அர் ரகுமான் ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸஸ்.
உம்ரா செல்லும் ஹாஜிகள் முன் நின்று உம்ரா நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை கூற ஆரம்பித்தார் ஆலிம்.
“வஅலைக்கும் ஸலாம் ஆலிம்!”
“ஹஜ் அல்லது உம்ராவில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் (மீகாத்) கடந்த பின் உடை, நடத்தை, சிந்தனைக் கட்டுப்பாட்டில் ஆன்மிக மாற்றம் தேவை!”
ஆலிம் பேசுவதை ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தார் பத்ஹுல் கனி. செல்லமாக அவரை மொத்தைக்கனி என்பர். மனைவியை 15 வருடங்களுக்கு முன் இழந்து விட்டார். வயது 63 கறுத்த திராவிட நிறம். மத்திம உயரம். பிறர் பேசுவதை மிகவும் கவனமாய் தலையில் ஏற்றிக் கொள்வார்.
“ஹஜ் அல்லது உம்ரா செல்லும் ஆண்கள் அனைவரும் இஹ்ராம் அணிய வேண்டும். இஹ்ராம் ஒரு ஆன்மிக உடை. உலக மக்கள் அனைவரும் சமம் என உணர்த்தக்கூடிய ஆடை. இஹ்ராம் அணிவதற்கு முன் நகம் வெட்டி, குளித்து நறுமணம் பூசிக்கொள்ளலாம். ஆனால், இஹ்ராம் அணிந்திருக்கும் போது வேட்டையாடவோ, உடலுறவில் ஈடுபடவோ, முடி நகம் வெட்டவோ, அலங்கரிக்கவோ, வாசனை திரவங்கள் பூசிக்கொள்ளவோக் கூடாது!”
“இஹ்ராம் ஆடை எப்படி இருக்கும்?”
“தையல் இல்லாத ஆடை. இடுப்புக்கு வேஷ்டி போல சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. மேலே சட்டையாய்ப் போர்த்திக் கொள்ள ஒரு துண்டு. இடுப்புத் துண்டை கணுக்கால் மேல்தான் கட்ட வேண்டும். உள்ளாடை கூடாது. கால்களில் ஒரு ரப்பர் செருப்பு…”
“இஹ்ராம் துணி என்ன நிறத்தில் இருக்க வேண்டும்?”
“மஞ்சள், சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் துணி இருக்கலாம். ஆனால், எல்லோரும் பாவிப்பது வெள்ளை நிற இஹ்ராம் துணியே. காவிநிறம் தடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இஹ்ராம் கிடையாது. அவர்கள் அணிந்திருக்கும் ஆடை முழுவதும் மூடி இருக்க வேண்டும். முகத்தை மூடக்கூடாது!”
“இஹ்ராமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?”
“இஹ்ராமில் மூன்று வகை இஹ்ராம்கள் இருக்கின்றன. ஒன்று தமத்துஉ. இரண்டு, இப்றாத். மூன்று, கிரான். இந்திய ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்கள் பெரும்பாலும் தமத்துஉ வகை இஹ்ராமையே அணிகின்றனர்!”
“இஹ்ராம் அணிந்து கொண்ட பின் சிறப்புத் தொழுகை உண்டா?”
“ஆம்… இரண்டு ரக்காயத்துகள் தொழுகை தொழவேண்டும்!”
“இஹ்ராம் துணி பட்டில் இருக்கலாமா?’
“கூடாது. பெரும்பாலும் காட்டன் துணி இஹ்ராமுக்கு உகந்தவை!”
“எத்தனை செட் இஹ்ராம் வைத்துக் கொள்ளலாம்?”
“அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு செட் வைத்துக் கொள்ளலாம்!”
“இஹ்ராம் மக்காவிற்குள் நுழைவதற்கு முன் எங்கு எங்கு கட்டலாம் என நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்?”
“முதலாம் இடம் துல் ஹுலைபாஹ். மதினாவிலிருந்து 9 கி மீ. மெக்காவிலிருந்து 450 கிமீ!”
“இரண்டாவது இடம்?”
“ஜுஹ்பாஹ், மெக்காவிலிருந்து வடமேற்குத் திசையில் 190 கிமீ. இது சிரிய பயணிகளுக்கான இஹ்ராம் அணியும் இடம்!”
“அடுத்து?”
“கரீன் அல்-மனாசில். மெக்காவிலிருந்து 90கிமீ. இது மலைப்பகுதி. நஜ்து பயணிகளுக்கான இஹ்ராம் அணியும் இடம்!”
“நான்கு?”
“யலம்லம். மெக்காவிலிருந்து தென்கிழக்குத் திசையில் 50 கிமீ. ஏமன் பயணிகள் மற்றும் சீன, ஜப்பான், இந்திய, பாகிஸ்தான் கடல் பயணிகள் இஹ்ராம் அணிவதற்கான இடம்!”
“ஐந்தாம் இடம், தத் இர்க். மெக்காவிலிருந்து வடகிழக்கு 85 கிமீ. ஈரான், ஈராக் ஹஜ் உம்ரா பயணிகள் இஹ்ராம் அணியும் இடம்”
‘நாம்?”
“இஹ்ராம் அணிய வேண்டிய இடத்தை மீகாத் என்பர். நாம் விமான நிலையத்திலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் அல்லது மீகாத் எல்லையை அடையும் போது விமானத்தில் அறிவிப்பர். இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டியதுதான்!”
“மக்கா நகரில் வசிப்போர் ஹஜ் அல்லது உம்ரா நிறைவேற்ற இஹ்ராம் எங்கு அணிய வேண்டும்?”
“இதென்ன கேள்வி… மக்கா நகரிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டியதுதான்!”
“சரி!”
“இஹ்ராம் அணிவோர் நிய்யத்துக்கு பின் தல்பியா ஓத வேண்டும்!”
“தல்பியா என்றால்?”
“அது இஸ்லாமியப் பிரார்த்தனை. அதன் தமிழாக்கம் இதோ…
‘இதோ உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன் இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிகிறேன். இணை இல்லாதவனே! உனக்கே நான் கீழ்படிகிறேன். புகழும் அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமில்லை’ அரபியில் லப்பைக்க வ உம்ரதன்….”
சொல்லிப் பார்த்துக் கொண்டார் பத்ஹுல் கனி.
“உம்ராவில் செய்ய வேண்டியவைகளை வரிசையாகக் கூறுங்கள்!”
“தல்பியா கூறுதல். தவாஃபுல் குதூம் மெக்கா வருகை. ருக்னுல் யமானி மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத் தொழுதல். கபாவை ஏழுதவாப் (7X7) சுற்றுதல். ஹஜ்ருல் அஸ்வத்தையும் ருக்னுல் யமானியையும் முத்தமிடுதல். ஸபா மற்றும் மர்வா குன்றுகளுக்கு இடையே ஓடுதல். முடியைக் கத்தரித்தல். பெண்களுக்கு முடி கத்தரிக்கக் கட்டாயம் இல்லை”
“முதலில் எந்தக் குன்று?”
“ஸபாவிலிருந்து ஓட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஸபாவிலிருந்து மர்வா ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு ஒன்று. மொத்தம் ஏழு தடவைகள் ஓட்டம்!”
ஆலிம் பேசி முடித்தார்.
- ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹாஜிகளுடன் உம்ரா நிறைவேற்றிவிட்டு இந்தியா திரும்பினார் பத்ஹுல் கனி.
உறவினர்கள் அனைவருக்கும் ஜம்ஜம் நீரையும் பேரீச்சம்பழத்தையும் பரிசளித்தார். மருமகளுக்கு தொழுகை விரிப்பும் தஸ்பீஹ்மணி மாலையும் தந்தார்.
அனைவருக்கும் எல்லாம் கொடுத்து முடித்த பின், இஹ்ராம் துணிகளை எடுத்து வைத்தார். மகன் ஜலாலுதீன் எட்டினான்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்னத்தா இஹ்ராம் துணிகளை வெறிச்சு பார்த்துக்கிட்ருக்கீங்க?”
“நான் இன்னும் எத்தனை வருஷம் உயிரோடு இருப்பேன்னு எனக்குத் தெரியாது. என்னுடைய இஹ்ராம் துணி என் உம்ரா பயணத்துக்கு துணையாக வந்தது. இதே இஹ்ராம் துணியை என்னுடைய இறுதி பயணத்துக்கான கபன் துணியாகவும் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்!”
“100 வயசு வரைக்கும் இருங்கத்தா!”
“நூறு வயசு வரைக்கும் இருந்தாலும் நூற்றி ஒன்றில் போய்தானே ஆகவேண்டும்!”
“அத்தா எனக்கு ஒரு சந்தேகம். இஹ்ராம் துணியை கபன் துணியாக பயன்படுத்தலாமா? பல மௌத் அடக்கங்களுக்கு போயிருக்கிறேன். கபன் துணி காட்டனில் ஒன்பது மீட்டர் எடுப்பார்கள். கபன் துணியுடன் வாசனை பத்தி, பன்னீர், சந்தனம், சூடம், பஞ்சு, குளியல் சோப், அத்தர், சுருமா, ஊசி நூல் வாங்குவார்கள். அத்துடன் சோத்து, பாயும் பச்சை மட்டையும் வாங்குவார்கள். ஏழரை அடி நீளம் உள்ள இரண்டு துண்டு, மூன்றடி நீளம் உள்ள ஒரு துண்டு, நான்கடி நீளம் உள்ள ஒரு துண்டு, அடித்துணி ஒரு அடியில் மூன்று துண்டுகள் கத்தரிப்பர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவு. தலைமாடு, கால்மாடு, நடுவில் கட்ட கயிறு போல துணிகளை துண்டாடிக் கொள்வர்.”
“மகனேI என்னிடம் நாலுசெட் இஹ்ராம் துணிகள் உள்ளன. அவற்றைத் தாராளமாக கபன் துணியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!”
“பல வருடங்கள் இஹ்ராம் துணியை பாதுகாப்பதில் சிரமம் இருக்காதா?”
“தனி பெட்டியில் அந்துருண்டை போட்டு பாதுகாக்கப் போகிறேன்!”
“இது ஒரு தனிமனித சென்டிமென்ட். மார்க்கம் இஹ்ராம் துணியை கபன் துணையாக பயன்படுத்த வேண்டும் என எங்காவது சொல்லியிருக்கிறதா?”
“இல்லை. ஆனால் ஒரு விஷயம் யோசிச்சுப் பார். எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டு ஒரு முஸ்லிம் ஹஜ்ஜோ உம்ராவோ போகிறான். நிறைய முஸ்லிம்கள் புனித மெக்காவிலேயே இறந்து விடத் துடிக்கின்றனர். இஹ்ராம் துணி ஜனாஸாவுக்கான ஒத்திகை. உலக முஸ்லிம்கள் பில்லியன் பேர் ஒரே இஹ்ராம் ஆடையில். இஹ்ராம் அணியும் போதே வாழ்வின் நிலையாமை முகத்தில் அறைகிறது. என்னைக் கேட்டால், ஒவ்வொரு ஹாஜியும் அவரவர் இஹ்ராம் துணிகளை பாதுகாத்து கபன் துணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பேன்...”
“சரிங்கத்தா. உங்க விருப்பம் போலச் செய்யுங்கள்…”
ஒரு வாரம் கழித்து-
பத்ஹுல் கனியின் மருமகள் வானம் வெடிக்க வீரிட்டாள். கணவனை அழைத்தாள். “மாமா பஜ்ரு தொழுகைக்கு எந்திரிக்கல.. எழுப்பிப் பார்த்தேன் எந்திரிக்கலை. என்னன்னு பாருங்க!”
அத்தாவை தொட்டுப் பார்த்தான் ஜலாலுதீன்.
உடல் ஜில்லிட்டது.
“இறைவனிடமிருந்து வந்தார். இறைவனிடமேத் திரும்பிவிட்டார்!” முணுமுணுத்தான்.
இஹ்ராம் துணியை கபன் துணியாகப் பயன்படுத்தி ஜனாஸா ஆயத்தம் பண்ணினர். கபுரில் இறங்கிய இரு வானவர்கள் கபன் துணியைத் தொட்டு பார்த்து வியந்தனர்.
“புனித இஹ்ராம் துணியே கபன் துணியாய்… மாஷா அல்லாஹ்!”