கோவை போத்தனூர். செல்லம்மாள் காலனி, நான்காவது குறுக்கு தெரு.
அந்த வீட்டின் உரிமையாளர் மோகன்தாஸ் தன் மனைவி கோகிலாவுடன் போர்ட்டிக்கோவில் நின்றிருந்தார்.
ஏழெட்டு வேலையாட்கள் கையில் கழிகளுடன் நின்றிருந்தனர்.
“இதோ இங்கதான் பாம்பைப் பார்த்தேன்!”
“இதுக்குள்ள பாம்பு போறதை என் கண்ணால பார்த்தேன்!”
“எட்டு அடி நீளம் இருக்கும்!”
“கடிச்சா ஆளு ஸ்பாட் அவுட்தான்!”
ஓட்டி வந்த பைக்கை நிறுத்தினான் அமீன் பாதுஷா. வயது 43. சிவந்த நிறம். பாரசீக முகம். முகவாயில் குச்சித் தாடி.
மோகன்தாஸ் அமீன் பாதுஷாவிடம் ஓடினார். “நீங்க வன அலுவலர் அனுப்பிய பாம்பு பிடிக்கும் ஆளு தானே?”
“ஆமாம்!”
“எப்படியாவது பாம்பைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கள்!”
“கொல்ல மாட்டோம். பிடிச்சுக் கொண்டு போய் காட்ல விட்ருவோம்!”
“எப்படியாவது பாம்பை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினாச் சரி!”
“ பாம்பை மொதல்ல பார்த்தது யாரு?”
“நான்தான்!” ஒரு வேலையாள் முன்வந்தான்.
“எந்த இடத்தில் பாத்த-”
“கார் ஷெட் அருகில்!”
அமீன் பாதுஷா ஓடினான். ஷெட் அருகில் மழை நீர் தேங்கிய பெயிண்ட் வாளிகள் இருந்தன. கவிழ்த்தான்.
கார் ஷெட்டுக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய சாமான்களை நகர்த்தி விலக்கிப் பார்த்தான் அமீன்.
ஏறக்குறைய ஆறு மணி நேரம் அந்தப் பெரிய வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுத் தேடினான்.
குளியலறையில் பாம்பைக் கண்டுபிடித்து விட்டான்.
மரணப் போராட்டம் நடத்தி, அந்த எட்டடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து விட்டான். மேல் தாடையையும் கீழ்தாடையையும் இணைத்து தலையை மென்மையாக நசுக்கிப் பிடித்தான். பாம்பின் வால் அவனின் கைகளைப் பின்னியது.
எல்லோரும் பதறி சிதறி ஒடி வந்தனர்.
“எங்க எங்க பாம்பைக் காட்டுங்க...”
பாம்பை ஒரு பையில் போட்டுக் கட்டினான். அத்துடன் தில்லாது தோட்டத்துப் பக்கம் போய் அலசி ஆராய்ந்தான்.
ஒரு புதர் பொந்தில் பத்துக் குட்டி பாம்புகள் இருந்தன.
அவைகளையும் பைக்குள் இட்டுக் கட்டினான்.
மோகன்தாஸ் கைகூப்பினார். “பெரிய காரியம் பண்ணிட்டிங்க தம்பி!”
கோவையில் காணப்படும் விசப்பாம்பு விசமற்ற பாம்புகள் பற்றியும் பாம்பின் கடிவகை பற்றியும், பாம்பு கடித்தால் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியத்தை பற்றியும் பாம்பின் குணாதிசயம் அவற்றின் வசிப்பிடம் பற்றியும் வகுப்பெடுத்தான் அமீன் பாதுஷா.
“தம்பி, நீங்க முஸ்லிமா உங்க பேர் என்ன-”
“அமீன் பாதுஷா!”
“எங்க இருக்கீங்க தம்பி?”
“உக்கடம் ஜி எம் நகர்ல”
“உங்க மனைவி குழந்தைகள் பற்றி சொல்லுங்க தம்பி?”
“என் மனைவியும் ஒரு முஸ்லிம்தான். காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன்.. காதல் தொடர்கிறது”
“குழந்தைகள்?”
“மூத்தவனுக்கு வயது பத்து. இளையவனுக்கு வயது 5”
“மூத்தவன் என்ன படிக்கிறான்?’
அமீன் பாதுஷா முகத்தில் சோகம் படர்ந்தது “அவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஒரு நாள் விளையாடும் போது தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தான். மருத்துவமனையில் சேர்த்தோம். தலையில் மேஜர் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்குப் பிறகு என் மகன் கோமா நிலையில் ஆழ்ந்தான். கடந்த ஒரு வருடமாக அவனை வீட்டில் வைத்துத்தான் பார்க்கிறோம். மாதம் 50 ஆயிரம் செலவாகிறது. நம்பிக்கையுடன் செலவு செய்கிறோம்!”
“பாம்பு பிடிப்பது உங்கள் முழு நேரப் பணியா?”
“நல்ல சம்பளத்துடன் கூடிய பணியில் இருந்தேன். பாம்புகளின் மீதுள்ள கிரேஸால் பாம்பு பிடிக்கும் பணிக்கு முழுமையாகத் தாவி விட்டேன். பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே சமாதானம் பேசுபவனாக நான் நிற்கிறேன். பாம்பு யாரையும் விரும்பிக் கடிப்பதில்லை. அதன் இருப்புக்கு ஆபத்தோ சவாலோ வந்தால் கடிக்கும்!”
“உங்களைக் கடித்திருக்கிறதா?”
“ஓரிருமுறை”
“பாம்பு பிடிக்க சார்ஜ் பண்ணுவீர்களா?”
“ஒரு பாம்பு பிடிக்க 500 ரூபாய் சார்ஜ் பண்ணுவேன்!”
“11 பாம்பு பிடித்திருக்கிறீர்கள். கணக்குப் பார்க்காமல் தருகிறேன். இந்தாருங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்!”
“ஆயிரம் ரூபாய் போதும்!”
“என் சந்தோஷத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள்!”
“எனக்குக் குற்ற உணர்ச்சி பெருகுமே… ஆயிரம் ரூபாய் போதும்… என் நம்பரை whatsapp-யில் குரூப்புகளில் பகிருங்கள். பாம்பை பாத்த பத்து நிமிடத்தில் என்னை அழையுங்கள். அது நள்ளிரவு நேரம் என்றாலும் ஓடோடி வருவேன்!”
அமீன் பாதுஷா பாம்புகள் கட்டப்பட்ட பையுடன் புறப்பட்டான்.
- பதினைந்து நாட்கள் கழித்து,
ஒரு குளிர்பதன மூட்டப்பட்ட பனிரெண்டு இருக்கை டெம்போ ட்ராவலர் வீட்டு வாசலில் நின்றது
வேனில் இருந்து ஒரு பாதிரியாரும் இரு கன்னியாஸ்திரீகளும் இறங்கினர்.
கோமாவில் இருக்கும் மகனை சுத்தப்படுத்தி மலஜலம் அகற்றி உணவு ஊட்டி படுக்க வைத்துக் கொண்டு இருந்தான் அமீன் பாதுஷா
“கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - நாங்க உள்ளே வரலாமா?”
“வாருங்கள்!”
அமீன் பாதுஷாவுக்கு எதிரே அமர்ந்தனர்.
“நான் பாதர் இக்னேஷியல் இவங்க பேட்ரிஷியா. இவங்க ஆன்ட்ரியா நாங்க ஊட்டி செயின்ட் தாமஸ் காப்பகத்திலிருந்து வருகிறோம். எங்கள் காப்பகத்தில் முதியோரை, அனாதை குழந்தைகளை நீண்டநாள் நோயில் வீழ்ந்து கிடக்கும் நோயாளிகளைப் பராமரிக்கிறோம்!”
“டொனேஷன் வாங்க வந்தீங்களா, நான் ஒரு ஏழை என்ஜிஓ அதிகபட்சம் என்னால் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்க முடியும்!”
“நாங்க மோகன்தாஸ் சொல்லி வந்திருக்கிறோம்!”
“எந்த மோகன்தாஸ்?”
“பதினைந்து நாட்களுக்கு முன் அவர்கள் வீட்டில் ஒரு தாய் பாம்பையும் பத்து பாம்புகுட்டிகளையும் பிடித்தீர்களே ஞாபகமிருக்கா? அந்த மோகன்தாஸ்தான் எங்களை அனுப்பினார்!”
“என்ன விஷயம்?”
“பதட்டப்படாதீர்கள்… உங்க மகனின் கோமாநிலையை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?”
“மருத்துவம் தொடர்ந்தால் ஐந்து வருடத்திலும் எழுவான், 50 வருடத்திலும் எழுவான் அல்லது எழாமலே அமைதியாக மரணிப்பான் என கூறினார்”
“கருணைக்கொலை யோசிக்கலாமே?”
“நோயாளிக்கு மருத்துவம் செய்யும் கட்டாயத்திலிருந்து தப்பிக்க ஏதேனும் தந்திர வழியில் கருணைக் கொலையை மேற்கொள்வது ஹராம். இது உயிர்க்கொலைக்குச் சமம்.”
“உங்கள் மகனின் மெடிக்கல் ரிக்கார்ட்ஸ் அனைத்தையும் கொடுங்கள்”
கொடுத்தான் அமீன் பாதுஷா.
“மிஸ்டர் அமீன் பாதுஷா உங்கள் மகனை எங்களிடம் ஒப்படையுங்கள். எப்போது எழுந்து வந்து அம்மா அப்பா என உங்களை அழைக்கிறானோ அதுவரை அவனுக்கு உயர் ரக மருத்துவ சிகிச்சை அளிப்போம். நீங்கள் விரும்பிய போதெல்லாம் உங்கள் மகனை வந்து பார்க்கலாம்“
“நோ. எங்களுக்கு இறைவன் அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுக்கும் போது, ‘இந்த மகிழ்ச்சியை எங்களால தாங்கிக்க முடியல’ ன்னு சொல்லி யாருக்காவது கைமாற்றி விட்டோமா? இறைவன் தனக்கு பிரியமானவர்களுக்கு அதிக சோதனைகளைத் தருகிறான். அந்தச் சோதனைகளைத் தாக்குப் பிடித்து இறைவனின் பிரியத்தை தக்க வைத்துக் கொள்வதுதானே முறை? நாங்கள் தான் எங்கள் மகனை பெற்றோம். அவனைப் பாதுகாப்பது எங்களின் பொறுப்பு. பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாமா? எழுந்து வர 100 வருடமானாலும் காத்திருப்போம். மரித்தால் எங்கள் மடியில் மரிக்கட்டும் எதை இறைவன் செய்தாலும் சாந்தமாக ஏற்றுக்கொள்வோம். நீங்கள் புறப்படலாம்”
“பெரும்பாலான மதங்களைச் சார்ந்தோர் சந்தோஷ தருணங்களில் இறைவனை கருவேப்பிலையாகவும், துக்கத் தருணங்களில் எட்டிக்காயாகவும் பாவிக்கின்றனர். முஸ்லிம்களில் உங்களைப் போன்ற சிலர் முழுமையாக இறைவனைச் சார்ந்து இருக்கிறீர்கள். சந்தோஷத்தில் நிதானம் இழப்பதில்லை துக்கத்தில் வாய்விட்டு தூற்றுவதில்லை. இதுதான் உங்களைப் போன்ற முஸ்லிம்களின் ப்ளஸ் பாய்ண்ட்டும், மைனஸ் பாயிண்ட்டும் கூட. உங்கள் மகன் வெகு சீக்கிரமே கோமாவிலிருந்து எழ பரம பிதாவை வேண்டுகிறோம். அல்லேலூயா”
கைபேசி அழைக்க, பாம்பு பிடிக்கப் புறப்பட்டான் அமீன் பாதுஷா.