தோட்டத்தில் இருக்கும் எலுமிச்சை மரத்தின் கிளை மாடியின் மூன்றாவது படுக்கையறை ஜன்னலுக்குள் அத்துமீறி இருந்தது.
ஜன்னலின் அருகே நின்று வெளிவானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் யுஸ்ரா ஜைனா. யுஸ்ராவுக்கு வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். இரண்டு இறக்கைகளை பொருத்தினால் தேவதை போலிருப்பாள். மிருகங்கள் மீதும் பறவைகள் மீதும் அதீத அன்பை செலுத்துபவள். குறிப்பாக, நாம் அருவெறுப்பாய் ஒதுக்கும் பிராணிகள் மீது அளவற்ற அன்பைக் கொட்டுவாள். ஆண்டவனின் படைப்புகளில் அனைத்து உயிரினமும் சமம் என வாதிடுவாள்.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரக்கிளையில் சரசரப்பாய் ஓடி வந்த ஒரு குட்டி ஓணான் அறைக்குள் குதித்தது.
அறைக்குள் ஓணானை துரத்தியபடி அங்குமிங்கும் ஓடி விளையாடினாள் யுஸ்ரா ஜைனா.
யுஸ்ரா எதிர்பாராவண்ணம் ஓடிய ஓணான் நின்று திரும்பி யுஸ்ராவின் மீது ஏறியது. ஏறியது யுஸ்ராவின் வலது உள்ளங்கையில் வந்து நின்றது.
அந்த ஓணான் வாலுடன் 20 செமீ நீளமிருந்தது. பளீர் சிவப்பு தொண்டை. முதுகில் குத்தீட்டிய செதில்கள்.
ஓணானை தனது முகத்துக்கு நேராக வைத்து டைட் குளோசப்பில் பார்த்தாள் யுஸ்ரா. “என்ன ஓணான் சௌக்கியமா? எங்கள் தோட்டம் போதாது என்று என் படுக்கையறைக்குள்ளும் புகுந்து விட்டாயே? நீ பையனா, பொண்ணா?”
ஓணான் தலையை ஒரு மாதிரி ஆட்டியது.
“உன்னை ஆங்கிலத்தில் ஓரியன்டல் கார்டன் லிசார்டு என்பர். திருநெல்வேலி பக்கம் கரட்டாண்டி என்பர். ஹிந்தியில் ஜிர்ஜித் என்பர். பெங்காலியில் ரோக்டோ சோஷா என்பர்!”
மீண்டும் தலையாட்டியது.
“நீ ஒரு பூச்சி உண்ணி. குரங்கு பூச்சி, வெட்டுக்கிளி, எறும்பு மற்றும் சிறிய வகை ஊர்வனவற்றை லபக்குவாய். அபூர்வமாய் சைவமும் சாப்பிடுவாய்!”
ஓணானின் முகத்தில் முத்தமிட்டாள்.
ஓணான் நாணி கோணியது.
“உன்னுடைய விஞ்ஞானப் பெயர் -கலோடஸ் பெர்சிகலர். உன் திணை - விலங்கினம். தொகுதி - முதுகு நாணி. வகுப்பு – ஊர்வன. வரிசை – ஸ்குவமேட்டா. துணை வரிசை - இகுனியா. குடும்பம் - ஓந்தி. பேரினம் - கலோடஸ் இனம் - சி.வெர்சிகலர்…”
ஓணான் நாக்கை நீட்டி யுஸ்ராவின் கன்னத்தை நக்கியது.
“ஓ… நட்பு நாடி நீயும் எனக்கு முத்தம் தருகிறாயா? உன்னை ஒரு பெண் ஓணானாகக் கருதி உனக்கு ‘ஓமனக் குட்டி’ எனப் பெயர் சூடுகிறேன். ஓணான் ஓமனக் குட்டி பெயர் ரிதமிக்கா இருக்குல்ல.?”
தலையாட்டியது ஓணான்.
“உன்னை வளர்ப்பு பிராணியா என் பெட்ரூம்ல வச்சிக்கிரேன். உனக்குச் சம்மதமா?”
மீண்டும் தலையாட்டியது.
ஓணானை தூக்கிப் போய் மல்லாக்கப் படுக்க வைத்தாள். உருண்டு தலையை அண்ணாந்தது. ஓணானின் கழுத்தில் ஒரு நீல நிற கயிற்றைக் கட்டினாள். அதன் வாயில் லிப்ஸ்டிக்கும். அதன் கால்களில் நெயில் பாலிஷும் போட்டுவிட்டாள்.
“அச்சச்சோ என்ன அழகா இருக்கு? என் கண்ணே பட்ரும் போலிருக்கு… ஸோ ஸ்வீட்!”
கண்ணை மூடி திறந்தது.
“என் பெற்றோருக்குத் தெரிந்தால் உன் கதி அதோகதிதான். நீ என் பெட்ரூமில் இருப்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறேன்… என்ஜாய் யுவர் செல்ப்!”
ஓமனாக்குட்டியை விசேஷமாக பராமரித்தாள் யுஸ்ரா ஜைனா.
தினம் ஒரு பிளாஸ்டிக் டப்பா நிறைய வெட்டுக்கிளிகளைப் பிடித்துக் கொண்டு வந்து இரையாக ஊட்டினாள் யுஸ்ரா. (வெட்டுக்கிளி பிடித்து தருபவனுக்கு தினம் 20 ரூபாய் கொடுத்து விடுவாள்)
ஓமனாக்குட்டி யுஸ்ரா ஜைனாவுடன் மிக நெருக்கமாகிவிட்டது. யுஸ்ராயின் உடல் முழுக்க ஓடி தலையில் போய் நிற்கும்.
யுஸ்ராவின் அம்மா லதிபா ஹயாத் ஒரு யூனானி மருத்துவர். யுஸ்ராவின் தந்தை ஒரு ஹோமியோபதி மருத்துவர்.
கடந்த ஆறு மாதங்களாக யுஸ்ராவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்து மூளையை கசக்கி யோசித்தாள் லதிபா.
அறைக்குள் என்ன செய்கிறாள் யுஸ்ரா?
பெற்றோருக்குத் தெரியாமல் நருடோ, டோரிமான், சின்சான், ட்ராகன் பால், யோகாய் ஹனா, செய்லர் மூன், ஆஸ்ட்ரோ, சௌகோ, ஹலோ கிட்டி கார்ட்டூன்கள் பார்க்கிறாளோ?
மோசமான நண்பர்களுடன் கைபேசி கதைக்கிறாளோ? படிக்காமல் படுத்து படுத்து தூங்குகிறாளோ? நாம் யூகிக்காத வேறு ஏதாவது ஒரு விபரீத செயல் புரிகின்றாளோ? இவளுக்கு தனியறை ஒதுக்கியது தவறோ? பல மாதிரியாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள் லதிபா ஹயாத். பெற்ற மகளை உளவு பார்ப்போம்.
தொடர்ந்து ஒரு வாரம் உளவு பார்த்த பின்…
ஒருக்களித்து திறந்திருந்த கதவைச் சத்தம் இல்லாமல் திறந்தபடி மகளின் படுக்கையறைக்கு உள்ளே போனாள் லதிபா ஹயாத்.
மகள் ஓணானுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டாள் லதிபா.
“சீ… என்ன கர்மம்டி இது? ஜன்னலைத் திறந்து அதை தோட்டத்துக்கு விரட்டிவிடுடி…”
“முடியாதும்மா. அது என் வளர்ப்பு ஓணான். பெயர் ஓமனக்குட்டி. நான் வேற அல்ல அது வேற அல்ல அன்பால் இரண்டற கலந்துவிட்டோம்!”
“வாயக்கழுவுடி. ஒரு முஸ்லிம் பொண்ணு ஓணான் வளர்க்கலாமா?”
“ஓணான் வளர்க்கக்கூடாதுன்னு நம்ம மார்க்கம் எங்கயாவது சொல்லிருக்கா? ஓணான் வளர்ப்புக்கு எதிராக ஹதீஸ் இருந்தா எடுத்துக்காட்டு!”
“யுஸ்ரா… ஓணான் வளர்ப்புப் பிராணியாக இருக்க கூடாதுன்னு நம்ம மார்க்கம் எங்கயும் சொல்லல…”
“அப்றம்?”
“ஒரு ஓணான் வளர்ப்பு பிராணியாக வளப்பதில் சில சீரியசான பிரச்சனைகள் உள்ளன யுஸ்ரா?”
“அதென்னம்மா பிரச்சனைகள்?”
“செடி கொடிகளில் சுதந்திரமாக உலவ வேண்டிய ஓணானை உனது அறைக்குள் வைத்துப் பூட்டியுள்ளாய். ஓணான்களுக்கு நேரடி சூரிய வெளிச்சம் தேவை. கால்சியமும் விட்டமின் டியும் குறைபாடும் ஓணானின் எலும்புகளை பலவீனமாக்கும். தவிர, அறைக்குள் பூட்டி வைக்கப்படுவதால் ஓணானுக்கு மன அழுத்தம் அதிகமாகி அற்பாயுசில் இறந்துவிடும். ஒரு ஓணானின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள். உன் ஓமனக்குட்டி ஒன்பது மாதக்குட்டி. ஒரு வயசு நிறைவதற்குள் இறந்து விடும்!”
“உண்மையா?”
“ஓணான்களின் பரமவிரோதி பூனை. பூனை உன் ஓமனக்குட்டியை எங்க பார்த்தாலும் லபக்குனு முழுங்கி விடும். தவிர, ஓணான்களின் குடல் பகுதியில் சில ஒட்டுண்ணிகள் இருக்கும். அவை மனிதரைத் தொற்றிக் கொண்டால் குணப்படுத்த மருந்தில்லை. சில வகை ஓணான்களை வளர்ப்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம். நீ ஓமனக்குட்டியை வளர்ப்பது குற்றமா இல்லையா என்பதனை விசாரிக்க வேண்டும்!”
“விசாரி!”
“வேட்டைநாய், காவல் நாய் தவிர மீதி நாய்களை வளர்க்கக்கூடாது என்கிறது இஸ்லாம். பூனை வளர்க்கலாம். பன்றி மாமிசம் சாப்பிடுவது மட்டும்தானே ஹராம்? நான் பன்றிக்குட்டியை வளர்ப்பு பிராணியாக வளர்க்கிறேன் என யாராவது ஒரு முஸ்லிம் பெண் கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அருவெறுப்பான பிறருக்கு தீங்கு இழைக்கக்கூடிய பிராணிகளை வளர்க்கக் கூடாது என மார்க்கம்தான் சொல்ல வேண்டுமா? ஏன் நம் மனசாட்சிக்குத் தெரியாதா?”
“நன்கு பேசுகிறாய் அம்மா!”
“உனக்கு, இந்தக் குட்டி ஓணான் மீது அக்கறையும் பரிவும் இருக்கிறது என்றால் அதனை நம் தோட்டத்தில் சுதந்திரமாக உலவ விடு. தோட்டத்திற்குள் சூரிய வெளிச்சம் அழகாக ஊடுருவச் செய்வோம். தோட்டத்துச் செடிகளின் மீது
களைக்கொல்லியும், பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தாமல் இருப்போம். நீ உன் விருப்பத்துக்கு இரை ஊட்டாதே. அதுதன் விருப்பத்துக்கு ஏற்ப இரைகளைத் தேடிக் கொள்ளட்டும். உனக்கு ஒரு திகிலான விஷயம் கூறுகிறேன்!”
“சொல்!”
“ஒருத்தி மலைப்பாம்பை வளர்ப்புப் பிராணியாக வளர்த்திருக்கிறாள். அது இரையைச் சரிவர தின்னாமல் இரவெல்லாம் விழித்திருந்திருக்கிறது. கால்நடை மருத்துவரை அணுகுகின்றனர். கால்நடை மருத்துவர் ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறுகிறார். பாம்பு வளர்க்கும் பெண்ணை முழுங்க பெண்ணின் நீள அகலத்தை அளந்து கொண்டிருக்கிறது என மர்மத்தைப் போட்டு உடைத்தார்… பல நாட்கள் இரை போட மறுத்த நாய் உரிமையாளரை நாய் கடித்துத் தின்று பசியாறி இருக்கிறது என ஒரு செய்தியும் உண்டு. ஓணான் கடி விஷம் என்பது உனக்கு தெரியுமா தெரியாதா? உனக்கு பிடித்த ஓணான் உன் கண்ணெதிரே வளரட்டும். தோட்டத்தில் விடு!”
யுஸ்ரா ஜைனா ஓணானின் கழுத்து கயிற்றைக் கழற்றி தோட்டத்தில் விட்டாள்.
ஒரு மாதம் கழித்து…
யுஸ்ரா ஜைனா அம்மாவிடம் கைநீட்டினாள். 10 செமீ நீளமுள்ள ரஷ்யன் ஆமை!
“இதை வளர்ப்புப் பிராணியா வளத்துக்கட்டுமா அம்மா?”