வரவேற்பறை.
அத்தா நௌபிலும் அம்மா ஸோபியா இஜாவும் 21வயது மகன் ஹம்சாவும் 19வயது மகள் சமீரா யாஸ்ரினியும் கூடி அமர்ந்திருந்தனர்.
“அத்தா, எனக்கும் தங்கச்சிக்கும் கோடைவிடுமுறை விட்டுட்டாங்க, ஒரு மாதம் காலேஜ் கிடையாது”
“ஒரு பத்து நாள் எங்காவது சுற்றுலா போகலாம்த்தா” என்றாள் சமீரா.
“எங்க போகலாம்னு நீங்களேச் சொல்லுங்கப்பா…”
“கோவாவுக்கு போகலாமா?”
கோவா என்றதும் நௌபில் முகம் சுளித்தார்.
“கோவாவில் ஆல்கஹால் பெருக்கெடுத்து ஓடும். கட்டுப்பாடற்ற ஆண்-பெண் உறவுகள் ஊர் முழுக்க உருண்டு புரளும். கோவா வேணாம்ப்பா…”
“காஷ்மீர் போகலாமா?’’
“வேண்டாம்ப்பா இப்போதைய அரசியல் சூழ்நிலை அங்கே சரியில்லை”
“வேறென்னென்ன மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை சரியில்லைன்றதை நீங்களேச் சொல்லிடுங்க அத்தா”
“சத்தீஸ்கரில், ஜார்கண்டில், ஒரிஸ்ஸாவில் நக்ஸலைட் பிரச்சனை அதிகம்”
‘மேகாலாயா, அஸ்ஸாம்?” “இப்ப சீஸன் இல்லை”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் இமாம் உட்பட்டார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?”
“பத்துநாள் டூர் குடும்பத்தோட போறதை பத்தி”
“உள்நாடா? வெளிநாடா?”
“எது வேண்டுமானாலும்…. எங்கள் நால்வரின் மொத்த பட்ஜெட் பத்துலட்சம்”
“ஹலால் சுற்றுலா போங்களேன்”
“அதென்ன ஹலால் சுற்றுலா? ஹலால் உணவு பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்”
“உலகத்தின் எல்லா விஷயங்களிலும் ஹலால் ஹராம் ஒளிந்திருக்கிறது. நாம்தான் ஹலாலை தேர்ந்தெடுத்து ஹராமை புறம் தள்ளனும்”
“ஓஹோ”
“முஸ்லிம்கள் தங்கள் மதநம்பிக்கையைச் சமரசம் செய்யத் தேவையில்லாத இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, அந்தப் பயண நாட்கள் ஹலால் விடுமுறை நாட்கள் எனப்படும்”
“அப்படியா?”
“ஒருவர் தன் வீட்டைவிட்டு வெளியேப் பயணம் போனாலும் அந்தப் பயணம் நரகத்தில் சிறுதுண்டு என்கிறார் நபிகள் நாயகம். பயணம் எப்படியும் உடலுக்கும் மனதுக்கும் சிறு ஊறாவது விளைவிக்கும். சில அசௌகரியங்களைத் தாண்டி பயணத்தை இனிமையாக்கிக் கொள்ள வேண்டியது நம் திறமை”
“உண்மைதான்”
“உலக அளவில் ஹலால் சுற்றுலாவில் 266.3 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் புழங்குகின்றன. வருடம் 200 மில்லியன் முஸ்லிம் சுற்றுலாப் பயணிகள் ஹலால் சுற்றுலா மேற்கொள்கின்றனர்”
“அருமையான தகவல்”
“இந்தியாவில் நாம் சுற்றிப் பார்க்கவேண்டிய ஹலாலான இடங்கள் இதோ- டெல்லியின் ஜமா மஸ்ஜித். மும்பையின் ஹாஜி அபி தர்கா. காஷ்மீரின் ஹஜ்ரத் பால் சன்னதி தர்கா. அஜ்மீரின் குவாஜா கர்ப் நவாஸ் தர்கா. போபாலில் தாஜ்உல் மஸாஜித். கொடுங்களூரின் சேரமான் ஜுஆம்மா மஸ்ஜித். கொல்கத்தாவின் நப்காடா மஸ்ஜித். பதேகாரின் ஹஜ்ரத் செய்புதீன் பருக்கி தர்கா. டெல்லியின் நிஜாமூதின் அவுலியா தர்கா. ஆக்ராவின் தாஜ்மஹால். ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜித். சிங்கப்பூரின் சுல்தான் மசூதி. மாலதீவின் வில்லா நாட்டிகா…”
“ஹலால் சுற்றுலாவில் எது எது முக்கியம்?”
“ஹலாலான உணவு கிடைக்க வேண்டும். ஆல்கஹால் தடை இருத்தல் நலம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நீச்சல்குளங்களும் அழகு நிலையங்களும் இருத்தல் பாதுகாப்பு. தொழுகைக்கான வசதிவாய்ப்புகள் ஏராளமாய் தாராளமாய் அமைந்திருக்க வேண்டும். இஸ்லாமோபோபியா அறவே கூடாது”
“இஸ்லாமோபோபியா இல்லாத நாடு எது?”
“வெளிநாடு ஹலால் சுற்றுலா என்றால் கீழ்க்கண்ட 13 நாடுகளை பரிந்துரை செய்வேன். இவற்றில் எதாவது ஒரு நாட்டுக்குச் சென்று வரலாம்”
“சொல்லுங்கள் இமாம்”
“முதல் சாய்ஸ் மாலத்தீவுகள். கோயம்புத்தூருக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே தூரம் 921 கிமீ. ஒரு வாரம் தங்கி மீன் உணவை ஒரு கை பார்க்க விமான செலவுடன் சேர்த்து உங்க நாலுபேருக்கும் ஒன்றரை லட்சத்துக்கு மேல் செலவு வராது. நீர் விளையாட்டு அதிகம் விளையாடலாம். தேசிய அருங்காட்சியகம் பார்க்கலாம். மாலத்தீவுகள் ஒரு இஸ்லாமிய நாடு”
“அடுத்து?”
“இந்தோனேசியா இதுவும் ஒரு இஸ்லாமிய நாடு. பாலி கடற்கரை, போர்னியோ வனவிலங்கு சரணாலயம், ஜகார்த்தா ஷாப்பிங், சுமத்ரா பாரம்பரிய இடங்கள், முகமது செர்ரி ஹு மசூதி, படாங் உணவுகள் ஜமாய்க்கலாம். ஒரு வார பட்ஜெட் செலவு ஆறு லட்சம் ரூபாய். தூரம் பத்தாயிரம் கிலோ மீட்டர்”
“மூன்றாவது?”
“மலேசியா. பெட்ரோனஸ் கோபுரம், கெந்திங் மலை, புக்கிட் பிந்தாங், கர்னி டிரைவ், பிளாஙகு தீவுகள், பட்டு குகைகள், லீகோலாண்ட் பார்க்கலாம். நாலாவதாக துபாய் அபுதாயி. துபாயில் புர்ஜ் கலிபா, எதிர்கால ம்யூசியம், பாலைவன சபாரி, துபாய் தோட்டம், பலூன் சவாரி போகலாம்”
“ஐந்தாவது?”
“எகிப்து. எகிப்தில் கெய்ரோ ம்யூசியம், கிஸா பிரமிடுகள், நைல்நதி கப்பல் பயணம், ராஸ் முகம்மது பூங்கா, கான் எஸ் கபீர் பஜார், அல் அஜார் மசூதி, சலா அல்தீன் மசூதி பார்க்கலாம். எகிப்து டூர் காஸ்ட்லிதான். ஆனா உங்க பக்கட் லிஸ்ட்ல முதலாம் இடத்தில் இருக்கவேண்டியது எகிப்துதான்’
“நைல்நதி நதியில் ஒரு சாலமன் மீனைப்போல நீந்துவோம்”
“அடுத்து சிங்கப்பூர் சிங்கப்பூரில் மெர்லியன் பூங்கா, சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலை மற்றும் இரவு காட்டுவா, சீனாடவுன், சன்டோஸா தீவுகள், ஜுராங் பறவை பூங்கா, யுனிவர்சல் ஸ்டுடியோஸ், சிங்கப்பூர் ராட்சச ராட்டினம் ஆடலாம்”
“ஜாய்புல் சிங்கப்பூர்! கலர்புல் மலேசியா!”
“எட்டாவதாக தைவான். அங்கு தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தராகோ தேசிய பூங்கா, தாய்பேய் மிருகக்காட்சிசாலை, தாய்பேய் 106 மாடி கட்டடம், ஸிபென் நீர்வீழ்ச்சி, சிமெய் அருங்காட்சியகம், பெய்டோ ஹாட் ஸ்பிரிங் அருங்காட்சியகம், வானவில் கிராமம் பார்க்கலாம்”
“தைவான் காளான் பேமஸ் இல்லையா இமாம்?”
‘துருக்கி- இதுஒரு இஸ்லாமியநாடு. இங்கிருக்கும் 99 சதவீத துருக்குகள் சன்னி முஸ்லிம்களே. இங்கு ஹாஜியா சோபியா மசூதி, நீல மசூதி, டோப்கபி அரண்மனை ம்யூசியம், டோல் மாயாக்சே அரண்மனை, கப்பாடோசியா, கலாட்டா டவர், இஸ்தான்புல் ம்யூஸியம், சுலைமானியே மசூதி, எகிப்தியன் பஜார், அங்காரா, நெம்ரட் மலை பார்க்கலாம்”
“துருக்கி தொப்பி பிரமாதமாக இருக்கும் அணியச் சிறந்தது”
“உஸ்பெஸ்கிஸ்தான் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடு. ஷா இ ஜிந்தா, பிபி கன்யம் மசூதி, ரெஜிஸ்தான் சதுக்கம், அமீர் தைமூர் கல்லறை, ஸோர்சு பஜார், புகாரா ஆர்க், இஸ்மாயில் ஸமானி கல்லறை, இச்சன் காலா, ஜுமா மசூதி, ஸோர் மினார் மதரஸா, டெமுரிட் மியூசியம், கிலா, குடியார்கான் அரண்மனை பார்க்கலாம்”
“அதிகம் தெரியாத சுற்றுலாத்தலம்”
“தவிர நீங்கள் ஜப்பானுக்கும் இங்கிலாந்துக்கும் கூட போய் வரலாம். இந்தப் பட்டியலில் இல்லாத இடம் மெக்கா, மதீனா, இந்தப் புனித இடங்களைச் சுற்றுலா நோக்கத்துடன் போகக்கூடாது. ஆன்மிக உணர்வுடன் போக வேண்டும். நீங்கள் நால்வரும் அவரவர் கடமைகளை முடித்துவிட்டு ஹஜ் யாத்திரை போவதேச் சாலச்சிறந்தது”
“உண்மைதான்”
“சுற்றுலா செல்வதில் ஒரு பொதுவான விஷயத்தைக் கடைப்பிடியுங்கள். உடலுக்கும் மனதுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த விஷயத்திலும் ஈடுபடாதீர்கள். வழிபாடு இல்லாத தொல்பொருள் முக்கியத்துவம் உள்ள கோவில்களை நாம் பார்க்கலாம் தப்பில்லை. ஹலால் உணவு கிடைக்காவிட்டால் சுற்றுலா நாட்களில் சைவ உணவை உட்கொள்ளுங்கள். பொது இடங்களில் உங்கள் தொழுகையைக் கண்காட்சி ஆக்காதீர்கள். பிரைவசி உள்ள இடங்களில் தொழுங்கள். சுற்றுலா நாட்கள் ஏழு எனும் எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது. அதிகப் பயணச் சுமைகளை எடுத்துச் செல்லாதீர்கள். தலைவலி, வயிற்றுபோக்கு மாத்திரைகள் தைலம், சிறுகாயங்களுக்கான களிம்புகள் பெரியவர்களுக்கான
நீரழிவு இரத்தகொதிப்பு மாத்திரைகள் எடுத்துச் செல்லுங்கள். அந்நியரோடு தேவை இல்லாமல் பேசாதீர்கள்”
“நல்லது. நாங்கள் எகிப்து போகத் தீர்மானித்து விட்டோம். எங்களோடு நீங்களும் வாங்களேன் இமாம்”
“அழைத்ததமைக்கு நன்றி. எகிப்து நண்பர் கைபேசி எண் தருகிறேன். அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். உதவுவார். உங்கள் பயணம் இனிமையாய் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” அழகிய முகமன் பரிமாற்றத்துடன் புறப்பட்டார் இமாம்.