வெளி வாசலைப் பார்த்தவாறே ஈஷி சேரில் படுத்திருந்தாள் ஜமீலா. வயது 65. உயரம் 150 செமீ. முழுக்க நரைத்த தலைக் கேசம். நிலா பூசிய கண்கள். மின்னும் மூக்கு. சதா திக்ர் எடுக்கும் உதடுகள். கழுத்தில் தசை மடிப்புகள். க்ளோஸ்நெக் முழுக்கை ஜாக்கட். இடது கையில் ஆயத்துல் குர்ஸி எழுதப்பட்ட வளையல்கள்.
படுத்திருக்கும் பாட்டியை உளவு பார்த்தவாறே குறுக்கே நெடுக்கே நடந்தாள் அஸ்பியா. வயது 10. பள்ளிக்குச் சென்று வருவது போல மதரஸாவுக்கும் தினமும் சென்று வருவாள். எதனை எடுத்தாலும் நூறு கேள்விகள் ஏன், எதற்கு, எப்படி எனக் கேட்டு விடுவாள். அவளுக்குப் பதில் சொல்லப் பயந்தே வீட்டின் மூத்தத் தலைகள் அவளைக் கண்டால் பதுங்கிக் கொள்ளும்.
வெளி வாசலில் காலடி ஆர்வம் கேட்டது. விபூதி, குங்குமம், சந்தனம், மரிக்கொழுந்து கலந்த வாசனை எழுந்தது.
“ஜெய் ஜக்கம்மா! எல்லம்மா! போலேரம்மா! பொம்மம்மா!” கே பி சுந்தராம்பாள் குரல் கேட்டது.
“யாரு?”
“பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து வரேன்…. நான் ஒரு குறி சொல்றவ… என் பெயர் உலகநாயகி!”
“அச்சச்சோ… இது பாய் வீடு… வேற எங்கயாவது போய் குறி சொல்லும்மா!”
“நீ யாராயிருந்தா என்னம்மா? நான் சொல்ற குறி உலக மக்கள் அனைவருக்கும் பலிக்கும். காலாங்கி நாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அனைவரின் ஆசியும் என் குறி சொல்லுதலுக்கு உண்டு. என் ஜக்கம்மா தொட்டிய நாயக்கரின் குலதெய்வம்!”
“என்னென்னமோ சொல்றியே… நீ வேறிடம் பாரம்மா!”
“என்னம்மா தேவி ஜக்கம்மா… உலகம் தலைகீழாத் தொங்குது நியாயமா? பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது. பச்சத் தமிழனோ மம்மின்னு சொல்ரான்…”
“எம்மா பாட்டெல்லாம் பாடாதே!”
“சாலிகுளத்துப் பக்கத்திலே… சார்ந்திடும் செம்மண் மேட்டிலே… காடை வேட்டை நாள் ஆடுகையிலே கண்ட அதிசயம் சொல்றேன்…. முன்முயல் சென்றிடப் பின்னே… நாய்… முடுக்க மேட்டுக்கு போனவுடன் முன்னாடி நின்ற முயலுதான்.. பின்னோடும் நாயை விரட்டியதே!”
ஜமீலா சிரமப்பட்டு எழுந்தாள்.
வாசலுக்கு வந்தாள்.
பழுத்த பழமாய் நின்றிருந்தாள் உலகநாயகி. கோடாலிக் கொண்டை… நெற்றியில் விபூதியும் வட்டக் குங்குமமும். மூக்கின் இரு பக்கமும் மூக்குத்திகள். சதா வெற்றிலை போட்டு சிவந்த வாய். இடது தோளில் துணி தொட்டில். வலது கையில் கோல். வயது 80 இருக்கும். கனத்த பூசணிதிரேகம். அம்மன் கண்கள்.
“சொன்னா கேக்க மாட்டியா? போயேன்ம்மா!”
“பாய்களுக்கு வேற மாதிரியும் எங்களுக்கு வேற மாதிரியுமா கைரேகை அமைஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் ஒண்ணுதானே? வா… வந்து உக்காரு… ஒரு நா குறி கேட்டா உங்க அல்லா சாமி ஸ்கேல் எடுத்து அடிக்குமா என்ன?”
“அம்மா… நாங்க குறி ஜோசியமெல்லாம் பார்க்க மாட்டோம்மா…”
“உன் குடும்பத்துல இருக்ற எல்லாப் பிரச்சனையையும் புட்டுபுட்டு வைப்பேன்... அதோட எதிர்காலத்ல நீ செய்ய வேண்டிய பரிகாரங்களையும் சொல்வேன்… மொத்தத்ல உன் குடும்பத்துக்கு நல்ல காலம் பொறக்குது!”
சோதிடர்கள் சொல்வது சரியாகி விடுகிறதே!
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர்.
நபி (ஸல்)அவர்கள், ‘அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்’ என்றார்கள்.
மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகி விடுகிறதே!’ என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக் கொண்டதாகும்.
அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகிறான்’ என்று பதிலளித்தார்கள்.
- ஸஹீஹ்புகாரி: 7561
|
ஜமீலாவுக்கு லேசாக ஆசை துளிர்த்தது.
“வாழ்க்கைல மொதத் தடவையும் கடைசித் தடவையுமா குறி பார்ப்போமே… எத்தை தின்னா பித்தம் தெளியும்ன்ற நமக்கு இவ சொல்ற குறி மருந்தாகட்டும்….”
“நீ குறி சொல்றதில கெட்டிக்காரின்னு நானெப்படி ருஜுபடுத்றது?”
“என்ன அப்படி கேட்டுட்ட பாயம்மா… நான் குறி சொல்லாத இடமில்லை…”
“குறி சொல்றதுக்கு எவ்வளவு கேட்ப?”
“நான் என்ன ஆனையக்குடு பூனையக்குடுன்னா கேக்கப்போரேன்… பதினோரு ரூபா வெற்றிலை பாக்குடன் தட்சணை குடு.. அது போதும்…”
“நான் உன்கிட்ட குறி பார்த்ததை இந்த ஊர் மக்கள் யார் கிட்டயும் மூச்சு விடாதே!”
“சரி!”
“எவ்வளவு நேரமாகும்?”
“அரை மணி நேரமாகும்!”
“இப்டி ஒளிவு மறைவா உக்காருவோம்!” இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்.
“இருகைகளையும் என் முன்னே நீட்டு பாயம்மா!”
நீட்டினாள் ஜமீலா.
கைரேகைகளைத் தனது விரலாலும் கோலாலும் வருடினாள் உலகநாயகி. “நீ படுலோல் பட்ட ஜென்மம். உனக்கு ஐந்து பிள்ளைகள். இரண்டு ஆண். மூன்று பெண். கணவர் திருமணமான பத்து வருடங்களில் இறந்துவிட்டார். உன் மூத்த மகள் விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் உன் வீட்டில் இருக்கிறாள். உன் மூத்த மகன் கொரோனாவில் இருந்து வேலை இல்லாமல் இருக்கிறான். உன் இரண்டாவது மகன் ஆக்ஸிடெண்ட்ல காலை உடைச்சிட்டு வீட்ல வந்து கிடக்கான். இரண்டாவது மகளுக்கு மார்பகப் புற்றுநோய். சிகிச்சையில் இருக்கிறாள். உன் மூன்றாவது மகள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒற்றைக் குரங்காக் காலத்தை ஓட்ரா…”
“நேரா பாத்தமாதிரி சொல்ற!”
“உனக்கு ஹை சுகர்… 400க்கு மேல இருக்குது!”
பெருமூச்சு விட்டாள் ஜமீலா. “ஆமா!”
“உனக்கு முன்னிருக்கும் கேள்விகள் நான்கு. விவாகரத்து ஆன என் மகள் மறுமணம் செஞ்சிப்பாளா? என் மகனுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா? உடைந்த கால் குணமாகி என் மகன் முன்னைப் போல நடமாடுவானா? திருமண ஆசை வந்து என் மூன்றாவது மகள் திருமணம் செய்து கொள்வாளா? சரியா?”
“ஆமாம்!”
“பரிகாரம் சொல்கிறேன்… ஜெய் ஜக்கம்மா!”
“பரிகாரம் காஸ்ட்லியா இல்லாமப் பாத்துக்க!”
“ரொம்ப ஈஷியான பரிகாரங்கள்தான் பாயம்மா…! ”
தனது துணிப்பையில் இருந்து குங்குமம் தடவிய எலுமிச்சைப் பழத்தை எடுத்தாள்.
“இதை தினமும் தலைமாட்ல வச்சுப் படு. வாராவாரம் பதினோரு ஏழைகளுக்கு அன்னதானம் செய். இரண்டு சுமங்கலிப் பெண்களுக்கு பட்டுப் புடவைகள் பரிசளி. உங்க சாமியை தொழுது முடிச்சவுடனே வீட்டு அங்கத்தினர்கள் அனைவர் மீதும் ஓதி ஊது. ஓதிய தண்ணீரைக் கொடுக்கக் கொடு. ஒரு முறை பொட்டால்புதூர் தர்காவுக்கு போய் கிடா வெட்டு..”
“சரி!”
“என்ன பாக்ற? நான் எப்ப பரிகாரம் சொன்னாலும் பரிகாரம் சொல்லப்படுற நபரின் மதத்தை ஒட்டித்தான் சொல்லுவேன்! ஜெய் ஜக்கம்மா!”
ஒரு சிவப்புக் கயிற்றை எடுத்தாள் உலகநாயகி.
“இதை உன் இடது காலில் கட்டு!”
வாங்கிக் கொண்டாள் ஜமீலா. பதுக்கி வைத்திருந்த பர்ஸிலிருந்து 11 ரூபாய் எடுத்து நீட்டினாள்.
“இன்னும் ஆறே மாதம்… உன் வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம் பறந்தோடி விடும்!”
“மகிழ்ச்சியும் நன்றியும்!”
“நான் சொன்னபடி நடந்தா எனக்கு என்ன தருவ?”
“என்ன வேணும்?”
“ரெண்டு சின்னாளபட்டி புடவையும் 101 ரூபாய் காசும் கொடு!”
“சரி!”
“ஜெய் ஜக்கம்மா!” என்றபடி உலகநாயகி கிளம்பிப் போனாள்.
உள்ளே போன ஜமீலாவை இடைமறித்தாள் அஸ்பியா.
“என்ன செஞ்சிட்டு வர்ற அம்மம்மா!”
“ஒண்ணுமில்லையே…”
“குறி கேட்டுட்டு வருகிறாய்… இஸ்லாமில் குறி மற்றும் ஜோசியம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது உனக்குத் தெரியுமா, தெரியாதா? ஒரு முஸ்லிம் குறி அல்லது ஜோசியம் பார்த்தால் அவரது நாற்பது நாள் ஒப்புக்கொள்ளப்பட்ட நற்பலன்கள் மற்றும் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை என முஸ்லிம்: 4488 கூறுகிறது தெரியுமா?”
“நான் விரும்பிப் போகவில்லை, குறிகாரி வற்புறுத்தி கூப்பிட்டாள்!”
“அவரவர் மத நம்பிக்கை அவர்களுக்கு. ஒரு இந்துப் பாட்டி குறி கேட்டால் தப்பில்லை. ஒரு இஸ்லாமியப் பாட்டி குறி கேட்கலாமா?”
“நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை யாராவது சொல்ல மாட்டார்களா என ஏங்கினேன். உலகின் விலையர்ந்த மருந்து நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள்தான். நான் செய்த இந்தத் தவற்றை அல்லாஹ் மன்னிப்பான் என நம்புகிறேன். நாற்பது நாள் உபரி தொழுகைகளையும் உபரி அமல்களையும் செய்து இறைவனிடம் மன்னிப்பு இறைஞ்சுவேன்….”
“குறிகாரி கொடுத்த எலுமிச்சம் பழத்தையும் சிவப்புக் கயிற்றையும் என்ன செய்யப் போகிறாய்?”
“கொல்லையில் புதைப்பேன்… பதினோரு வாரங்களுக்கு பதினோரு ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் வழங்குவேன்…”
“மகிழ்ச்சி!”
தனது அறைக்கு நடந்தாள் அஸ்பியா.
“யா அல்லாஹ்! மனிதர்கள் உணர்ச்சி சார்ந்த நம்பிக்கைகளைத் தேடி ஓடாத அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளை இலேசாக்கு. என் அம்மம்மாவின் முதுமைக் காலத்தை இனிமையானதாக மாற்று… எங்க குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்தால் உரிய இடைவெளியை விட்டு உபரி முப்பது நோன்புகள் வைக்கிறேன்!”
அஸ்பியாவின் மீது அருள் மழை பொழிந்தான் இறைவன்.