அந்தப் புதிய பள்ளிவாசல் துருக்கியக் கட்டடக்கலை பாதிப்பில் கட்டப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் சேர்த்து ஆயிரம் பேர் தொழலாம். பள்ளியின் உள்முகப்பில் ஸான்ட்லியர் விளக்கு சரம்சரமாய் தொங்கியது. தரைத் தளத்தில் 50 மின்விசிறிகள். முதல் தளத்தில் ஐம்பது மின்விசிறிகள். தவிர, இரு தளங்களிலும் மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. அழகிய நீர் தடாகம். இமாம், மோதினார், முத்தவல்லி ஆகியோருக்குத் தனித்தனிக் கழிவறை இணைக்கப்பட்ட அறைகள். பள்ளிவாசல் முழுக்க மின் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விடிந்தால் புதிய பள்ளிவாசல் தொழுகைக்காகத் திறத்து விடப்படும்.
தலைமை - பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் கபூர்
இமாம் - எஸ். முகமது யாசின் ஹசனி கிராஅத் செய்கிறார். பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் உலமா பெருமக்கள் ஜமாஅத்தார்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
சர்வ மதத்தினர் வாழ்த்துரை.
செய்தித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினர்.
முத்தவல்லியும் ஜமாஅத்தாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். உடன் பிற மத சகோதரர்கள் சிலர்.
அவர்கள் முன் ஒரு கிரான்ட் செரோக்கி எல்ஜீப் சறுக்கி வந்து நின்றது.
அதிலிருந்து இருவர் இறங்கினர். இருவருமே பைஜாமா குர்தா அணிந்திருந்தனர். கால்களில் ஷூ. தலையில் துணி தொப்பி. கச்சிதம் செய்யப்பட்ட தாடி.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம்!”
“இங்க யார் முத்தவல்லி?”
“நான்தான்!” என நெஞ்சில் கைவைத்தபடி முன் வந்தார் முத்தவல்லி.
“நீங்கள் ரெண்டு பேரும் யாருன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?”
“நாங்க ரெண்டு பேரும் கிப்லா சரிபார்ப்பு தன்னார்வ நிறுவனத்திலிருந்து வருகிறோம். என் பெயர் ஹிஜாஸ் அகமது. இவர்பெயர் அப்துல் சுபஹான்”
“இங்கு என்ன விசயமாக வந்திருக்கீங்க?”
“இன்னும் புரியலையா? தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரக்கணக்கான மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் கிப்லா சரியான திசையில் அமைந்திருக்கிறதா எனச் சோதிப்பது எங்கள் பணி!”
“பள்ளிவாசல் கட்டும் போதே நீங்கள் வந்திருக்கலாமே… நாளை திறப்பு விழா… இன்றிரவு வந்து சோதித்தால் எப்படி?”
“தகவல் எங்களுக்கு தாமதமாகத்தான் கிடைத்தது”
“என்ன தகவல் உங்களுக்குக் கிடைத்தது?”
“இந்தப் பள்ளிவாசலைக் கட்ட முழு நிதி உதவி செய்தவர் பெரும்பணக்காரர் ஹாஜி. எம். என். நவாசுதீன் சித்திக் எனக் கேள்விப்பட்டோம். அவர் பள்ளிவாசல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத ஆர்க்கிடெக்ட் வைத்து பள்ளி கட்டுவதாகவும் செய்தி கிடைத்தது. கிடைத்த செய்திகள் தாமதமானவை என்றாலும், அதனை உடனே பரிசோதிப்பது முறைதானே?”
“உங்களுக்குக் கிடைத்த தகவல்கள் தவறு. நான்கு கோடி ரூபாய் செலவில் பள்ளிவாசல் கட்டும் எங்களுக்கு அடிப்படைகள் தெரியாதா?”
“நாங்கள் பள்ளியின் உட்புறம் முழுக்கப் பார்வையிட விரும்புகிறோம்!”
“நாங்கள் வக்பு போர்டுக்கு மட்டுமேக் கட்டுப்பட்டவர்கள்!”
“முஸ்லிம்கள் அனைவரும் உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் முத்தவல்லி. நீங்கள் எங்களைத் தடுத்தாலும் தடுக்கா விட்டாலும் நாங்கள் பள்ளியைப் பார்வையிட்டேத் தீருவோம்!”
“சரி, உள்ளே வாருங்கள்!”
இருவரும் கால் ஷுக்களை கழற்றி விட்டு ஒளு செய்து விட்டுப் பள்ளிவாசலுக்குள் நடந்தனர்.
ஒருவர் கிப்லா காம்பஸைக் கையில் எடுத்தார்.
“முத்தவல்லி! கிப்லா திசையைக் கணிக்கப் பிரதானமாக ஐந்து செயலிகள் உள்ளன. முஸ்லிம் ப்ரோ, ஈமான், அதான், முஸ்லிம் அஸிஸ்டென்ட் மற்றும் பிரேயர்டைம் எஸ்ஜி!”
முத்தவல்லி மௌனித்தார்.
“இந்தப் பள்ளி கட்ட நிதி உதவி செய்த ஹாஜி நவாசுதீன் சித்திக் அவர்களை வரச் சொல்லுங்கள்!”
திறன்பேசியில் பேசி வரச்சொன்னார் முத்தவல்லி.
அடுத்தப் பத்து நிமிடங்களில் நவாசுதீன் சித்திக் வந்து சேர்ந்தார். விஷயம் கேள்விப்பட்டதும் தாட்பூட் என்று குதித்தார்.
“ஆண்டி பெத்தது அஞ்சும் குரங்கு; பண்டாரம் பெத்தது பத்தும் குரங்கு!” என்றார்.
“நவாசுதீன் சித்திக் பாய், கிப்லா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”
முறைத்தார் சித்திக்.
“கிப்லா என்கிற வார்த்தைக்கு திசை என்கிற பொருள் உண்டு. கிப்லா என்பது இஹ்ராமுக்குள் நுழைவதற்கான திசை. துஆவுக்கான திசை. சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் பகுதி மக்காவிலுள்ள புனித மசூதியின் பெயர் அல் மஸ்ஜித் அல்ஹரம். அதன் மையத்திலுள்ள கனசதுரம் தான் கிப்லா. கிப்லா கடவுளின் வீடு. காபாவை நோக்கி தொழுதும் திசையே கிப்லா. காபாவை இப்ராகீம் நபியும் இஸ்மாயீல் நபியும் கட்டினர். துப்பும் போது மலஜலம் கழிக்கும் போது சிறுநீர் கழிக்கும் போது தவிர்க்க வேண்டிய திசை கிப்லா. இறந்தவர்களின் முகத்தைப் புதைக்கும் போது கிப்லா நோக்கித் திருப்ப வேண்டும். காபா 50 அடி உயரமுள்ள 120 சதுர மீட்டர் செவ்வகம். சாம்பல் கல்லினால் ஆனது. கிஸ்வா துணியால் காபா மூடப்பட்டிருக்கும்”
“இதெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்?”
“காரணம் இருக்கு பாய். முதலில் நபிகள் நாயகம் ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா மசூதியின் பைத்துல் முகத்தஸை நோக்கி 16 அல்லது 17 மாதங்கள் தொழுதார். கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கு உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான் இல்லையா? இறைவனிடமிருந்து நபிகள் நாயகத்துக்கு ஒரு தெய்வீகச் செய்தி கிடைத்தது. கிப்லா திசையை காபா நோக்கி அமைத்துக் கொள்ள இறைவன் அனுமதி தந்தான். துல்லியமாக காபா திசை கணித்து தொழுவது ‘அய்ன் அல் காபா’. பொதுவான திசை அமைத்து தொழுவது ‘ஜிஹாத் அல் காபா’. கிபி 623 ஆம் ஆண்டு ரஜப் அல்லது ஷாபான் மாதத்தில் தான் முதன்முதலாக காபாவை கிப்லா திசையாக அறிவித்து தொழுகை நடத்தப்பட்டது”
‘நவாசுதீன் சித்திக் கோபத்தை மென்று விழுங்கினார்.
“கிப்லா திசையைத் துல்லியமாகச் சொல்லுங்கள் பார்ப்போம் பாய்!”
சித்திக் திணறினார்.
“உங்களுக்குத் தெரியாது. மேற்கிலிருந்து வடக்கு திசை 21 டிகிரியில் இருந்து 25 டிகிரி வரை!”
“ஆமாம்… அதற்கென்ன?”
“தீவிர ஷியாக்களான கர்மத்தியர்கள் கி.பி 930ல் மக்காவைச் சூறையாடினர். தவிர, பல்வேறு கிப்லாக்களை கொண்ட வரலாற்று மசூதிகள் உலகில் நிறையவே உள்ளன…”
இருவரும் தொழுமிடத்துக்கு நடந்தனர்.
எதையோத் தேடினர்.
“என்ன தேடுறீங்க?”
“மசூதிகளில் கிப்லாவின் திசையைக் குறிக்கும் மிஹ்ராப் சுவர் இருக்கும். அது எங்கே?”
“அ…அ… அது” திணறினார்.
“சரி… இந்தப் பள்ளிவாசலில் கிப்லாவை எந்தத் திசையில் வைத்திருக்கிறீர்கள் எனப் பார்க்கலாமா?”
“சரி”
“தோழர்களே… இப்பள்ளியில் கிப்லா தலைகீழாய் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்க்கிடெக்ட் மட்டுமல்ல ஸ்பான்ஸர், முத்தவல்லி, இமாம் மற்றும் ஜமாத்தார்கள் யாருமேப் பார்க்கவில்லையா? கோடிகோடியாகச் செலவழித்தாலும் தவறான திசையில் தொழ வைப்பது பெரும்பாவம் இல்லையா? கோள முக்கோணவியல் சூத்திரத்தைப் பயன்படுத்தி கிப்லாவைச் சரியாகக் கணக்கிட்டிருக்கலாமே?“
“தவறு நடந்து போச்சு!”
“தவறை மறைத்து நாளை பள்ளிவாசல் திறப்பு விழாவை நடத்தி விடலாமா?”
“திறப்புவிழா நடத்திவிட்டு கிப்லாவை மாற்றி அமைப்போம்!”
“நோ… பள்ளிவாசல் திறப்பு விழாவைச் சில மாதங்கள் தள்ளி வையுங்கள். பள்ளிவாசல் சுவரை இடித்துக் கட்டி கிப்லாவை மாற்றுங்கள். கிப்லா மாற்றத்துக்கேற்ப உள்கட்டமைப்பை தகவமைப்பாக மாற்றுங்கள்”
சுற்றியிருந்த ஜமாத்தார்கள் கோரஸாய் சத்தமிட்டனர். “வந்தவர்கள் சொல்வதுதான் சரியான முடிவு. தவறான கிப்லாதிசையில் ஒரு ரக்அத் தொழுகை கூட நாங்கள் தொழ விரும்பவில்லை. ஒரு தடவைக்கு பல தடவை கிப்லா திசையைச் சரி பார்த்த பிறகே, பள்ளிவாசலை திறங்கள். அதற்கு ஒரு வருடம் ஆனாலும் பரவாயில்லை”
“விமானத்தில் ரயிலில் செல்பவர் கூட கிப்லா ப்ரோ வைத்து கிப்லாவைக் கணித்துத் தொழுகின்றனர். உங்களுக்கென்ன கேடு வந்தது? பணத்திமிர் கண்களை மறைத்து விட்டதா?”
- மறுநாள்
பள்ளிவாசலின் சுவர் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடன் நவாசுதீன் சித்திக்கின் திமிரும் போலி கௌரவமும்.