ஒரு காரணமும் இல்லாமல் ஒரு பொருளுக்கு தொன்றுதொட்டு சான்றோர்களால் இடப்பட்டு வழங்கும் பெயர், இடுகுறிப் பெயர் எனப்படும். நாற்காலி, மரங்கொத்தி, கரும்பலகை, சிறுவர், பறவை, அணி, வளையல், வட்டம் இப்படி ஏதேனும் ஒரு காரணம் பற்றி இட்டு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். ஓசைகளை வைத்தும் பெயர்களைச் சூடுவர்.
‘மனிதர்களின் பெயர்களில் மகத்துவம் என்ன இருந்து விடப்போகிறது? பெயர்கள் வெறும் அடையாளத்துக்காக தானே?’ என்பீர்கள்.
மனிதர்களுக்கு வைக்கப்படும் எந்தப் பெயரும் மனிதர்களுக்கு எவ்வித நேர்மறை எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என வாதிடுவீர்கள்.
‘ஒரு மனிதனுக்கு ராமசாமி எனப் பெயர் வைத்தால் அவன் ராமசாமி. அதே அவனுக்கு ராபர்ட் எனப் பெயர் வைத்தால் அவன் ராபர்ட். அவனுக்கு ரஹீம் எனப் பெயர் வைத்தால் அவன் ரஹீம்’ என கூறி சிரிப்பீர்கள். மதத்தால் தொழிலால் தோற்றத்தால் ஓசையால் உறவு முறையால் மனிதர்களுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்றன.
உலக மனிதர்களில் 15 கோடி பேருக்கு ‘முகம்மது’ என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆறேகால் கோடி பெண்களுக்கு ‘மரியா’ என்கிற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அஞ்சரை கோடி பேருக்கு ‘நுஷி’ என்கிற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. உலகின் தனித்துவமான குழந்தைகள் பெயர்களாக வின்டி, வின்னிலா, வெல்வெட், ஸ்டார்லெட், ஸ்னோட்ராப், கைரோ, கெனான், பிரியான் பெயர்கள் விளங்குகின்றன.
மெக்ஸிகோவில் விருத்தசேதனம் என பெயர் வைக்கவும், ஜப்பானில் டெவில் என பெயர் வைக்கவும், பிரான்சில் ஸ்ட்ராபெர்ரி என பெயர் வைக்கவும் தடை உள்ளது. உலகின் வித்தியாசமான பெயர்கள் சொலைல் மற்றும் ஜோஸிபா. உலகில் மிக நீளமான ஆண் பெயர் ஹீபர்ட் பிளய்ன் உல்ப் எஸ்செல் ஜெல்ஸ்டெய்ன் ஹாசன் பெர் ஜெர்டார்ப் சீனியர். உலகின் மிக நீளமான பெண் பெயர்- ரோஷன் டியா டெலி நெசியா உன்னி வா செங் கோயானிஸ்க் குவாட் சியூத் வில்லியம்ஸ்.
பீடிகை போதும் கதைக்குள் வருவோம்.
எனது இயற்பெயர் நாசர். சூயஸ் கால்வாய் கட்டி கப்பல் போக்குவரத்தை எளிதாக்கிய எகிப்து அதிபர் நாசர் பெயரைத்தான் என் அத்தா எனக்குச் சூட்டியிருக்கிறார். வெறும் நாசர் தான். நாசர் முகமது அல்லது முகமது நாசர் என அவர் பெயர் வைக்கவில்லை.
ஒற்றை வார்த்தையாய் இருக்கும் நாசர் என்கிற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாசர்கள் இருப்பர் நாஜர், நஸீர் என்று கூட என் சாயலில் பெயர் இருக்கும்.
பின்னாளில் நான் ‘ஆர்னிகா’ என்கிற மாதஇதழ் நடத்தினேன். ஆர்னிகா என்றால் மருத்துவக் குணமுள்ள ஹோமியோபதி மலர். பெண் பெயர் போலவும் இருக்கிறது உச்சரிக்க இசை நயமாகவும் இருக்கிறது. அதனால் என் பெயரை அரசு கெஜட்டில் கொடுத்து ஆர்னிகா நாசர் என மாற்றிக் கொண்டேன்.
பெயர் மாறியதும் என் வாழ்க்கையில் எல்லாம் மாறின.
அழகான அறிவான மனைவி கிடைத்தார். எழுத்தில் புகழ் பெற்றேன். இரு குழந்தைகளுக்கு தந்தையானேன். இப்போது நிம்மதியான ஓய்வூதிய வாழ்க்கை மனைவியுடன் கோவையில் மகன் வீட்டாருடன் வாழ்கிறேன். இரண்டரை வயது பேரனோடு கும்மாளம் குதியாட்டம் கொண்டாட்டம்தான். என்னை பொறுத்தவரை சும்மா கிடக்கும் பெயர்களை மனிதன் எடுத்து சூட்டியபின் அவனுக்கு பெயரால் நன்மையோ தீமையோ கொட்டத் தொடங்கி விடுகின்றன.
ராஜா, தேவி, சாந்தி, பிரபு, ரவி, மணி போன்ற பெயர்கள் தாங்கியவர்கள் வாழ்க்கையில் பெரிய சோகங்களையும் தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என நம்புகிறேன்.
இப்போது எனக்கு வயது 64.
இத்தனை வருட வாழ்க்கையில் ‘தென்னரசு’ என்கிற பெயருடைய நபர்கள் எல்லாம் எனக்கு ஏதாவது ஒரு வகையில் தீங்கு இழைத்து வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், இப்ராஹீம் என்ற பெயருடைய நபர்கள் எல்லாம் எனக்கு
எதாவது ஒரு வகையில் நன்மையை சுமந்து வந்திருகிறார்கள்.
நீங்கள் நூறு முஸ்லிம் ஆண்களை சந்திக்கிறீர்கள் என்றால் ஒரு 20 ஆண்களாவது இப்ராஹீம் பேரை தாங்கி இருப்பர். இப்ராஹீம் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபிகளில் ஒருவர். இறைவனின் ஆணைக்காக இஸ்மாயீல் நபியை பலி கொடுக்க இருந்தவர். ஆபிரகாம் என்கிற பெயரின் அரபி படிவம் தான் இப்ராஹீம். இந்த பெயரின் மூலம் ஹிப்ரூ மொழி. பெயரின் அர்த்தம் பல குழந்தைகளுக்கு தந்தையாய் சிறந்தவன் என்பதே!
என் வாழ்க்கையில் நான் முதன்முதலில் சந்தித்த இப்ராஹீம் என் திண்டுக்கல் பெரியத்தா. ஆறேகால் அடி உயரமிருப்பார். திராவிட நிறம். எப்போதுமே சுருட்டு பிடித்துக் கொண்டே இருந்ததால் அவரை சுருட்டு பெரித்தா என அழைப்போம். வீட்டில் நூற்றுக்கணக்கான புறா வளர்த்தார். அவருக்கும் என் அத்தாவுக்கும் உறவுமுறை சரியில்லாததால் நான் அவருடன் ரகசியமாக பேசிக் கொள்வேன். கரகர எம் ஆர் ராதா குரல் அவருக்கு. ஸ்டைலில் ரஜினிகாந்த் என் சுருட்டு பெரித்தாவிடம் பிச்சை வாங்க வேண்டும். கால் மேல் கால் போட்டு கொண்டு அவர் சுருட்டு பிடிக்கும் அழகே அழகு.
இரண்டாவதாக என் பால்ய விளையாட்டுத் தோழன் இப்ராஹீம். அவனும் நானும் சேர்ந்து சுத்தாத இடமில்லை. ஹார்லிக்ஸ் பாட்டிலில் மீன் பிடிப்போம்.குதிரைவால் முடியில் சுருக்கு அமைத்து ஓணான் பிடிப்போம். தீப்பெட்டி லேபிள்கள் சிகரட் அட்டைகள் சேகரிப்போம். செதுக்கு சிப்பி விளையாடுவோம். நொண்டித்தட்டு அரங்கேற்றுவோம். திருடன் போலீஸ் விளையாட்டு ஆடி மகிழ்வோம். திண்டுக்கல் மலைக்கோட்டை மீது ஏறுவோம். நாகூர் ஹனீபா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி பாடல்கள் ரசிப்போம். மாரியம்மன் கோவில் திருவிழாவில் லூட்டி அடிப்போம். இருவரும் தெப்பக்குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். ஒரு நாள் இப்ராஹீம் தனியாக நீச்சல் அடிக்கப் போய் நீரில் மூழ்கி இறந்தான். அவனது வயிறு வீங்கிய மீன்கள் கொறித்த உடல் என் மனக்கண்ணில் அப்படியே நிற்கிறது!.
மூன்றாவதாக திண்டுக்கல் மாநகரில் மட்டன் கடை வைத்திருந்த இப்ராஹீம். எந்த நேரமும் தலையில் தொப்பி இருக்கும். நீண்ட பெரிய தாடி. நூறு கிராம் கறி கேட்டாலும் ஒரு கிலோ கறி கேட்டாலும் முகம் சுளிக்காமல் தருவார். நூறு கிராம் கைமா கேட்டால் அரிவாளை எடுத்துக் கொண்டு கறியுடன் ஜக் ஜக் ஜக் ஜக்கென்று விளையாடுவார். அவர் ஒரு மட்டன் இளையராஜா. கறி வாங்கும் போது “கொஞ்சம் குர்தாவையுங்க பாய்!” என்போம்.
ஆட்டின் ஆணுறுப்பு பலூன் மாதிரி நீண்டிருக்கும். அதிலிருந்து சிறிது அரிந்து கறியோடு வைப்பார். அவரின் ஆட்டுக்கறி நுங்கு போல இளசாக இருக்கும். ஆயிரம் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மனப்பாடம். என்னைப் பார்த்ததும் “ஆடிட்டர் சம்சுதீன் மகனே வா” என்பார். யாரையும் காத்திருக்க விட மாட்டார். எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம்.
அடுத்து மனைவி சொந்தத்தில் ஒரு இப்ராஹீம். என் மனைவிக்கு சச்சா உறவுமுறை. காலாவின் கணவர். நான் வகிதாவை திருமணம் செய்து கொண்ட போது எங்களது எல்லா புகைப்படங்களிலும் பச்சை சட்டை அணிந்து அவரே நின்றிருந்தார். என் மனைவியின் சொந்தங்களில் சிலர் என்னைக் கண்டு ஒதுங்கிப் போவர். ஆனால், இவர் மட்டும் எப்போதுமே வாஞ்சையுடன் என்னை அணுகுவார்.
பரங்கிப்பேட்டை இப்ராஹீம் என் கல்கண்டு தொடர்கதைகளைப் படித்துவிட்டு எனக்கு வாசகர் ஆனவர். ஒரு தடவை என்னைப் பரங்கிப்பேட்டைக்கு அழைத்து விருந்து வைத்தார். இப்போது அவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். முகநூலில் நாங்கள் நண்பர்கள்.
என்னுடைய சிறுகதைகளை நாவல் ஜங்ஷன், புஸ்தகாவுக்கு ஆன்லைன் வாசிப்புக்கு கொடுக்கும் போது என்னுடைய பல பழைய நாவல்களை காணாமல் தவித்தேன். அப்போது கைகொடுத்தார் உளுந்தூர்பேட்டை இப்ராஹீம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்து உதவினார்.
அடுத்த மிகமிக முக்கியமான இப்ராஹீம். என் அண்ணனை பற்றிச் சொல்லப் போகிறேன். எங்கள் மகன் டாக்டர் நிலா மகனுக்கு ஒன்றரை வருடங்களாகப் பெண் தேடிக் களைத்திருந்தோம். நீண்ட நாள் தொடர்பின்மைக்கு பிறகு எனது ஒன்றுவிட்ட அண்ணன் ஜனாப். எம். சுல்தான் சையது இப்ராஹீம் கைபேசியில் பேசினார். அவரின் பரிந்துரைப்பால் டாக்டர். ர. பஹிமா ஆப்ரினை என் மகனுக்கு மனைவியாக்கினோம். ஓர் அற்புதமான மருமகளை எங்களுக்கு தந்த இப்ராஹீம் அண்ணனை நெஞ்சார நன்றி பாராட்டுகிறேன்.
இஸ்லாம் எப்எம்மிலிருந்து ஒரு இப்ராஹீம் பேசினார். அழகிய முகமன்கள் பரிமாற்றம். “பாய் உங்களின் இஸ்லாமிய நீதிக் கதைகளை வாரம் ஒன்றாய் 100 வாரங்களுக்கு உங்க குரலிலேயே ஆடியோ கதையாய் ஒலிபரப்ப விரும்புகிறேன்”
ஆடியோ கதை தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இப்போது முகநூலில் நட்பு கோரிக்கை வைக்கும் நண்பர்களில் எப்படியும் இரண்டு மூன்று இப்ராஹீம் வந்துவிடுவர். நானும் அவர்களது நட்புக் கோரிக்கையை ஒப்புக் கொள்வேன்.
மனாஸ் கார்டனின் மகன் கட்டிய வீட்டில் குடியேறினோம். எங்களுக்கு எதிர்த்த வீட்டிலிருந்து ஒரு இப்ராஹீம் அறிமுகமானார்.
பேரன்புடன் கூடிய சிறிய உருவம். அவர்கள் வீட்டில் என்ன விசேஷ சமையல் செய்தாலும் அவரது மனைவி எங்களுக்கு கொடுத்துவிடுவார். நாங்களும். இப்ராஹீம் பாயின் பேரன் 12 வயது பகத் எங்கள் இரண்டாரை வயது பேரன் முஹம்மது அர்ஹானுக்கு விளையாட்டுத் தோழன்.
இதோ பேசிக் கொண்டிருக்கும் போதே என் கைபேசி அழைக்கிறது. எடுத்துக் காதில் இணைத்தேன். “கனடாவிலிருந்து ஆபிரகாம் பேசுகிறேன். அதாவது இப்ராஹீம் பேசுகிறேன். உங்களின் அனைத்து இஸ்லாமிய நீதிக்கதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் ராயல்டி தருகிறோம்!”
“ஓகே இப்ராஹீம்!”
- இப்போதும் இனிமேலும் என் மீதி ஆயுட்காலத்தில் எனக்கு நன்மை செய்ய வர இருக்கும் இப்ராஹீம்களுக்காக டன் கணக்கில் அன்புடன் காத்திருக்கிறேன்.