கினான்.
“அத்தா இனி வருஷா வருஷம் நாம குர்பானி கொடுப்போம் தானே?”
“இன்ஷா அல்லாஹ்!” என்றனர் ஆதம் ஜபருல்லாஹ்வும் நிஷானா பர்வீனும்.